உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு கோட்டுக்கு வெளியே/கொடியது கண்டு…

விக்கிமூலம் இலிருந்து

7. கொடியது கண்டு…

ரோஜாவின் கல்யாணம் நின்றுபோனதே, ஊர்ப் பேச்சாக இருந்தது. உலகம்மையை, சிலர் வெறுப்போடு பார்த்தார்கள். வழக்கமாக அவளிடம் பேசும் பலர், அவளைக் கண்டதும், 'ஒதுங்கிப்' போனார்கள். சிலர் பேசினாலும் பழைய அந்நியோன்யம் இல்லை. ஒருசிலர் "நீ இப்டி இருப்பன்னு கெனவுகூடக் காணல. ஒன்க்கு இதுல என்ன கிடச்சது?" என்றும் கேட்டார்கள். இதே பலவேச நாடார், மச்சினன் மகள் கல்யாண முயற்சிகளைப் பலதடவை தடுத்தபோது. ஊர்வாய் மூடிக்கிடந்தது. "பலவேச நாடாரு சமர்த்தன். அவரா கல்யாணத்த நடத்த விடுவாரு" என்று ஒருவித ‘ஹீரோ ஒர்ஷிப்' முறையில் பேசிய ஊரார் இப்போது உலகம்மை கல்யாணத்தை நிறுத்தியது தத்தம் வீட்டில் நடக்கவிருந்த கல்யாணம் நின்று போனதுபோல் பாவித்துக் கொண்டார்கள்.

உலகம்மை, தன் செயலுக்காக அதிகமாக வருந்தவில்லை . என்றாலும், ஒருவிதத் தனிமை அவளைப் பயங்கரமாக வாட்டியது. ஆனாலும், அவள் தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள். "ஒருவன் ஒரு கொல பண்ணியிருப்பான். அத பாக்காத ஜனங்க அவன போலீஸ் அடிச்சிழுத்துக்கிட்டு போவும் போது அந்தக் கொலகாரன் மேலயும் இரக்கப்படும். இது இயற்கை. சரோசாக்கா தங்கமானவா. அவா கல்யாணம் நின்று போனதுல இரக்கப்பட்டு என்மேல கோபப்படுவதும் இயற்க. இத பெரிசா எடுத்துக்கக் கூடாது. போவப் போவ சரியாயிடும். 'நல்லவன் செய்றதவிட, நான் செய்றது மேலன்னு' சும்மாவா சொல்லுவுராவ?"

உலகம்மை, ஊர்க்கண்ணில் இருந்து கொஞ்ச நாளைக்கு' ஒதுங்கி இருக்க விரும்பினாள். 'மாரிமுத்து நாடார்வயல மறந்தாச்சி. பலவேசம் வயலுல வேல பார்க்கதவிட சாவலாம். பீடி சுத்துற பொழப்பும் போயிட்டு, பேசாம ரோசாபூக்கிட்ட பீடி சுத்திக் கொடுப்போம். அவள் நெறய இல வாங்கச் சொல்லலாம்.'

அவள். ரோசாப்பூவை அணுகியபோது, "எக்கா ஒங்கள மாதிரி வருமா" என்று சொல்லும் அந்த ரோசாப்பூ, "இதுக்குத்தான் முன்னோசன வேணுங்றது. அவன் ராமசாமி அப்டி என்ன பண்ணிட்டான்? அவனப்போபி, பேசாத பேச்சுல்லாம் பேசிட்டியே. அவனுக்குத் தெரிஞ்சா என் பீடி அவ்வளவையும் கழிச்சிப்படுவான். பேசாம அவங்கிட்ட மன்னாப்பு கேட்டுக்க" என்று உபதேசம் செய்தாள்.

