உள்ளடக்கத்துக்குச் செல்

எச்சில் இரவு/காத்திருந்த குமரனும் கனிந்திருந்த குமரியும்

விக்கிமூலம் இலிருந்து

காத்திருந்த குமரனும்
கனிந்திருந்த குமரியும்


குறிஞ்சி! அங்கே உறுதியான குன்றுகளும், உயர்ந்தோங்கிய மலைகளும் உண்டு. அந்தக் கருங்கல் 'கொப்புளத்தில்', வேங்கை மரம் போன்றவனின் வீடு மில்லை; அம்மரத்தின்மீது படரும் மிளகுக்கொடி போன்றவளின் விடுமில்லை.

முல்லை! அங்கே விதைகளின் வயிற்றில் பிறந்த மரங்களும், விலங்குகளின் வீடுகளாகிய காடுகளும் உண்டு. அந்தக் 'கோவலர் கோட்டத்தில்' காட்டாறு போன்றவனின் வீடுமில்லை; குளிர் துாங்கும் குறுஞ்சுனை போன்றவளின் வீடுமில்லை.

பாலே! அங்கே கண்களை ஏமாற்றக்கூடிய கானல் நீரும், பகற்பொழுதெல்லாம் காய்ச்சலோடு படுத்துக் காண்டிருக்கின்ற பாதைகளும் உண்டு. அந்த "நெருப்பு நிலத்தில்" பாலையாழ் போன்றவனின் வீடு மில்லை. அந்த யாழில் பிறக்கும் பஞ்சுரப்பண் போன்ற வளின் வீடுமில்லை.

நெய்தல்! அங்கே கதிரவன் முகம் பார்க்கும் கண்ணாடிக் கடலும்; காலில் மிதிபடும் நிலாநிற மணலும் உண்டு. அந்த "ஈரத்தின் எல்லையில்" அன்றில் பறவை போன்றவனின் வீடுமில்லை. அன்னப் பறவை போன்றவளின் வீடுமில்லை.

மருதம்! அங்கே ஏர் பரந்த வயலும், நீர் பரந்த கழனியும்; நெல் மலிந்த மனைகளும், சொல் மலிந்த மன்றங்களும் உண்டு. அந்த 'வண்டல் மண்டலத்தில்' தான் அவன் வீடும் இருந்தது. அவள் விடும் இருந்தது.

அவள் வீடு, மிகச் சிறிய வீடு வைக்கோல் வேய்ந்த வீடு. அது, இரண்டு தங்கத் தகடுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருப்பதுபோல் இருந்தது.

அவன் வீடு ஈச்ச மரத்தின் இலைகள் வேய்ந்த வீடு. அது, ஒரு முள்ளம்பன்றி எழுந்து நின்று கொண்டிருப்பதுபோல் இருந்தது.

அவன், இருபது நூற்றாண்டுகளில் இரண்டு நூற்றாண்டுகளைப் போன்றவன். அதாவது, வள்ளுவர் பிறந்த நூற்றாண்டையும் கரிகாற்சோழன் பிறந்த நூற்றாண்டையும் போன்றவன்.

பன்னிரண்டு போர்களுள் இரண்டு போர்களைப் போன்றவன். அதாவது, தலையாலங்கானத்துப் போரையும் வெண்ணிப் போரையும் போன்றவன்.

அவள், ஆறு பருவங்களுள் இரண்டு பருவங்களைப் போன்றவள். அதாவது, இளவேனிற் பருவத்தையும் கார்ப்பருவத்தையும் போன்றவள்.

ஏழு நாட்களுள் இரண்டு நாட்களைப் போன்றவள். அதாவது, திங்களும் செவ்வாயும் போன்றவள்.

நால்வகைப் பூக்களில் இருவகைப் பூக்களைப் போன்றவள். அதாவது, கோட்டுப் பூவையும் கொடிப் பூவையும் போன்றவள். அவள் பிறந்த ஊர் இராதா நல்லூர். திருவருணைக் கலம்பகம் பாடிய சைவ எல்லப்ப காவலர் பிறந்த ஊரும் அதுதான்.

