அன்னப் பறவைகள்/பழிகாரப் பார்த்திபன்
ஒரு காலத்தில் செருக்கு மிகுந்த தீய மன்னன் ஒருவன் இருந்தான். உலகத்திலுள்ள நாடுகளையெல்லாம் வெற்றி கொள்ள வேண்டும், தன் பெயரைக் கேட்டாலே யாவரும் அஞ்சவேண்டும் என்பது அவன் நோக்கம். அவன் எத்திசை சென்றாலும் வாளும் தீயும் மக்களை வதைத்து வந்தன. அவனுடைய படை வீரர்கள் கதிர் மிகுந்த கழனிகளைச் சமட்டி அழிப்பார்கள்; குடியானவர்களின் குடிசைகளுக்குத் தீ வைப்பார்கள். தீக் கொழுந்துகள் அருகிலுள்ள மரங்களைப் பொசுக்கி, அவைகளில் தொங்கும் கனிகளையும் வெந்து போகும்படி செய்யும். வெந்து கருகிய வீடுகளில், சுவர்களுக்கு அப்பால், மறைவில் கைக்குழந்தைகளுக்குப் பாலூட்டிக் கொண் டிருக்கும் பெண்டிரையும் அக்கொடியவர்கள் விடுவதில்லை; மகிழ்ச்சி வெறிகொண்டு அவர்களையும் மானபங்கப்படுத்துவார்கள். பேய்கள் அவர்களைவிட நல்லவைகள் என்று சொல்லலாம்.
எல்லாக் கொடுமைகளும் நியாயமானவை என்றே மன்னன் கருதிவந்தான். அதிர்ஷ்டம் அவனைத் தொடர்ந்து வந்தது. நாளுக்கு நாள் அவன் வல்லமை பெருகி வந்தது. மக்கள் எல்லோரும் அவனிடத்தில் அச்சம் கொண்டனர். வெற்றி கொண்ட நகரங்களிலிருந்து அவன் பொன்னையும் பெருஞ் செல்வங்களையும் கொள்ளையிட்டு வந்தான். அவனுடைய தலைநகரத்தில் களஞ்சியம் நிறைய இரத்தினங்களும், பொன்னும், வெள்ளியும் குவிந்திருந்தன. அக் கொடியோன் தனக்காக மாட்சி மிக்க பல அரண்மனைகளைக் கட்டிக்கொண்டான். தான் அடைந்த வெற்றிகளுக்காக வெற்றி வளைவுகள் அமைத்தான். புதிய கோயில்களையும் எழுப்பினான். இவைகளைப் பார்த்தவர்கள், 'எவ்வளவு பெரிய மன்னன்!' என்று வியந்தார்கள். வெளிநாடுகளில் அவன் இழைத்த தீமைகளையும் கொடுமைகளையும் எண்ணிப் பார்க்கவில்லை; அவனால் அழிக்கப்பட்ட நகரங்களிலிருந்து கண்ணீரும் கம்பலையுமாக வெளியேறிய மக்களைப் பற்றி அவர்கள் கருதவில்லை.
மன்னன் மலைபோல் குவித்திருந்த தன் தங்கத்தைப் பார்த்தான். வானோங்கி வளர்திருந்த தன் மாடங்களையும் மாளிகைகளையும் பார்த்தான். அவனுடைய செருக்கும் ஆசையும் அதிகரித்தன. 'நான் எவ்வளவு பெரிய பார்த்திபன்! ஆனால் இன்னும் செல்வம் சேர்க்க வேண்டும், சேர்த்துக்கொண்டே யிருக்க வேண்டும்! எனக்கு ஈடாகவோ, என்னிலும் எடுப்பாகவோ எவரும் இருக்கக் கூடாது!' என்று அவன் கருதினான். மேலும் சுற்றியிருந்த நாடுகளோடு அவன் போர் அவன் தொடுத்தான்; அவைகளையெல்லாம் வென்றான். தோற்றுப் போன மன்னர்களை அவன் தங்கச் சங்கிலிகளால் தன் தேரில் கட்டி அதை இழுத்துச் செல்லும்படி செய்தான். அவனும் அரசாங்க அதிகாரிகளும் அரண்மணையில் விருந்துண்ணும் பொழுது, அடிமை அரசர்கள் கீழே தரையில் ஊர்ந்து கொண்டு அங்கே எறியப்படும் ரொட்டிப் பொருக்குகளைப் பொறுக்கி யெடுத்துக் கொள்ள வேண்டும்.