என்ன செய்யலாம் என்று உலகம்மை தவித்துக்கொண்டிருந்த போது, சட்டாம்பட்டியில் ஒரு மிராசுதார் வயலில் நடவு வேலை இருப்பதாகச் செய்தி வந்தது. அந்த ஊர்ப் பெயரைக் கேட்டதும், ஒரு பிடிப்பு ஏற்படுவதை, அவள் உணர்ந்தாள். அந்த ஊர்லே பிறந்து அந்த ஊர்லே வளர்ந்ததுபோன்ற ஒரு எண்ணம் ஏற்பட்டது. "ரெண்டார் ரூபாதான் கெடக்கும். அஞ்சி மைலுவேற நடக்கணும். ஒனக்கு சம்மதந்தானா” என்று கூரோடி' சொன்னபோது அதெல்லாம் பார்த்தா முடியுமா? ரெண்டு ரூபான்னாகூட வருவேன். நெலம அப்டி" என்று பதிலளித்தாள். 'கூரோடி' கூட 'ரெண்டுன்னு சொல்லியிருக்கணும். அர ரூபாய அடிச்சு மொச்சக் கொட்ட வாங்கி வருத்திருக்கலாம்' என்று முன்யோசனை இல்லாமல் போனதற்காக. 'பின் யோசனை' செய்தான். இதுபோன்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டபோதே, அவளுக்குத் தாங்கமுடியாத உற்சாகம்: என்றுமில்லாத வழக்கமாக, தலையை 'சீவிக் கொண்டாள்'. ஒரு சிரட்டையில் கருப்பாகக் கிடந்த 'பொட்டை' ஆள்காட்டி விரலால் அழுத்தி நெற்றியில் வைத்துக் கொண்டாள். அய்யாக்காரர், கனைத்துக்கொண்டு, தலையைச் சொறிந்தார்.

"ஒம்மத்தான். அடுக்களப் பானைக்குமேல நெலக்கடல வருத்து வச்சிருக்கேன். மத்தியானமா தின்னும். சோளச் சோறும், அவுத்திக் கீரையும் இருக்கு, சாப்புட மறந்துடாதேயும்."

"நான் சாப்புடுற நிலயிலா இருக்கேன்? ஊர்ல ஒன்னப் பத்தி பேசுறத கேட்டுக்கிட்டு இன்னுஞ்சாவாம இருக்கேன்! ஒனக்கும் இந்த புத்தி ஆகாது. நாம உண்டு, நம்ம வேல உண்டுன்னு இருக்காம வழில போற சனியன மடியில போட்டுக்கிட்ட."

"போம்போது ஏய்யா மறிக்கியரு."

"நான் மறிக்கல. என் தலையே வெடிச்சிடும் போலருக்கு. ந வாரது வரைக்கும் எப்படித்தான் இருக்கப்போறேனோ? நீ வூட்டுக்கு வந்து சேருறது வரைக்கும் உயிர கையில் பிடிச்சிக்கிட்டு இருக்கேன்.."

"பேசாம தூங்கும்."

"தூங்க முடியலியே. கொஞ்சம் போட்டா ஒரு வேள..."

உலகம்மை லேசாகச் சிரித்துக்கொண்டாள். கலையத்திலிருந்து ஒரு ரூபாயை எடுத்தாலும், அதைக் கொடுக்க மனமில்லாமல், கையிலேயே வைத்துக்கொண்டு "ஏய்யா ஓமக்கு இந்தப் புத்தி? சாராயம் குடிச்சி மெட்ராஸ்ல செத்துட்டாங்கன்னு சொன்னப் பொறவும் இதுக்கு ஆசப்படலாமா?" என்று கேட்டாள்.

மாயாண்டி உற்சாகமாகப் பதில் சொன்னார்.

"சைக்கிள்ல போறவன்ல ஒருத்தன் லாரியில் அடிபட்டுச் சாவுறான். அதுக்காவ சைக்குள் விடாமலா இருக்காங்க? ரயிலுகூட விழுந்துடுது. அதுக்காவ ஓடாமலா இருக்கு நான்கூட பனமரத்துல இருந்து விழுந்து கால ஒடிச்சிக்கிட்டேன். அதுக்காவ ராமசுப்புவும் அயோத்தி ராமனும் பனையில ஏறாமலா இருக்காங்க சாவு வரணுமுன்னா வந்தே தீரும். சாராயத்தாலதான் சாவு வரணுமுன்னுல்லே."

உலகம்மைக்கு அப்போதிருந்த உற்சாகம், அய்யாவின் பேச்சைக்கேட்டு சிரிக்க வைத்தது. ஒருரூபாய் நாணயத்தை அவரிடம் நீட்டிவிட்டு, "வெளில சுத்தாம, பேசாமப்படும்; சொல்றது கேக்குதா" என்று கேட்டுவிட்டு, அவர் 'கேக்கு கேக்கலன்னு' சொல்லும் முன்னாலே, தெருவிற்கு வந்து விட்டாள்.

