இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/மலையில் உருண்ட பாறை
8. மலையில் உருண்ட பாறை
இராசகிருக நகரத்துக்கு அண்மையில் குன்றுகளும், காடுகளும், தோட்டங்களும், தோப்புகளும் இருந்தன. ஆகவே, அவ்விடத்தில் இயற்கை அழகும், இனிய காட்சிகளும் நிறைந்திருந்தன. கழுக்குன்றம் என்னும் பொருள் உள்ள கிச்சரகூட மலையும், அதன் மேல், வெளு வனம் என்னும் மூங்கில் காடும் இருந்தன.
அந்தக் கிச்சரகூட மலையில் இருந்த வெளு வனத்திலே, புத்தர் பெருமான் தமது புத்த சமயத் துறவிகளுடன் தங்கியிருந்தார். அந்த மலைக்கு அண்மையில், ஒரு பெரிய மாந்தோப்பு இருந்தது. முனிவர் மலை என்னும் பொருள் உள்ள இசிகிலி அல்லது இசிகிரி என்னும் குன்று இன்னொரு புறம் காட்சியளித்தது. சித்திரகூட பர்வதம் என்னும் குன்று மற்றொரு பக்கத்தில் அமைந்திருந்தது. இம்மலையின் மேல் காளசிலை என்னும் பெயருள்ள கரிய நிறமுள்ள பெரும் பாறை பார்ப்பவர் உள்ளத்திலே அச்சத்தையும், வியப்பையும் உண்டாக்கி, வீரத்தோடு நின்று 'கொண்டிருந்தது.
மற்றொரு பக்கம் பண்டவ மலை இருந்தது. மத்தருச்சி என்னும் இடமும், மிருகதாய வனமும் இங்கு இருந்த மனத்திற்கினிய காட்சிக்குகந்த இடங்கள். மலைகளும், காடுகளும், தோப்புகளும், தோட்டங்களும் சூழ்ந்திருந்த இந்த இடத்தில், இயற்கைக் காட்சியின் எழிலும், வளமும் அமைந்திருந்தன. சூரியன் மறைகிற மாலை நேரத்திலே, செவ்வானம் பல விதமான நிறங்களோடு, காட்சி வழங்குகிற அந்திப் பொழுதிலே, இவ்விடம் பேரழகு பெற்று விளங்கிற்று. எழில் நிறைந்த இந்த இடத்திலே, மாலை நேரத்திலே புத்தர் பெருமான் தம் மாணவர்களுடன் நடந்து, உலாவுவது வழக்கம்.
ஒரு நாள், மாலை நேரத்திலே கதிரவன் மேற்கே மறைந்து கொண்டு, பழுக்கக் காய்ச்சிய தங்கத் தகடு போல் காணப்படுகிறான். பற்பல நிறங்களோடு, செவ்வானம் காட்சியளிக்கிறது. அடர்ந்த மரங்களிலே, பறவை இனங்கள், கூட்டங் கூட்டமாக அமர்ந்து, அடங்குகின்றன. அவ்வாறு அடங்கும் பறவைகள், கலகலவென்று சிலம்பொலி போல இசைக்கும் ஆரவாரம் எங்கும் கேட்கிறது. வெண்ணிறக் கொக்குகள் கூட்டங் கூட்டமாக விண்ணில் சுற்றிச் சுற்றிப் பறந்து, உயரமான மரத்தின் மேல் ஒருங்கே அமர்வதும், மீண்டும் ஒருங்கே கிளம்பி, வட்டமிட்டுப் பறந்து போய், மற்றொரு மரத்தில் அமர்வதுமாக இருக்கின்றன.
பகல் முழுதும் அடங்கிக் கிடந்த வௌவால் பறவைகள் வெளிப்பட்டு, விண்ணிலே பறக்கத் தொடங்கின. மெல்லிய காற்று இனிமையாக வீசிக் கொண்டிருக்கிறது. இயற்கைக் காட்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கின்றன. அமைதியும், அழகும், மகிழ்ச்சியும் ஆகிய பண்புகள் அங்குக் குடி கொண்டிருக்கின்றன.
