உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/தியானம்

விக்கிமூலம் இலிருந்து



10

தியானம்



தியானம் என வழங்கும் இந்தச் சொல் பண்பாட்டிற்கும் செயற்பாட்டிற்கும் மிக இன்றியமைந்த ஒரு சொல் எனப்படுகிறது. இதுகாறும் உலகிலில்லாத நூதனமான ஒன்றை உன்னி உணர்ந்து செய்து முடிப்பதற்குக் காரணமாகவும் உள்ளது.

ஆனால், இச்சொல்லிற்குரிய திட்டவட்டமான பொருள் இன்னது என்று அகராதி, தமிழில் கூறாத காரணத்தால் உரிய பொருளை இழந்து தவறான பொருளில்தான் உலகம் இன்று வழங்கி வருகிறது. அது ஐம்புலனடக்கிச் சிவ யோகம் செய்தல், அனுட்டானம், சிந்திப்பு. நினைவு எனப் பொருள்படுத்தப் பட்டுள்ளது. 'சீவ னெனவும் சிவெனனவும் வேறில்லை எனத் திருமந்திரம் ஐயம் திரிபறச் சொல்வதிலிருந்து இனி ஐம்புலனடக்கிச் சிவ யோகம் செய்தல் எனும் பொருள் அவசியமிழந்து விடுகிறது என்று நாம் சரியான முடிவிற்கு வந்து விடுகிறோம்.

'அனுட்டானம்' எனும் சொல்லுக்கும் நான்கு பொருள் இருப்பினும், நிலைநிறுத்தல் என்பது மட்டும் சரியான பொருளெனக் கொள்ளலாம். ஆம் சிந்தித்தலைக் கடந்தும் நினைவைக் கடந்தும் நிலைநிறுத்தல் எனும் சொல் பொருள் படுகிறது. இவற்றைப் பற்றி ஆராயாத இன்றைய அறிவாளிகளாகத் தம்மை எண்ணிக் கொண்டுள்ள ஒரு சிலர் தியானம் எனும் சொல்லை வீண்படுத்துகின்றனர்.

ஏதாவது ஒரு உருவத்தை தம் மனக்கண்முன் தோற்றுவித்துக் கொண்டு, அந்த உருவத்திற்கிட்டு வழங்கும் பெயரை வாயால் உச்சரிப்பது மட்டும் தான் தியானம் எனக்கூறி, ஏற்கனவே அறியாதவர்களை மேலும் கொஞ்சம் அறியாமையில் ஆழ்த்தி விடுகின்றனர். இது எத்தகையது எனில் பிறவிக் குருடாயுள்ளவனுக்குப் பிறந்தபின் குருடானவன் வழிகாட்டுவது போலுள்ளது. எனத்தான் கூற வேண்டும்.

உண்மையைக் கூறினால் இந்தச் சொல்லை வைத்துக் கொண்டுதான் மேல்நாட்டில் பலரும் சமுதாயத்துக்கு வேண்டிய அனைத்தையும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொடுத்துக் கொண்டுள்ளனர் ஆல்ப்பெர்ட் ஐன்ஸ்டீன் சாதனைகள்; ஆல்வாய் எடிசன் சாதனைகள் அனைத்தும் இந்தத் தியானத்தினால்தான் சாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பலரும் பற்பல நூதனப் பொருள்களையும் சாதித்துக் கொண்டுள்ளனர். ஆனால் அறியாமைச் சாத்தானால் பீடிக்கப்பட்டிருக்கும் நமது மாபெரும் பாரத தேசம், இந்த அருமைச் சொல்லின் உண்மையான பொருளை முழுக்க முழுக்க இழந்துவிட்டதுமன்றி தவறாகவும் செயல்படுத்துகிறது.

நான் இப்படிக் கூறும்போது இதைக் கேட்கும் சகோதரச் சினச் சேமிப்பாளன், கால்பந்தயக்காரன்களுக்கு சகிப்புத்தன்மை கழன்று விடுவதும் உண்டு. உடனே தத்தம் அப்பாரு, அப்பிச்சிகளின் ஞானனுபவங்களை குதிரைச் சாட்டைபோல் என்மேல் தொடுக்கப்பட்டதும் உண்டு.

என்ன செய்வது? சிந்திக்கத் தெரியாத செயல் திறனற்ற மக்களுக்கிடையில் சிக்கிக் கொண்டபின் எல்லாம் அனுபவித்துத் தானே ஆகவேண்டும். சரி அது ஒருபுறம் இருந்து கொண்டிருந்த போதிலும் நான் கூறவேண்டியும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும். ஒன்றைத் தொடர்ந்து செய்து தீரவேண்டியது என் தவிர்க்க முடியாத கடமையல்லவா? அதனால் நான் மேலும் தெளிய வைக்கவே செய்கிறேன்.

