கல்வத்து நாயகம்
கல்வத்து நாயகம்
இன்னிசைப் பாமாலை
சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
பிஸ்மில்லாஹி
கீழக்கரை
கல்வத்து நாயகமவர்கள்
இன்னிசைப் பாமாலை
மதுரைத் தமிழ்ச்சங்கப்புலவர்,கலைக்கடல்
அல்லாம(டாக்டர்)தேவாமிர்தப்பிரசங்கக்களஞ்சியம்.
மகாம்தி, சதாவதானி.
கா.ப. செய்குதம்பிப் பாவலர்
பாவலர் பதிப்பகம்
53,நைனியப்பன் தெரு,சென்னை-1
முதற்பதிப்பு :1940
இரண்டாம் பதிப்பு :1966
மூன்றாம் பதிப்பு :1990
வெளியீட்டு எண் 5
பதிப்புரிமை பெற்றது
விலை ரு. பத்து
சதாவதானி
கா.ப.செய்குதம்பிப் பாவலர்
அச்சிட்டோர் : தாஜ் அச்சகம், சென்னை-1
ஜாம்பவான்கள், கவிஞரேறுகளின் கட்டுரைகள், கவிதைகள் அடங்கியசதாவதானி செய்குதம்பிப் பாவலர்என்ற சீரிய தொகுப்பு நூல் ஒன்றினை, அவர்களின் நினைவாக தமிழ்நாடு அரசு உருவாக்கிய மணிமண்டபத் திறப்பு விழாவினை யொட்டி வெளிக் கொணர்ந்தோம்.
'இலக்கியப்பேழை'யின்மறுபதிப்பும்'நாதாவே நாயகமே' என்ற கவிதை நூலும் அண்மையில் வெளி வந்தன. இப்போது கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலையின் மூன்றாம் பதிப்பு இறையருளால் வெளிவருகிறது.
சதாவதானி பாவலர் அவர்களின் கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை கவிதைகளைத் தொடர்ந்து மேலப் பாளையம் காளை ஹசன் அலிப் புலவர் அவர்களின் கல்வத்து மாலையும் அதைத் தொடர்ந்து மேலப்பாளையம் ஜமால் ஸெய்யிது முஹம்மது ஆலிம் சாஹிபு அவர்களால் சொல்லப் பட்ட கல்வத்து நாதா பாடல்களும் இதே நூலின் பிற்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளன.
கீழக்கரையில் வாழ்ந்திருந்த கல்வத்து ஆண்டகை, அவர்களின் சிறப்புணர்த்தும் சீரிய நூலின் இந்த மூன்றாம் பதிப்பு வெளிவரத் துணை நின்ற நல்லோர் எல்லோருக்குமே நன்றியை உரித்தாக்குகிறோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.
20–1–1990 | கே.பி.செய்குதம்பி | |||
சென்னை-1 |
கீழக்கரை
கல்வத்து நாயகமவர்கள்
இன்னிசைப் பாமாலை
* * * * * *
காப்பு
நேரிசை வெண்பா
செல்வத்துட் செல்வமெனச் சீர்கெழுகி ழக்கரைவாழ்
கல்வத்து நாயகத்தின் கண்ணியமே-பல்விதத்து
மல்கவரு மின்னிசைப்பா பாலை சொல வாய்ந்தவருள்
நல்கவரு மென்னிறையோ னட்பு.
கொச்சகக் கலிப்பா
அற்பூர நும்மடிக்கே
யஞ்சவித்த நெஞ்சினொடு
பொற்பூர வின்னிசைப்பாப்
பூட்டிமகி ழீட்டேனோ
இற்பூர வன்பருளத்
தேற்றிவைத்துப் போற்றுமொரு
கற்பூரத் தீபமொத்த
கல்வத்து நாயகமே!
விண்கண்ட வாதவன் போல்
மேதினியெ லாம்விளக்கிப்
பண் கண்ட நும்மருட்சீர்
பாவியேன் பாடேனோ
திண்கண்ட வாய்மைமிகு
செய்யிதப்துல் காதிறெனுங்
கண்கண்ட சற்குருவே
கல்வத்து நாயகமே!
பூவிருந்த வாசமெனப்
பூதலத்து மீதலத்து
மேவிருந்த நாதனருண்
மேன்மைமிகு மேலோராய்த்
துாவிருந்த முத்தர்குலச்
சுத்தபர தத்துவரே
காவிருந்த கீழைநகர்
கல்வத்து நாயகமே!
கேடுமுறித் தற்பகலுங்
கீழ்மைதரு மேழமையாம்
பாடுமுறித் துற்றமலப்
பற்றுமுறித் தாளிரோ
வாடுமுறித் தோங்குசித்தீக்
மாமரபில் வந்தபெருங்
காடுமுறித் தார்குலத்தீர்
கல்வத்து நாயகமே!
ஆரணமும் பல்கலையு
மாய்ந்துரைத்த வான்மீக
பூரணமெய் ஞானதவப்
போதனைக ளத்தனையுஞ்
சீரணமுன் றேர்ந்துணர்ந்த
செல்வருமச் செல்வர்தரு
காரணமு நானென்றீர்
கல்வத்து நாயகமே!
