உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

நற்றிணை தெளிவுரை


யும் தன்னைக் குறித்தும் சுற்றத்தார் மணவிழா வந்ததென்று ஆரவாரிப்பர் என்பதாம். அந்த ஆரவாரமானது தன் உயிரை உடலினின்றும் அகன்றுபோகச் செய்யும் கொடுமையது என்பதுமாம்.

105. நெடுஞ்சேண் பட்டனை!

பாடியவர் : முடத்திருமாறன்.
திணை : பாலை,
துறை : இடைச்சுரத்து மீளலுற்ற நெஞ்சினைத் தலைமகன் கழறியது.

[(து–வி.) பொருள் தேடிவருதலை விரும்பினனாகத் தலைவியைப் பிரிந்து வேற்றுநாட்டினை நோக்கி வழிநடந்து கொண்டிருக்கின்றான் தலைவன். வழியிடையிலே, அவன், மனத்தெழுந்த தலைவியது நினைவினாலே வாட்டமுற்றுத் தன் நெஞ்சுக்குக் கூறிக்கொள்வதாக அமைந்த செய்யுள் இது.)

முளிகொடி வலந்த முள்ளரை இலவத்து
ஒளிர்சினை அதிர வீசி விளிபட
வெவ்வளி வழங்கும் வேய்பயில் மருங்கில்
கடுநடை யானை கன்றொடு வருந்த
நெடுநீர் அற்ற நிழலில் ஆங்கண் 5
அருஞ்சுரக் கவலைய என்னாய்; நெடுஞ்சேண்
பட்டனை, வாழிய—நெஞ்சே!—குட்டுவன்
குடவரைச் சுனைய மாஇதழ்க் குவளை
வண்டுபடு வான்போது கமழும்
அஞ்சில் ஓதி அரும்படர் உறவே. 10

நெஞ்சமே! காய்ந்த கொடிகள் சுற்றிக்கொண்டிருப்பதான, முட்கள் விளங்கும் கிளைகள் அதிர்ச்சி கொள்ளுமாறு வீசியதாகவும். அக்கிளைகளுட் சில முறிந்து வீழுமாறு மோதியதாகவும் வெங்காற்று வழங்கிக் கொண்டிருக்கும் மூங்கில்கள் அடர்த்திருக்கும் வழிப்பக்கத்திலே—

கடிய நடையுடைய யானை தன் கன்றோடும் சேரநின்று வருந்தியிருக்க, நெடுகிலும் நீரற்றும் நிழலற்றும் கிடக்கின்றதான அவ்விடத்திலே, கடத்தற்கரிதான சுரநெறிதான் கவர்த்த பல வழிகளை உடைத்தாயிருக்கும். அதனையும் நீ கருதமாட்டாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/207&oldid=1688281" இலிருந்து மீள்விக்கப்பட்டது