சட்டாம்பட்டிக்குக் கிழக்கே. ஊரை ஒட்டியிருந்த வயக்காட்டில் இதர உள்ளூர்ப்பெண்களுடன் அவள் நட்டுக் கொண்டிருந்தாள். லோகுவைப்பற்றி எப்படி விசாரிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்தாள். அவன், அந்தப் பக்கம் வந்தாலும் வருவான் என்று, அவனைத் தேடுவது போல் நாலு பக்கமும் பார்த்தாள். ஒருத்தியிடம் லேசாக, சந்தேகம் வராதபடி பேச்சுக்கொடுத்தாள்.

"எக்கா, எங்க ஊரைவிட ஒங்க ஊர்ல படிச்சவங்க நிறயப் பேரு இருக்காங்க போலுக்கே."

"அதனாலதான் ஒங்க ஊரவிட எங்க ஊரு குட்டிச்சுவரா போயிக்கிட்டு வருது."

"ஏக்கா அப்படிச் சொல்ற. ஒங்க ஊர்ல படிச்சவங்க வந்து பந்து விளையாட வல கட்டியிருக்காங்களாம். நாடகம் போடுறாங்களாம்."

"அதுக்கு மட்டும் குறச்ச இல்ல. இந்தப் பயபிள்ளிய தின்னுப்புட்டுக் கிடா மாதிரி ஊரச் சுற்றதும், வயசுப் பொண்ணுகளப் பார்த்துக் கண்ணடிக்கதும் ஒரே பொரெளி ! அய்யா காச திங்குதுங்களே, இதுங்க அப்புறம் என்ன பண்ணுது தெரியுமா? வேலையில் சேர்ந்ததும் பய பிள்ளியளுக்கு கண்ணுந் தெரியமாட்டங்கறது, காலுந் தெரிய மாட்டக்கு. நாலு மொள வேட்டியக் கட்டிக்கிட்டு, நாயா ஊரச் சுத்துன பயபிள்ளியல்லாம் முழுக்கால் சட்டயப் போட்டுக்கிட்டு, கோயிலுக்குள்ள கூடச் செருப்போட போவுதுங்க! காலுல கரையான் அரிக்க."

இன்னொரு பெண்ணும் பேச்சில் கலந்து கொண்டாள்.

"படிக்காத பயலுவளப் பாத்தா இவனுக எவ்வளவோ தேவல தெரியுமா? நம்ம ஊர்ல பிச்ச எடுக்காத குறையா அலஞ்சான, முத்து. அவன் சங்கதி தெரியுமா? மெட்ராஸ்ல போயி பலசரக்குக் கட வச்சி பயமவனுக்கு காசு சேந்துட்டு போலுக்கு. போன மாசம் அம்மன் கொட சமயத்துல அவன் வந்து குலுக்குன குலுக்கு. இருட்டுலயும் கண்ணாடி! தாறு பாச்ச பய ம்வனுக்குப் பேண்டு! சட்ட! நல்லா இருக்கட்டும். ஆனால், பழயத மறந்து அந்தப் பய ஒரு வாள மரத்த பாத்துட்டு 'இதுல என்ன காய்க்குமுன்னு' கேட்டானாம். எப்டி இருக்கு கதை? நம்ம மகராஜனும் இருக்காரு. படிச்சவர்தான்; அவரைப்பத்தி ஒண்ணு சொல்ல முடியுமா?”

“நீதான் ஒன் அத்த மவன மெச்சிக்கிடனும். நீ என்னமோ அத்த மவன் ஒன்னக் கட்டுவான்னு நெனக்க. எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு. நீ வித்தியாசமா எடுக்காட்டா ஒண்னு சொல்லுறேன். அவன் ஒன்னக் கெட்டிக்கிடுறேன்னு ஆசையா பேசுவான். நம்பி மோசம் போயிடாத ஆம்புள ஆயிரம் சவதில மிதிச்சி ஒரு கொளத்துல கழுவிடலாம். ஆனா பொம்பிள உஷாரா இருக்கணும். அதுவும் வெள்ளச்சட்டப் பயலுவகிட்ட ரொம்ப ஜாக்கரதயா இருக்கணும்.”