ஆட்டிவைத்த பம்பரம்போ
லல்லலுழந் தற்பகலுங்
கோட்டிவைத்த வையமுற்றுங்
கூர்ந்துவப்ப நேர்ந்தறிஞர்
திட்டிவைத்த பல்கலையிற்
செய்தொழிலில் வாய்மொழியிற்
காட்டிவைத்த பொக்கிஷமே
கல்வத்து நாயகமே!
சத்திருந்த ஞான கலை
சாத்திரங்கள் யாவுமுமை
யொத்திருந்து தேடிமிக
வோலமிடு முத்தமரே!
பித்திருந்த யேழையனப்
பின்னலறுத் துன்னுமுன்னம
கத்திருந்த வந்தருள் வீர்
கல்வத்து நாயகமே!
மட்டற்ற செல்வமொடு
மக்கள்மனை சுற்றமெலா
முட்டற்ற வாழ்க்கைமிக
முன்னிருந்தும் பின்னொருவ
விட்டற்ற மோக்கநிலை
மேவுதுற வேய்ந்துமனக்
கட்டற்ற நீர்மைகொண்டீர்
கல்வத்து நாயகமே!
வானாடும் பூநாடு
மற்றனவுந் தானாட
நானாடு நும்மருட்டேன்
நாயேனுண் டுய்யேனோ
ஊனாடு மாந்தரெலா
முண்ணாட முன்னாடுங்
கானாடும் பூம்பதத்தீர்
கல்வத்து நாயகமே!
பேணுவது நும்மருளே
பேசுவது நுந்நாமம்
பூணுவது நும்மலர்த்தாள்
போற்றுவது நும்புகழே
நாணுவது நும்மறதி
நண்ணுவது நுஞ்சமுகம்
காணுவது நுங்காட்சி
கல்வத்து நாயகமே!
என்னாசை யொன்றுளதே
தின்பமிகு செம்பொனடி
தன்னாசை யன்றியுறுந்
தண்ணருட்கீழ் வாழ்வதுவே
பின்னாசை யேதுமிலைப்
பேதுருத்தித் தீதருத்துங்
கன்னாசை நீத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!
ஆட்சிதரும் புந்திமன
மாக்கையிந்தி யங்களெலாம்
நீட்சிதரு நுண்ணறிவால்
நேர்ந்தொழித்தென் முன்பணிபோன்
மாட்சிதரு தீனானா
மாற்றமறுத் தைக்கியமெய்க்
காட்சிதருங் கண்ணுதலெங்’
கல்வத்து நாயகமே!
மானாரும் பெற்றுவந்த
மக்களொடு சுற்றமென
ஆனாரு தம்முயிர்க்கிங்
காயதுணை யாவாரோ
தானாருஞ் சீவமுத்த
தத்துவருஞ் சாற்றவல்ல
கானாரும் பூங்குழலீர்
கல்வத்து நாயமே!
முட்குடியை நச்சுணவை
முந்நீரை யுற்றருந்த
மட்குடிக ளெண்ணாத
வாறென்னை நண்ணீரோ
உட்குடியா வீற்றிருந்தென்
னுச்சிகனிந் தூறிவருங்
கட்குடியைக் காட்டுமெங்கள்
கல்வத்து நாயகமே!
பொய்கண்ட துண்ணிடையார்
பூட்டுமைய லார்கலியுள்
நொய்கண்ட நாயேனும்
நொந்தழுந்தி மூழ்குவனோ
எய்கண்ட மாந்தருளத்
தின்னறவிர்த் தின்பநல்குவ
கைகண்ட மாமருந்தே
கல்வத்து நாயகமே!
மண்ணாடிப் பெண்ணாடி
மாநிதியத் தானாடிப்
புண்ணாடி நின்றநெஞ்சப்
புல்லனையு மாளீரோ
உண்ணாடி வந்தவெலா
முற்றுணர்ந்து மற்றுரைத்துங்
கண்ணாடி யானீரென்
கல்வத்து நாயகமே;
பண்ணூறு மென்மொழியார்
பார்வைவலைக் குள்ளாகிப்
புண்ணூறு நெஞ்சினனாய்ப்
புத்திகெட்டுப் போகாமற்
றண்ணூறு நுங்கருணைச்
சாகர்த்துண் மூழ்கவென்றன்
கண்ணூறு தீர்த்தருள்வீர்
கல்வத்து நாயகமே!
வேல்பிடித்த கண்மடவார்
வெய்யமையற் காட்டகத்தே
மால்பிடித்த யானையென
மாழாந்து நில்லாமற்
கோல்பிடித்த கையுடைய
கொற்றவருங் காணபருதுங்
கால்பிடித்தேன் கண்ணில்வைத்தேன்
கல்வத்து நாயகமே!
கொக்கிவிட்ட சங்கிலிபோற்
கூண்டெழுந்து நும்மடியார்
சொக்கிவிட்ட நல்லருட்கே
தோய்ந்துநின்றா ரையோதா
னுக்கிவிட்ட நெஞ்சினனா
யுள்ளுடைந்து மெய்ம்மயங்கிக்
கக்கிவிட்ட தம்பொலத்தேன்
கல்வத்து நாயகமே!
