ஒரு கோட்டுக்கு வெளியே/உற்றது பற்ற…
17. உற்றது பற்ற…
அன்று இரவு முழுவதும் அவள் தூங்கவில்லை . அந்தக் கடிதத்தை நான்கைந்து மடிப்புக்களாக மடித்து, ஒட்டுப் போட்டுத் தைத்த ஜாக்கெட்டுக்குள். அய்யாவுக்குத் தெரியாமல் 'ரகசியமாக' வைத்துக்கொண்டாள். சந்தோஷம் தாங்க முடியாமல், நெடுநேரம் வரை, தூங்காமல் 'சுவரில்' சாய்ந்து கொண்டிருந்தாள். ஒரு சமயம் கண்விழித்த மாயாண்டிகூட, "ஏம்மா கலங்குற? ஊர்க்காரங்க பண்ணுறது வரைக்கும் பண்ணிப் பாக்கட்டும். காளியம்மா இருக்கா. அவா பொறுத்தாலும் சொள்ளமாடன் பொறுக்க மாட்டான் என்று ஆறுதல் சொல்லிவிட்டு, மகள் தூங்காமல் இருப்பதற்கு மனங்கலங்கி. அவரும் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
உலகம்மைக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை, 'அய்யா தூங்கட்டும்' என்பதற்காக, அவளும் தன் ஓலைப்பாய் 'மெத்தையில்' படுத்தாள். அய்யா தூங்கிவிட்டார் என்று தெரிந்ததும், மீண்டும் உட்கார்ந்து கொண்டாள். விதவிதமான கற்பனைகள்! நடக்காத விஷயங்களைக் கற்பனை செய்த அவளுக்கு. நடந்த பயங்கரமான விஷயங்கள் கூட, அவ்வப்போது கற்பனையாகத் தோன்றின. அவள், பலதடவை நினைத்துக் கொண்டாள். 'சும்மாவா சொல்லுதாவ, மனந்தான் எல்லாத்துக்கும் காரணமுன்னு'.
நெடு நேரத்திற்குப் பிறகு. அவள் தூங்கினாள், கண்கள் மூடியிருந்தாலும் உதடுகள் சிரிப்பதுபோல் பிரிந்திருந்தன. இரவில் கடைசியாக அவள் மனதில் நின்ற அந்தக் கடிதத்தின் எண்ணம், தூங்கியெழுந்ததும் முதலாவது வந்தது. சின்னக்குழந்தை மாதிரி, 'கடிதம் தொலைஞ்சிருக்குமா?' என்று 'பயப்பட்டு' அதை எடுத்து வைத்துக் கொண்டாள். எழுத்துக்கள் அழிந்திருக்குமோ என்பதுபோல், அதை உற்றுப் பார்த்துக் கொண்டாள்.
'யாரிடம் காட்டலாம்? வயக்காட்டுக்குப் போகிற வழியில், சட்டாம்பட்டியில், படித்துவிட்டு வேலையில்லாமல் திரியும், எவனாவது ஒருவனிடம் காட்டலாமா? வேற வினயே வேண்டாம். எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல' என்கிறது மாதிரிதான். யார்கிட்டக் காட்டலாம்? யாரு நம்பிக்கையான ஆளு'.
திடிரென்று உலகம்மைக்கு குட்டாம்பட்டிச் சேரியில் பி.ஏ. படித்துவிட்டு, வேலை தேடிக்கொண்டிருக்கும் அருணாசலம் ஞாபகம் வந்தது. அவன் அவளைவிட ரெண்டு வயது அதிகமாகவே இருப்பான். நல்ல பையன், அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவள் படும் கஷ்டங்கள் அத்தனையும் தெரிந்தவன்போல், அனுதாபமாகப் பார்த்துக்கொண்டும், ஒருவித நமுட்டுச் சிரிப்பை உதிர்த்துக்கொண்டும் போவான்.
அந்தச் சேரி ஊருக்குத் தெற்கே சற்றுத் தள்ளி, குளத்துக்கரையின் கிழக்குப் பக்கமாக இருந்தது. நெல்லிக் குவியலிலிருந்து சிதறி ஓடிய காய்கள் போல் ஐம்பது, ஐம்பத்தைந்து குடிசைகளும் நாலைந்து 'காரை' வீடுகளும் அங்கேயும் இங்கேயுமாக இருந்தன. ஓடைத்தண்ணிக் கசிவு, அந்தச் சேரியின் சந்து பொந்தெங்கிலும் கணுக்கால் உயரத்துக்குப் பரவியிருந்தது.
பாரதம் கிராமங்களில் வாழ்வதாக பல தலைவர்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், அந்தக் கிராமங்கள் - சேரிகளில் வாழ்கின்றன என்கிற உண்மை , இன்னும் பலர் காதுக்கு எட்டவில்லை !
