இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/நச்சுப் பாம்பு
7. நச்சுப் பாம்பு
நள்ளிரவு; சிராவத்தி நகரத்தின் கோட்டை கதவுகள் மூடப்பட்டுச் சேவகர் கண்ணுறங்காமல், காவல் புரிகின்றனர். நகர மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கும் அமைதி. இந்த நள்ளிரவிலே, கள்ளர் சிலர் கோட்டைக்குள் புகுந்தார்கள். மதில் சுவரில் ஏறி, அவர்கள் உள்ளிறங்கவில்லை. நகரத்துக் கழிவு நீர், அகழியில் விழுகிற பெரிய சுருங்கை (சாக்கடை) வழியாகப் புகுந்து, கள்ளர்கள் நகரத்திற்குள்ளே நுழைந்தார்கள். காவல் சேவகர் கண்களிற் படாமல், அந்நகரத்துச் செல்வர் ஒருவரின் மாளிகையை அடைந்தார்கள். சுவரில் கன்னம் வைத்து, உள்ளே புகுந்து, பொற்காசுகளையும், தங்க நகைகளையும், மணி மாலை, முத்து மாலை முதலியவற்றையும் எடுத்து, மூட்டை கட்டிக் கொண்டு, மறுபடியும் சாக்கடை வழியே, அகழியில் இறங்கி, வெளியே போய் விட்டார்கள். போகும் கள்ளர்கள், நகரத்துக்கப்பால் உள்ள வயல்களின் வழியாக நடந்தார்கள். வைகறைப் போது ஆயிற்று. வயலில் ஒரு புறம் உட்கார்ந்து, களவாடிய பொருள்களைப் பங்கிடத் தொடங்கினார்கள்.
கள்ளர்கள், தாம் களவாடிய பொருள்களைப் பங்கிடுவதில் கண்ணுங் கருத்துமாயிருந்த போது, சற்றுத் தொலைவில் காலடிச் சத்தம் கேட்டது. “சுருக்காக நடங்கடா,” என்னும் குரலும் கேட்டது. கள்ளர்கள், அரச சேவகர்கள் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று கருதி அச்சங்கொண்டு எழுந்து, ஓட்டம் பிடித்தார்கள். உயிருக்குத் தப்பி ஓடுகிற விரைவில், பொற்காசு மூட்டையையும், முத்து மாலைகளையும் அங்கேயே வைத்து விட்டு ஓடி விட்டார்கள்.
கள்ளர்கள் நினைத்தது போல, நகரக் காவலர் அங்கு வரவில்லை. அங்கு வந்தவன், அந்த வயலுக்குரிய குடியானவன். விடியற் காலையில் வயலை உழுவதற்காக, அவன் எருதுகளை ஓட்டிக் கொண்டு வந்தான். அவன் எருதுகளிடத்தில் அன்புள்ளவன். அவன் எருதுகளிடம் “சுருக்காக நடங்கடா,” என்று கூறியதைத்தான், கள்ளர் தங்களைச் சேவகர் பிடிக்க வருவதாகக் கருதி, ஓட்டம் பிடித்தார்கள். குடியானவன் தன் வயலுக்கு வந்ததும், எருதுகளை ஏரில் பூட்டி நிலத்தை உழத் தொடங்கினான். கள்ளர்கள் தன் வயலில் தங்கியிருந்தததையும், தன் வருகையையறிந்து, அவர்கள் ஓடி விட்டதையும் அவன் அறியவில்லை. தன் வயலில் ஒரு பக்கத்திலே பொற்காசு மூட்டையும், முத்து மாலைகளும் கிடப்பது அவனுக்குத் தெரியாது. வைகறை இருட்டிலே வயலை உழுது கொண்டிருந்தான்.
அந்தக் காலத்தில் புத்தர் பெருமான் சிராவத்தி நகருக்குப் பக்கத்தில், ஒரு தோட்டத்திலே எழுந்தருளியிருந்தார். விடியற்காலையில் இருக்கையில் அமர்ந்து, அன்று உலகத்திலே நடைபெறப் போகிற சிறந்த காரியங்களைத் தமது அறிவுக் கண்களாற் காண்பது அவருடைய வழக்கம். இவ்வழக்கப்படி. புத்தர் அறிவுக் காட்சி நினைவோடு அமர்ந்திருந்த போது, கள்ளர்கள் விட்டுச் சென்ற பொற்காசு மூட்டையினால், அந்தக் குடியானவனுக்குக் கொலைத் தண்டனை கிடைக்கப் போவதை அறிந்தார். குற்றமற்ற இக்குடியானவன், வீணாக உயிரிழக்கப் போவதைத் தடுக்க வேண்டும் என்று திருவுளங் கொண்டார். தம்முடைய அணுக்கத் தொண்டரான ஆனந்தரை விளித்து, “ஆனந்த! சற்று உலாவி வரலாம்; வா,” என்றார்.
