உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

நற்றிணை தெளிவுரை


சிறந்த சொல்லோவியமாகத் திகழ்கின்றது. 'அல்லி யாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லைசான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்' எனத் தலைவியது இல்லற மேம்பாட்டையும் இவர் நன்கு எடுத்துக் கூறுகின்றனர். புறநானூற்று 42ஆம் செய்யுளுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடும் இவர், 'மலையினிழிந்து மாக்கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல்யாறு போலப் புலவரெல்லாம் நின்னோக்கினரே' எனக்கூறும் உவமைத்திறம், மிக்க இனிமையுடையதாகும். இடைக்காட்டுச் சித்தர் வேறொருவர்; பிற்காலத் தவர்.

இளங்கீரனார் 3, 62, 113

இவரை 'எயினந்தை மகனார் இளங்கீரனார்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். 'பொருந்தில் இளங்கீரனார்' என்பவர் மற்றொரு புலவராவர். இவர் வேட்டுவக்குலத்தினராகத் தோன்றியவர் என்பர்; மக்களின் இயல்புகளை நன்கு ஆய்ந்தறிந்து உரைக்கும் திறனுடையவர். இவர் செய்யுட்களுள் பாலைபற்றிய செய்திகள் எழிலுடன் உரைக்கப் பட்டுள்ளமையைக் காணலாம். இச் செய்யுட்களுள் வில்லேருழவரின் வெம்முனைச் சீறூரை அறிமுகப்படுத்தும் இவரது ஆழ்ந்த புலமைத் திறம் வியத்தற்கு உரியதாகும். இல்லுறை மகளிர் மாலை வேளையில் மனைவிளக்கு ஏற்றினராக விளங்குவதனை, 'மனைமாண் சுடரொடு படர்பொழுது' என்பதனால் இவர் எடுத்துக்காட்டியுள்ளனர். திங்களை நோக்கித் தன் மனைவியின் முகத்து நினைவிலே திளைக்கும் தலைவன், 'எமதும் உண்டோர் மதிநாள் திங்கள்' என்று கூறுவதாக உரைத்துள்ளனர் இவர். 113ஆம் செய்யுளுள் உதியனின் போர்ச்சிறப்பையும் இவர் பாராட்டுகின்றனர். ஆம்பற் குழலினை இசைக்கும் பழந்தமிழரது வழக்கத்தையும் இச்செய்யுளாற் காணலாம் 'கீரர்' எனும் பெயரால், சங்கறுக்கும் குலத்தவர் இவர் எனக் கருதுவாரும் சிலர்.

இளந்திரையனார் 94, 99, 106

தொண்டைமான் இளந்திரையன் என்பானும் இவனும் ஒருவனே எனக் கொள்வர் சான்றோர். இவன் அதியமான் அஞ்சியின் காலத்தவன். பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன். இவனுடைய பிறப்பின் வரலாறு பெரும்பாணாற்றுப் படையின் 29—31 ஆம் அடிகளுள் அந் நூலைச் செய்த கடியலூர் உருத்திரங்கண்ணனாரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/397&oldid=1708221" இலிருந்து மீள்விக்கப்பட்டது