மன்னன் இவற்றுடன் நிற்கவில்லை; தன் சிலைகளைச் சந்தை அருகிலும், அரண்மனைகளிலும் வைக்கும்படி செய்தான். அடுத்தாற்போல் ஆலயங்களில் பலிபீடங்களுக்கு முன்னாலும் அவைகளை வைக்க ஏற்பாடு செய்யலானான். ஆனால் பூசாரிகள், 'அரசே, நீர் மேலானவர் தாம்! ஆயினும் கடவுள் உம்மிலும் மேலானவர்! தங்கள் சிலைகளை வைக்க எங்களுக்குத் துணிவு வரவில்லை!' என்று சொல்லிவிட்டனர். சொல்லி விட்டனர். 'அப்படியானால் நான் கடவுளையும் வென்று வருகிறேன்!' என்று சபதம் கூறினான் மன்னன். உடனே அதற்கு வேண்டிய ஆயத்தங்களை அவன் தொடங்கி விட்டான்.
மிகப் பெரிய கப்பல் ஒன்று கட்டப்பெற்றது. அது மயிலின் கழுத்தைப்போல் வளைவாக அமைந்திருந்தது. வெளியிலிருந்து பார்த்தால், அதில் ஆயிரம் கண்கள் பதிக்கப் பெற்றிருப்பனபோல் காணப்பட்டது. உண்மையில் அவை கண்கள் அல்ல, பீரங்கிகளின் வாய்கள்.
மன்னன் கப்பலின் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டான். அவன் ஒரு விசையை அழுத்தினால், ஆயிரம் குண்டுகள் வெடிக்கும்படி அதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு முறை குண்டுகள் வெடித்தவுடன் மீண்டும் குண்டுகள் திணிக்கப் பல வீரர்கள் இருந் தனர். நூற்றுக்கணக்கான இராட்சசக் கழுகுகள் கப்பலின்மேல் பகுதியில் இணைக்கப் பெற்றிருந்தன. அவைகள் புறப்பட்டு வானத்தில் பறக்கும்போது, கப்பலும் மேலே பறக்கத் தொடங்கி விட்டது. தரை மறைந்து விட்டது. மலைகளும், மடுக்களும், வனங்களும், நதிகளும் சிறு கோடுகளைப் போலத் தோன்றின. கப்பல் மேலே செல்லச் செல்ல இவைகளும் மறைந்து விட்டன. கப்பல் கதிரவனை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்தது. அது மேக மண்டலத்தில் மறைந்து விட்டது. கழுகுகள் மேலும் பறந்து கொண்டிருந்தன.
கடவுள் தம்மிடம் இருந்த எண்ணற்ற தேவதூதர்களில் ஒருவரை மட்டும் அனுப்பி வைத்தார். தூதர் வருவதைக் கண்டதும், அவரை நோக்கி மன்னன் ஆயிரம் குண்டுகளைப் பாய்ச்சினான். தூதர் ஒளிமயமான தம் சிறகுகளை உதறினார். ஆலங்கட்டிகள் சிதறி விழுவன போல், குண்டுகள் யாவும் சிதறிக் கீழே விழுந்தன. ஆனால் சிறகுகளிலிருந்து ஒரு துளி உதிரம் மட்டும் கப்பலில் மன்னன் இருந்த பகுதியில் வந்து விழுந்தது. அந்த ஒரு துளி ஆயிரம் டன் ஈயத்தைப் போன்ற எடையுள்ளதாகவும், அறை பிழம்பாகவும் இருந்தது. உடனே கப்பல் தலைதெறிக்கும் வேகத்துடன் பூமியை நோக்கி இறங்கத் தொடங்கிவிட்டது. கழுகுகளின் சிறகுகள் செயலற்று ஒடுங்கிவிட்டன. மன்னனின் தலையைச் சுற்றிப் பலமான காற்று வீசிற்று. மேகங்களும், அவன் முன்பு எரித்த நகரங்களிலிருந்து கிளம்பி வானத்தை அடைந்த புகைகளும் பயங்கர உருவங்களுடன் காட்சி அளித்தன. அவை பல மைல் பரப்புள்ள நண்டுகளைப்போலவும், அனல் கக்கும் அசுர நாகங்களைப்போலவும், பெரும் பாறைகளைப்போலவும் அவனை நோக்கி வருவன போலிருந்தன. பாதி உயிர் போனவனைப் போல் அரசன் கப்பலுள் 1779--இருந்தான். கப்பல் வனத்தின் மரங்களின்மேல் இறங்கி அவைகளின் கிளைகளில் சிக்கிக் கொண்டது.
