உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மனிதா/15. குயில் கேட்கிறது

விக்கிமூலம் இலிருந்து


15. குயில் கேட்கிறது

ப்பொழுது விடிவதற்கு முன்னலேயே நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பீர்களே, எங்கள் குரலோசையை?

க்வா, க்வா, க்வா, க்வா...

க்கூவ், க்கூவ்..

இது வசந்த காலமல்லவா? இதுதான் நாங்கள் இணை சேரும் காலம். அப்படியென்றால் இன விருத்திக் காலம்.

இந்தக் காலத்தில் நாங்கள் ஒரே ஜாலியாயிருப்போம். அந்த ஜாலியை முழுக்க முழுக்க அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வைக்கும் முட்டையைக்கூடக் காக்கைகள் ஏமாறும் சமயம் பார்த்து அவற்றின் கூட்டில் வைத்து விடுவோம். ஏமாந்த காக்கைகள் தங்கள் முட்டைகளோடு எங்கள் முட்டைகளையும் சேர்த்து அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். குஞ்சுகள் வளர்ந்ததும் எங்கள் குஞ்சுகள் எங்களைத் தேடி வந்துவிடும்.

இதனால் நீங்கள் வைத்த ஒரு சிறப்புப் பெயர்கூட உண்டே எங்களுக்கு, ‘சோம்பேறிப் பறவைகள்’, என்று.

நீங்கள் மட்டும் பிள்ளையை வளர்க்கத் தாதியைத் தேடலாம். நாங்கள் தேடக்கூடாதா?

அது கிடக்கட்டும், எங்களுக்கெல்லாம் ‘இன விருத்திக் காலம்’ என்று ஒரு காலம் இருக்கிறதே, உங்களுக்கு?—எல்லா காலமுமே அந்தக் காலம்தான் இல்லையா?

செய்யுங்கள்; அதற்கென்று ஒரு காலம் நேரம் இல்லாமல் ஒரு பக்கம் செய்வதைச் செய்து கொண்டேயிருங்கள், இன்னொரு பக்கம் ‘அளவோடு பெற்று வளமோடு வாழ்க’ ‘இரண்டுக்குப் பிறகு இப்போது வேண்டாம்’ ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்பது போன்ற விளம்பரங்களைச் சிவப்பு முக்கோணச் சின்னத்தோடு சுவர்களிலெல்லாம் எழுதி வையுங்கள். பத்திரிகைகளில் எல்லாம் போட்டு வையுங்கள். எதைச் செய்தாலும் எங்களைப் போல அதற்கென்று ஒரு காலத்தை ஒதுக்கிவிட்டு, மற்ற காலங்களில் மனத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ளும் முயற்சியை மட்டும் செய்யவே செய்யாதீர்கள், அதற்குப் பதிலாக கருத்தடைக்கு மருந்து கண்டுபிடியுங்கள்; மாத்திரை கண்டு பிடியுங்கள். லூப், நிரோத் என்று இன்னும் என்னென்ன கண்ணராவிகள் உண்டோ அந்தக் கண்ணராவிகளை யெல்லாம் பயன்படுத்தி, கைத்தொழிலை இயந்திரமய மாக்குவது போல, இனவிருத்தித் தொழிலை மருந்து மயமாக்கி விடுங்கள்—மனிதர்களல்லவா?

முன்னெல்லாம் ஆண்களும் பெண்களும் சேர்ந்தாற்போல் உள்ள இடங்களில் நீங்கள் ‘அந்த உறவை’ பற்றிப் பேசக் கூசுவீர்கள். வெட்கப்படுவீர்கள். இப்போது அதெல்லாம் இல்லை. ‘கர்ப்பத்தடை’ என்ற பேரால் அந்தப் பேச்சு ஆண்களுக்கு எதிரே பெண்களால் பேசப்படுகிறது. பெண்களுக்கு எதிரே ஆண்– களால் பேசப்படுகிறது—ஏன் இரு சாராருமாகச் சேர்ந்தே அதைப் பற்றி வீட்டில் விவாதிக்கிறீர்கள். வெளியே விவாதிக்கிறீர்கள். சட்டமன்றத்தில் கூட விவாதிக்கிறீர்கள். பகுத்தறிவுள்ள மனிதர்களல்லவா, பெண்களுக்கு எதிராகப் பேசக்கூடாதவற்றையெல்லாம் பேசிவிட்டு விவாதிக்கக் கூடாதவற்றை யெல்லாம் விவாதித்து விட்டுச் சகோதரி, அம்மையார், என்று சமாளிக்கிறீர்கள்.

