நற்றிணை தெளிவுரை
333
தலைவிக்குச் சொல்வாள்போலத் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும். (2) அன்னை வெறியாடற்கு ஏற்பாடு செய்தனள் எனக்கூறித் தலைவியை அச்சப்படுத்தி அறத்தொடு நிற்குமாறு அவட்குத் தோழி கூறுவதும் ஆம்.]
சுனைப்பூக் குற்றும் தொடலை தைஇயும்
மலைச்செங் காந்தட் கண்ணி தந்தும்
தன்வழிப் படூஉம் நம்நயந் தருளி
வெறிஎன உணர்ந்த அரிய அன்னையைக்
கண்ணினும் கனவினும் காட்டி' இந்நோய்
5
என்னினும் வாராது மணியின் தோன்றும்
அம்மலை கிழவோன் செய்தனன் இது' எனின்
படுவண்டு ஆர்க்கும் பைந்தார் மார்பின்
நெடுவேட்கு ஏதம் உடைத்தோ?
தொடியோய்! கூறுமதி வினவுவல் யானே?
10
தொடியுடையாய்! நின்னை யொன்று வினவுவேன்? அதனைக் கேட்பாயாக; சுனையிடத்துள்ள மலர்களைப் பறித்து அவைகளை மாலையாகத் தொடுத்தும், மலையிடத்துள்ள செங்காந்தளின் பூக்களைக் கொய்து சூடுங்கண்ணியாகக் கட்டியும், சார்த்தி யாம் குன்றக் குமரனை வழிபடுவோம். தன்னை வழிபாடு செய்கின்ற நம்பால், அவன் அருள்கொள்ளளலும் கூடும். நம் நோயைப்பற்றிய உண்மையைக் கண்ணெதிரேயும், கனவிடையேயும் வெறியயர்தலால் நோய்தீரும் எனக் கருதிய அன்னையும் அறியுமாறு அவன் காட்டலும் கூடும். 'இந்நோய் என்னால் ஒருபோதும் நின்மகட்கு வாராது; நீலமணியினைப் போலத் தோன்றும் அந்த மலைக்கு உரியோனாகிய இளையோன் தான் இதனை நும்மகட்குச் செய்தனன்' என்று, அவன் சொன்னாலும் சொல்வான். பொருந்திய வண்டுகள் ஆரவாரிக்கும் பசிய மாலையணிந்தோனாகிய நெடிய முருகவேளுக்கு அதனாலே ஒரு குற்றம் உண்டாகுமோ? அதனை ஆராய்ந்து எனக்குக் கூறுவாயாக.
கருத்து : 'இனிக் களவுறவு வாயாதாகலின், அன்னைக்கு உண்மையை உரைத்துவிடுக' என்பதாம். இதனைக் கேட்கும் தலைவன், அன்னைக்கு உரைக்கும் முன்பாகத் தானே தலைவியை வரைந்து மணந்து கோடற்கு முற்படுவான் என்பதுமாம்.