ஆணவத்தை மற்றிரண்டை
யாங்கறுத்து, வென்றுபல
பூணவத்தைப் பூண்டுநின்ற
புண்ணியர்க்கா ளாகாமல்
வீணவத்தை கொண்டெழுந்திம்
மேதினியெ லாமலைந்தேன்
காணவத்தைக் காட்டுமெங்கள்
கல்வத்து நாயகமே!
துலைவைத்த நாவென்னச்
சூழ்ந்தபல ஞாயநிலைக்
குலைவைத்த பாவியெனை
யுள்ளுவந்து காவீரோ
மலைவைத்த தீபமொத்த
மெளலல்கெளமி யானவெங்கள்
கலைவைத்த மாமதியே
கல்வத்து நாயகமே!
பாராரு மூராரும்
பாவியெனப் பேசாமற்
சீராரு நுந்துணை த்தாள்
சென்னிமிகை சூடேனோ
ஏராரு நேமநிட்டை
யேந்தியற்று மாதவர்சூழ்
காராருங் கையுடையீர்
கல்வத்து நாயகமே!
மண்ணொளியும் பொன்னொளியும்
வாய்த்தபல மாமணியின்
றண்ணொளியு நுங்கமலத்
தாளொளிக்கோ வொவ்வாவே
விண்ணொளியு முற்றபல
வேற்றொளியு மன்பருளக்
கண்ணொளியுங் காண்பருமெங்
கல்வத்து நாயகமே!
பொற்பகத்தைக் கட்டுணையைப்
போற்றுமுயர் நாவகத்தை
யெற்பகத்தை நும்மடிக்கே
யீடாக வையேனோ
அற்பகத்தை யர்ப்பணமென்
றற்பகலு மாக்குநர்க்கோர்
கற்பகத்தை யொத்தவெங்கள்
கல்வத்து நாயகமே!
வரையேற்ற மென்முலையார்
மாயவலைக் குள்ளாகி
விரையேற்ற நுங்கமல
மெல்லடிக்கீழ் நில்லாமல்
கரையேற்ற வெம்பாசச்
சாகரத்து ளாழுகின்றேன்
கரையேற்ற லாகாதோ
கல்வத்து நாயகமே!
அடக்கமுடி யாவாசை
யாறிழுக்கப் பேறிழந்து
கிடக்கமுடி யாதுழன்றேன்
கீழ்மைகரு மாயையெனும்
நடக்கமுடி யாச்சுமையு
நான்சுமந்தேன் நாடிலிவை
கடக்கமுடி யாவோவெங்
கல்வத்து நாயகமே!
போற்றாடி யுற்றபொருள்
போலுமென்ற னுட்கமலம்
வீற்றாடி நல்லருளை
மேவுமஞர் தீரிரோ
ஈற்றாடி யுள்ளுதிரு
மீர்ஞ்சருகை யொத்திதயங்
காற்றாடி யாகாமற்
கல்வத்து நாயகமே!
பொட்டுண்ட வின்னுதலும்
பூணுண்ட மென்முலையும்
பட்டுண்ட சிற்றிடையும்
பாவையர்பாற் பார்த்துருகீத்
தட்டுண்டு தத்தளித்த
தாசனே னும்மருளிற்
கட்டுண்டு நிற்பேனோ
கல்வத்து நாயகமே!
அருங்காலி கன்றுவக்கு
மன்பினெழுந் தங்கனையார்
மருங்காவி யன்றவசை
மாறநெறி கூறீரோ
பொருங்காலி போன்றமடப்
புல்லரையுந் தாங்குமொரு
கருங்காலித் தூணிகர்த்தீர்
கல்வத்து நாயகமே!
தன்மவினை பல்கோடி
தட்டாமற் செய்தாலுஞ்
சென்மவினை தீருமுறை
தேரும்வகை காணேனே
வன்மவினை பூண்டமுழு
மாமடையர்க் குங்கொடிய
கன்மவினை நீத்தவெங்கள்
கல்வத்து நாயகமே!
ஊர்மதிக்கப் பேர்மதிக்க
வுற்றாருந் தான்மதிக்கப்
பார்மதிக்கப் பொய்புலைகள்
பண்ணிநின்ற பாவியெனை
ஆர்மதிக்கப் போகின்ற
ரையகோ வன்பினொடுங்
கார்மதிக்கக் காட்சிதருங்
கல்வத்து நாயகமே!
துள்ளுண்ட கைம்மறிபோற்
சூழ்ந்தெழுந்து தூயவர்தா
மொள்ளுண்ட நின்னருளை
மொய்த்துண்டு வாழ்ந்தார்யாள்
விள்ளுண்ட மாமுலையார்
வெங்காம வெள்ளமுண்டு
கள்ளுண்ட நாய்நிகர்த்தேன்
கல்வத்து நாயகமே!
மாணாத வெவ்வினையின்
வாய்ப்பட்டு மற்றொன்றும்
பேணாத நாயேனைப்
பேயேனென் றெள்ளாமல்
நீணாத போதநவ
நீர்மையுற நேர்மைசெய்வீர்
காணாத காட்சிதருங்
கல்வத்து நாயகமே!
