ஓ மனிதா/பதிப்புரை
பதிப்புரை
ஓ, மனிதா!—ஒரு முன்னோட்டம்.
‘நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது; இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக்கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னல் எழுதாமல் இருக்க முடியவில்லை’ என்கிறார் மார்க்சிம் கார்க்கி. இதே நிலைதான் நமது ‘விந்தன்’ எழுத்தாளன் ஆன கதையும்.
மெத்தப் படித்த மேதா விலாசத்தினாலோ, கற்பனை கரைபுரண்டு ஓடியதாலோ, தமக்கு எல்லாம் தெரியும் என்கிற ஞானப் பேரொளியினலோ, ‘தமிழ்’ பணம் புரட்டும், சுரண்டும் ஒரு கருவி என்பதாலோ, இல்லை பொழுது போக்குக்காகவோ விந்தன் தம் எழுதுகோலை எடுக்கவில்லை. இலக்கியம் படைத்து இறவாப் புகழ் எய்த வேண்டும் என்றும் நினைத்ததில்லை. பிறர் பாராட்ட வேண்டும், பரிசுகள் பல பெற வேண்டும் என்று படைப்பாற்றல் ‘பணி’யினைத் தொடங்கவில்லை.
மாறாக அன்பற்ற மனிதர்கள் ஒருவரை ஒருவர் பிழிந்தெடுக்கப்படுவதையும், சுரண்டப்படுவதையும் கண்ணாரக் கண்டார். உண்மையின் பேரால் உலகில் நூற்றுக்குத் தொண்ணுாற்றைந்து பேர் பொய் புனைசுருட்டில் தம் வாழ்வை நடத்தி நாகரிகமானவர்கள், உயர்ந்தவர்கள் ஆன்றவிந்தடங்கிய சான்றோர்கள் என்று போலிகளாக வாழ்வதை, சிலர் வாழ, பலர் வதைபடுவதை உணர்ந்தார். அந்த உணர்வின் விளைவே அவரின் அனைத்து எழுத்துகளும்.
எழுதத் தெரியும் என்பதனால் எழுத்தைத் தொழிலாக்கிக் கொண்ட வேட்கை அவரிடத்தில் எள்ளு மூக்கு அளவும் கிடையாது. வெறும் திறமையை நம்பியவர் அல்லர், அவர். தம் வாழ்வையும் தம் ஊர், நாடு, உலகின் வாழ்வையும் நன்கு புரிந்திருந்ததால் அவரால் எழுதாமல் இருக்க முடியவில்லை. உண்பதற்கு உழைப்பு எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை வாழ்வுப் பசியுடையவர்களுக்காக விந்தனின் எழுத்தும் தேவைப்பட்டது. அதுவே அவர் படைப்பு.
“விந்தன்” தம்மை ஒத்த மக்களுக்காகவும் தாம் வாழ்ந்த வருங்காலத்திற்காகவும், தமது கடமை என்ன என்பதைச் சமுதாயப் பொறுப்புடனும் எழுதினார். தனது கடமையையும் மனச்சான்றையும் அன்புக்கும், உண்மைக்கும் உடமையாக்கினார்.
வாழ்க்கையின் ஒளி மிகுந்த மகிழ்ச்சியான கூறுகளைத் தெரிந்து கொண்டிருப்பது போலவே அதன் துாசும் மாசும் படிந்த இருளடர்ந்த கூறுகளையும் தெரிந்து வைத்திருந்தார். அவருடைய பட்டறிவும், நுகர்வறிவும் ஆழ்ந்து பரந்து உயர்ந்திருந்தன. அதனால் அவரின் எழுத்து வடிவம் ஓங்கி விரிந்த பார்வையுடன் இருந்தது.
மக்களிடையில் உயர்ந்த உணர்ச்சிகளை வளர்ப்பது, அநீதியை வெறுக்கும் உணர்வை ஊட்டுவது, மனிதாபிமானத்தை உயர்த்துவது, மனிதனை மனிதனாக வாழத்துரண்டுவது போன்றவையே விந்தன் எழுத்தின் உந்தாற்றல்கள்.