“அப்படியே,” என்று ஆனந்தர் அவருடைய கைத்தடியைக் கொண்டு வந்து கொடுத்து வணங்கினார்.
இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள். குடியானவன் உழுது கொண்டிருந்த வயலின் பக்கமாக அவர்கள் வந்தார்கள். புத்தரைக் கண்ட குடியானவன் உழுவதை நிறுத்தி, அவரிடம் வந்து வணங்கிக் கும்பிட்டான். பிறகு ஏரைப் பிடித்து, முன் போல் உழத் தொடங்கினான். புத்தர், ஆனந்தருடன் நடந்தார். ஒரு பக்கத்தில் பணப்பையும், முத்துமாலைகளும் கிடப்பதைக் கண்டார். அவற்றை ஆனந்தருக்குக் காட்டி, “ஆனந்த! இதோ பார். ஒரு நச்சுப்பாம்பு,” என்று கூறினார்..
அவற்றைக் கண்ட ஆனந்த தேரரும், “ஆமாம், பெருமானே! கொடிய நச்சுப் பாம்பு,” என்று சொன்னார். இவ்வாறு பேசிக் கொண்டே, இருவரும் போய் விட்டார்கள்.
இவர்கள் பேசியதைக் கேட்ட குடியானவன், தனக்குள் எண்ணினான்: “இந்த வயலை நெடுங்காலமாக உழுது பயிரிட்டு வருகிறேன். இதுவரையில் ஒரு பாம்பையும் இங்கு நான் கண்டதில்லை. இவர்கள் கூறுகிறபடி, இங்கு நச்சுப் பாம்பு இருக்குமோ! போய் அதைக் கொன்று போடுகிறேன்,” என்று பலவாறு நினைத்து, அவன் உழுவதை நிறுத்தித் தாற்றுக்கோலைக் கையில் எடுத்துக் கொண்டு, அவ்விடத்திற்குப் போனான். போனவன், அங்குப் பாம்பைக் காணவில்லை. பொற்காசுகள் நிறைந்த பணப்பையும், முத்து மாலைகளும் இருப்பதைக் கண்டான். கண்டு திகைத்தான். இதைத்தான், ‘நச்சுப் பாம்பு’ என்று புத்தர் பெருமானும், ஆனந்த தேரரும் கூறினார்கள் என்று அறிந்தான். என்ன செய்வதென்று தோன்றாமல், தயங்கினான். பிறகு, மண்ணை வாரி அதன் மேல் போட்டு விட்டுப் பழையபடி, ஏர் உழுது கொண்டிருந்தான்.
பொழுது விடிந்தவுடன், சிராவத்தி நகரத்துச் செல்வன் மாளிகையில், எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். மாளிகையில் கன்னம் வைக்கப்பட்டிருப்பதையும், பொன்னும், பொருளும் களவாடப்பட்டிருப்பதையும் அறிந்தார்கள். கள்வரைக் கண்டு பிடிப்பதற்காகச் செல்வனின் வேலைக்காரர்கள் புறப்பட்டுப் பல திசைகளிலும் சென்றார்கள். அவர்களில் சிலர், நகரத்துக்கு வெளியே வயல் பக்கமாகக் காலடிச் சுவடுகள் இருப்பதைக் கண்டு, அவற்றின் வழியே போனார்கள். கடைசியில், கள்வர் தங்கியிருந்த வயலுக்கு வந்தார்கள். அங்கு வயலை உழுது கொண்டிருந்த குடியானவனையும், ஒரு புறத்தில் அரைகுறையாக மறைக்கப்பட்ட பணப் பையையும் கண்டார்கள். குடியானவன் மேல் அவர்களுக்கு ஐயம் உண்டாயிற்று. இரவில் களவாடிய பண மூட்டையை வயலில் வைத்து விட்டு, தன்னை யாரும் ஜயுறாமலிருக்க ஏர் உழுகிறான் என்று கருதினார்கள். பணப் பையையும், முத்து மாலைகளையும் எடுத்துக் கொண்டு குடியானவனையும் பிடித்துக் கொண்டு போனார்கள். போய், அரசன் முன்பு நிறுத்தினார்கள்.
அரசர் வழக்கை உசாவல் செய்தார். கிடைத்த சான்றுகளைக் கொண்டு, குடியானவன் கள்வனே என்று உறுதி செய்து, அக்காலத்து முறைப்படி களவுக் குற்றத்திற்குரிய கொலைத் தண்டனை கொடுத்தார். ஆகவே, சேவகர் குடியானவனைக் கொல்லக் கொலைக் களத்திற்குக் கொண்டு போனார்கள். போகும் வழியில், அவனை அடித்துக் கொண்டே போனார்கள். சேவகர் அடித்த போதெல்லாம், குடியானவன், அன்று காலையில் புத்தர்பெருமானும், ஆனந்த தேரரும் பேசிய மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறினான். “இதோ பார். ஆனந்த! நச்சுப் பாம்பு.” “ஆமாம், பெருமானே! கொடிய நச்சுப் பாம்பு.” இந்த மொழிகளைத் தவிர, அவன் வேறொன்றையும் கூறவில்லை. இதைக் கேட்ட சேவகர் வியப்படைந்தனர். “புத்தர் பெருமான் பெயரையும், ஆனந்த தேரர் பெயரையும் அடிக்கடி நீ சொல்லுவதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்கள். “இந்த இரகசியத்தை அரசரிடம் தவிர, வேறு ஒருவருக்கும் சொல்லக் கூடாது,” என்றான் குடியானவன்.