அடம்பிடிக்கும் சில சின்னஞ்சிறு குழந்தைகள், அந்தத் தண்ணீருக்குள் விழுந்து மீன் மாதிரி புரண்டு கொண்டும். தவளை மாதிரி கத்திக்கொண்டும் கிடந்தன. பலமான மழையினால் பல சுவர்களில் நீர்க்கசிவு ஏற்பட்டிருந்தது. சுவர்களை ஒட்டிய சின்னத் திண்ணைகளில், பக்கத்தில் இருந்த ஈயப் போணிகளில் கைகளை விட்டுக்கொண்டே, பல குழந்தைகள் கைகளை நக்கிக் கொண்டிருந்தன. சில பிள்ளைகளின் வயிறுகள் உப்பிப்போயும், கழுத்துக் குறுகிப்போயும், கைகால்கள் குச்சிகள் போல் ஓணானின் கால்கள் மாதிரி துவண்டும் கிடந்தன. பெரும்பாலான குழந்தைகள் 'அரணைக்' கயிறுகள் கூட இல்லாமல் நிர்வாணமாக உட்கார்ந்திருந்தன. ஓலைக் கூரைகளில் இருந்து விழும் இற்றுப்போன ஓலைப் 'பாசில்களும்' மண்கட்டிகளும் தலைகளிலும், தோள்களிலும் விழுந்து, ஆடையில்லாத அந்தக் குழந்தைகளின் மேனிக்கு ஆபரணங்கள் போல் தோன்றின. காலையில் போன அம்மாக்கள். மாலை வரும்வரை, ஈயப் போணிகளில் கைகளை விட்டுக் கொண்டும், பிறகு வயிறு நிறைந்த குஷியில், கழிவு நீரில், புரண்டு விளையாடிக் கொண்டும் இருப்பது அந்தக் குழந்தைகளின் வாடிக்கையான வேடிக்கை. குடும்பநலத் திட்டத்துக்காக, சத்துணவு இல்லாத குழந்தைகள் எப்படி இருக்கும் என்பதை பாரதப் பிரஜைகளுக்கு விளக்குவதற்காக, 'பிலிம் டிவிஷனும்' மாநில அரசின் திரைப்படப் நொறுங்கிப் போனதில், மேல் ஜாதிகள் ஆகும் இதுதான் பிரிவும், அங்கே போயிருக்கிறார்களாம். சில பெண்கள், பனையோலை நாரால் 'கொட்டப் பெட்டிகள்' பின்னிக்கொண்டிருந்தார்கள். சிலர் பனை ஓலையில் சாணிப்பெட்டி', 'கருப்பட்டிப்பெட்டி', 'கிண்ணிப்பெட்டி' ஆகியவற்றைச் செய்து கொண்டிருந்தார்கள், விவசாய ஹரிஜனக் கூலிப் பெண்களின் கண்ணோட்டத்தில் இந்தப் பெண்கள் மேட்டுக் குடியினர்'; பலவித வண்ணக் கலவை நீரில், பல ஓலைகள் முக்கி வைக்கப்பட்டிருந்தன.
பொருளாதாரக் குவியல்போல், நான்கைந்து காரை வீடுகள் சேர்ந்து இருந்தன. இவற்றில் “தம்புறு மேளம்', 'தவில் மேளம்', 'பம்பை மேளம்', 'நையாண்டி மேளம்' முதலிய பல மேளங்களும், நாதஸ்வரங்களும். 'சிங்கிகளும்' சுவரில் தொங்கிக்கொண்டிருந்தன. இந்த வீடுகளில் இருப்பவர்கள்தாம் அந்தச் சேரியின் 'அண்ணாவிகள்', இவர்கள் கோவில், கல்யாண விசேஷங்களின்போது, வெளியூர்களில் போய், மேளமடிப்பார்கள். ஒருவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில்கூட. 'மேளம்' அடித்திருக்கிறார்.
மொத்தத்தில், 'குடித்துக் கெட்டும், கெட்டுக் குடித்தும், கெட்டு நொறுங்கிப்போன சேரி' என்று ஊர்க்காரர்களால் கைவிடப்பட்ட பகுதி அது. அதே நேரத்தில், மேல் ஜாதிகள் அவ்வப்போது வந்து. 'பட்டை தீட்டிக்கொள்ள வசதியாக இருக்கும் இடமும் இதுதான். தென்காசி போய், பல மாட மாளிகை கூடகோபுரங்களைப் பார்த்துவிட்டு, 'நாமுந்தான் இருக்கோமே' என்று நினைக்கும் கிராமத்து மக்கள் இந்தச் சேரிக்கு வரும்போதெல்லாம் தங்களை அறியாமலே, தங்களை ராக்பில்லர்களாகவும், டாடா, பிர்லாக்களாகவும் நினைத்துக் கொள்வார்கள். அப்படி அவர்களை நினைக்க வைக்கும் ஆற்றல் இந்தச் சேரிக்கு உண்டு. போலீஸ் கால்களிலும், தாசில்தார் கால்களிலும் 'யெசமான் எசமான்' என்று மந்திரம்போல் சபித்துக்கொண்டே விழுந்து கும்பிட்டுவிட்டு, 'நாமும் இப்டி இருக்க வேண்டியதுருக்கே' என்று சங்கடப்படும் கிராமத்து மக்கள், இவர்களைப் பார்த்ததும், தங்களை ராஜசிம்ம நரசிம்ம பல்லவர்களாகவும், கரிகால் பெருவளத்தானாகவும் நினைத்துக் கொள்ளலாம். இந்த அளவிற்கு, இந்த ஜனங்கள், அவர்களைப் பார்த்து அவர்கள் வெங்கர்களாக இருந்தாலும், "மொதலாளி, மொதலாளி' என்று நொடிக்கொரு தடலை சொல்வார்கள்.