மன்னன் தெளிந்து எழுந்ததும், 'கடவுளை நான் முறியடிப்பேன்! அப்படி நான் சபதம் செய்திருக்கிறேன். என் சொல்தான் சட்டம்! என்று கர்ச்சனை செய்தான். ஆகாயத்தில் பறந்து செல்ல மாபெரும் கப்பல் ஒன்றை அவன் மறுபடி கட்டத் தொடங்கினான். அந்த வேலை ஏழு ஆண்டுகளாக நடந்து வந்தது. இடிகளைப்போல் தாக்கக்கூடிய உருக்குக் குண்டுகளும் பீரங்கிகளும் அதில் ஏராளமாக இருந்தன. அவைகளைக் கொண்டு சுவர்க்கத்தின் கோட்டைகளைத் தகர்க்க வேண்டும் என்பது மன்னன் எண்ணம். பல நாடுகளிலிருந்து அவன் படைகளையும் கொண்டு வந்து குவித்தும் வைத்துக் கொண்டான். கப்பல் வேலை முடிந்ததும், படை வீரர்கள் அதில் ஏறித் தத்தம் இடங்களில் போய் நின்று கொண்டனர். மன்னனும் ஏறித் தன் ஆசனத்தில் அமரச் சென்றான். அந்த நேரத்தில் கடவுள் ஒரு சிறு கொசுப்படையை அனுப்பி வைத்தார். கொசுக்கள் ஒரே கூட்ட மாக மன்னனைச் சுற்றி ஒலி செய்து கொண்டு, அவன் முகத்தையும் கைகளையும் கடிக்கத் தொடங்கின. அவன் கோபத்தால் கொதித்துத் தன் உடைவாளை உருவினான். அதைக் கொண்டு அவன் காற்றைத் துழாவ முடிந்ததே தவிர, கொசுக்களை எதுவும் செய்ய முடியவில்லை. உடனே அவன் மதிப்புயர்ந்த பல கம்பளிகளைக் கொண்டுவரச் செய்தான். 'இவைகளைக் கொண்டு என் உடல் முழுவதும் சுற்றிச்சுற்றிப் போர்த்தி வையுங்கள்" என்று தன் பணியாளர்களுக்குக் கட்டளை யிட்டான். அவர்கள் அவ்வாறே கொசுக்கள் நுழைந்து விடாதபடி நன்றாகப் போர்த்தினார்கள்.
ஆனால் ஒரு கொசு மட்டும் மன்னனின் உடலோடு ஒட்டியிருந்த கம்பளிக்குள் நுழைந்து விட்டது. அது மெல்ல மெல்ல அவன் செவி கரை ஏறி, கடைசியில் செவிக்குள்ளே சென்று, செவியின் உட்குருத்தைக் கடித்து விட்டது!. அவ்வளவுதான், நெருப்புப் பற்றி எரிவது போல் மன்னன் துடித்தான். விஷம் தலைக்கேறி விட்டது. அவன் எழுந்து குதித்தான்; தன்னைச் சுற்றியிருந்த கம்பளிகளையெல்லாம் வாளால் வெட்டி யெறிந்தான்; தன் உடைகளையும் கிழித்தெறிந் தான், ஆடையின்றி நிர்வாணமாகவே அவன் நடனமாடத் தொடங்கினான். சுற்றிலும் நின்று பார்த்துக் கொண்டிருந்த படைவீரர்கள், சிரிப்புத் தாங்காமல், கடவுளின் கோட்டைகளையே வெல்லக் கிளம்பிய இந்த மன்னரைத்தான் ஒரு சிறு கொசு வென்று விட்டது!' என்று பரிகாசம் செய்தனர்.