உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

முழங்குகின்றன. இயங்குகின்ற ஆட்சியின் கோலமன்றோ இவ்வாறு முழங்குகிறது? காற்றிடையே அன்றோ அந்த ஒலியும் பரவி நம் காதில் வந்துவிழுகிறது?

காற்றினும் நுண்ணிதாக அமைந்த விசும்பே இவ்வொலி அலை வீசும் இடம் என்பர் இந்நாளைய மக்கள். அந்த விசும்பே இவ்வொற்றுமைக் காட்சியில் தோன்றுகிறது. அரசர்க்கு அரசனாம் பெரும் பொருளின் சங்கொலி கேட்டோம். அவன் திருவுருவம் முழுதும் தோன்றுகிறது. பருப்பொருளின் நின்றும் நுண்பொருளில் செல்கின்றோம். உருவத்தினைத் தாண்டி அருவத்தை எட்டுகிறோம். எங்கும் நீக்கமற நிறைகின்ற வெட்டவெளி—வானம்—விசும்பு—இதுவே அவனது திருமேனி. இந்த விசும்பு பூதாகாயமாய் மனோகாயமாய் சிதாகாயமாய் வளர்ந்தோங்கும். எந்நிலையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்த சிற்சுகோதயவிலாசம் இதுவே ஆம். வானத்தினை நீலவானத் தோற்றமாகக் கொண்டு அந்த நீலக் காட்சியே அவன் திருமேனி எனக் கண்ணுக்கரியவனைக் கண்டும் களிக்கலாம். நீலவானம் வெறுந்தோற்றம். ஆனால் அழகிய கடவுட்காட்சி. அதற்கும் உள்ளாக அவனாக அப்பெரும் பொருளின் உண்மை வடிவம் ஒளிர்கின்றது: விசும்பு மெய்யாகக் கொண்டு திகழ்கின்றது அஃது.

எங்குமாய்ப் பரந்த இப்பெருவெளியை இடமாகக்கொண்டு விளங்குபவை எத்தனை எத்தனை விண்மீன்கள்? எத்தனை எத்தனை கோள்கள்? அக்கோள்களில் எத்தனைத்தனை உயிர்கள்? முன் என்றும், பின் என்றும், மேல் என்றும், கீழ் என்றும், வலம் என்றும், இடம் என்றும் கற்பனைகள் பல எழுகின்றன. திசைகள் என்றும் பேசு-

112