இந்தச் சேரியால் பலனில்லை என்றும் சொல்ல முடியாது. *தொழில் கல்வி வேண்டும்' என்று சொல்லும் கல்வி நிபுணர்கள், இங்கே வந்து சிறுமியர். சிறுவர் பெட்டிகளைப் பின்னிக்கொண்டும், மேளங்களுக்குச் 'சிங்கி' அடித்துக்கொண்டும், வயக்காட்டில் புரளும் அம்மா அய்யாக்களுக்குக் கஞ்சி கொண்டுபோய்க் கொடுத்துக்கொண்டும், தொழிலையே ஒரு கல்வியாக நினைத்து ஈடுபட்டிருப்பதைக் கண்டால், ஒருவேளை மகிழ்ந்து போகலாம். 'பலனை பகவானிடம் விட்டுவிட்டு கர்மமே கண்ணாயிரு' என்ற உயர்ந்த தத்துவத்தைப் போதிக்கும் கீதைக்கு, பிராக்டிகல் உதாரணம்போல், பெரும்பாலான மக்கள், மேல்ஜாதிக்காரர்களின் சின்னப் பையன்கள் கூட "ஏய் மதுர! ஒன்ன எங்கய்யா கூட்டிக்கிட்டு வரச் சொன்னார்" என்று சொல்வதைக்கூட ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாதவர்கள்; சொல்லப்போனால், அறுபது வயது மதுரைக்கு, அந்த ஆறு வயதுச் சிறுவன், அப்படிச் சொல்வதில் சந்தோஷமாம். கொஞ்ச காலத்திற்கு முன்னால், 'ஏய்', என்பதற்குப் பதிலாக, 'சின்ன மொதலாளிகள், 'ஏடா' என்று கூப்பிடுவார்களாம். மதுரையின் அய்யா எழுந்திருக்காமல் இருந்தால் "ஏண்டா எங்க அய்யாகிட்ட உதபடணுமா" என்று, அந்தக் காலத்துச் சிறுவர்கள்" கேட்பார்களாம்.
இப்படிச் சொல்வதாலேயே, அங்கே இருப்பவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டு நீக்ரோக்கள் மாதிரி இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியாது. பல இளவட்டங்கள், மேல்ஜாதிக்காரர்களை அளவுக்குமேல் பொருட்படுத்தாதவர்கள். சிலசமயம், "நமக்கு எதுக்காவ மக்கடையில் தனிக் கண்ணாடி டம்ளர் வைக்கணும்? இவங்களவிட நாம எந்த வகையில குறஞ்சிட்டோம்? நாமளும் பல் துலக்குறோம், வேட்டி கட்டுறோம், பிள்ளியள பெத்துக்கிடுறோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டும் வருகிறார்கள். தங்களின் இளஞ்சந்ததியினர், முதலியார், நாடார், தேவர் வகையறாக்களை, 'அவன் இவன்' என்று சேரிப்பகுதிக்குள் பேசுவதைக்கேட்டு, பலகிழவர்கள் கிடுகிடுத்துப் போய் விட்டார்கள். "காலம் கலிகாலம் கெட்டுப்போச்சி, இல்லன்னா 'ஊர் முதலாளிகள' இந்த ஊர்மேல போன பய பிள்ளிக 'அவன் இவன்'னு பேசுமா? இது மதுர வீரனுக்கே அடுக்குமா?"
'காலேஜ்' படித்த அருணாசலம் தலைமையில் பல இளைஞர்கள், தங்கள் ஜாதியினருக்கு, ரோஷம் வரவில்லையே என்று அலுத்துப்போய் விட்டார்கள். இவர்களைக் கரையேற்றுவது கடவுளாலும் முடியாது என்று அவர்களை கைவிடப்பட்ட கேஸ்களாக' நினைத்து விட்டார்கள். எந்த மனிதனுக்கும் அல்லது சமூகத்திற்கும் தன்னைச்சுற்றி உள்ளவற்றை 'கான்ஷியஸ்ஸாகப்' பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய பிறகுதான், இதர உணர்வுகள் ஏற்பட முடியும் அல்லது ஏற்படுத்த முடியும் என்பது இந்த இளைஞர்களுக்குத் தெரியாது. பிரச்சினை களை உணர்வுபூர்வமாகச் சிந்தித்து, அறிவுபூர்வமாகப் பார்க்க மறந்த இவர்களும், இவர்களுக்கு முந்திய ஜெனரேஷனைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்போல், நகரங்களில் போய் ஒருவேளை முடங்கிக் கொள்ளலாம் என்றாலும் இப்போதைக்கு, அப்படி முடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அவ்வப்போது 'அதட்டிக்' கொண்டிருப்பவர்கள் இவர்கள். ஆனால் அருணாசலம் இப்போது கொஞ்சம் சிந்திக்கத் துவங்கிவிடுகிறான்.
