மதமும் மூடநம்பிக்கையும்/நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்
நல்ல ஆவிகளும் கெட்ட ஆவிகளும்
நமது முன்னோர்கள், வான இருளில், மனித சமுதாயத்திற்கு மாறுபாடான கெட்ட ஆவிகள் வாழ்ந்தன என்று கருதியது போலவே, நல்ல ஆவிகள் பலவும் உலாவின என்றும் நம்பினர். கெட்ட ஆவிகள் சாத்தானிடம் எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருந்தனவோ, அதே வித மான உறவைத்தான், நல்ல ஆவிகள், கடவுளிடம் கொண்டிருந்ததாக அவர்கள் கருதினர். கெட்ட ஆவியின் ஆசை வார்த்தைகளினின்றும், தூண்டுதல்களினின்றும், பயபக்தி உடையவர்களைக் காப்பாற்றுவதே நல்ல ஆவிகளின் தொழில். யார் யார் தாயத்துக்களைக் கட்டிக் கொண்டும் மந்திரங்களைச் செபித்துக் கொண்டும், வழிபாட்டுரைகளைச் சொல்லிக்கொண்டும், செபமணிகளை உருட்டிக்கொண்டும். நோன்புகள் எடுத்துக்கொண்டும், சடங்குகள் செய்துகொண்டும், இருந்தார்களோ அவர்களைப்பற்றி அந்த நல்ல ஆவிகள் கவலை செலுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன என்றும் நம்பப்பட்டது. பயபக்தி உடையவர்களின் மார்பில் வாள் வீசப்பட்டாலோ அல்லது அம்பு பாய்ச்சப்பட்டாலோ, உடனே அந்த நல்ல ஆவிகள் சென்று அவைகளைத் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு நன்மை செய்யும் என்றும் கருதப்பட்டது. உண்மை நம்பிக்கையாளரைப் பொறுத்து, அவர்கள், நஞ்சைக் கெடுதியற்றதாக ஆக்கவும், அறியாத்தன்மைக் குப்பாது காப்பாக இருக்கும், வேறு ஆயிரக்கணக்கான வழிகளில் மக்களுக்கு ஆதரவு தரவும், மீட்சி கொடுக்கவும் ஆன தொண்டுகளைப் புரிந்துவந்தன என்றும் கொள்ளப்பட்டது. அவைகள் பயபக்தியுடையவர்களின் உள்ளத்திலிருந்து ஐயப்பாடுகளைப் போக்கின அவர்களுடைய உள்ளத்தில் அறியாத்தன்மை பயபக்தி ஆகிய விதைகளைத் தூவின: பெண்களின் ஆசை வலைகளினின்றும் மகான்களை மீட்டன; உண்ணா நோன்பு இருந்தும் வழிபாட்டுரை கூறியும் வாழ்ந்துவந்தவர்களுக்காக, மோட்ச லோகத்தின் தன்மைகளை விளக்கிக் கூறின. பயபக்தி கொண்ட நல்லவர்களை உணர்ச்சி இன்பங்களை மறக்கச் செய்யவும், சாத்தானை வெறுக்கச் செய்யவும் பேருதவி புரிந்தன என்றெல்லாம் நம்பப்பட்டன.
அந்த நல்ல ஆவிகள் ஞானமுழுக்கு செய்யப்பட்ட குழந்தைகளை ஓம்பின; புனித சூளுரைகளுரைத்தவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தன; கடவுளை நம்பின புரோகிதர்கள், சந்நியாசினிகள், நாடோடிப்பிச்சைக்காரர்கள் ஆகியவர்களைக் காப்பாற்றி வந்தன!
இந்த நல்ல ஆவிகளிலும் பலவகைகள் இருந்தன! சில ஆண்களாகவும், பெண்களாகவும் இவ்வுலகில் வாழ்ந்திருந்தன; சில இவ்வுலகில் வாழ்ந்ததேயில்லை; சில ஆரம்பகாலத்திதிருந்தே தேவதைகளாக இருந்தன! அவைகள், சரியாக எப்படிப்பட்டவைகள் என்பது பற்றியோ, அல்லது அவைகள் எப்படித் தோற்றமளித்தன என்பது பற்றியோ, அல்லது அவைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எவ்வழியாகப் போயின என்பது பற்றியோ, அல்லது அவைகள் எப்படி மனிதர்களின் உள்ளத்தைப் பாதித்தன அல்லது உள்ளத்தின் மீது ஆதிக்கம் செலுத்தின என்பதுபற்றியோ திட்டவட்டமாகக் கூறினவர்கள் யாருமில்லை!