“ஆமாக்கா, திருநெல்வேலில படிச்சான் பாரு, பெருமாள், அவன் அய்யா, மவனுக்கு ரூபாய எடுத்துக்கிட்டு போனாராம். பெருமாள் கிட்ட மத்த பையங்க அவர யாருன்னு கேட்டாங்களாம். இவன் அய்யாவுக்கு கேக்காதுன்னு நெனச்சிக்கிட்டு எங்க வீட்டு வேலைக்காரன். வீட்ல இருந்து ரூபா குடுத்து, அப்பர் அனுப்பியிருக்கார்ன்னு சொன்னானாம். எப்படி யக்கா?”

“சொல்லியிருப்பான். அவனுக்கு கவர்னர் மவன்னு மனசுல நெனப்பு. விளங்காத பயபுள்ள. அவன் அய்யா இப்போ படுத்த படுக்கையா கெடக்காரு.”

உலகம்மை பொறுமையிழந்தாள். லோகுவைப் பற்றிப் பேச்சே வராதது தன் லட்சியம் நிறைவேறாதது போலிருந்தது. அதே நேரத்தில், அவன் பெயர் அந்த சந்தர்ப்பத்தில் அடிபடாமல் இருப்பதில் ஒருவித சந்தோஷமும் ஏற்பட்டது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். “அப்படின்னா ஒங்க ஊர்ல படிச்சவங்க எல்லாமே மோசமா?” என்றாள்.

“அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு. மோசமான பய படிச்சா, ரொம்ப மோசமாயிடுறான். நல்ல பய படிச்சா, கொஞ்சம் மோசமாயிடுறான். காலேஜ்ல படிச்சவனும், சினிமா பார்க்கறவனும் கண்டிப்பா கெட்டுத்தான் போவான்.”

“ஆமா, ஒங்க ஊர்ல இருந்து ஒரு பையனுக்கு எங்க ஊர்ல கல்யாணம் நடக்கதா இருந்துதுல்லா?”

“அத ஏன் கேக்க? படிச்ச பயலுவள்ளே லோகன்தான் உருப்படியாவான்னு நெனச்சோம்! அவனும் மோசமான பயலாத்தான் இருந்திருக்கான், ஒங்க ஊர்ல போயி பொண்ணப் பாத்துட்டு ‘சரி’ சொல்லிட்டு வந்தான்! இப்ப கட்டமாட்டேன்னுட்டான். இவனுக்கும் அஞ்சாறு தங்கச்சிய இருக்கு. அவளுவளுக்கு இப்டி ஆனா சம்மதிப் பானா?"

"ஏன் மாட்டேன்னாராம்?"

"பலர் பலவாறு பேசுறாங்க. ஒங்க ஊர்ல இருந்து எவளோ ஒருத்தி மோகினி மாதிரி அவன்கிட்ட தோட்டத்துல வந்து பேசுனாளாம். அந்தத் தேவடியா முண்ட பேச்சக் கேட்டுக்கிட்டு, இந்தப் பய, அய்யாகிட்ட முடியாதுன்னுட்டானாம். ஒரு காலத்தில் நாங்கெல்லாம் எங்க ஊருக்குப்போவும் போது வீட்டுக்காரர்கூட சேந்து போவ வெக்கப்படுவோம். ஊரு போறது வரைக்கும் சேந்து போனாலும் ஊரு வந்துட்டா ஒரு பர்லாங்கு தள்ளி நடப்போம். அவரு யாரோ நாங்க யாரோங்ற மாதிரி. இப்ப என்னடான்னா கல்யாணம் ஆகாத ஒருமுண்ட இவங்கிட்ட தளுக்கிப்பேசி ஒரு குடியக் கெடுத்திட்டா. பாவம் சங்கர நாடார் மவளுவள கரையேத்த இந்தக் கல்யாணத்ததான் நம்பியிருந்தாரு."

