உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

நற்றிணை தெளிவுரை


நினைந்து, அந்த மரபையும் ஒதுக்குவமோ? என்று கேட்பதாம்; இதுவே கருத்தாதல், 'செப்பாது விடினே, உயிரோடும் வந்தன்று' என்பதனாலும் வலியுறும்.

இறைச்சி : 'தேன் நிறைந்த ஈங்கைமலர், வண்டால் உண்ணப்படாதே பாறைமிசை உதிர்ந்து வீழ்ந்து கெடும்' என்றாள். அவ்வாறே தானும் தலைவனுக்கு இன்பந் தருதலின்றி, வறிதே உயிரிழந்து அழிவதனை உறுதியாகக் கொண்டதனால்.

80. நோய்க்கு மருந்து!

பாடியவர் : பூதன் தேவனார்.
திணை : மருதம்.
துறை : சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து–வி.) தோழியால், தலைவியைக் கூட்டுதற்குப் பெரிதும் மறுத்து ஒதுக்கப்பட்ட தலைவன், தன் பெருங்காதலை அறிந்து தனக்கு உதவாது தன்னை அவள் அவ்வாறாக ஒதுக்குதலை நினைந்து, அவள் கேட்குமாறு, தன் நெஞ்சிற்குச் சொல்லுவதாக அமைந்த செய்யுள் இது]

'மன்ற எருமை மலர்தலைக் காரான்
இன்தீம் பாற்பயம் கொண்மார், கன்றுவிட்டு,
ஊர்க்குறு மாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
தழையும் தாரும் தந்தனன், இவன்' என, 5
இழைஅணி ஆயமொடு தகுநாண் தடைஇத்
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது,
மருந்துபிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கு

"மன்றிடத்தேயுள்ள எருமைகளுள், அகன்ற தலையினை உடையதான காரெருமையின் இனிய தீம்பாலாகிய பயனைக் கறந்து பெறும் பொருட்டாகக், கன்றினைக் குடிக்கவிட்டுப் பாலைக் கறந்து கொள்வார்கள் ஆயர்கள். அதன் பின்னர், ஊரிடத்துள்ள மாடுமேய்க்குஞ் சிறுவர்கள், அதன் மேலே ஏறிக்கொண்டவராக, அதனை மேய்த்து வருவதற்கும் செல்வர் அத்தகைய, பேரிருள் நீங்கும் விடியற்காலத்திலே, விருப்பத்தோடு இவன் வந்தான்; உடுக்குந் தழையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/159&oldid=1679105" இலிருந்து மீள்விக்கப்பட்டது