உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

281


ஒப்பு : அடும்பின் மலரைப் பெண்கள் சூட்டிக் கொள்வர் என்பதனை, 'அடும்பின் ஆய்பாலர் விரைஇ நெய்தல் நெடுந்தொடை வேய்ந்த நீர்வார் கூந்தல்' என வருவதானும் அறியலாம்.—(குறு, 401,1-2). இது கடற்கரைப் பாங்கிலே வளரும் கொடி. இதன் இலைகள் மானடித் தடம் போல விளங்கும் என்பர். 'அடும்பின் அலர்கொண்டு உதுக்காண் எம் கோதை புனைந்த வழி' (கலித் 144, 30-31) என்பதும், மகளிர் அடும்பின் மலரிட்டுக் சுட்டிய கோதையினை அணிதலைப் புலப்படுத்தும்.

146. இழிந்து இருந்தனை சென்மோ?

பாடியவர் : சுந்தரத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : பின்னின்ற தலைவன் முன்னிலைப் புறமொழியாகத் தோழி கேட்கச் சொல்லியது.

[(து–வி.) தோழியை இரந்தும் தன் குறையைத் தீர்ப்பதற்கான வாக்குறுதியைப் பெறாமற்போன தலைவன், அவள் கேட்டுத் தன்பால் இரக்கங்கொள்ளுமாறு தனக்குட் கூறுவான் போல, இப்படிக் கூறுகின்றான்.]

வில்லாப் பூவின் கண்ணி சூடி
'நல்ஏ முறுவல்' எனப் பல்லூர் திரிதரு
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே!
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் ணென்ற மரநிழல் சிறிது இழித்து 5
இருந்தனை சென்மோ —'வழங்குக சுடர்!' என
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னும் கிளவி வல்லோன்
எழுதி அன்ன காண்தகு வனப்பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே! 10

சித்திரங் காண்பதிலே ஆர்வமுடைய மக்கள் பலரும் அன்போடும் ஒருங்கேகூடிப் பாராட்டிய புகழ்ச்சொற்களின் மிகுதியினாலே 'நல்ல ஓவியன் தான்' என்னும் சொல்லினைப் பெற்றவனாகிய தன்னாண்மை வல்லான் ஒருவன், தன் திறன் எல்லாம் சேர்த்து எழுதிவைத்தாற் போன்ற, காணத்

ந.—18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/282&oldid=1714834" இலிருந்து மீள்விக்கப்பட்டது