உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/பிரார்த்தனை

விக்கிமூலம் இலிருந்து

18



பிரார்த்தனை


ன் வாழ்நாளில், துளியும் முக்கியத்துவம் அற்றதென ஒதுக்கிவிட்ட ஒரு சொல்தான் இந்தப் பிரார்த்தனை எனும் சொல். ஆனால் உலகின் கண் வாழும் கோடானகோடி மக்கள் இந்தப் பிரார்த்தனை எனும் சொல்லுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறையில் கொண்டொழுகுவது நாடொறும் என் கண்ணால் நான் நேரில் காண்கிறேன்.

பிரார்த்தனை அல்லது வேண்டுதல் எனும் சொல்லை ஒரு பொருளற்ற சொல் எனும் நேரத்தில், உலகம் அது ஒருபொருள் பொதிந்த அதிமுக்கியத்துவமுள்ள சொல்லாகக் கருதுகிறது ஏன்? ஒன்று, என் கருத்து தவறாதல் வேண்டும், அன்றேல் அவர்கள் கருத்து தவறாதல் வேண்டும். எப்படிப் பார்த்தாலும் இரண்டும் சரி எனச் சொல்ல இயலாது.

'வேண்டுதல் எனின், ஒரு உயிருள்ள மனிதனின் விருப்ப வெளிப்பாடு' என்பது தெளிவு. இது எப்போது பொருளுள்ளதாகிறது எனின் தன்னைப் போன்ற உணர்வுள்ள இன்னொருமனிதனிடம், தன் இயலாமையை விளக்கிக் கூறி உதவுமாறு கோரும் போது, மற்றவன் அதுகேட்டு தன்னால் அது சாத்தியமுள்ளதாயின், வேண்டிக் கொண்டவன், அதற்குப் பாத்திரமானவனாயிருப்பின் கடப்பாட்டுணர்வோடு அவன் வேண்டுதலை ஏற்று நிறைவேற்றுதல் எனும் போது மட்டும் பொருளுடையதாகும். ஆனால் உணர்வற்ற, தெய்வமுட்பட மற்ற உயிருள்ள வேறு எந்த ஒன்றினிடமும் பிரார்த்தனைக்குப் பொருள் கிடையாது, என்பது சிந்தித்துப் பார்க்கும் போது தெளிவுபடுகிறது. நமக்கு வேண்டிய ஒன்று, - அது எதுவாகவேனும் இருக்கட்டும் அதை நாமே தேடிக்கொள்ள வேண்டியதுதான் விதிமுறை. இதனைச் சிந்தித்தறியாது வானைநோக்கியோ, கோயிலுள்ள உருவை நினைத்துக்கொண்டோ பிரார்த்தனை செய்தல் மூடத்தனம். அறியவுள்ளதனை அறியாத பலவீனம், அல்லது வரன் முறையாக வந்துகொண்டிருக்கும் பழக்கத்தின் பாற்பட்டதேயாகும். 'விழலுக்கு நீர் இறைத்தல்' என்ற வழக்கு சொற்றொடர் இந்தப் பிராத்தனைக்கு மிக நல்ல முறையில் பொருந்துகிறது, என்று நான் சொல்லிவிட எண்ணுகிறேன்.

பிரார்த்தனை செய்து காரியம் சாதித்துக்கொள்வதற்கேற்ற உணர்வுடைய ஒரு தெய்வம் பிரபஞ்சத்தில் இருப்பதாக நினைப்பது ஒருவித பிரமை அதாவது அறியாமை. உபநிசத்துக்கள் இந்த மாதிரியான ஒரு தெய்வமிருப்பதை ஒத்துக்கொள்வதில்லை. ஆராய்ச்சி அறிவு ஒத்துக்கொள்வதில்லை. இது உண்மைக்குப் புறம்பான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இதை விளக்குவது சற்று கடினமானதுதான் எனினும் விளக்கியே தீரவேண்டியது நமது கைவிடக்கூடாத கடமையாகிறது.

