உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

மும், அறிவும், பரிவும் குழைந்த குரல், இவள் மனத்தினைக் குழைவிக்கிறது. தலைவனுடைய ஆசிரியப் பெருந்தகையாம் அன்றோ? "வாரா விருந்தன்றோ நீங்கள்? பொருள் கொடுத்து இசை வளர்ப்பார் பலர். கலைப் பொருளை...அறிவுப் பொருளை......உண்மையை......அன்பை...வாரி வழங்கி மக்களை நல்வழிப்படுத்தும் நல்லிசைப் புலவருக்கு ஒப்பு உண்டோ? நல்லிசை விருந்து நாளும் வருமோ? எங்கள் தவமே தவம்!" என்று அடி வீழ்ந்து அவள் வணங்குகின்றாள்.

"அம்மா, என்னை நீ எப்படி அறிவாய்? வியப்பாக இருக்கிறதே!"

"வியப்பொன்றும் இல்லை; என் கணவர் பலமுறை தங்களைப் பற்றிப் பேசியுள்ளார்; தங்கள் பாடல்களைப் பாடுவார். எனக்கும் பல பாடல்கள் மனப்பாடம் ஆகி உள்ளன. அவர் உடல் வடிவைத் திருத்தி யமைத்து வளர்த்த தாய் தந்தையரைக் காணவில்லை. நான், அவர் உயிர் வடிவை, உள்ள வடிவை, குணப் பண்பைத் திருத்தியமைத்த உங்களைக் காணவேனும் கொடுத்து வைத்தேனே!"

"நல்லது. அவருக்கு ஏற்ற மனைவி. அவர் எங்கே."

"உங்கள் அறிவுப் பிள்ளை குளிக்கப் போயிருக்கிறார்; இதோ வந்துவிடுவார். வந்த களைப்புத் தீரத்தோட்டத்து ஓடையில் குளிக்கலாம்; புத்தாடையும் உடுத்துக்கொள்ளுங்கள்: விரைவில் உணவும் கொள்ளலாம்; இதற்குள் அவரும் வந்துவிடுவார்."

நீயே பெண்; உன் அன்பே அன்பு; ஊர்கிழார் தவம் செய்தவர். அவர் வந்தபின் நீராடுகிறேன். நீ சென்று வீட்டு வேலையைப் பார்க்கலாம்."

58