அதற்கும் மேலே போய் ஒரு சிலர் கர்ப்பத்தடையைப் பற்றியும், கருச்சிதைவைப் பற்றியும் உயர்தரப் பள்ளிகளிலேயே மாணவ—மாணவிகளுக்குச் சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்கள்; இன்னும் சிலரோ ‘அதுவரை காத்திருப்பானேன், ஆரம்பப் பள்ளியிலேயே ஆரம்பித்து விடுவதுதான் சரி’ என்கிகிறார்கள்.

த்தகைய பகுத்தறிவுள்ள மனிதர்களான உங்களுக்கு இப்போது ஒரு புது மோகம். பிறந்திருக்கிறது—அதுதான் புகழ் மோகம். அதற்காக நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள்!

‘சொந்த வாழ்வை’ப் ‘பொது வாழ்வு’ என்று சொல்லிக் கொண்டு அடிக்கடி ஏதாவது ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கிறீர்கள். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பெருக்கு ஆற்றுகிறீர்கள். சொற்போர் நிகழ்த்துகிறீர்கள்.

‘தொண்டர்கள்’ என்ற பெயரால் ‘அப்பாவிகள்’ சிலரை உங்கள் சாகசப் பேச்சால் வசப்படுத்தி, ‘ஏதாவது ஒரு போராட்டம்' என்ற பேரால் அவர்களைப் போலீசாரின் தடியடிக்கோ, துப்பாக்கி குண்டுக்கோ இரையாக்கி செத்து விழுந்த அவர்கள் சடலங்களின் மேல் அவர்களுடைய மனைவி, மக்கள், உற்றார் உறவினர்கள் விழுந்து அழுவதற்கு முன்னால், நீங்கள் விழுந்து அழுது அடுத்த நாளே அவர்களைத் ‘தியாகி’களாக்கி நிதி திரட்டி, அந்த நிதியில் கட்சியை வளர்ப்பதோடு உங்களையும் வளர்த்துக் கொள்கிறீர்கள்.

அந்தத் தொண்டர்களிலேயே சிலரைக் ‘குண்டர்’ களாக்கி, பஸ்ஸையும், ரயிலையும் ‘பெட்ரோல்’ ஊற்றிக் கொளுத்தி, ‘எங்கள் போராட்டத்தில் இப்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது’ என்று வேறு சொல்லி, அந்தச் சூட்டில் நீங்கள் படுகுஷியாகக் ‘குளிர்’ காய்கிறீர்கள்.

நல்ல வேளையாக உங்கள் ‘பிறந்த நாள் விழா’க்களை வருடந் தவறாமல் கொண்டாடும் அளவுக்கு மக்கள் இன்னும் புத்திசாலிகளாகவில்லை என்பது மட்டும் உங்களுக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அதனால் அந்த விழாக்களை உங்களுக்கு நீங்களே கொண்டாடிக் கொள்கிறீர்கள். அல்லது, உங்களுக்கு வேண்டியவர்களை, உங்களால் பெற முடியாத பேறுகளையெல்லாம் ஊரான் வீட்டுச் செலவில் பெற்று வருபவர்களை விட்டுக் கொண்டாட வைக்கிறீர்கள். அத்தகைய விழாக்களுக்கு நீங்களும் போகக் கூச்சப்படுவதுமில்லை, வெட்கப்படுவதுமில்லை. எல்லாருக்கும் முன்னால் போய் மேடையில் உட்கார்ந்து விடுகிறீர்கள். ‘காக்கா, காக்கா! இவ்வளவு அழகாய் இருக்கிறாயே, ஒரு பாட்டு பாடேன்’ என்பது போல அங்கே மனித உருவில் உள்ள ‘குள்ளநரிகள்’ உங்களைப் பாராட்டிப் பேசுவதை காது குளிரக் கேட்கிறீர்கள், அவ்வளவை– யும் கேட்ட பிறகு நீங்கள் இப்படிப் பாராட்டும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன்?' என்று சொல்லி, அதைத் ‘தன்னடக்கம்’ என்று வேறு நினைத்துக் கொண்டுவிடுகிறீர்கள், அல்லது பிறரை நினைக்க வைக்க முயலுகிறீர்கள்.

இதெல்லாம் அரசியல் உலகில் புகழுக்காக நீங்கள் செய்யும் தகிடு தத்தங்கள்; இலக்கிய உலகிலோ?...