வள்ளுவர் கூறுகிறார் உள்ளியது எய்தல் எளிது மன், மற்றுந்தான் உள்ளியது உள்ளப்பெறின் என்று

இந்த ஒரு குறள்பா போதுமே, தமிழ் மக்கள் நிர்சிந்தையாக அமோகமாக வாழ, வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்ட இதை இந்த நாட்டில் எத்தனை பேர் புரிந்து கொண்டுள்ளனர்? புரிந்து கொண்டவர்களால் சாதிக்க முடியாததெனக் கூற எந்த ஒரு செயல்தான். இருக்கமுடியும்?

மற்றும் தான் உள்ளத்தில் உள்ளல் - அதுதான் தியானம். அப்போது நாம் உள்ளியதை எளிதாக எய்துவது நூற்றுக்குநூறு சதம் உண்மை. துணிவுள்ள இளைஞனே இதை நீயே பரிசோதனை செய்துபார்.

ஆணும் பெண்ணுமாகவுள்ள ஒவ்வொரு மனுச மனுசிகளுக்கும் 'அந்தக் கரணங்கள்' என நான்குள்ளன என்று ஆன்றோர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். அவற்றை மனம், புத்தி, சித்தம், ஒங்காரம் அல்லது ஆங்காரம் என்று பெயரிட்டுக் கூறப்படுகின்றன. மெய், வாய், கண், செவி, மூக்கு என நம்முடலிலுள்ள உறுப்புகளுக்கு அறிகருவிகள் என்பது பொதுவான பெயர். உலகிலுள்ள அனைத்தையும் இவ்வைந்து அறிகருவிகளும் இன்னின்னதென மனித மனத்தில் படியச் செய்கிறது. அப்படிமானத்துக்குப் பெயர் புத்தி அல்லது அறிவு எனப்படும். மனதில் படிந்த இவ்வறிவில் நல்லது, கெட்டது என இருவகையும் உண்டு. நல்லது என உள்ளன அனைத்தும் கொண்டு ஒழுகுவது அல்லது ஆசை வயப்பட்டுக் கெட்டது என உள்ளனவற்றைக் கொண்டு ஒழுகுவது இவ்விரு வகையில் நல்லது ஓங்காரமாகவும், கெட்டது ஆங்காரமாகவும் ஆகிவிடும் என்பர் ஆன்றோர். இது சித்தத்தின் செயல்பாடு. நல்னவற்றை மேற்கொண்டொழுகுவது சிரம சாத்தியமானது. எனினும் அதில்தான் ஆனந்தம் உள்ளது. கெட்டன. அனைத்தும் மேற்கொண்டவன் துக்கத்தின்பால் தள்ளப்படுகிறான்.

வாழ்நாள் முழுவதும் எச்சரிக்கை வகித்து நல்லனவற்றிலிருந்து அணுவளவும் நழுவி விடாது தன்னைக் கொண்டு செல்லும் செயல்முறைக்கே 'தியானம்' என்று பெயர்.

இனியும் சற்று விவரித்து விளக்க வேண்டின், உபநிசத்து நமக்குக் கை கொடுக்கிறது. 'மனம்' என்பதொன்று எல்லாம் வல்லது. மனதுதான் பிரம்மம். மனம் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். இந்த மனத்தைக் காட்டிலும் சங்கற்பம் பெரியது. 'இந்தச் சங்கற்பம் தான் குறிக்கோள்'. சங்கற்பத்தைக் காட்டிலும் சித்தம் பெரியது. ( இது வைராக்கியம் பூண்டுகொண்டநிலை) தியானம் (சங்கல்பத்தை பூண்டுகொண்டொழுகும் நிலை) சித்தத்தினும் பெரியது.

எனவே பூமி தியானம் செய்கிறது. அந்தரிச்சம் தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கிறது என்கிறது உபநிசத்து.

'சத்தியம்', ஞானம், ஆனந்தம், பிரம்மம் என்கிறது மத்த தைத்ரியோபநிசத்து. அசத்து நீக்கிச் சத்தையறிந்து, அதைச் செயல்படுத்தும் போது ஞானமாகித் தியான (இடைவிடாது கொண்டொழுகும்) நிலையில் பேரின்பமடையும் போது நாம் பிரம்மமாகிறோம்.

'சத்தியத்தை உளத்தில் பூனென பூண்டுகொண்டு வாழ்நாள் முழுதும் அறவழியிலிருந்து வழுவாதொழுகித் துயரம், துரம் = விலகி நிற்க, ஆனந்தம் அகம் பொங்கி வழிய, கண்களில் அறிவொளி சுடர்விட, அரசனும் அஞ்சி நின்று கைகூப்பக் கம்பீரமாக வாழ்வதற்குரிய நேர்மையான நிலைப்பாடுகான உறுதிநிலைதான் தியானம் என்ற முடிவுக்கு இந்த விவரங்கள் நம்மைக் கொண்டுவந்து விடுகின்றன அல்லவா? இதுதான் தன்னைத் தானறிந்து வாழும் நிலை; 'அகம் பிரம்மாஸ்மி 'எனச் சொல்லும்நிலை; நானே தெய்வமாயுள்ளேன்; எனக்குப் புறம்பாகத் தெய்வ மென என்வரையில் வேறொன்றில்லை எனக் கூறும் தகுதியுள்ள நிலை. இந்நிலை பரவலாக உபநிசத்துக்கள் மூலம் மக்களுக்குப் போதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொன்றுதொட்டு நாளது வரை நாட்டின் நடைமுறை தான் என்ன ? இதற்கு நேர் எதிர்மாறான நிலை இது ஏன்? உண்மைகள் எதற்காக மறைக்கப்பட்டது? யார் இதற்குக் காரணகர்த்தா என இனி நாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