எல்லோருடைய அறியாமைக்கும் அங்குசம் நகைச்சுவையே என்று தெரிந்து புரிந்து கையாண்டு, வெற்றியும் பெற்றவர் விந்தன்.விலங்குகளையும், பறவைகளையும் வைத்துக் கதையில் நீதி புகுத்துவது பஞ்ச தந்திரக் கதைகளிலும், கீதோபதேசக் கதைகளிலும், ஈசாப்புக் கதைகளிலும் உண்டு. ஆனால் அந்த நீதிக் கதைகளில் காணாத குத்தல், கிண்டல் ஆகியவை நீறு பூத்த நெருப்பாக இல்லாமல் வீறுகொண்டெழுந்த அக்கினிப் பிழம்பாக விளங்குவதே ‘ஓ, மனிதா!’ கட்டுரைக் கதைகள். இல்லை; அவை கதைக் கட்டுரைகள்.
மனிதப் பண்பின் உயிரோட்டமே இந்தப் பதினேழு கனலோவியங்கள், சமூக வாழ்வின் குற்றம் குறைகளையும், சூன்யம் தொல்லைகளையும் வண்ணங்களாகக் கொண்டு பிறர் தொட முடியாத வாழ்வுச் சித்திரத்தைத் தீட்டியுள்ளார். இதன் கண் பரந்த பட்டறிவின் கரு உள்ளது. பயின்ற ஓவியரின் நுண்ணிய தெளிவும் விரிந்த அறிவும் உள்ளன. எண்ணத்தின் வண்ணப் பார்வை உள்ளது. இலட்சியத்தின் உண்மை நோக்கு உள்ளது. அனைத்தினும் மேலாக அன்பு வாழ்வின் கலைநயம் தலைதூக்கி நிற்கிறது.
தம்முடைய எழுத்துக்களில் சுறுசுறுப்பையும் உயிர்த்துடிப்பையும் காட்டுகின்ற தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரே. எல்லாம் நன்மைக்கே என்கிற கோட்பாட்டில் உண்மையும் நன்மையும் இல்லையென்று தெரிந்தவர் விந்தன். வாழ்க்கையில் ஏற்படும் ஏமாற்றங்களையும், தோல்விகளையும், துயரங்களையும் முட்டுக் கட்டைகளையும் அவரால் ‘நன்று’ என்று கருத முடியவில்லை, ஆகவே அவருடைய எழுத்துப் பண்பு வாழ்க்கையைச் சற்றே போராட்டமாக்கிப் புரட்சி செய்வதுதான்.
சுருக்கமாகச் சொன்னால் மனிதன் பேசும் ஆற்றல் படைத்திருப்பது தன் கருத்துகளை மறைப்பதற்காகவே என்பது தெரிந்தே, பேசாத உயிரினங்களைப் பேசவிட்டிருக்கிறார், சராசரி மனிதனிடத்தில் ஆழப்பதிந்துள்ள உணர்ச்சிகளைத் தேடிக் கொணர்ந்து தருகிறார். தீவிரமான மனவெழுச்சிகளைக் கடைந்தெடுக்கிறார்.
கற்றவர் நெஞ்சில் கனலை மூட்டுவதற்கும், மூளைப் புறணிகளில் விழிப்பினை ஊட்டுவதற்கும், நடப்பியல் உலகை எடுத்துக் காட்டுவதற்கும், வேடிக்கை மனிதரின் சிறுமைகளை ஒட்டுவதற்கும் எழுத்துப் புரட்சியும், நகைச் சுவைச் சாட்டையும் எடுத்துக் கொண்ட விந்தனுக்கு நிகர் விந்தனே.
உலகம் என்ற சாணையில் விந்தன் என்ற மனிதன் ஒரு கத்தி. வாழ்க்கை என்ற உலைக் கூடத்தில் விந்தன் ஒரு நெருப்பு. சிந்திப்பவர்க்கு உள்ளத்தின் விளக்கு.விந்தன் அவர்கள் ‘ஓ, மனிதா!’ தொடரைத் தினமணி கதிரில் தொடர்ந்து எழுதினார். அவை தமிழக மக்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. அதையே தற்போது நூல் வடிவாக்கியிருக்கிறோம். மாறுபட்ட கோணத்தில் காட்சியளிக்கும் இதையும் மக்கள் ரசிப்பார்கள் என்பது எங்களது திடமான எண்ணம்.
பிரசுரத்தார்.