புத்தர் பெருமான் தமது வழக்கப்படி இதோ நடந்து போகிறார். தொடர்ந்து, சற்றுப் பின்னால் சில மாணவர்கள் நடக்கிறார்கள். மலைச் சரிவில் மரங்கள் இல்லாத இடம். கதிரவன் மறைந்து விட்டான். கிச்சரக்கூட மலையின் அடிவாரத்திலே, இவர்கள் நடக்கிறார்கள். இருள் சூழ்கிறது. செவ்வானம் ஒளி மழுங்கிக் கொண்டிருக்கிறது. பறவைகள் மரங்களில், சந்தடியின்றி அடங்கி விட்டன. அமைதியான அந்த நேரத்திலே, மலையுச்சியிலே கடகடவென்று ஓர் அச்சமூட்டும் ஓலி கேட்கிறது. எல்லோரும் மலையுச்சியைப் பார்க்கிறார்கள். அந்தோ! கரிய பெரும் பாறை ஒன்று மலை மேலிருந்து உருண்டு வேகமாக வருகிறது. அது உருண்டு விழப் போகிற இடத்தில்தான் புத்தர் பெருமான் நடக்கிறார்! பாறை அவரை உருட்டி நசுக்கி விடுவது உறுதி. மலைச் சரிவிலே பாதி தூரம் பாறை உருண்டு வந்து விட்டது. ௮தைக் கண்ட மாணவர்கள் கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை. அடுத்த நொடிப் பொழுதில், பாறை புத்தர் மேல் உருண்டு விழப் போகிறது! மாணவர்கள் இமை கொட்டாமல் வாயடைத்து, மனம் துடித்து நிற்கிறார்கள்.
நல்ல வேளை! கடகடவென்றுருண்டு வந்த பாறை திடீரென்று இடை வழியிலே, மலைச் சரிவிலேயே நின்று விட்டது ஆனால், சிதறுண்ட சிறு கற்கள் வேகமாக உருண்டு வந்தன. அவற்றில் ஒரு கல், பெருமானின் காலில் பட்டது. காயம் பட்டுக் குருதி வடிகிறது. வலி பொறுக்க முடியாமல், அவர் தரையில் உட்கார்ந்தார். மாணவர்கள் ஓடித் தாங்கிக் கொள்கிறார்கள்.
விரைவாக உருண்டு வந்த பாறை, மலைச் சரிவிலே, தலை தூக்கி நின்ற இரண்டு பாறைகளுக்கு இடையிலே அகப்பட்டுக் கொண்டு, அங்கேயே தங்கி விட்டது; ஆனால், அது உருண்டு வந்த வேகத்தினாலே, சில பாறைக் கற்கள் சிதறி ஓடின. அவ்வாறு சிதறிய கற்களில் ஒன்றுதான், புத்தருடைய காலைக் காயப்படுத்தி விட்டது. அந்தப் பெரும் பாறை அங்கே தடைப்படாமல், உருண்டு வந்திருக்குமானால்… …!
இவ்வளவு பெரிய பாறை மலையுச்சியிலிருந்து எவ்வாறு உருண்டு வந்தது? இதை உருட்டித் தள்ளியவர் யார்? மழை காலமாக இருந்தால், வெள்ளத்தினால் மண் இளகிப் பாறை உருண்டது என்று கருதலாம்; அல்லது இடி விழுந்து பாறை புரண்டது என்று நினைக்கலாம். இதுவோ மழையற்ற வெயில் காய்கிற வேனிற்காலம்; பாறை தானாகவே உருண்டு வந்தது என்பது நம்பக் கூடியதன்று.
