உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

நற்றிணை தெளிவுரை


இனிமேல், இத் தலைவியது அழகிய நெற்றியிடத்தான பேரழகும் பசலை தீர்ந்ததாய்ப் பிழைத்துவிடும்!

கருத்து : 'தலைவன் வந்தானாதலின் இனி இவளுடைய அழகு கெடாமற் பிழைத்திருக்கும்' என்பதாம்.

சொற்பொருள் : கார் அணல் – கரிய மோவாய். அல்கி – தங்கி. நெறி – நெறிப்பு. பிள்ளை – குருவிக் குஞ்சு. துவலை – சிறு துளி. கூரிருக்கை – மழையால் நனைந்து நடுங்கியபடி இருக்கும் இருப்பு. ஈரநெஞ்சு – இரக்கங்கொண்ட நெஞ்சு. கையறல் – செயலறுதல். விறல் – வெற்றி; அதனையுடைய தலைவனைக் குறித்தது. ஆய் நுதல் – அழகிய நுதல்.

விளக்கம் : தலைவன் முன்பொரு காலத்தேயும் தலைவியைப் பிரிந்து சென்றிருந்தான். அப்போது காரணம் பரத்தையுறவாக இருந்தது. அவன் மீண்டும் வந்தபோது தலைவி அவனைச் சினந்து ஒதுக்கினாள். அவன் வருத்தமுற்றவனாய்ப் புறத்தே நிற்கவும், அவள் மனம் இரக்கமுற்றது. தன் அருள் மேலோங்கித் தன்னைச்செலுத்த அவனைத் தானே வலியச் சென்று அழைத்து ஏற்றுக்கொண்டாள். அந்த நிகழ்வின் எதிரொலி தோழியிடத்தே இப்போதும் தோன்றுகின்றது. ஆனால், இவ்வேளை அப்படிச் சினந்து ஒதுக்கமாட்டாள்; வெற்றி வீரனாக வரும் அவனை எதிரேற்று மகிழ்வோடு வரவேற்பாள். இவ்வாறு நினைத்தும் இன்புறுகின்றாள் தோழி.

உள்ளுறை : தன் சேவலது பரத்தமைச் செவ்வியைக் கண்டு சினமுற்று அதனை ஒதுக்கிய குருவிப்பேடையும், பின்னர் அதற்கு இரங்கியதாய் அதனை ஏற்றுக்கொண்டதைக் கூறினாள்; அவ்வாறே தலைவியும் முன்னர் நடந்துகொண்டாள்: இப்போதோ வினைமேற் சென்று வெற்றியோடு மீள்பவனாகலின், மகிழ்வுடன் விரும்பி ஏற்றுக்கொள்வாள் என்பதாம்.

182. கண்டு வருவோம்!

பாடியவர் : .........
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு நீட்டிப்பத் தலைமகள் ஆற்றாமையறிந்த தோழி நிறைப்புறவாகச் சொல்லியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/351&oldid=1714841" இலிருந்து மீள்விக்கப்பட்டது