பார்காத்த வேந்தரெலாம்
பண்பினெடு நும்மலர்த்தாட்
சீர்காத்து முவ்வுலகுஞ்
சீர்த்துநின்றா ரந்தோயான்
ஞாகாத்த வெந்துயரின்
சூழலிடைப் பட்டுலைந்து
கார்காத்த பக்கியொத்தேன்
கல்வத்து நாயகமே!
பொல்லாரைக் கூடியவர்
போநெறிக்கே போந்தலைந்து
நல்லாரைக் காண்வநான்
நாணுகின்றேன் நாய்க்குணத்தேன்
இல்லாரை யுள்ளார்போன்
றெள்ளகிலீ ரேற்றருள்வீர்
கல்லாரை யும்புரக்குங்
கல்வத்து நாயகமே!
சேய்பிழையைத் தாய்பொறுப்பர்
சிற்றினத்தேச டேழையர்செய்
தேய்பிழையை மேலவர்க
ளெண்ணுவரோ வெண்ணருமிந்
நாய்பிழையை யார்பொறுப்பர்
நாடுமும்மை யன்றிமற்றோர்
காய்பிழையைக் காத்தருளுங்
கல்வத்து நாயகமே!
சூடுபடும் வல்வினையிற்
சூழ்பிணியி லாழ்துயரி
லீடுபடு மேழைபெனை
யீடேற்ற லாகாதோ
ஆடுபடுங் கைத்திரையி
லள்ளிவைத்த செம்பவளக்
காடுபடும் பெளத்திரைவாழ்
கல்வத்து நாயகமே!
மைதூக்கிச் சேலொதுக்கு
மங்கைமட மாதர்விழிக்
கெய்துக்கி நெஞ்சழுங்கி
யீடழிந்து நின்றவெனை
பைதூக்கி யாடாவப்
பாழ்நாகிற் புக்காமற்
கைதூக்கி யாளுமெங்கள்
கல்வத்து நாயகமே!
மின்னிகர்த்த வாழ்வைநம்பி
வேண்டகிலா தும்மலர்த்தாட்
புன்னிகர்த்த சிற்றின்பப்
பூவையர்தாட் போற்றுகின்றேன்
என்னிகர்த்த பாவியினி
யெங்குமிலை யேற்றருள்வீர்
கன்னிகர்த்த பூம்புயத்தீர்
கவ்வத்து நாயகமே!
விண்பார்த்த நேமியென
வெட்டவெளி யுள்ளிருந்து
பண்பார்த்த சுத்தநிலை
பற்றிமகிழ் வெய்தாமல்
நண்பார்த்த வன்குடும்ப
நாடகத்தி லாடுகின்றேன்
கண்பார்த்துக் காப்பீரென்
கல்வத்து நாயகமே!
ஓலெடுத்த பாற்கடலி
லுண்டெழுந்த பைம்புயலின்
சாலெடுத்த மாரியெனத்
தண்ணளிதந் தாளீரோ
கோலெடுத்த தண்டலையுட்
கூண்டெழுந்த முக்கனித்தேன்
காலெடுத்த கிற்கரைவாழ்
கல்வத்து நாயகமே!
புண்ணெடுத்த வேல்வலவர்
போந்தடர்த்த போர்ப்பதுறில்
மண்ணெடுத்து வீசுநபி
மார்க்கநிலை கண்டோரே
பண்ணெடுத்த செந்தமிழ்சேர்
பாவெடுத்துப் போற்றுமெனைக்
கண்ணெடுத்துப் பார்த்தருள்வீர்
கல்வத்து நாயகமே!
வரைகண்ட பூண்முலையும்
வாள்விழியும் நீள்குழலும்
நிரைகண்ட வெண்ணகையும்
நேர்ந்தினைவே னுய்வேனோ
திரைகண்ட முத்தமிருள்
சித்தெழுந்தெல் செய்சீழக்
கரைகண்ட வாழ்வுடையீர்
கல்வத்து நாயகமே!
சுழலிலிடு பஞ்சென்னச்
சூழ்கமரிற் பாலென்னத்
தழலிலிடு நெய்யென்னத்
தத்தளித்து-மாளாதுந்
நிழலிலிடு தூளென்ன
நின்றுய்ய நன்றுவந்தேன்
கழலிலிடு தோலாக்கீர்
கல்வத்து நாயகமே!
சந்தமுறும் வேதகலை
சாத்திரங்க ளத்தனையும்
பந்தமுறக் கற்றுணர்ந்தும்
பத்திநெறி நில்லாமற்
சொந்தமுறு மாடுமனை
சொத்துசுக மென்றலைந்தேன்
கந்தமுறக் காப்பீரோ
கல்வத்து நாயகமே!
விதியருத்து மாயைவழி
மேவுமின்ப துன்பமெனும்
பொதியருத்த மாழ்குநரும்
போந்திருந்து வாழ்த்துவரேல்
மதியருத்து மான்றமன
மாண்பருத்து மற்றுமுயர்
கதியருத்து நுங்காட்சி
கல்வத்து நாயகமே!
