உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

நற்றிணை தெளிவுரை


யாராவையோ? அதனைச் சொல்வாயாக" என்றேம். என்றலும், அதற்கு விடையாக, முட்போன்ற கூரிய பற்களிடையே நின்றும் முறுவற்குறிப்புப் பிறந்தது; ஈரிமைகளை உடைய மையுண்ட கண்களும் முயங்கற் குறிப்பைக் காட்டியவாய்ப் பனிபரந்தன!

கருத்து : 'முயங்கற் குறிப்பினை உடையாள் எனினும், நாணம் துறந்தாள் அல்லள்' என்பதாம்.

சொற்பொருள் : ஓரை – 'ஓரை' என்னும் மகளிர் விளையாட்டு. தொடலை – தழையும் பூவும் கலந்து தொடுத்த பெரிய மாலை. விரிபூங்கானல் – இதழ்விரித்த பூச்களையுடைய கானற்சோலை. 'கண்டோர்' என்றது, தனக்கு முன்பேயும் கண்டோரான இளைஞர் பலரையும் சுட்டிக் கூறியதாம். 'நீரர மகளாகிய நீதான் கருங்கழி மருங்கு நிலை பெற்றனையோ?' என்றலும் பொருந்தும்.

விளக்கம் : முறுவலித்தலும் கண்கலங்குதலும் புணர்ச்சி நாட்டத்தையும், நாணத்தால் கவிழ்ந்த தலை அச்சத்தையும் காட்டுவனவாகும். இரண்டாவது துறைக்கேற்பக் கொள்வதாயின், முறுவல் இசைவையும், கண்கலங்கல் பிரிவுத் துயரினை நினைத்து வருந்திய வருத்தத்தையும் காட்டுவனவாம். 'நின்னைத் தொழுதேமாகக் கேட்பேம்' என்றது. அவள்தான் கற்பு மிகவுடையாளாதலின், அவனை ஒதுக்கற்கு நினையாள் ; அவனை ஏற்று அருள்வாள் என்பதனாலாம்.

மேற்கோள் : 'நாணமும் அச்சமும் மீதூர வேட்கைக் குறிப்பு இல்லாதாளைப் போலத் தலைவி நின்றவழி, அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதலுக்கு' இச் செய்யுளைக் காட்டுவர் இளம்பூரண அடிகள் (தொல். களவு. 10 சூ. உரை).

மதியுடம்பட்ட தோழி 'நீர் கூறிய குறையை யான் மறந்தே'னெனக் கூறுமாயின், அவ்விடத்துத் தன்னோடு கூடாமையால் தலைவி மருங்கிற் பிறந்த வேட்கையும், அவள் அதனை ஆற்றியிருந்த பெருமையும், தலைவன் கூறுதற்கு இச்செய்யுளைக்காட்டுவர் நச்சினார்க்கினியர். (தொல். கள. 11. சூ உரை).

156. பகற்போதிலேயே வருவாயாக!

பாடியவர் : கண்ணன் கொற்றனார்.
திணை : குறிஞ்சி,
துறை : இரவுக்குறி மறுத்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/301&oldid=1694854" இலிருந்து மீள்விக்கப்பட்டது