உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) "பிரிவாலே மேனியிடத்துத் தோன்றிய மாற்றங்களைக் கண்ட பிறர் பழித்துப் பேசத் தொடங்குவர் என ஐயுறுகின்றாள் தலைமகள் அவளது அத்துயரம் நீங்குமாறு வரைந்துவருதலை வற்புறுத்துவாளாகச் சிறைப்புறமிருக்கும் தலைமகன் கேட்குமாறு. தோழி இப்படிச் சொல்லுகின்றாள்]

உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை
மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கை
கணம்கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
பண்அழி பழம்பார் வெண்குருகு ஈனும்
தண்ணம் துறைவன் முன்நாள் நம்மொடு 5
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
பூவுடன் நெறிதரு தொடலை தைஇக்
கண்அறி வுடைமை அல்லது நுண்வினை
இழைஅணி அல்குல் விழவுஆடு மகளிர்
முழங்குதிரை இன்சீர் தூங்கும் 10
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே.

ஓரிடத்தே தங்கியிருந்தபடி வாழ்கின்ற நிலையான வாழ்க்கை முறையினை இல்லாதவர்கள், உவர்நிலத்து விளையும் குன்றங்களைப்போன்ற உப்புக்குவியல்களை மலை நாட்டகத்துக் கொண்டு சென்று விலைமாறிப் பொருளீட்டி வாழும், கூட்டங் கொண்ட உப்பு வாணிகர்கள். அவர்கள், தங்கள் வண்டிகள் முறிந்துபோன இடத்திலே. அதனைப்போட்டுப் போயினதனாலே தன் பண்பழிந்தவாய்ப் போயின பழைதான பாரினிடத்தே, வெளிய நரையானது கூடுகட்டித் தன் சினையை ஈன்றிருக்கும். அத்தகைய தண்ணிய கடற்றுறையினைச் சார்ந்தவன் தலைமகன். அவன், முன்னை நாளிலே, பசிய இலைகளின் இடைநின்றும் மேலெழுந்து வெளித்தோன்றிய திரண்ட தண்டினையுடைய நெய்தல் மலருடனே, நெறிப்பைத் தருகின்ற தழைகளையும் இடையிட்டுத் தொடுத்த மாலையினை நினக்குச்சூட்டினன். அதனைக் கண்ணாற் கண்டறிந்த அறிவுடைமை ஒன்றையன்றி, நுண்மையான வேலைப்பாட்டினாலே சிறந்த அணிகலனை அணிந்த அல்குல் தடத்தையுடையரான, விழாக்களத்துத் துணங்கைத் கூத்தினை ஆடுகின்றவரான இளமகளிரினுடைய, இனிதான தாள அறுதியுடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/267&oldid=1692773" இலிருந்து மீள்விக்கப்பட்டது