‘இதில் ஏதோ முதன்மையான செய்தி இருக்கிறது போலும்’ என்று சேவகர் எண்ணி, அவனை மறுபடியும் அரசர் முன்பு கொண்டு போய், நடந்த செய்தியைக் கூறினார்கள். அரசர், “நீ கூறியதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்.
குடியானவன் அன்று காலையில் நடந்ததைக் கூறினான். தான் விடியற்காலையில் வயலுக்குச் சென்று உழுது கொண்டிருந்ததையும், அப்போது புத்தர் பெருமான் ஆனந்த தேரருடன் அங்கு எழுந்தருளி வந்ததையும், அவர்கள் அங்கிருந்த பணப்பையைக் கண்டு பேசிக் கொண்டவற்றையும் விளக்கமாகக் கூறினான். கூறி, “அவர்கள் பண மூட்டையை நச்சுப் பாம்பு என்று சொன்னது என்னைப் பொறுத்த வரையில், உண்மையாய் விட்டது. நான் பணத்தைக் களவு செய்யாதவனாக இருந்தும், இந்தப் பணம் என் உயிருக்கு நஞ்சாக இருக்கிறது,” என்று சொன்னான். இதைக் கேட்ட அரசர், தமக்குள் எண்ணினார். “இந்த ஆள், உலகத்துக்கே பெரியவர்களாக உள்ளவர்களைச் சான்று கூறுகிறான். இவனைப் பிடித்து வந்த சேவகர் கூறிய சான்றுகளோ, இவன் கள்வன் என்பதைத் தெரிவிக்கின்றன. ஒரு வேளை. இவன் மீது தவறாகக் குற்றம் சாற்றப்பட்டிருக்குமோ? இதைத் தீர உசாவ வேண்டும்.” என்று எண்ணிய அரசர், குடியானவனைக் கொலை செய்யாமல், சிறையில் வைக்கும்படி கட்டளை இட்டார்.
அன்று மாலை அரசர், புத்தர் பெருமான் எழுந்தருளியிருந்த சோலைக்குச் சென்று, அவரை வணங்கி, “பெருமானே! இன்று காலையில் தாங்கள் ஒரு குடியானவன் உழுது கொண்டிருந்த வயலுக்கு எழுந்தருளினீர்களோ,” என்று கேட்டார்.
“ஆமாம், அரசரே!”
“அங்குத் தாங்கள் என்ன கண்டருளினீர்கள்?”
“பொற்காசு நிறைந்த பணப்பையையும், முத்து மாலைகளையும் கண்டோம்.”
“அப்பொழுது தாங்கள் என்ன அருளிச் செய்தீர்கள்?”
தாம் ஆனந்தரிடம் கூறியதையும், அதற்கு ஆனந்தர் மறுமொழியாகக் கூறியதையும் புத்தர் அரசனுக்குத் தெரிவித்தருளினார். அரசருக்கு உண்மை புலப்பட்டது. குடியானவன் களவு செய்தவன் அல்லன். வேறு யாரோ களவு செய்து, அவன் வயலில் போட்டு விட்டுச் .சென்றிருக்கிறார்கள். புத்தர் பெருமான் பணப் பையைப் பார்த்த பிறகுதான், குடியானவன் அதைக் கண்டிருக்கிறான். குடியானவன் களவாடினவனாக இருந்தால், அவ்விதமாக எல்லோர் கண்களுக்கும் படும்படி அதை வைத்திருக்க மாட்டான். இவ்வாறு எண்ணி அரசர், புத்தரிடம் பின்வருமாறு கூறினார்: “பெருமானே! இந்தக் குடியானவன் தங்கள் திருப்பெயரைச் சான்று கூறியபடியால், உயிர் பிழைத்தான். இல்லையேல், அவன் உயிர் இன்றோடு முடிந்திருக்கும்,” என்று கூறி, அவரை வணங்கி விடை பெற்றுச் சென்றார்.
அரண்மனைக்குச் சென்று, குடியானவன் களவுக் குற்றம் செய்தவன் அல்லன் என்றும், அவனை உடனே விடுதலை செய்யும்படியும் சேவகருக்குக் கட்டளையிட்டார். குடியானவன் உயிர் பிழைத்துப் புத்தர் பெருமானை வாழ்த்திக் கொண்டே வீடு சென்றான்.