கெட்ட ஆவிகளுக்கெல்லாம் அரசன் சாத்தான் என்றும் நல்ல ஆவிகளுக்கெல்லாம் அரசன கடவுள் என்றும் நம்பப்பட்டன. உண்மையில் பார்க்கப்போனால், கடவுள்தான் எல்லாவற்றிற்கும் அரசன் என்றும், சாத்தான்கூட ஆண்டவனின் பிள்ளைகளிலே ஒருவன் என்றும் நம்பப்பட்டன. இந்தக் கடவுளும் இந்தச் சாத்தானும் மனிதர்களின் 'ஆன்மாக்'களை வசப்படுத்திக்கொள்வதில் போட்டி போட்டுக்கொண்டு, போரில் ஈடுபட்டனர்! கடவுள் அழியாப் பேரின்பத்தைப் பரிசுகளாகக் கொடுத்து, அழியா நரகவேதனைகளைப்பற்றி அச்சுறுத்தி வந்தார்! சாத்தான் இவ்வுலக இன்பத்தை அளித்து, உணர்வுகளுக்ககெல்லாம் நுகர்ச்சியைக் கொடுத்துக் காதல் விளையாட்டுகளையெல்லாம் காட்டி. மோட்ச உலகத்தின் மகிழ்ச்சியைப் பார்த்தும் நரகத்தின் வேதனைகளைப் பார்த்தும் சிரித்தான்! அவன், தன் குற்றக்கையால் ஐயவிதைகளைத் தூவினான். மக்களை ஆராய்ச்சி செய்யும்படியும், பகுத்தறியும்படியும், சான்று காணும்படியும், தன்னம்பிக்கை கொள்ளும்படியும் தூண்டினான் ; மக்களின் இதயத்தில் விடுதலைவேட்கையன்பை ஊனறினான்; விலங்குகளை உடைத்தெறிய அவர்களுக்கு உதவி செய்தான்; சிறைக்கூடங்களிலிருந்து தப்பிஓட அவர்களுக்கு வழி கற்பித்தான்; அவர்களைச் சிந்திக்கும்படி வற்புறுத்தினான்! இந்த வழிகளில் அவன் மக்களாகிய குழந்தைகளைக் கெடுத்தான்!
வழிபாட்டுரையால் பலியால். உண்ணாநோன்பால், சிலபல சடங்குகளைச் செய்வதால், கடவுளின் உதவியையும் நல்ல ஆவிகளின் உதவியையும் பெற்றுவிடலாம் என்று நமது தந்தைமார்கள் நம்பிவந்தனர். அவர்களுடைய வாதம் போதுமான ஆன்ற அறிவுபடைத்ததாக அமைந்திருக்கவில்லை. கேடுகள் அனைத்திற்கும் மூல்காரணம் சாத்தான்தான் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை வெள்ளமும், வறுமையும், பிளேக்கும் புயலும் நில அதிர்ச்சியும் போர் முயற்சியும், சிலசமயங்களில், நம்பிக்கை யிழந்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க, ஆண்டவனால் அனுப்பப்பட்டவை என்று அவர்கள் எண்ணினர். அந்தக் கொடுமைகளைத் தடுக்கும்படி, முழங்காற்படியிட்டுக்கொண்டு வெளுத்த உதடுகளால் வழிபாட்டுரை கூறிக் கடவுளை வேண்டிக்கொண்டனர். அவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டனர்; தாங்கள் செய்த பாவங்களை ஒப்புக்கொண்டனர்; குளுரைகளாலும் வேண்டுதலைகளாலும் வானவெளியை நிரப்பினர்; புரோகிதர்களுடைய உதவியைக்கொண்டும், வழிபாட்டுரைகளின் உதவியைக் கொண்டும் பிளேக்கை அகற்ற முயன்றனர், அவர்கள் புனித நினைவுக்குறிகளை முத்தமிட்டனர்; கோயில்கள் தோறும் விழுந்தெழுந்தனர்; அன்னை மேரி அருமை மகான்கள் ஆகியோரின் ஆதரவை வேண்டினர்; ஆனால் வழிபாட்டுரைகளெல்லாம் இதயமற்ற காற்று வெளியில் இறந்தொழிந்தன; பிளேக் அதன் வலிமை முழுவதும் காட்டி உலகை அழிக்கவே செய்தது! நமது அறிவிற் குறைவுடைய தந்தைமார்கள், அறிவியலைப்பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படைக் காரணங்களாக, அவர்கள், நல்ல ஆவிகளையோ அல்லது கெட்ட ஆவிகளையோ, தேவதைகளையோ அல்லது பிசாசுகளையோ, கடவுள்களையோ அல்லது பூதங்களையோ வைத்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் இயற்கைக் காரணம் ஒன்றைக்கொண்டிருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை, எல்லாம் ஆவிகளின் வேலைப்பாடுகளே என்று கருதினர். எல்லாம் இயற்கைக்குமீறிய கடவுளால் நடந்தேறுகின்றன என்று எண்ணினர். அழிவை உண்டாக்குவது, தண்டனையை அளிப்பது, தவறச்செய்வது, மக்களாகிய குழந்தைகளைப் பாழ்படுத்துவது போன்ற செயல்களெல்லாம் கெட்ட ஆவிகளால் நிகழ்த்தப்பட்டன என்று நம்பினர். இந்த உலகம் ஒரு போர்க்களமாகத் திகழ்ந்தது! இங்கே மோட்ச உலகத்தைச் சேர்ந்தவர்களும், நரக உலகத்தைச் சேர்ந்தவர்களும் போர் தொடுத்துக் கொண்டனர்!