உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1
பவழபஸ்பம்


"சகலகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக் கொண்டு நிற்கிறாயே, பளிங்கு அறையிலே, நிலக்கண்ணாடி, அது ஏது என்று தெரியுமோ? ஏலப்பனுக்கு என்னாலே பெருங் கஷ்டம் வந்தது என்று எவனெவனோ பேசினானே, அந்தச் சமயத்தில், அவனுடைய சஞ்சலத்தைப் போக்க, நான் தந்திரமாக என் மதியை உபயோகித்ததால் வந்தது, அவன், இதனை 60 பொன் கொடுத்து வாங்கினான் என்று நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன், அவன் 600 பொன் கொடுத்துப் பெற்ற பொருள் அது என்பது எனக்குத் தெரியும்! அழுதுகொண்டே கொடுத்தான், அதன் முன்புதான் நீ சிரித்துக்கொண்டே நிற்கிறாய், சிங்காரியாக. உன் உடை, உல்லாசம், மாளிகை, தோட்டம், வண்டி, வாகனம், வேலையாள், இவைகளை வேதாந்தம் தேடித்தரவில்லை. மாயாஜாலப் பொருள்களல்ல! மக்கள் மன்றத்திலே நீயும் உன் சகாக்களும் பேசினீர்களாமே, கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று! அந்தக் கொள்ளை இலாபம் கொடுத்த பொருட் குவியலிலே நீ இருக்கிறாய்! ஏழைகளின் இரத்தத்தை நாங்கள் குடிக்கிறோம் என்று ஏசினீர்களாமே, கூட்டத்திலே. அந்த இரத்தத்தை நான் கெட்டவாடை போக்கித் தங்கக் கோப்பையிலே ஊற்றித் தந்தேன் உனக்கு. அதை நீயும் பருகினாய். உனக்காகத்தான் நான் அந்த வேலையையும் செய்தேன். உன் அழகுக்கேற்ற அந்தஸ்து தேடிக்கொடுத்தேன். கண்டவர் மெச்சும் காட்சிப் பொருளாக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/8&oldid=1638395" இலிருந்து மீள்விக்கப்பட்டது