உலகம்மையால் மேற்கொண்டு பேச முடியவில்லை. இடது கையில் வைத்திருந்த நாற்றுக்கட்டை எடுத்து, வலது பாதத்தில் அடித்துக் கொண்டாள். குறுக்கு வலியைப் போக்க நிமிர்ந்தவள் போல் நிமிர்ந்து லேசாகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். நடந்த விபரம் முழுவதையும், அந்தப் பெண்களிடம் சொல்லி அழ வேண்டும் போலிருந்தது. நீ செஞ்சது சரிதான்' என்று அவர்கள் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் எதுவும் அவளுக்கு ஓடவில்லை . அவள் தூரத்து உறவுப் பாட்டி ஒருத்தி சட்டாம்பட்டியில் இருக்கிறாள். இன்று சாயங்காலம் ஊருக்குப் போகிற வழியில் அவளைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தையே கைவிட்டு விட்டாள். லோகு வருவதைப் பற்றி இப்போது அவளுக்கு அக்கறை இல்லை. ஆனால், இப்போதும் நாலுபக்கமும் பார்த்தாள். 'சட்டாம்பட்டிய மிதிக்காம ஊருக்குப் போறதுக்கு வேற வழியிருக்கான்னு' தெரிந்து கொள்வதற்காகப் பார்த்தாள். அல்லது அப்படிப் பார்ப்பதாக நினைத்தாள்.

வேலை முடிந்ததும், வழக்கமாக வாய்க்கால் நீரிலோ, கமலக்கிடங்கில் பெருகி நிற்கும் தண்ணீரிலோ கால் கைகளை அலம்பும் பழக்கத்தைக் கைவிட்டவளாக அவள் வரப்பு வழியாக நடந்தாள். மிகப் பெரிய சுமை ஒன்று தலையில் அழுத்துவதுபோல் இருந்தது. தீர்வு காண முடியாத ஒரு பழிபாவத்திற்கு ஆளாகி விட்டதுபோல், கூனிக் குறுகி நடந்தாள். 'ரன்தான் பிறந்தோமோ? ஒரு பொண்ணோட உடம்ப காட்டி “”இன்னொரு பொண்ணோட கல்யாணத்தை நடத்த இருந்த கவுலப்பத்தி ஏன் ஒரு ஜனமும் பேச மாட்டக்கு ஊரு உலகத்துல ஆயிரம் இருக்கும். நமக்கென்ன? நான் ஏன் எடாத எடுப்பு எடுத்து, படாதபாடு படனும்: பாவம் சரோசாக்கா! அவளுக்குத் துரோகம் பண்ணிட்டேனே.”

சிந்தித்துக்கொண்டே வந்ததால், குட்டாம்பட்டியை நெருங்கியது அவளுக்கே தெரியவில்லை. சண்முகம் மாடுகளைப் ‘பத்திக்கொண்டு’ போனார். இவர் மலேயாவில் இருந்தவர். பிறந்த பூமியில் இறக்க வேண்டும் என்று நினைத்தவர்போல், ஆயிரக்கணக்கான ரூபாயோடு ஊருக்கு வந்தார். அவர் போட்டிருந்த சட்டை அப்படி மினுங்கியது. பெண்டாட்டி பிள்ளைகளை, என்ன காரணத்திற்காகவோ அங்கேயே விட்டுவிட்டு. இவர் மட்டும் இங்கே வந்தார். “ஒன்னப் பாக்க ஆசயா இருக்கு. ஒன் மொகத்த ஒரு தடவயாவது காட்டிட்டுப் போன்னு” கடிதங்கள் எழுதிய உறவுக்குக் கைகொடுக்க ஓடிவந்தவர். சூதுவாதில்லாத இவரிடம் இருந்த பணமெல்லாம் கறக்கப்பட்டு, இப்போது, வேண்டாத ஆளாக, மலட்டுப் பசுவாக, வயிற்று நோயைத் தீர்க்க வேண்டிய அவசியத்தால் பண்ணையார் ஒருவரின் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார்.

முன்னால் போய்க் கொண்டிருந்த அவரையே பார்த்துக் கொண்டு, அவர் வரலாற்றில் தனக்குத் தெரிந்த பகுதியை நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்த உலகம்மை, தன் நிலைமையை அவருடன் ஒப்பிட்டுப் பார்த்தாள். தலையில் கொஞ்சம் சுமை இறங்கியது போலிருந்தது. அய்யாவுக்குச் சோறு பொங்கணுமே என்று நினைத்து. அவசரமாக நடக்க எண்ணி குறுக்கே வந்த ஒரு மாட்டின் வாலைப் பிடித்துக்கொண்டு, அவள் முந்தப்போனபோது, மாடுமேய்ச்சியாக மாறிய மலேயாக்காரர். அவளைப் பார்த்துவிட்டு திடுகிட்டவர்போல் அப்படியே நின்றார்.

