உள்ளடக்கத்துக்குச் செல்

மதமும் மூடநம்பிக்கையும்/ஆண்டவனும் பகுத்தறிவும்

விக்கிமூலம் இலிருந்து

மூடநம்பிக்கை 10


ஆண்டவனும் பகுத்தறிவும்

நமது கடவுள் மக்களால் செய்யப்பட்டவராவார்! நமது காட்டுமிராண்டிகளால் செதுக்கப்பட்டவராவார்! அவர்களால் எந்த அளவுக்குச் செய்ய முடிந்ததோ அந்த அளவுக்குச்செய்தார்கள்! அவர்கள், அவர்களைப்போலவே நமது கடவுளைச் செய்தார்கள்; அவருக்கு அவர்களுடைய உணர்ச்சிகளையே கற்பித்தார்கள்; அவர்களுடைய சரியான–தவறான கருத்துக்களை எல்லாம் அவர்மேல் ஏற்றினார்கள்!

மனிதன் முன்னேற முன்னேறத் தன் கடவுளையும் மாற்றிக்கொண்டான்; நாளடைவில் அவர் இதயத்திலிருந்த மூர்க்கத்தனத்தைக் கொஞ்சம் எடுத்தான், அன்பு தவழும் ஒளியை அவர் கண்களில் ஏற்றினான். மனிதன் மேலும் வளர வளர, அவனது நோககம் பரந்து விரிந்து அறிவின் எல்லையும் அகன்றது மீண்டும் அவன் தன் கடவுளை மாற்றிக்கொண்டான்; அவனால் கடவுளை எவ்வளவு முழுமைத்தன்மையராக ஆக்க முடிந்ததோ, அவ்வளவு முழுமைத்தன்மையராக ஆக்கினான் என்றாலும் இந்தக் கடவுளும், அவரை ஏற்படுத்தியவர்களின் சாயலையே கொண்டிருந்தார். மனிதன் நாகரீகம் அடைய அடைய, அவன் அருளுடையவனாக வளர்ந்தான், நீதியை விரும்பத் தொடங்கினான், அவனது உள்ளம் விரிய விரிய அவனது எண்ணமும் தூய்மை யடைந்தது, சிறந்து விளங்கிற்று, ஆகவே அவனது கடவுளும் அவனைப் போலவே அருளுடையவராகவும், அன்புடையவராகவும், வளர்ந்தார்!

நமது நாட்களில் ஜெஹோவா மறைந்துவிட்டார் அவர் முழுத்தன்மை நிரம்பியவராகக் கருதப்படுவதில்லை; இப்பொழுதெல்லாம், மதவாதிகள், ஜெஹோவாவைப் பற்றிப் பேசுவதில்லை; ஆனால் அன்பான கடவுளைப் பற்றியும், முதலிறுதியற்ற எல்லையில்லாத் தந்தையைப்பற்றியும், நிலையான நண்பரைப் பற்றியும், மனிதனின் நம்பிக்கைக்குக் கொள்கலமானவரைப்பற்றியுமே பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் அன்பான கடவுளைப்பற்றிப் பேசும்போதுதான், பெரும் புயற்காற்றுகள் அழிவையும் பாழையும் உண்டாக்குகின்றன; நில அதிர்ச்சி உயிரினங்களை விழுங்குகிறது; வெள்ளப் பெருக்கு பேரழிவை உண்டாக்குகிறது; பேரிடி முகிலிலிருந்து விழுந்து மக்களின் உயிரை வவ்வுகிறது; பிளேக்கும் காய்ச்சலும், சாவு என்னும் வயலில் இடைவிடாமல் அறுவடை அறுத்துக்கொண்டே யிருக்கின்றன !

அவர்கள், இப்பொழுது கூறிவருகிறார்கள். எல்லாம் நன்மைக்கே என்று. தீமை மாறு உருவில் நலம் புரிவதற்காக வந்த நன்மை என்றும், துன்பம் ஏற்றல் மக்களுக்கு வலிவையும், வளத்தையும் உண்டாக்கும் என்றும், அதுவே பண்பை உருவாக்குகிறது என்றும்; அதே நேரத்தில் மகிழ்ச்சி நலிவையும், தாழ்வையும் தருகிறது என்றும் கூறி வருகிறார்கள். இது உண்மையாக இருக்குமேயானால், நரகத்தில் கிடக்கும் ஆன்மாக்கள் எல்லாம் உயரிய நிலைக்குப் போகவேண்டும்; மோட்சத்திலிருக்கும் ஆன்மாக்களெல்லாம் வாடி வதங்கவேண்டும்!