ஊரையும், சேரியையும் பிரித்துவைக்கும் ஓடைக்கரைகளுக்குக் குறுக்கும் நெடுக்குமாக, அந்தக் கரைகளை இணைப்பதுபோல் நெருக்கிப் போடப்பட்டிருந்த நான்கைந்து பனங்கம்புகள் வழியாக நடந்து, எலிவளை போல, கோணல்மாணலாக இருந்த தெருக்கள்' வழியாக உலகம்மை நடந்து போனபோது, "நாடாரம்மாவா, நாடாரம்மாவா, வாங்க! ஏ, யார் வந்திருக்கான்னு பாருங்க, பாருங்க" என்று பல பெண்கள் அவளைச் சுற்றிக்கொண்டார்கள். "மாயாண்டி நாடார் மவளா? வாங்கம்மா" என்று சொல்லிக்கொண்டே. சில கிழவர்கள் மரியாதை தெரிவிக்கும் வகையில், நீட்டி வைத்திருக்கும் கால்களை இழுத்துக்கொண்டார்கள். மாயாண்டி, பனையேறிக்கொண் டிருக்கும்போது, அவரிடம் போய் 'கூட மொனைய பனையோலைகளை வாங்கிக் கொண்டிருந்ததையும், நாடாரே, பனைமட்டைகளில் இருந்து நாரைப் பிரித்து அவர்களுக்குக் கொடுத்ததையும், அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டபோது, உலகம்மை, 'எல்லா மனுஷனும் மோசமல்ல' என்று அய்யா ஒருதடவை சொன்னதை ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
ஒரு பெண், ஓலைத்தடுக்கு ஒன்றைத் திண்ணையில் போட்டு அவளை உட்கார வைத்தாள். சுற்றிலும் பெண்கள் நின்று கொண்டார்கள். பெரிய ஆடவர்கள், கொஞ்சம் தூரத்தில் நின்று, தங்களுக்குள் பேசிக்கொண்டாலும், அவர்கள் கண்கள் என்னமோ, உலகம்மை மீதும், அவளைச் சுற்றி நின்ற கூட்டத்தின் மீதும் மொய்த்தன. உலகம்மைகூட, அவர்கள் காட்டிய அன்பில், வந்த வேலையில் அதிக அவசரம் காட்டவில்லை . சரமாரியாக அவளிடம் கேட்கத் துவங்கிவிட்டார்கள் :
"ஏம்மா ஒங்களுக்கு வம்பு? சாதியோட சனத்தோட சேராம இப்டி தள்ளியிருக்கது மொறையா?" "நாடாரம்மா ஒண்ணுந் தள்ளியிருக்கல. வாருக்காரங்கதான் தள்ளி வச்சிருக்காக."
"இவுக, அவுக கால் கையில விழுந்து ஊரோட ஒத்துப்போவ வேண்டியதுதான. இவுக வீம்பு பண்றதும் தப்புத்தான். என்ன ராமக்கா நான் சொல்றது"
திடீரென்று ஒரு ஆண்குரல் முழங்கியது:
"ஊர்லயே உருப்படியா இருக்கது இது ஒண்ணுதான். அதயும் கெடுக்கப் பாக்கிங்களா?"
தலையைத் தாழ்த்திக்கொண்டு, அந்தப் பெண்கள் சொல்வதை ரசிகத் தன்மையுடனும், சிறிது சங்கடத்துடனும் கேட்டுக்கொண்டிருந்த உலகம்மை, கம்பீரமான அந்தக் குரலைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள். அருணாசலம் சிரித்துக் கொண்டு நின்றான். அவளுக்குக் கொஞ்சம் கோபங்கூட, 'நாடாரம்மாள்'னு சொல்லாண்டாம். அவுக இவுகன்னாவது சொல்லலாம். மேல்சாதி பொம்பினய அது இதுன்னு மாடு மாதிரி நெனச்சிச் சொன்னா என்ன அர்த்தம்?"
உலகம்மை, சற்று ரோஷத்தோடு அவனைப் பார்த்தாள், ஆனால் அவன் முகத்தில் படர்ந்த அனுதாபத்தைப் பார்த்ததும், கள்ளங்கபடமற்று அவன் சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், அவளுக்குக் கோபம் புன்னகையாகியது.
"பரவாயில்ல. ஒங்கள மாதுரி ஒவ்வொரு பெண்ணும் நடந்துக்கிட்டா ஆயிரக்கணக்கான வருஷமா கர்நாடகமா இருக்கிற இந்தக் கிராமம் ஒரே வருஷத்துல பழயத உதறிப் போட்டுடும்! கவலப்படாதிங்க! ஊரே ஒங்கள எதிரியா நெனச்சிருக்கதுக்கு, நீங்க பெருமைப்படணும்! ஏன்னா அவங்க எல்லாரும் ஒண்ணாச்சேர்ந்தா தான் ஒங்களுக்கு இணையாய் ஆக முடியுமுன்னு தெரியுது. என்னைக்கேட்டா அப்படியும் அவங்க ஒங்களுக்கு இணையாவ முடியாது! இதுங்க பேச்சக் கேட்டு கையில காலுல விழுந்துடாதிங்க, விழமாட்டிங்கன்னு எனக்குத் தெரியும்!"
அருணாசலம் மேற்கொண்டும் பேசிக்கொண்டே போயிருப்பான். சுற்றி நின்ற பெண்கள், அவனைப் பேசவிடாமல், இடைமறித்தார்கள்.