“ஒலகம்மா, ஒனக்கு விஷயந் தெரியாதா?”

“என்னது அண்ணாச்சி?”

“ஒங்க அய்யாவ காளியம்ம கோவில் முன்னால கோட்டக்கிழிச்சி நிறுத்தியிருக்காங்க. மாரிமுத்து நாடாருக்குக் கடன் குடுக்கணுமோ? அடக் கடவுளே, ஒனக்கு விசயம் தெரியாதா? பாவம் மத்தியானம் மாடுபத்திக்கிட்டு வரும்போது, சின்னையா அந்தக் கோட்டுக்குள்ள துடிச்சிக்கிட்டு இருக்கறத பாத்ததும் நான் அழுதுட்டேன். மலேயாவுல இப்படிக் கிடையாது.”

உலகம்மையால் அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை . தலைவிரி கோலமாக ஓடினாள். ஊருக்குச் சற்று வெளியே இருந்த பிள்ளையார் கோவிலில் எந்தவித மாறுதலும் இல்லை. அந்தத் தெருவில் வசித்த பிள்ளைமார்களும், பண்டாரங்களும் "ஒங்கய்யா கோட்டுக்குள்ள இருக்காரு. மாரிமுத்து நாடார் கையகால பிடிச்சி வெளில கொண்டு வா என்று சாவகாசமாகச் சொன்னார்கள். ஆசாரித் தெருவிலும் மாறுதல் இல்லை . உதிரமாடசாமியும் அப்படியே இருந்தார்.

பள்ளிக்கூடத்தின் பக்கம் வந்தபோது, கிழக்குமேற்காக இருந்த அந்தத் தெருவில், பலசரக்குக் கடைகள் வழக்கம்போல்தான் இயங்கிக் கொண்டிருந்தன. அந்தக் கடைகளுக்கு எதிர் வரிசையில் இருந்த நாலைந்து டிக்கடைகளில் வழக்கம் போல் உட்கார்ந்திருப்பவர்கள் 'இப்பவும்' அப்படியே உட்கார்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்திற்கு முன்னால் இருந்த மைதானத்தில் 'வாலிபால்' விளையாட்டும், 'லவ் சிக்ஸ், லவ் செவன்' என்ற வார்த்தைகளும் உருண்டோடிக் கொண்டிருந்தன. மைதானத்திற்குச் சற்றுக் கிழக்கே இருந்த பீடிக்கடையில் பெண்கள் இலைகளை வாங்கிக் கொண்டும், பீடிகளைக் கொடுத்துக் கொண்டுந்தான் இருந்தார்கள். அளவுக்கு மீறிய சிரிப்புச் சத்தங்கூடக் கேட்டது. அதைக் கடந்து அவள் வந்தபோது *வாத்தியார் வீட்டுத் திண்ணையில், நாலைந்து பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பார்த்ததும், "சீக்கிரமா போ, காளியம்மன் கோவிலுக்குப் போ" என்று ஒருவர் சொல்லிவிட்டு பின்னர் அப்படிச் சொன்னதில் எந்தப் பெரிய விஷயமும் இல்லை என்பதுபோல், மற்றவர்களோடு வேறு விஷயங்களைப் பேசத் துவங்கினார். காளியம்மன் கோவிலை அடுத்திருந்த ஊர்க்கிணற்றில்' தண்ணீர் எடுத்துக்கொண்டு தலையில் ஒரு வெண்கலப் பானையையும், இடுப்பில் குடத்தையும், வலது கையில் 'தோண்டிப் பட்டைகளையும்' வைத்துக்கொண்டு எண்கள் எந்தவித மாறுதலுமின்றிப் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருசிலர் மட்டும் "ஒய்யாவ கோட்டுக்குள்ள வச்சிருக்கு" என்று, "ஒய்யா சாப்பிடுகிறார்" என்று சொல்வது மாதிரி சொன்னார்கள்.

கோவிலுக்குத் தொலைவில் இருந்த ஒரு திட்டில், கருவாடு, மீன் கூறுபோடப்பட்டிருந்தன. அந்த ஊரில் விளையாத உருளைக்கிழங்கு களையும் கூட, கூடையில் வைத்துக்கொண்டு, ஒருவர் தராசில் நிறுத்துக் கொண்டிருந்தார். தராசை, அவர் சமமாகப் பிடித்திருந்தார்.