காலாடி சங்கராச்சாரி ஆரியமில்லாதாராகிய நமக்கு கருணை பாலித்து இலவசமாகக் கொடுத்த அந்த ஐந்து தெய்வங்களும் உண்மையில் தெய்வங்களல்ல. அவைகளை உபநிசத்துகள் தெய்வங்கள் என்று கூறாது அபரப் பிரம்மம் எனப் பெயரிட்டுள்ளது. அச்சரப் பொருள்கள் என்கிறது.

விட்டுணு, சிவன், சூரியன், அம்பிகை, கணநாதன் என்று ஏற்கனவே கன்னடநூல் விவரித்துள்ளதனைக் முந்திய கட்டுரைப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை இன்னின்னது என்று குறிப்பிட வேண்டியது இங்கு அவசியமாகிறது.

'பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம்' என்பனவே அவை. இவ்வைந்து அஃறிணைப் பெயர்களையும் வெகுநுட்பமாகிப் பொருந்த வுன்னித்தான் அவர் உயர்தினைப் பெயர்களைச்சுட்டி நமக்கு இலவசமாகத் தந்தருளினார்.

முதலில் பிருதிவி, அப்பு எனும் வரிசைக் கிரமத்தை மாற்றி வைத்தார். விஷ்ணு எனின் தமிழில் கடல் மேகம், நீர்; ஆரிய மொழியில் அப்பு எனப்படும். அடுத்து சிவன் என வைத்தார்; சிவனுக்கு இன்னொரு பெயர் பசுபதி என்றும் வழங்கப்படும். பசுபதி எனின் அதன்பொருள் வாயு எனப்படுகிறது. இந்த வாயுதான் நமது பிராணன், அல்லது உயிர். நமது உடலிலுள்ள உயிருக்குப் பதி, அதாவது ஆதாரமாயுள்ளது. வானத்திலிருந்து இரண்டாவதாகத் தோன்றிய இரண்டுகுணம் உள்ளது காற்று, வானத்துக்கு ஒரு குணம் மட்டும் உண்டு. அது ஒலி மட்டும்தான், வாயுவுக்கு இரண்டு குணம் உண்டு அவை ஒலியும் தொடுமுணர்வு தருவதுமாகும்.

மூன்றாவதாகச் சூரியனை வைத்தார். வெப்பத்துக்கு, நெருப்புக்குக் காரணமாகவுள்ளது. ஆரிய மொழியில் நெருப்பு தேயு எனப்படும். நெருப்பின் குணம் மூன்று. அஃதாவன ஒலி, பரிசம், தென்படல் எனப்படும்.

நான்காவதாக அம்பிகை என்ற பெண்பால் பெயர் உள்ளது. அம்புவி, புவி என பூமிக்கு இட்ட பெயர்தான் அம்பிகை எல்லா சீவராசிகளையும் தோற்றுவிக்கக்கூடிய, தாய் போன்ற இயல்புள்ளது இந்தப் புவி. இது ஐந்து குணமுள்ளது. அவை ஒலி, பரிசம், தோற்றம், நாற்றம், சுவை எனும் பெயர் பெறும் என்பர். விடுபட்ட நீருக்கு நான்குணம் உள்ளதுவாம். அவை ஒலி, பரிசம், தோற்றம், சுவை எனப்படும்.

அபரப் பிரம்மம் அல்லது அச்சரப்பொருள் எனப்படும் பஞ்சபூதங்களைந்தும் அழியாதது, என்றுமிருப்பவை. சடப்பொருள்களாகிய இவ்வைந்தினையும் உயர்தினைப் பெயர்களாக்கி உருவங்களைச் செய்து கோவில்களைக் கட்டி அதில் வைத்து நம்மைக் கும்பிடச்செய்தனர்.

கடோபநிசத்துச் சூத்திரம் 6.9க்கு விளக்கம் தரவந்த உத்தரகீதை இப்படிச்சொல்வதை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம். துவிஜர்கள் (பிராமணர்கள்) பரமாத்மாவை அக்கினியில் பூசிக்கின்றனர். யோகிகள் தங்கள் இருதயத்தில் பூசிக்கின்றனர். அறிவில் முதிர்ச்சியடையாதவர்கள் (பாமரர்கள்) பிம்பங்களில் பூசிக்கின்றனர். சமதர்சிகள் எங்கும் புசிக்கின்றனர் என்கிறது.