1954ம் ஆண்டு வாக்கில் கர்நாடக முதன்மந்திரியாக இருந்த கெ. அனுமந்தய்யா காலத்தில் சர்க்கார் முயற்சியில் சமஸ்க்ருதி என்ற பெயருள்ள ஒரு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நூலில் பதினேழாம் பக்கத்தில் உள்ள ஒரு பாராவை இங்கு தமிழ்படுத்தி எழுதுகிறேன்.

"பெளத்த மதம் நாட்டில் பிரபலமடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் வைதிக தருமம் வெகுவாகச் சிதிலமாகிக் கொண்டிருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் சங்கராச்சாரியார், தருமத்தின் அதிமுக்கிய சாராம்சங்களை வைதிக மதத்தின் புனருத்தாரன நிமித்தம் ஆதாரங்களாக எடுத்துக் காட்டியும், பல்வேறு தெய்வ ஆராதகர்களனைவரும், சிந்தித்துப் பார்க்கும் போது ஒரே பரப்பிரம்மத்தின் உபாசகர்களே ஆகிறார்களென்றும் போதித்து, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன், ஆகிய முக்கியமான இவ்வைந்து தெய்வங்களையும் ஒன்று சேரவைத்து, தத்துவத்தின் உண்மைகளை எடுத்துக்காட்டி மடங்களை ஏற்படுத்தி வைதிகமதத்தை சுத்தமான அடித்தளத்தின் மேல் நிலைநாட்டி பெளத்த மதத்தின் பிராபல்யத்தைத் தடுத்து, இந்து நாகரீகத்தை இரண்டாவதாக பிரதிஷ்டை செய்தார், பெளத்த மதத்திலிருந்த முக்கியமானத் தத்துவங்களையெல்லாம் தம்முடைய சித்தாந்தத்தில் அடக்கி தெய்வீக நிலையைக் காப்பாற்றினார்.

சங்கராச்சாரியால் பெயரிட்டுக் கூறி வழிபாடு செய்வதற்கென காட்டிய, விஷ்ணு, சிவன், சூரியன், அம்பிகை கணநாதன் எனும் ஐந்தும் சடப்பொருட்கள்தானே. உபநிசத்துக்கருத்துக்கு முரணாக இவ்வைந்து ஜடப்பொருட்களையும் தெய்வங்கள் என்று மக்களுக்குக் காட்டியது எப்படி உண்மையாகும்.

இந்த ஆதி காலாடி சங்கராச்சாரி, உபநிசத்துகளைக் கற்றவரில்லரெனில் நாம் இதைப்பற்றி தர்க்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் உபநிசத்துகளை கற்றறிந்திருந்தும் ஏன் அதை மறைத்தார்? ஏன் இதைச் செய்தார்? உபநிசத்துக்களைப் படித்து உண்மைகளை உணர்ந்து கொள்ளுமாறு ஏன் செய்யாது விட்டார்?

உபநிசத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தியது “இந்த தெய்வங்களையா? அவர் காணப்படாமல் காண்பவர் கேட்கப்படாமல் கேட்பவர். அவரைக் காட்டிலும் வேறாகக் காண்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாகக் கேட்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை, அவரைக் காட்டிலும் வேறாக அறிபவர் இல்லை. அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி அழிவற்றவர். மற்ற எல்லாம் அழிவுள்ளது. என்பதை ஏன் ஆச்சாரியார் மக்களுக்கு காட்டாமல் மறைத்தார்; இன்னும் மறைத்துக் கொண்டே உள்ளனர் இன்றுள்ள ஆச்சாரிகளும்?

அவர்கள் மறையோர்கள், உள்ளதை மறைத்து உலகத்தை அதோகதிக்கு இன்றும் அழைத்துச் செல்லுகின்றனர். தொலையட்டும். தமிழ் படித்து பட்டம் பல பெற்ற புலவர் பெருமக்கள் பற்பலர் உள்ள இந்த துர்ப்பாக்கியத்துக்குள்ளான நாட்டில் ஆரியரால் மறைத்து வைத்த அந்தப் பேருண்மையைத் நமது திருமூலர் வெளிப்படுத்தியுள்ளதை இனிமேலாவது அறிந்து அனைவர்க்கும் விளக்கமாக வினயமாகக் கேட்டுக் கொண்டு இங்கே குறிப்பிடுகிறேன் ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் இனியேனும் அறிய;

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருவறி யாதே
உள்ளத்துக்குப் புறம்பாக எந்தவொரு தெய்வமும் இல்லை என்பதற்கு இதுவே போதும். எனவே ஒழிக உருவ வழிபாடு என்று கூறி இதை முடிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/தியானம்&oldid=1637783" இலிருந்து மீள்விக்கப்பட்டது