"இவன், 'அவன் தம்பி அங்குதன் மாதிரி' இவன் பேச்சைக் கேளாதிக நாடாரம்மா, கோளாறு பிடிச்ச பயல் போன வருஷம் இந்த மாதிரித்தான் ஒரு அடாவடி பண்ணிட்டான்! எங்க சேரில தீண்டாமக் கூட்டமுன்னு ஒண்ணு போட்டாங்க. பெரிய பெரிய ஆபீசருங்க, மாரிமுத்து நாடாரு. அவரு சின்னய்யா மொவன் எல்லாரும் நாடார் போட்டாங்க. ன எங்க சேரிஷம் இந்த வந்திருந்தாங்க. இவன் என்ன பண்ணுனான் தெரியுமா? சாதி வித்தியாசம் இல்லங்றத காட்டுறதுக்கால எங்க வீட்டுச் சட்டியில போட்ட
காப்பிய ஆபீசருங்க குடிப்பாங்கன்னு சொல்லி ஒவ்வொரு பெரிய மனுஷனுக்கும் ஒவ்வொரு லோட்டாவுல குடுத்துட்டான். அந்த மனுஷங்க குடிக்க மனமில்லாமலும் குடிக்காம இருக்க முடியாமலும் மூஞ்ச சுழிச்சிக்கிட்டு குடிச்சத நெனைக்கையில இப்பக்கூடச் சிரிப்பு வருது. பெரிய மனுஷங்களப் பாத்தா போதும். உடனே அவமானப்படுத்தாட்டி இவனுக்குத் தூக்கம் வராது.”
உலகம்மை விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் ஊக்குவிக்கப்பட்டவன் போல அருணாசலம் அடித்துப் பேசினான்:
“பின்ன என்னம்மா ஒங்க ஜாதிக்காரங்களும் மற்ற தேவர், பிள்ளமார் சாதிக்காரங்களும் பண்றது அசல் ஹிப்போக்ரஸி. அதாவது, உள்ளொன்று வச்சிப் புறமொன்று பேசுறாங்க குளத்துல தண்ணி பெருகிக்கிட்டே போவுது, மதகத் திறங்கன்னு எங்க ஆட்கள் காலுல கையில விழுந்தாச்சு. தண்ணிரை விடாட்டா எங்க சேரிதான் மொதல்ல அழியும். ராம நதில ஒரே வெள்ளம். இவங்க ன்ேனடான்னா பயிர்ப்பச்சைக்குத் தண்ணி வேணுமுன்னு கிராக்கி பண்ணுறாங்க! தண்ணி இருக்குமுன்னு - எஞ்சினியர்கூடச் சொல்லிட்டாரு மதகத் திறக்க மாட்டங்கறாங்க! எங்க சேரியவிட அவங்களுக்குப் பயிர் பச்சதான் முக்கியம். நானும் கலெக்டருக்குப் பல பெட்டிஷன் எழுதிப் போட்டாச்சு.”
அருணாசலம் பெருமூச்சு விடுவதைப் பார்த்துவிட்டு, “அப்புறம் ஒண்ணும் நடக்கலியா?” என்றாள் உலகம்மை.
“நடந்தது! கலெக்டர், ஆர்.டி.ஓவுக்குப் பேப்பர அனுப்புனாரு. ஆர்.டி.ஒ. தாசில்தாருக்கு அனுப்ப, தாசில்தார் ரெவின்யு இன்ஸ்பெக்டருக்கு அனுப்ப, அவரு நம்ம ஊரு முன்ப்ே நாடாருக்கு அனுப்பியிருக்காரு. வேலிக்கு ஓணான் சாட்சிங்கற கதைதான்! நீங்க ஒண்டிக்கு ஒண்டியாய் ஊரையே எதுத்துப் போராடுறீங்க. எங்க ஆள்கள்கிட்ட நாமே போயி மதக உடப்போமுன்னா, இவங்க ஊரில சமபந்தி போஜனம் நடக்கப் போவுதாம். மந்திரி தலைமையில நடக்கப் போவுதாம். சாப்பிடப் போறோமுன்னு சொல்றாங்க. ஊர்க்காரங்க சேரி ஜனங்களுக்கு சாப்பாடு போட்டே அவங்கள சாப்புட்டுட்டாங்க என்கிறது உறைக்கவே மாட்டேங்குறது! இதனாலதான் ஒங்களப் பாக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கு. எங்க ராமக்கா புருஷன் இங்கதான் அண்ணாவி மேல் ஜாதிக்காரங்களுக்கு அவரு போடுற சலூட்டு கண்றாவி!"
உலகம்மை உட்பட, எல்லாப் பெண்களும் சிரித்தார்கள். ஆனால் ராமக்காவால் அதிக நேரம் சிரிக்க முடியவில்லை. கொஞ்சஞ் சிரித்ததுக்கு ஈடுகட்டுவது மாதிரி எகிறினாள்:
"ஒன்ன மாதிரி ஏட்டுச் சொரக்காய்க எத்தனை பேர இந்தச் சேரி பாத்துருக்கு தெரியுமா? இப்ப இவ்வளவு பேசுற? வேல கெடச்சதும் ஊரையே மறந்துடப்போற. அவன் கருப்புசாமி ஒன்னவிட அதிகமாக் குதிச்சான். இப்ப மெட்ராஸ்ல முதலியார்னு சொல்லிக்கிட்டு ஊரையே மறந்துட்டான். அவனாவது பரவாயில்ல. செங்குந்தன் மெட்ராஸ்ல ஆப்சரா இருக்கான். நாடார்னு சொல்லிக்கிடுறானாம். ஊர் ஜனங்க நம்மள வெளில நிறுத்துறது மாதிரி அவனப் பாக்கப் போன சேரியாளுவள வெளியில் நிறுத்திப் பேசி அனுப்பிடுறானாம். சும்மா குலாவாத ராசா. மொதல்ல எல்லாரும் பட்டையில் போட்ட நண்டு மாதுரிதான் துடிப்பாங்க. அப்புறம் முதலியாரு, நாடாரு. இல்லன்னா செட்டியாரு!"