உங்களில் ஒரு சாரார், ‘கம்பன் அப்படிச் சொல்கிறான். இளங்கோ இப்படி சொல்கிறான்’ என்று முழுக்க முழுக்க அவர்கள் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள், கட்டுரையின் தலைப்புக்குக் கீழே தங்கள் பெயரை மட்டும் அவர்கள் இருவருடைய பெயர்களைக் காட்டிலும் பெரிதாகப்போட்டுக் கொண்டு விடுகிறார்கள்.

கம்பன் சொல்வது சரி, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ‘என்று கேட்டால், ‘அவர்கள் தான் எல்லாவற்றையும் சொல்லி விட்டார்களே, அதற்கு மேல் நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது?’ என்று சொல்லி விட்டோ அல்லது சொல்லாமலேயோ மெல்ல நழுவி விடுகிறார்கள்.

இன்னொரு சாரார், கதை, கட்டுரை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறார்கள். அவை பிரசுரமானால் சரி, பிரசுரமாகா விட்டால் தாங்களாகவே சொந்தப் பணத்திலோ, அல்லது ஊரான் வீட்டுப் பணத்திலோ பத்திரிகை நடத்தத் தொடங்குகிறார்கள். அதில் தங்கள் மனம் போனபடி எழுதுகிறார்கள். படிக்க ஆள் கிடைத்தால் சரி, கிடைக்காவிட்டால் தாங்கள் இருக்கும் தெருவுக்கோ, ஊருக்கோ தனி ‘எழுத்தாளர் சங்கம்’ ஒன்றை நிறுவி, அந்தச் சங்கத்திற்குத் தாங்களே தலைவராகி விடுகிறார்கள்.

அதற்குப் பின்....

‘விசிட்டிங் கார்’டில் அவர் எழுத்தாளர் தலைவர், ‘லெட்டர் ஹெட்’டில் அவர் எழுத்தாளர் தலைவர், வீட்டு முகப்பில் தொங்கும் போர்டில் அவர் எழுத்தாளர் தலைவர், ‘ஆண்டு விழா’வுக்குத் தலைமை தாங்க வரும் அமைச்சரை வரவேற்றுப் பேசும்போது அவர் எழுத்தாளர் தலைவர், ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் போது அவர் எழுத்தாளர் தலைவர்...

எழுத்து?...

அது தான் அவரைக் கைவிட்டு விட்டதே!

இலக்கிய உலகில் புகழ் தேடும் படலம் இது; கலை உலகில்?...

புகழோடு பொருளும் பெரும் அளவில் சேர்க்க வாய்ப்பிருப்பதால் அவற்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறீர்கள்; எதை வேண்டுமானாலும் இழக்கிறீர்கள். அவற்றைச் சொல்ல நாக் கூசும்; எழுதக் கை கூசும். என் நன்மைக்காகவும், படிப்பவர்கள் நன்மைக்காகவும் அவற்றை இங்கே சொல்லாமல் விடுகிறேன். மன்னிக்க. இது உங்கள் கதை; என் கதை?...

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நான் உங்கள் வாழ்வில், இலக்கியங்களில், இதிகாசங்களில்—ஏன் புராணங்களில் கூட இடம் பெற்று வருகிறேன். என்னைப் போற்றிப் புகழாத ஆழ்வார்கள் கிடையாது; நாயன்மார்கள் கிடையாது; கவிஞர்கள் கிடையாது; கலைஞர்களும் கிடையாது.

இத்தனைக்கும் நான் என்ன செய்கிறேன்? என்னைப் பற்றியோ, என் குரலின் இனிமையைப் பற்றியோ தன்னடக்கத்துடனோ, தன்னடக்கம் இல்லாமலோ ஒரு வார்த்தை சொல்கிறேனா? தங்கள் பத்திரிகையில் அவ்வப்போது என்னைப்பற்றி ஏதாவது எழுதி, எனக்கு விளம்பரமும் புகழும் தேடிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக வெறுங்கையுடனோ, அல்லது இரண்டு ஆப்பிள் பழங்களுடனோ எந்தப் பத்திரிகைக்காரர் வீட்டுக்காவது விடிந்ததும் விடியாததுமாக இருக்கும் போதே போய் நின்று, அவருடைய கழுத்தைத் தொடர்ந்து அறுக்கிறேனா? அந்தப் பத்திரிகைக்காரரை என் வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து... அனுப்பிவிட்டு, ‘இது ஒரு தண்டம், என்ன எழுதுகிறானோ என்னவோ’ என்று வயிறெரிந்து நிற்கிறேனா? எதிர்த்தாற்போல் அவரை ‘இந்திரன், சந்திரன்’ என்று பாராட்டிவிட்டு வந்து, ‘என் போதாத காலம். கழுதையைக்கூடக் குதிரை என்று சொல்ல வேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொள்கிறேனா? சொன்னபடி எழுதினால் அவனை ‘மகா ரசிகன்’ என்று போற்றி, எழுதாவிட்டால் ‘மகா அற்பன்’ என்று தூற்றுகிறேனா?