போதற்ற வெட்டவெளி
போந்திருந்து சும்மாதான்
வாதற்ற பேச்சற்ற
வாய்மைநிலை நில்லாமற்
பாதற்ற வெம்மயக்காம்
பாழ்ம்பெளவம் வீழ்ந்தந்தோ
காதற்ற ஆசியொத்தேன்
கல்வந்து நாயகமே!
வேல்சோர வோடரிக்கண்
மெல்லிநல்லார் வேட்கையினைப்
பால்சோர நின்றீர்த்த
பாசவலைப் பட்டொரீஇ
மேல்சோரக் கைசோர
மெய்சோர வாய்சோரக்
கால்சோர நின்றிருந்தேன்
கல்வத்து நாயகமே!
உண்ணுவதுந் தூங்குவது
மோய்ந்தெழுந்து மற்றையநாட்
கெண்ணுவதும் வேலையென
வெண்ணுநர்க்கா ளாகாமல்
பண்ணுவது நும்பூசை
பாடுவது நுங்கீர்த்தி
கண்ணுவது நும்மருளாங்
கல்வத்து நாயகமே!
சூதிட்ட வைம்புலனுஞ்
சூழ்ந்தகுண மாறுமொன்றாய்
வாதிட்டுத் தாழ்த்துமெனை
வம்பனெனத் தள்ளாமல்
ஏதிட்ட நும்மடிக்கீ
ழேய்ந்திருந்து போற்றுமுசை
காதிட்டுக் கேளீரோ
கல்வத்து நாயகமே!
பூமாந்தும் வண்டெனநும்
பொன்னருளைப் போற்றிநிதந்
தாமாந்தி நும்மலர்த்தாள்
சார்ந்திருக்க நாடாமல்
ஏமாந்த சேர்னகிரி
யென்றெவரு மேசவெறுங்
காமாந்த காரமுற்றேன்
கல்வத்து நாயகமே!
பாந்தமுற்ற மக்கள்மனை
பந்துசுற்ற மென்பவெலாஞ்
சாந்தமுற்ற மோன நிலை
தந்தருளற் கில்லையெனச்
சேந்தமுற்ற நும்மலர்த்தாள்
சேர்ந்திருக்க நாடுகின்றேன்
காந்தமுற்ற வூசியொத்துக்
கல்வத்து நாயகமே!
உள்ளளவு மென்னிதய
வுண்மையெலாம் நுஞ்சமுகம்
எள்ளளவும் வஞ்சமின்றி
யின்றிசைத்தே னேக்கமறக்
கொள்ளளவு மெய்யருளைக்
கூட்டுவிக்கக் கூர்ந்தெழுவீர்
கள்ளளவு நாயேற்குத்
கல்வத்து நாயகமே!
சீலமெலா மோருருவாய்ச்
சேர்ந்தெழுந்த சீரியர்சீர்
ஞாலமெலாம் போற்றுவது
நன்கறிந்தும் நாயடியேன்
தூலமெலாம் பூரிப்பச்
சொத்தைமனம் போம்வழியே
காலமெலாம் போகின்றேன்
கல்வத்து நாயகமே!
வேரிக்கு வாய்ந்தசூழல்
மின்னனையார் வெம்மயக்கிற்
பூரிக்கு நெஞ்சினர்க்கும்
பொன்னருள்தந் தாண்டீரே
பாரிக்கும் பல்பிணியிற்
பாடுபட்டுப் பாறுமகங்
காரிக்கும் பேரருள்வீர்
கல்வத்து நாயகமே!
பொய்விட்டார் நெஞ்சகத்திற்
போந்திருந்து நேர்ந்தவெலாம்
உய்விட்டுக் காத்துதவி
யொள்ளருள்தந் தாண்டீரே
மெய்விட்ட பாவியெனை
வேண்டாமல் வேறுதொதுக்கிக்
கைவிட்டா லென்செய்கேன்
கல்வத்து நாயகமே!
வேட்டகத்தி லுண்ணவெகு
வேட்கைகொளும் வீணனென
நாட்டகத்திற் சிக்கிமன
நாணுகின்றே னாயடியேன்
ஈட்டகத்தி னிச்சையற
வின்பதுன்ப மற்றவெளிக்
காட்டகத்தி லாட்டுகிற்பீர்
கல்வத்து நாயகமே!
வம்பூருந் துன்பவினை
வாரிபுக்கு மாதுயரால்
வெம்பூரு மேழையெனை
வேண்டியருள் தாரீரோ
அம்பூரும் பண்ணையெலா
மார்பவளக் கோடிடறிக்
கம்பூருங் கிற்கரைவாழ்
கல்வத்து நாயகமே!
சந்தமுற நுந்துணைத்தாள்
சார்ந்திருந்த சற்சனரைப்
பந்தமுற வோர்பொழுதும்
பற்றிநில்லாப் பாவியெனைத்
தொந்தமுற வாட்கொண்டு
துன்பவினை சூழ்வகற்றிக்
கந்தமுறக் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!
ஓலவட்ட வாருதியு
ளுற்றலைந்த வோர்துரும்பாச்
சாலவட்ட மிட்டழுங்குந்
தாசனெனை யாளவெனக்
கோலவட்ட வெண்குடைக்கீழ்க்
கூர்ந்தெழுந்து வாரீரோ
காலவட்ட மாமதியே
கல்வத்து நாயகமே !