மாணவர்கள் மலையுச்சியை நோக்கினார்கள். மலையுச்சியிலே தேவதத்தன் நின்று கொண்டு, மலையடிவாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். புத்தர் பெருமானைக் கொல்லச் சதி செய்து, மலையுச்சியிலிருந்து பாறையைப் புரட்டித் தள்ளியவன் அவன்தான். தான் கருதிய காரியத்தைப் பாறை செய்து முடித்ததா என்பதை அறிய, பாறையை உருட்டித் தள்ளிய அவன் மேலிருந்தபடியே கீழே பார்க்கிறான்.
முன்பு இரண்டு முறை, ஆட்களை ஏவிப் புத்தரைக் கொல்ல முயற்சி செய்து, அந்த முயற்சிகளில் தோல்வியுற்றான். இப்போது தானே, தன் கைகளால் பாறையை உருட்டித் தள்ளி, அவரைக் கொல்ல முயன்றான். ஆனால், இப்போதும் அவன் வெற்றி பெறவில்லை. பாறை இடை வழியிலே தங்கி விட்டது.
தேவதத்தன் புத்தருடைய நெருங்கிய உறவினன். புத்தரிடம் வந்து, துறவு பூண்டவன். புத்த மதம் நாட்டிலே செல்வாக்கடைந்து, பெருமையும், சிறப்பும் பெற்றிருப்பதைக் கண்டு, புத்தர் பெருமானுக்குப் பதிலாகத் தானே தலைவனாக இருந்து, பெருமையடைய வேண்டும் என்று எண்ணினான். தன் கருத்தைப் புத்தரிடம் கூறித் தன்னைத் தலைவனாக்கும்படி வேண்டினான். புத்தர், “புத்த பதவி ஒருவர், இன்னொருவருக்குக் கொடுத்துப் பெறக் கூடிய நிலையன்று. அவரவருடைய விடா முயற்சியினாலே, உழைப்பினாலே பெற வேண்டிய நிலை”, என்று கூறி விட்டார். ஆகவே, தேவதத்தன் புத்தரைக் கொன்று, அந்த இடத்தில், தான் அமர்ந்து பெருமையடைய உறுதி கொண்டான். அதன் காரணமாகத்தான், அவரைக் கொல்ல முயன்றான். மூன்று முறை முயன்று பார்த்து, மும்முறையும் தோல்வியுற்றான்.
காலில் காயம் அடைந்த பெருமான் புத்தரை, மாணவர்கள் தூக்கித் தாங்கிக் கொண்டு, அண்மையிலே இருந்த மத்தருச்சி என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள். பெருமான், அருகிலிருக்கும் மருத்துவன் சீவகனுடைய மாந்தோப்புக்குத் தம்மை அழைத்துச் செல்லும்படி கூறினார். அவ்வாறே மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றார்கள். சீவகன் மருத்துவத் தொழிலில் திறமை பெற்றவன். அவன் புத்தர் காலில் பட்ட காயத்திற்குத் தகுந்த மருந்து இட்டுக் கட்டுக் கட்டினான். அடுத்த நாளே, பெருமானுடைய காயம் ஆறி விட்டது.
மாலை நேரமானவுடன், புத்தர் வழக்கம் போல நடந்து உலாவி வரப் புறப்பட்டார். சீடர்கள் தடுத்தார்கள். “தேவதத்தன் மீண்டும் சதி செய்வான். வெளியே போக வேண்டாம்,” என்று கூறித் தடுத்தார்கள். அப்போது புத்தர் கூறினார் : “துறவிகளே! ததாகதருடைய உயிரைப் போக்க ஒருவராலும் முடியாது. அவர் உயிரோாடிருக்க வேண்டிய நாள் வரையில் உயிருடன் இருப்பார். ததாகதர் உயிருக்குத் தீங்கு நேரிடும் என்று நீங்கள் அஞ்ச வேண்டா,” என்று கூறினார்.
பிறகு கைத்தடியை எடுத்துக் கொண்டு வழக்கம் போல உலாவச் சென்றார். மாணவர்களும் பின் தொடர்ந்து சென்றார்கள்.