உலகம்மையால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை. எழுபதைத் தாண்டிய ஒரு கிழவனை, நடக்க முடியாத காலோடும். குணப்படுத்த முடியாத நோயோடும் போராடிக் கொண்டிருக்கும் ஒரு வயசான மனுஷனை, அழிக்கப் பணமும் அம்பலத்துக்கு ஆளும் இல்லாமல் தனிமரமாய்த் தவிக்கும் ஒரு அப்பாவியை, ஆயிரம் பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தில், எல்லோருக்கும் பொதுவான காளியம்மன் சந்நிதி முன்னால், ஒரு கோட்டுக்குள் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஆனால் ஊரில் ஒரு மாற்றமும் இல்லை. ஊர் ஜனங்களிடம் எந்தவித எதிர்ப்பும் இல்லை. வாலிபால் விளையாட்டு நடக்கு டீக்கடைகள் இருக்கு. கருவாட்டு வியாபாரம் நடக்கு அன்றாட வேலைகள் அப்படியே நடக்கின்றன. தராசுகூட சமமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொண்ட உலகம்மையிடம், தெல்லாங் குச்சி விளையாடிக்கொண்டிருந்த சில பையன்களில் ஒருவன் அவள் கையைப் பிடித்துக் கொண்டு. “எக்கா, தாத்தாவ கோட்டுக்குள்ள வச்சிருக்காங்க, பாக்கப் பாவமா, இருக்கு” என்று சொன்னபோது, அவள் அழுதே விட்டாள். அதேசமயம் சம்பந்தம் இல்லாததுபோல் காட்டிக் கொண்ட அந்த ஜனங்களை, அவள் தூசுமாதிரி நினைத்துச் சேலையை இழுத்துவிட்டுக் கொண்டாள்.

காளியம்மன் கோவிலுக்கு வந்துவிட்டாள். எல்லோரும் வணங்கும் அந்தக் காளியம்மன் முன்னால், சண்டாளர்களைத் தண்டித்து, சான்றோர்களைப் பேணுவதாகக் கூறப்படும் அந்த லோகநாயகி முன்னால், சாக்பீலால் வரையப்பட்ட வெள்ளைக் கோட்டுக்குள், மாயாண்டி முடங்கிக் கிடந்தார். கட்டாந் தரையில், கால்களை வயிற்றுடன் இடிப்பது போல் முடங்கிக் கொண்டு, அவர் படுத்திருந்தார். பக்கத்திலேயே ஒரு ஈயப் போணி.

‘அய்யா’ என்ற உலகம்மையின் குரலைக் கேட்டதும், அவர் கண்களைத் திறந்தார். அழவில்லை. ஒருவேளை மத்தியானமே அழுது முடித்துவிட்டாரோ என்னவோ? கண்ணீரை உண்டு பண்ண உடம்பில் சத்து இல்லையோ, என்னவோ? மகளைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு, அவர் எழுந்து உட்கார்ந்தார்.

உலகம்மை, அய்யாவைப் பார்த்துவிட்டு, வடக்கே பார்த்தாள். நீர்க்குடத்துடன் செல்லும் பெண்கள், அவளையும் அவள் அய்யாவையும் ஜாடையாகப் பார்த்துவிட்டு பின்னர் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு போனார்கள், உலகம்மை. காளியம்மன் சிலையைப் பார்த்தாள், கோவில் படிக்கட்டில் பீடி ஏஜெண்ட் ராமசாமியும், பிராந்தன் வெள்ளைச்சாமியும் நடக்க முடியாத மாயாண்டி ஓடாமல் இருப்பதற்காக, காவல் இருந்தார்கள். உலகம்மை அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு, காளியம்மனைப் பார்த்தாள். பிறகு கத்தினாள்!

"அடியே, காளீ இவ்வளவு நடந்தப்பொறவும் ஒனக்கு அங்க இருக்க என்னடி யோக்கியத இருக்கு?"

பைத்தியம் பிடித்தவள் போல் கத்திய உலகம்மையைப் பார்த்து, ராம. வெள்ளைச்சாமிகள் பயந்து எழுந்தார்கள்.