எள்ளிருக்கு மெண்ணெயென
வெவ்வுலகுந் தானாகி
யுள்ளிருக்கு மெய்ப்பொருளை
யுள்ளுவந்து நாடாமல்
துள்ளிருக்கு மேழையுளத்
துன்பொழித்துக் காத்தருள்வீர்
கள்ளிருக்கும் பூம்பதத்தீர்
கல்வத்து நாயகமே !
சுட்டிவைத்த ஞானகலை
தோய்ந்தறிந்து மோய்ந்தமையா
தெட்டிவைத்த நெஞ்சினனா
யின்னலுழந் தேங்காமற்
கொட்டிவைத்த வெவ்வினையின்
கோளொழித்தாட் கொண்டருள்வீர்
கட்டிவைத்த பொக்கிஷமே
கல்வத்து நாயகமே !
நிறைதவிர்ந்த நெஞ்சினொடும்
நீர்மையிலா வன்கணொடும்
முறைதவிர்ந்த வெவ்வினைகண்
மூடனேன் செய்வேனோ
குறைதவிர்ந்த வன்பருளக்
கோகனகத் துண்மேவுங்
கறைதவிர்ந்த மாமதியே
கல்வத்து நாயகமே!
நோவாக்கா நுஞ்சரணம்
நோற்றுவந்தும் நுண்ணறிஞர்
தீவாக்கால் வெந்துபட்ட
தீயேனா யாவேனோ
ஏவாக்கா லென்னுணர்கே
னென்செய்கே னேவியெனைக்
காவாக்காற் காக்குநரார்
கல்வத்து நாயகமே !
பற்றாலும் நட்பாலும்
பத்திதர நின்றொருக்காற்
சொற்றாலும் நுந்துணைத்தாள்
தொல்லைவினை தூராதோ
உற்றாலு மோனமுள
மோய்ந்தாலும் வேதகலை
கற்றாலு மாவதெவன்
கல்வத்து நாயகமே!
ஊன்மலரு மெவ்வுயிரு
மொன்றென்றே யுன்னிமனந்
தான்மலரு மன்பினிலை
தாங்கிநிற்ப தெந்நாளோ
வான்மலரு மும்பர்குழாம்
வாயார வாழ்த்துமிரு
கான்மலருங் கான்மலரீர்
கல்வத்து நாயகமே!
விரைகடந்த பைங்குழல்சேர்
மெல்லிநல்லார் வேட்கையெனுந்
திரைகடந்து நும்மடிக்கீழ்
சேர்ந்திருப்ப தெந்நாளோ
நிரைகடந்த வன்பர்குழாம்
நேர்ந்திறைஞ்சச் சூழ்ந்தவருட்
கரைகடந்த வாருதியே
கல்வத்து நாயகமே!
சூல்பட்ட மைம்முகில்விண்
தோய்வுபட்டுத் தூவுமழைப்
பால்பட்ட பைந்தளிர்போல்
பாவியே னுய்வதற்கே
வேல்பட்ட புண்ணினுளம்
வெந்துபட்டு மாளாதுங்
கால்பட்ட தூசருள்வீர்
கல்வத்து நாயகமே!
வல்லுருக வென்றகொங்கை
மங்கைநல்லா ராசையினான்
மல்லுருக நெஞ்சுருக
மாண்புருக வாடாமற்
சொல்லுருகப் பாடுமுங்கள்
தோத்திரத்திற் கென்னிதயக்
கல்லுருக வைப்பீரென்
கல்வத்து நாயகமே!
தாப்பிட்டு வேணவெலாந்
தந்துதவ வல்லவுமைக்
கூப்பிட்டுங் கேளாத
கோளுமொரு கோளாமோ
மாப்பிட்டுச் செய்வினைக்கோர்
மாற்றிட்டு வாய்ந்தவருட்
காப்பிட்டுக் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே !
பொறுத்தாலு மேழைபிழை
போக்கியெழுந் தப்பிழைக்கா
யொறுத்தாலு மன்பினொடு
முட்கசிந்தே யோதுபுகழ்
வெறுத்தாலு மெய்மையிலா
வீணனென வேசியென்னைக்
கறுத்தாலு மும்மைவிடேன்
கல்வத்து நாயகமே !
சூழ்கொண்ட வெம்புவியில்
தொல்பொருளிற் பல்தொழிலில்
வீழ்கொண்ட புத்திகெட்டு
வீறழிந்து நில்லாமல்
ஆழ்கொண்ட நும்மருளா
மார்கலியு ளாடேனோ
காழ்கொண்ட மாணியே
கல்வத்து நாயகமே !
மாணிக்கை யொத்தமொழி
மங்கைநல்லார் மாமோகம்
பேணிக்கை கொண்டலைந்த
பித்தனையாட் கொண்டாக்கால்
பூணிக்கை வைத்தெழுந்தும்
பொன்னடிக்கென் னேழைநெஞ்சைக்
காணிக்கை வையேனோ'
கல்வத்து நாயகமே !