இதிலிருந்து கோயில்கள், சமதர்சிகளுக்கும், யோகிகளுக்கும், பிராமணர்களுக்கும் அல்ல, பாமர மக்களுக்கு மட்டும் என்பதை மறுக்க முடியாது. எனவே சடப் பொருளை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை மட்டும் வீண் என்பதோடு; கோயிலும் வீண்; கும்பிடுதலும் வீண்; பூசை திருவிழாக்களும் வீண்; இதனைச் செய்யும் மனிதப் பிறப்பும் வீண் ஆகிறது என்று கொள்ளலாமல்லவா?

எனவே பிரம்மம், சிவன், விஷ்ணு, சூரியன், அம்பிகை, கணநாதன் எனும் இவைகள் அல்ல மற்றுமுள்ள எந்த ஒரு பெயர்ச்சொல்லுமல்ல எனின், பிரம்மம் என்பது எது என்று கூறவேண்டியது இங்கு அவசியம். அதை முண்டகோபநிசத்து சுட்டிக் கூறுகிறது.

“உடலுக்குள்ளேயே ஜோதி மயமாய்ப் பரிசுத்தமாய் விளங்கும் எந்த ஆத்மப் பொருளைச் சித்தமலம் நீங்கிய சந்நியாசிகள் காண்கிறார்களோ, அந்த ஆத்மப் பொருள் அகண்டமான பிரம்மமாச்சரியத்தாலும் தெளிந்த ஞானத்தாலும், இடைவிடாத தவத்தாலும் சத்தியத்தாலும் அடையப் பெறும்” என்கிறது.

மேலும் கூறுகிறது, “பொன்போன்று பிரகாசிக்கும் சிறந்த புத்திகோசத்தில் குற்றமற்றதும் பிளவு படாததுமான பிரம்மம் உள்ளது. அது சுத்தமாயும் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாயும் உள்ளது. அப்படியுள்ள அந்த ஆத்மாவை எவர்கள் அறிந்தவர்களோ அவர்களே அறிய வேண்டியதை அறிந்தவர்கள்” என்கிறது.

பிருகதாருண்ய உபநிசத்து மேலும் அதைத் தெளிவு செய்கிறது. “மோச்சத்துக்கு அவித்தைதான் பிரதிபந்தமே தவிர வேறு பிரதிபந்தமில்லை ஆகையால் எவனொருவன் இந்த உலகத்திலேயே அந்தச் சிரேஷ்டமான பிரம்மத்தை நான் தான் என்று சாச்சாத்கரிக்கிறானோ அவன் வேறு கதியை அடைகிறதில்லை. தேவதைகள் கூட பிரம்மத்தை அடையும் விசயத்தில் அவனுக்கு விக்கினம் செய்ய முடியாது. தேவதைகளுக்கும் இவனே ஆத்மாவாயிருக்கிறான். ஆகையால் பிரம்மத்தை அறிபவன் பிரம்மமாகிறான்” என்கிறது.

அறிவார்ந்த நண்பனே! சிந்தித்துப்பார். சரியான வழிக்குவா! மற்றவர்களுக்கும் விளக்கிக் கூறு. துன்பத்திலிருந்து தேசத்தை விடுவிப்பதில் சதா காலமும் ஈடுபடு. சத்தியமே வெல்லும் வாழ்க தமிழ்நாடு.



* ஒவ்வொரு வீட்டிற்கும் விளக்கு எப்படியோ அப்படியே புத்தகமும் அவசியம் என்பதை நம்மவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

- பீ.வி. ஜுக்

இன்று மனிதனுக்கு மிக மிக அவசியமானது நாய்களைத் தவிர ஒரு குப்பை கூடையும் தான்.

திருக்குறளையும், புறநானூற்றையும் கற்றுத் தெளிந்து வாழ்வில் கடைபிடிக்காத ஒருவன், தன்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும்.

-வெ.