ஆனால்,நாம், நல்லது நல்லதே என்பதை அறிவோம். நாம் தீது நல்லது அல்ல என்பதையும், நல்லது தீது அல்ல என்பதையும் அறிவோம். நாம், ஒளி இருள் அல்ல என்பதையும், இருள் ஒளி அல்ல என்பதையும் அறிவோம். ஆனால் நாம் அறிவோம், நன்மையும், தீமையும், இயற்கைக்கு மீறிய ஆற்றலான ஆண்டவனால் திட்டமிடப்பட்டு, உண்டாக்கப்பட்டவை அல்ல என்பதை. அவை இரண்டையும் அவசியத்தின்பாற்பட்டவைகளாகவே நாம் கருதுகிறோம். நாம் அவற்றிற்காக வாழ்த்துப் பாடுவதுமில்லை. வசைபொழிவதுமில்லை. நாம் அறிவோம், சில தீமைகளை அகற்றிவிடமுடியும் என்பதையும். நன்மையைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும், நாம் மூளையை வளர்ப்பதன் மூலமும், அறிவைப் பெருக்கிக்கொள்வதன் மூலமும் இதனைச் சாதித்துக்கொள்ளலாம் என்பதை அறிவோம். கிருத்தவர்கள் எப்படித் தங்களது கடவுளை மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, அப்படியே, அவர்கள் தங்களது பைபிளையும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நடக்கமுடியாதவைகளையும், அபத்தமானவைகளையும், கொடுமையானவைகளையும், மதிப்புத் தாழ்ந்தவைகளையும் அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, எப்படியேனும் கடவுள் அருளிய வேதத்தைக் காப்பாற்றிக் கொண்டால் போதும், என்ற அளவுக்கு, ஆயிரக்கணக்கானவர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும் பழுத்த பழமை விரும்பிகள் அதனுடைய ஒவ்வொரு சொல்லையும் பற்றிக்கொண்டு நிற்பதோடு, அதன் ஒவ்வொரு வரியையும் உண்மையென்றே நம்பிக் கொண்டிருக்கத்தான் செய்கின்றனர். வெறும் படிப்பாளர்கள் சிலர் இருக்கிறார்கள். பைபிள் என்ன சொல்லுகிறதோ அதுதான் அவர்களுக்கு 'பைபிள்' அவர்கள் விளக்கவுரையேதும் வேண்டமாட்டார்கள். விளக்கவுரை செய்வோரைப்பற்றி அவர்களுக்குக் கவலையேயில்லை. முரண்பாடுகள் அவர்களுடைய பக்தியை அசைத்துவிட முடியா. எந்தவித முரண்பாடுகள் இருப்பதையும் அவர்கள் மறுத்துரைப்பார்கள். அவர்கள் அந்தப் புனித வேதத்திற்குப் பணிந்து அதனோடு ஓட்டியே நிற்பார்கள்; அவர்கள், அதற்குச் சிறிதளவு தத்துவார்த்த விளக்கமே கொடுப்பார்கள். ஒரு மதிப்பிற்குரிய பெரியவர் குழந்தைகளை உடையவராக இருக்கிறார் என்ற காரணத்துக்காகவே, அவருக்குக் குடியிருக்க இடமளிக்க மறுக்கும், பல கட்டுகளை உடைய வீட்டுக்கு வாடகை வசூலிப்பவனைப் போன்றவர்கள் அவர்கள். "ஆனால், என்னுடைய மக்கள் இருவரும் மணம்புரிந்து கொண்டவர்கள். அவர்கள் தனியே அயோவாவில் வாழ்கிறார்கள்” என்று அந்தப் பெரியவர் சொல்கிறார். அதற்கு அந்த வீட்டு வாடகை வசூலிப்பவன், "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. குழந்தைகளை யுடைய எவருக்கும் வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்பதே, எனக்கிடப்பட்டிருக்கும் கட்டளையாகும்” என்று கூறினான். இதைப் போன்றதுதான் அந்தப் பழமை விரும்பிகளின் நிலைமையும்.

வைதீக மாதா கோவில்கள் எல்லாம். முன்னேற்றம் என்னும் நெடுவழியின் குறுக்கே, போடப்பட்டிருக்கும். தடைக்கற்களாகும். ஒவ்வொரு வைதீகக் கொள்கையும் ஒரு இருப்புச் சங்கிலியாகும்; ஒரு இருட்டறையாகும். "கடவுளருளிய அந்த வேதத்தில்" நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொரு நம்பிக்கையாளனும் ஒவ்வொரு அடிமையாவான். அவன் பகுத்தறிவை அதன் அரியணையினின்றும் வீரட்டியடித்துவிட்டு, அதற்குப்பதிலாக அச்சத்திற்கு முடிசூட்டியிருப்பவனாவான்.

பகுத்தறிவு மூளையின் ஒளியாகும்; செஞ்ஞாயிறாகும். அதுதான் உள்ளத்தைச் சுற்றி அளவிடும் அளவு கருவியாகும்; நிலைத்து நிற்கும் வடமீன் (நட்சத்திரம்) ஆகும்; மேகக்கூட்டங்களை யெல்லாம் தாண்டிக்கொண்டு, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் மலைமுகடாகும்!