உலகம்மை, அவன் என்ன பதில் சொல்லப்போகிறான் என்பதை அறியும் ஆர்வத்தில், அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் பேசாமல், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்தான். "நீ, நீங்க இதுக்கு என்ன சொல்ற... சொல்றீக" என்று நாக்கைக் கடித்துக்கொண்டே கேட்டாள், அவன், மீண்டும் சிலிர்த்துக்கொண்டு பேசினான்:
"அவங்க சொல்றது சரிதான். ஹரிஜன்னு சொல்லிக்க பெருமப்படலாம். ஆயிரக்கணக்கான வருஷமா அடக்கப்பட்டிருந்தவங்க அடிமைத்தனத்தையும் மீறி, முன்னுக்கு வாரத நெனச்சி பெருமைப்படணும். வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் கால்ல விழுந்த விலங்கோட ஓடி ஜெயிச்சதுக்கு பெருமைப்படணும். ஆனால் எங்க ஆட்கள் பி.ஏன்னு சொல்லிக்கதை விட முதலியார்னு சொல்லிக்கதுல பெருமப்படறாங்க. படிக்காத ஹரிஜனங்கள் மேல்சாதிக்காரங்களைவிட கேவலமா நடத்துறாங்க. இவங்களால ஹரிஜன சமுதாயத்துக்கே கெட்டபேரு. அவங்க உத்தியோகத்துக்கு ஏதாவது இடஞ்சல் வரும்போதுதான், ஹரிஜன்னு சொல்லி கவர்னர் கிட்ட மனுக் குடுக்கராங்க, அரசாங்கம் ஹரிஜனங்களுக்குச் சலுகை பண்றது, இவங்க சேரிக்குப் பணத்த வெட்டிக் குடுப்பாங்கன்னு நினைத்து அல்ல, ஹரிஜனங்க படிச்சா அவங்க சமுதாயத்துக்கு ஒரு 'ஸோஷியல் ஸ்டேடஸ்' எண்ணு சொல் படிக்காட்டாது. இதே மாதாலும், அதாவது ஒரு மரியாதை வரணுமுன்னு நினைத்துதான் உதவி பண்றாங்க. நாடார் ஒருவன் படிக்காவிட்டாலும், அவனுக்குச் சமூகத்துல ஒரு மரியாத இருக்கும் இதே மாதிரி முதலியாருக்கும் ஆனால், ஹரிஜன் படிக்காட்டா மரியாதையே கிடையாது! உதாரணமா ஒண்ணு சொல்றேன். தப்பா எடுக்காதிக. நான் ஒங்கள விட ரெண்டு வயசு பெரியவன்னு எங்க அப்பா சொல்வார். எனக்கு எப்டித் தெரியுமுன்னு நினைக்கிங்களா? ஒங்கய்யா பனையேறும்போது எங்க அப்பா என்னை எடுத்துக்கிட்டு ஓலை வாங்கப் போவாராம். ஒங்கய்யா என்னைப் பறையன்னுகூடப் பாக்காம எடுத்து முத்தங் கொடுப்பாராம்!"
"எதுக்குச் சொல்றேன்னா நீங்ககூட ஒங்களவிட வயசுல பெரிய என்னை 'நீன்னு' சொல்ல வந்துட்டு, அப்புறம் உதட்டக் கடிச்சிங்க! ஏன்? நான் படிச்சிருக்கதுனால. இதனால போகப் போக எங்க ஆட்களையும் நீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுடுவிங்க. இதுக்குத்தான் - இந்த மாற்றம் வரணுமுன்னுதான் ஹரிஜனங்கள், சர்க்கார் படிக்க வைக்குது, ஆனால் எங்க ஆட்களே இதப் புரிஞ்சிக்க மாட்டேங்கறாக இதனால மொதல்ல இங்கயே ரெண்டு வருஷம் வேலைக்குப் போகாம தங்கி ரெண்டுல ஒண்ணு பாக்கப்போறேன்."
வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த ராமக்கா, திருப்தியடையவில்லை; இன்னும் எதிர்த்துப் பேசினாள்:
"நீதான் ஒன்ன மெச்சிக்கணும். வண்ணாரு, நாவிதருக்குத் துணி வெளுக்க மாட்டேங்காரு. நாவிதரு. வண்ணானுக்குச் செறைக்கதவிட, கழுதக்கிச் செறைக்கலாமுன்னு சொல்றாரு! சக்கிலியங்க நமக்குச் செருப்புத் தைக்க மாட்டேன்னுறாக| நாம அவங்களுக்குப் பெட்டி செய்ய மாட்டேங்கறோம். ஹரிஜனங்களே ஒருத்தருக்கொருத்தர் முதலியார், நாடார் மாதிரி வித்தியாசம் வச்சிருக்கும்போது. மேல்சாதிக்காரங்களத் குத்தம் சொல்ல எத்தனாவது சட்டத்துல இடமிருக்கு? பேச வந்துட்டான் பேச."