விண்ணோட்டங் கொண்ணிலவும்
வெங்கதிரும் வேண்டவரும்
ஒண்ணோட்ட மோங்குகழ
லுற்றிருந்து வாழாமற்
பெண்ணோட்டங் கொண்டலைந்தெப்
பேறுமற்ற பேயேற்குங்
கண்ணோட்டம் வாய்ப்பதுண்டோ
கல்வத்து நாயகமே !
முற்றவரும் பாடுபட்டு
முத்தியென்னென் றோராமல்
பற்றவரு மூணுடைக்கே
பாவியேன் சாவேனோ
நற்றவரும் ஞானநெறி
நாடுநரு நான்மறைநூல்
கற்றவரும் போற்றுமெங்கள்
கல்வத்து நாயகமே !
இறங்குவனோ நன்னெறிவி
லேய்குவனோ வின்புருவம்
பிறங்குவனோ மெய்யருளிற்
பேணுவனோ தூயநிலை
யுறங்குவனோ வானந்தத்
தொன்றுமின்றி யுள்ளுலைந்து
கறங்குவனோ யானறியேன்
கல்வத்து நாயகமே !
நில்லாத பொய்யுடம்பை
நீர்க்குமிழி யென்றுன்னிச்
செல்லாத காசாகச்
சிந்தையிடை தேர்ந்துமற்றொன்
றில்லாத வேதபர
வின்பவெளி தேறவென்றுங்
கல்லாத புல்லானேன்
கல்வத்து நாயகமே!
நிதிவைத்த வேட்கையொடு
நித்ததித்தம் நெஞ்சுருகிப்
பதிவைத்த வையமெலாம்
பாய்ந்தலைத்து வாடாமல்
துதிவைத்த நுஞ்சமுகஞ்
சூழ்ந்திருந்து வாழுமொரு
கதிவைத்த லாகாதோ
கல்வத்து நாயகமே!
எண்ணுவது மெண்ணியமுற்
றீகுதலு மின்னலறப்
பண்ணுதலும் பாடுதலும்
பண்புபெறப் பாவியுளம்
நண்ணுதலு முண்மைநிலை
நாடுதலும் ஞானவெளிக்
கண்ணுதலும் நீரானீர்
கல்வத்து நாயகமே!
மாலூருங் கோட்டூரும்
வாய்ந்தகடைக் காவூரும்
மேலூருங் கீழூரு
மெல்லியர்பால் வேட்பேனோ
சேலூரும் பண்ணைவராற்
சென்றுடைத்த முக்கனித்தேன்:
காலூருஞ் செம்பிநகர்
கல்வத்து நாயகமே!
வண்டிருந்த பூவென்ன
வந்துவந்தும் பொன்னடிக்கே
தொண்டிருந்த வேழைநெஞ்சஞ்
சோர்விருக்கத் தூயவுடற்
கொண்டிருந்த துன்பமுற்றுங்
கூர்ந்துறுத்தி நின்றதையோ
கண்டிருந்துங் காவீரோ
கல்வத்து நாயகமே !
பொய்யாளு மாதரிடு
போகவலைக் குள்ளாகி
மையாளும் வஞ்சநெஞ்ச
வன்கனனாய் நில்லாமன்
மெய்யாளு நூதனவி
வேகியென வாய்த்தநுந்தங்
கையாளு மாகேனோ
கல்வத்து நாயகமே !
முத்துதற்கோ நும்மடியின்
மொய்ப்பதற்கோ முற்றுமுமை
நத்துதற்கோ நாடுதற்கோ
நண்ணிநின்றார் பல்கோடி
பொத்துதற்கோ வாய்மூடிப்
போற்றுதற்கோ போந்தவெனைக்
கத்துதற்கோ விட்டீரென்
கல்வத்து நாயகமே !
பொய்யாத நும்மடியார்
புண்ணியமே செய்துசெய்துங்
கொய்யாத தாண்மலர்க்கே
கூர்ந்துநின்றா ரையோதான்
செய்யாத தீவினையே
செய்துசெய்து தீநெறிக்கண்
கையாத வாறுழன்றேன்
கல்வத்து நாயகமே!
படுகளவும் பொய்புலையும்
பாழ்ம்பழியுங் கோள்கொலையும்
நெடுகளவும் பற்றிநின்ற
நீசர்பெறா நின்மலர்த்தாள்
முடுகளவும் பார்த்திருந்து
முடனெனை யுட்கனிந்து
கடுகளவும் காக்ககிலீர்
கல்வத்து நாயகமே !
வஞ்சமலர் நெஞ்சமொடு
வல்வழக்கும் பொய்யுரை
விஞ்சமலர் வாய்கொண்டு
விண்டுரைத்தேன் வெய்
குஞ்சமலர் நுங்குடைக்கீழ்
கூர்ந்திருந்து நேர்ந்தப;
கஞ்சமலர் கொள்வேனோ
கல்வத்து நாயகமே !
மருத்துவந்து நோயகற்று
வார்போலுந் தாட்கமலம்
பெருத்துவந்து தீதகற்றிப்
பேறுபெற்றார் பல்கோடி
திருத்துவந்த வத்துறைக்கே
சிந்தைசெலுத் தாதலுத்தேன்
கருத்துவந்து காப்பீரெங்
கல்வத்து நாயகமே !
