உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

நற்றிணை தெளிவுரை


அதன் தொழிலை 'ஈண்டு தொழில் உதவி' என்றனர். 'ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் வாரி வளங் குன்றிக்கால்' என்னும் வள்ளுவர் வாக்கும் இதனை வலியுறுத்தும். கருமணற் பாங்கிலே மழைநீர் ஓடிச்செல்வதனைப் 'பல்பொறி அரவின் செல்புறம் போலத் தோற்றும்' என்று உரைப்பது கற்பனை நயமுடையதரம். மாப் பூத்தலும், குயில் கூவுதலும் இளவேனிற் காலத்தாகலின், தலைவன் மீள்வதாகக் குறித்த பருவம் இளவேனிற் பருவம் என்று கொள்ளலாம்.

158. யானோ காணேன்!

பாடியவர் : வெள்ளைக்குடி நாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் சிறைப் புறமாகச் சொல்லியது.

[(து–வி.) இரவுக் குறிக் கண்ணே தலைவனும் வந்தானாதலை அறிந்த தோழி, இரவுக்குறியை மறுத்து வரைந்து கோடலை வலியுறுத்த நினைக்கின்றாள்; தலைவிக்குச் சொல்லுவாள் போலத் தலைவனும் கேட்டு அறியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

அம்ம வாழி, தோழி! நம்வயின்
யானோ காணேன் அதுதான் கரந்தே
கல்லதர் மன்னும் கால்கொல் லும்மே;
கனை இருள் மன்னும் கண்கொல் லும்மே
விடர்முகைச் செறிந்த வெஞ்சின இரும்புலி 5
புகர்முக வேழம் புலம்பத் தாக்கிக்
குருதி பருகிய கொழுங்கவுட் கயவாய்
வேங்கை முதலொடு துடைக்கும்
ஓங்குமலை நாடன் வரூஉம் ஆறே.

தோழீ; வாழ்வாயாக! யான் கூறுவதான இதனையும் கேட்பாயாக: மலைப்பிளப்பான குகையிடத்தே பதுங்கியிருந்த வெய்ய சினத்தையுடைய பெரிய புலியானது, புள்ளிகள் அமைந்த முகத்தையுடைய வேழமானது வருந்துமாறு அதன் களிற்றைத் தாக்கிக் கொல்லும்: அக்களிற்றது குருதியையும் பருகும்; கொழுமையான கவுளைக் கொண்ட தன் பெரிய வாயினை வேங்கை மரத்தின் அடிப்பாகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/305&oldid=1694858" இலிருந்து மீள்விக்கப்பட்டது