உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

371


எல்லிவந் தன்றோ தேர்?' எனச் சொல்லி,
அலர் எழுந் தன்றுஇவ ஊரே பலருளும்
என்நோக் கினளே அன்னை நாளை
மணிப்பூ முண்டகம் கொய்யேன் ஆயின்
அணிக்கவின் உண்மையோ அரிதே மணிக்கழி 10
நறும்பூங் கானல் வந்துஅவர்
வறுந்தேர் போதல் அதனினும் அரிதெ!

தேன் பொருந்திய ஒள்ளிய ஞாழற் பூங்கொத்துக்களின் சிறுசிறு பூக்கள், அழகிய கலன்களையுடையரான இளமகளிர் நெடிய மணலிடத்து வண்டலாட்டு அயர்ந்திருக்குமிடத்தே விளங்கும் வண்டற்பாவையின் அழகான கொங்கை முற்றத்திடத்தே படர்கின்ற ஒள்ளிய புள்ளிகளையுடைய சுணங்கினைப்போல, அழகு உண்டாகுமாறு உதிர்ந்து பரவா நிற்கும்; கண்டல் மரங்களாலாகிய வேலியை உடையதும் கண்டார்க்கு விருப்பந்தருவதுமான அத்தகைய சிறு குடியிடத்தேயே, 'நேற்றிரவு தேரொன்றும் வந்ததன்றோ' எனச் சொல்லியபடி, இவ்வூரிடத்தே பழிச்சொற்களும் எழுந்துள்ளன. அதனைக் கேட்டாளாகிய அன்னையும், கூடி நின்ற இளமகளிர் பலருள்ளும் என்னையே குறிப்பாக நோக்கினள். நாளைப் பகலில் கழியிடத்தேயுள்ள நீலமணி போலும் முள்ளியது மலரைக் கொய்யேனாயின். அழகுமிக்க என் மேனியது எழில் அழியாது உளதாயிருத்தல் அரிதாகும்; நீலமணி போலத் தோன்றும் கரிய கழிக்கரையிடத்தேயுள்ள நறிய பூக்களையுடைய கானற் சோலையிடத்தே வந்தும், நம்மை அடையாதாராய் வறிதே தேரேறி அவர் மீண்டுபோதலோ அதனைக் காட்டிலும் துன்பந் தருவதாகும்.

கருத்து : இனி வரைந்து கொண்டன்றித் தலைவியை நின்னால் அடைய வியலாது' என்பதாகும்.

சொற்பொருள் : வார் மணல் – நெடிய மணல்; ஒழுங்கு படப் பரந்து கிடக்கும் மணலும் ஆம். வண்டற் பாவை – வண்டலாட்டு அயர்தற்குச் செய்த மணற்பாவை. வனமுலை – அழகிய மார்பகம். முற்றம் – முன்பக்கம். கண்டல் – நெய்தனிலத்து மரவகையுள் ஒன்று. முண்டகம் – கடன் முள்ளி, நறும் பூங்கானல் – நறிய பூக்களையுடைய கானற்சோலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/372&oldid=1706923" இலிருந்து மீள்விக்கப்பட்டது