நிலங்கரைவி யாபார
நீநிதிய முற்றுமுற்றும்
புலங்கரைவி யாவெளிய
புல்லனுக்கு மாக்கமுண்டோ
மலங்கரைவி வேகமிலா
வம்பர்பவ வாருதிக்கோர்
கலங்கரைவி ளக்கமொத்த
கல்வத்து நாயகமே!
உள்ளலம்பு மாசைமுற்று
முற்றுவந்து நும்மடிக்கே
கொள்ளலம்ப வைத்தவென்னைக்
கூர்ந்தெழுந்து காருமையா
புள்ளலம்புந் தண்டலைசூழ்
பொற்கமல வாவியெலாங்
கள்ளலம்புங் கீழைநகர்
கல்வத்து நாயகமே !
மெய்ம்மாறு பொய்மனத்தார்
வேட்கைவலைக் குள்ளாகிச்
செய்ம்மாறு கண்டறியாத்
தீயனெனை யாள்வீரே
உய்ம்மாறு சீவரெலா
முற்றெழுந்து பெய்ம்முகிற்கோர்
கைம்மாறு காண்பதுண்டோ
கல்வத்து நாயகமே !
உள்ளமனஞ் சுத்தநிலை
யுற்றிருப்ப யுத்தமர்தா
மெள்ள மனம் விட்டீர்க்கும்
வேசியர்க்கா ளாவாரோ
பள்ளமனப் பாய்புனல்போற்
பற்றகலாப் பாவிபெற்ற
கள்ளமனந் துள்ளுதையோ
கல்வத்து நாயகமே!
துளிப்பருத்து நெய்க்கூந்தற்
றோகைநல்லார்,சொற்சுவைக்கே
இனிப்பருத்து நெஞ்சினனா
யீடழிந்து வாடாமற்,
புளிப்பருத்து மஞ்ஞானப்
போக்கொழித்துப் பொங்குசுகக்
களிப்பருத்து மாறருள்வீர்
கல்வத்து நாயகமே !
இளைப்பகற்றிப் பன்னாளு
மேய்ந்தபல நோயகற்றித்
தினைப்பகற்றி வேசையர்தஞ்
சிந்தனையுந் தானகற்றி
முளைப்பகற்றி வெம்பாச
முத்திநிலை கண்டிடவென்
களைப்பகற்றி யாளுமெங்கள்
கல்வத்து நாயகமே !
உய்வந்த முத்தர் குழா
முற்றுபர சிற்சபையின்
மெய்வந்த சான்றுரைத்து
மேவுபுகழ் பெற்றெழுந்து
நைவந்த தீகற்றி
நாடுசுத்த சேதனமாய்க்
கைவந்த மெய்க்குருவே
கல்வத்து நாயகமே !
வான்கண்ட வொள்ளொளிபோல்
மானிலத்து மேனிலத்தும்
ஊன்கண்ட சாத்திரத்தோ
டுள்ளுயிரு மானீரே
யான்கண்ட மெய்க்குருவே
பின்னருளே நல்லுணர்வே
கான்கண்ட கற்பகமே
கல்வத்து நாயகமே !
அந்தரத்தி லம்புவியி
லாயபல சீவர்தம்மைத்
தந்தரத்தி லாக்கவல்ல
சால்புமிக்க தக்கோரே
எந்தரத்தி லுள்ளசில;
வேழைகளு மின்னலறக்
கந்தரத்திற் காத்தருள்வீர்
கல்வத்து நாயகமே!
பாட்டாற்றி வந்தபல
பத்தர்மனப் பான்மைமுற்றுங்
கேட்டாற்றிக் காக்கவல்ல
கேண்மைமிக்க மேலோரே
தேட்டாற்றி வந்தவெனைச்
சேர்த்தருள்வீர் தீயபவக்
காட்டாற்றில் வீழ்த்தாமல்
கல்வத்து நாயகமே!
வான்கானப் பாதலமு
மண்டலமு மென்டிசையுந்
தான்காண வாய்ந்தபுகழ்
தந்துதவ வந்தோரே
நான்காண முப்பொழுதும்
நாடிவந்து நும்மலர்த்தாட்
கான் காணக் காட்டுகிற்பீர்
கல்வத்து நாயகமே!
கூட்டுவிப்பீர் சன்மார்க்கங்
கொள்ளுவிப்பீ ரன்பொழுக்கம்
ஊட்டுவிப்பீர் பொன்னருளை
யோங்குவிப்பீ ரின்பநலம்
சூட்டுவிப்பீர் நும்மலர்த்தாள்
தோற்றுவிப்பீர் ஞானநெறி
காட்டுவிப்பீர் முத்திநிலை
கல்வத்து நாயகமே !
அடைத்தேற வைம்பொறியு
மைம்புலனு மைங்கோசந்
துடைத்தேற வைந்தவத்தை
தூர்த்தேறத் தூயதவம்
படைத்தேற வுண்மைநிலைப்
பற்றேறப் பாவியுநான்
கடைத்தேற வைப்பீரெங்
கல்வத்து நாயகமே !
கல்வத்து மாலை
ஆக்கியோர்;
மேலப்பாளையம்
காளை,ஹஸன் அலிப்புலவர்