இல்லை. எனக்கு நானே சிலை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேனோ? அந்தச் சிலை உருவாகும் இடத்துக்கு நானே முக்காடு கூடப் போட்டுக் கொள்ளாமல் சென்று மணிக்கணக்கில் உட்கார்ந்து ‘போஸ்’ கொடுக்கிறேனா?

‘ஓ, குயிலே! மதுரமான உன் கானத்தில் நாங்கள் மனத்தைப்பறிகொடுத்து நிற்கிறோம்—காரியவாதிகள் கழகம்’ என்று யாரையாவது தங்கள் செலவில் ‘போஸ்டர்’ அடிக்க வைத்து, ஊர் முழுவதும் ஒட்ட வைக்கிறேனா?

என் புகழ் பரவ எந்த ‘இல்லைப் பாட்டுக்கார’னை யாவது தேடிப் பிடித்து, என்னைப்பற்றி அவனை ‘வில்லுப் பாட்டு’ப் பாட வைக்கிறேன?

பிடிப்பவர்களைப் பிடித்து என்னைப் பற்றிய செய்திகள், விமர்சனங்கள் சினிமாவிலும் ரேடியோவிலும் தொடர்ந்து வர ஏற்பாடு செய்கிறேனா?

பிச்சைக்காரனுக்கு ஒரு பைசா போடப் போவதாக சொல்வதாயிருந்தால்கூட, இதைப் போடுவதற்கு முன்னலேயே பத்திரிகைக்காரர்களை யெல்லாம் கூப்பிட்டு வைத்துப் பேட்டி அளிக்கிறேன?

இல்லை, இல்லவே இல்லை. அதற்கெல்லாம் மாறாக நான் என்ன செய்கிறேன்?

உங்கள் வீட்டுக்கு அருகே உள்ள மரத்தின்மேல் உட்கார்ந்து கூவும்போது உங்கள் குழந்தை என்னைப் போலவே கூவி என்னைப் பார்க்க முயன்றால்கூட உடனே நான் அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறேன்—அதில் கூட அத்தனை வெட்கம் எனக்கு!—உங்களுக்கு அந்த வெட்கம் கூட இல்லையே? பாழும் புகழுக்காகப் பொய்யை வரவேற்று வளர்த்து, உண்மைக்கு விடை கொடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறீர்களே!

மனிதா புகழைத் தேடிச் சென்றல் அது ஓடிவிடும் என்பது உனக்குத் தெரியாதா? நீ வலிந்து அடைந்த புகழ் உன்னை நீண்ட நாள் மேட்டில் உட்கார வைக்காது. இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது உன்னைப் பள்ளத்தில் தள்ளிவிடும் என்பதை நீ அறியாயோ?

கொஞ்சம் யோசித்துப் பார்!—நீயாகத் தேடி அடையும் புகழ் போலிப் புகழ்; தானாக உன்னைத் தேடி வரும் புகழே உண்மையான புகழ். அதுவே உன் மறைவுக்குப் பிறகும் உன்னை வாழ வைக்கும் புகழ்.

அத்தகைய புகழை அடைந்திருக்கும் நான் அதற்காகச் செய்ததெல்லாம், செய்வதெல்லாம் என்ன? கூவுகிறேன்; அவ்வளவே.

பூவுக்கு அதன் வாசமே விளம்பரம்; எனக்கு என் கூவலே விளம்பரம்.

அதே மாதிரி உனக்கும் உன் செயலே விளம்பரமாயிருக்கட்டும்; புகழ் தானாக உன்னைத் தேடி வரும்.

அதைவிட்டு, அதற்காக உன்னை நீயே அளவுக்கு மீறி விளம்பரப்படுத்திக் கொள்வது மக்களிடையே புகழை வளர்க்காது; வெறுப்பைத்தான் வளர்க்கும்.