அருணாசலமும், விட்டுக் கொடுக்கவில்லை :
"போகப் போகப் பாரு. நீ சொன்ன அத்தன பேரயும் ஒண்ணாச் சேக்கப் போறேன். நம்ம இனத்துல மேல்சாதி மாதிரி நடக்கிற பணக்காரங்களத் தள்ளி வச்சுப்புட்டு மேல்சாதியில இருக்கிற ஏழை எளியவங்கள நம்மோட சேக்கப்போறேன் ஏன்னா ஹரிஜனங்களைவிட மோசமான நிலையில் பலர் மேல்சாதியில இருக்காங்க. இவங்க சாதி மயக்கத்தக் கலச்சிட்டா ஊரயே கலக்கிடலாம்." உலகம்மைக்கு அவன் பேச்சில், இப்போது அதிகச் சூடு இருப்பது போலவும், அவனுக்குத் தெரிந்தும் தெளிவில்லாமல் மங்கிப் போயிருக்கும் விஷயங்கள் வெளியே வரத் துவங்கியது போலவும் தோன்றியது. ஏதோ கேட்கப் போனாள். அதற்குள் இதர பெண்கள் அவளிடம் பேசத் துவங்கினார்கள்.
"நாடாரும்மா எதாவது சாப்புடுறீங்களா? ஒங்களப் பறக்குடியில சாப்புடச் சொன்னத தப்பா நெனைக்காதீங்க. ஒங்க வயிறு 'கொலுக்கா' இருந்ததப் பார்த்ததும் மனசு கேக்கல. சாப்புடுறியளா? ஏல ராமு, வாழ இல பறிச்சால."
உலகம்மை வேண்டாம் என்பது போல் தலையை , ஆட்டிவிட்டு, கடிதத்தை எடுத்து, அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு "தெரிஞ்சவங்க ஒருவர் எழுதியிருக்கார்னு நெனக்கேன்" என்று சொல்லிவிட்டு, அருணாசலம் 'பப்ளிக்கா' பானையை உடைக்கதுமாதிரி உடைத்துவிடக் கூடாதே என்று பயந்தாள். படித்த பையனான அருணாசலம், அவளிடம் தனியாகச் சொல்லுவான் என்று நினைத்துக்கொண்டு, ஆறுதல் அடைந்தாள்.
அவன் அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது, அவள் தன் இதயத்தைப் பிடித்துக்கொண்டாள். அது அடித்துக்கொண்டது. உடம்பெல்லாம் இன்பக் கிளுகிளுப்பில் துள்ளியது.
படித்து முடித்த அருணாசலம், சிறிதுநேரம் பேசவில்லை . 'அப்படின்னா அவருதான் ஆசைய சொல்லி எழுதியிருக்காரு' என்று உலகம்மை நினைத்தபோது இதர பெண்கள் "சத்தமா படிச்சிச் சொல்லேன். அப்பாவு ஏன் முனங்குற. மெத்தப் படிச்சவன் சுத்தப் பயித்தங்றது சரிதான்" என்றார்கள்.
அருணாசலம் உலகம்மையையே உற்று நோக்கினான்.
"மனச தைரியமா வச்சுக்கங்க. பலவேச நாடாரு வக்கீல் நோட்டீசு அனுப்பி இருக்காரு. அவரோட இடத்த ஆக்ரமிச்சி, அதாவது என்குரோச்மென்ட் செய்து குடிசை போட்டிருக்கிங்களாம். இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாளையில் காலி பண்ணலன்னா, வழக்குப் போடுவாராம். கவலப்படாதீங்க, பதில் நோட்டீஸ் கொடுக்காண்டாம். பலவேசம் வழக்குப் போடட்டும். எப்டியும் ஒரு வருஷம் தள்ளும். அதுக்குள்ளே ஏதாவது வழி பிறக்கும்." உலகம்மைக்கு தான் எங்கே இருக்கிறோம் என்று புரியவில்லை. கனவாக இருக்கும் என்று சுற்றுமுற்றிலும் பார்த்தாள். தலை தெறித்துத் தனியாக விழுந்து விட்டது போன்ற பிரமை; நெற்றி கனத்து, கண்ணிமைகளை மேல்நோக்கி இழுத்தது.
சேரிப்பெண்களுக்கும் கோபம் ஏற்பட்டது.
"கட்டயில போறவனுக. ஒரு பொம்பளய கொடுமப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? ஒதுங்கிப்போற மனுஷியயும் ஓட ஓட விரட்டுனா எப்டி? ஓடுற நாயக் கண்டா விரட்டுற நாய்க்குத் தொக்குங்றது சரிதான். அருணாசலம், இத நீ சொம்மா விடப்புடாதுடா."
அருணாசலம், உதடுகளைக் கடித்துக்கொண்டான். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "கவலப்படாதிங்க. கோர்ட்டுன்னு வந்தாலும் வரட்டும். நான் கலெக்டருக்கு மனுப் போடுறேன். எப்பவாவது கலாட்டா பண்ண வந்தாங்கன்னா ஒரு வார்த்த அய்யாகிட்டச் சொல்லி அனுப்புங்க. பின்னிப்பிடலாம் பின்னி. சமபந்திப் போஜனத்துக்கு இங்க வந்து ஆள் பிடிக்க வருவாங்க! அப்போ புடிச்சிக்கிறேன். மொத்தத்துல இந்தச் சேரி ஒங்க வீடுமாதிரி. எப்ப வேணுமுன்னாலும் வரலாம்; என்ன வேணுமுன்னாலும் கேக்கலாம். ஒங்க அய்யா எங்க ஆட்களுக்குக் கொடுத்த பனை ஓலையையும் பனங்குருத்தையும் இன்னும் எங்க பெரியவங்க சொல்லிக்கிட்டே இருக்காங்க. என்ன வந்தாலுஞ்சரி, கால்ல கையில மட்டும் விழுந்திடாதிங்க. கலகம் நடந்தாலும் கவலப்படாதிங்க. கலகம் பிறந்தாதான் நியாயம் பொறக்கும்."
ராமக்காவால் அழுகையை அடக்க முடியவில்லை. உலகம்மையை. தன் நெஞ்சத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டே "இந்த முகத்தப் பாருங்க. பச்ச மதல. இதப் பாத்தா அழுவுற பிள்ளயும் சிரிக்கும். இதைப்போயி நாசமாப் போறவனுக நாசம் பண்ணுறாங்கள. அவங்க காலுல கரையான் அரிக்க. நடுராத்திரியில துள்ளத்துடிக்கச் சாவ. அவனுக பிள்ளிகளுக்கு இப்டி வராமலா போவும்? எடாத எடுப்பு எடுக்கிறானுக. படாதபாடு படாமப் போகமாட்டாங்க. நீ, நீங்க ஏன் நாடாரும்மா அழுவுறிக? எழுங்க. கண்ணீ ரு அவங்கள கடலுல போயி ஆக்கும்! அழாதம்மா. அழாதிங்கம்மா."
இன்னொரு பெண்ணாலும் கண்ணீரை அடக்க முடியவில்லை: "அழாதம்மா அழாதம்மா" என்று அழுதுகொண்டே சொன்னாள். "இன்னிக்கே எங்க குலதெய்வம் மதுரவீரனுக்கு ஊதுபத்தி கொளுத்திக் கேக்கிறேன். கலங்காதீங்க" என்றாள் மற்றொரு பெண்.
"வக்கீல் நோட்டிஸ் எங்கிட்டவே இருக்கட்டும்" என்றான் அருணாசலம்.
உலகம்மை எழுந்து கொண்டாள். மெள்ள நடந்தான். தேங்கி நின்ற நீருக்குள், நீர்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே இருந்த கருங்கற்கள் மீதும், செங்கல்கள் மீதும் நடக்காமல் நீருக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள்.
பெரும்பான்மையான பெண்கள், அவளை ஒடைவரைக்கும் வந்து வழியனுப்பினார்கள். "நாங்க சாதில தாழ்ந்தவங்க. அதனால எங்கள ஒங்க அக்கா தங்கச்சி மாதிரி நினைக்காட்டாலும் பழகுனவளுன்னு நினைச்சி அடிக்கடி வாங்கம்மா" என்று ஒருத்தி சொல்ல, இதர பெண்கள் தலையை ஆட்டினார்கள். தூரத்தில் அவள் போவதையே பார்த்துக்கொண்டு அருணாசலம் நின்றான்.
மெள்ள நடந்த உலகம்மை, ஓடையைக் கடந்ததும் வேகமாக நடந்தாள். உடலுறுப்புகள் அனைத்தும் அறுந்து, அக்குவேர் ஆணிவேராக ஆனதுபோல் வலியெடுத்தது. கால்கள் - இரண்டும் மேல்நோக்கி வருவதுபோலவும், தலை தோள்பட்டையோடு சேர்ந்து கீழ்நோக்கி வருவதுபோலவும், ஒருவித வலி தோன்றியது. அங்கங்கள் அனைத்தும் சிதறி, சின்னாபின்னமாகி, ஒன்றோடொன்று மோதி, கூழாகி, வெறும் முண்டமாக, பிசைந்து போடப்பட்ட கேழ்வரகு மாவைப்போல் உருவந்தெரியாமல் கரைந்து போவது போன்ற நரக வேதனையுடன் அவள் நடந்தாள்.
'இதுக்கு மேல் என்ன நடந்தாலும் அது பெரிதாக இருக்க முடியாது' என்ற உணர்வு ஒருவித நிம்மதியைக் கொடுத்தது. வக்கீலின் நோட்டீஸ் என்பதைவிட, அது லோகுவிடம் இருந்து வராத கடிதம் என்ற உண்மை , அவள் மனதை பெரிதும் மாய்த்தது. ஏனோ மெட்ராஸ் போக வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அங்கிருந்து குரல் கொடுத்தே, அய்யாவை அழைத்துக்கொண்டு. அங்கிருந்தே, அந்த நேரத்திலேயே, அப்படியே போகவேண்டும் போல் நினைத்தாள்.