அவரும், அந்த அழகியும் ஒரே ஊரில். பிறந்தவர்கள் என்றாலும், இருவரும் ஒரே நேரத்திலோ, ஒரே நூற்றாண்டிலோ பிறக்கவில்லை.

அந்த நேரிசை நாவலர், சுட்டுப் பொசுக்கும் பகல் நேரத்தில் பிறந்தவராம். அந்த மருத நிலத்து மங்கையோ, சுடாத இரவிலே பிறந்தவளாம்.

பெற்றோரின் உறவில் உருவாகி, இரவில் பிறந்த அக்கட்டழகி, பிறக்கும் போது அழுது கொண்டே பிறந்தவள் என்றாலும், வளரும் போது அன்றாடம் சிரித்துக் கொண்டே வளர்ந்தாள்.

“மழவும் குழவும் இளமைப் பொருள” என்று தொல்காப்பியம் கூறுவது போல, அவள் கொழுந்துக் குழந்தையாக இருக்கையில், தொட்டிலிலும், பெற்றோரின் தோள் மீதும் வளர்ந்தாள். புல்லும், பொறாமையும் மிக விரைந்து வளர்வதைப் போல, அவள் வளர்ந்து கொண்டே வந்தாள்.

தன் அங்கத்தைத் தங்கமாக்கிக் கொண்டு, சிவந்த தோல் மேடுகளைச் செவ்விள நீராக்கிக் கொண்டு, ஒரு நாள் அவள் ஒரு கொக்கோகக் குமரியானாள்.

தொட்டில் பருவத்தில் உதடுகளால் உரையாடி வந்தவள், கட்டில் பருவம் வந்த பின், தன் கண்களால் பேசத் தொடங்கினாள்.

எதிர் வீட்டு இளைஞன் ஏகாம்பரம், அவளைக் காணும் போதெல்லாம், அவளிடம் தன் கண்களால் பேசி வந்தான்.

ஓசை வெளிப்படாத பார்வைப் பேச்சும், அவர்கள். அன்றாடம் விட்டு வந்த பெருமூச்சும், நாளடைவில், உறவை உருவாக்கி, இரவை இனிக்க வைத்தன.

காத்திருந்த குமரனும், கனிந்திருந்த குமரியும், குயில் கூவும் சோலையில் ஓர் நாள் இரவு, கூட்டல் குறியாயினர்.

பெற்றோர்கள் அவளைப் ‘பெருந்தேவி’ என்று அழைத்து வந்தனர். தோழிப் பெண்களோ, அவளைத் ‘தொட்டால் சுருங்கி’ என்று அழைத்து வந்தனர். அவளுடைய காதலனோ, அவளை ‘அகவல் நாயகி’ என்று அழைத்து வந்தான்.

பகல் நேரத்தில், அவன் அவளைப் பார்த்துக் கொண்டே போவான்.

அன்றொரு நாள்,

பகலின் பங்காளியாகிய இரவு நேரம்.

முதலில் பிறையாக இருந்து, மூவைந்து நாட்களில் முறையாக வளர்ந்து, முற்றுப் பெற்ற முழு நிலா, அன்று முதலில் வந்தது. முக்காடு போடாத முழு நிலா வந்த பிறகு, ஆற்றங்கரைக்கு அவன் வந்தான். சிறிது நேரத்தில், அவளும் அங்கே வந்தாள்.

அவள் அங்கு வந்தவுடன், அவளைப் பார்த்து “தங்கச்சிவந்தியா?” என்று அவன் கேட்டான்.

உடனே அவள் “நான் உங்களுக்குத் தங்கச்சியா?” என்று கேட்டாள்.

“உன் அண்ணனுக்கு நீ தங்கச்சி என்பதும், இந்தக் கண்ணனுக்கு நீ ஒரு தங்கச் சிலை என்பதும் எனக்குத் தெரியாதா? இப்போது நீ உன் தலையில் சூடியிருக்கும் இந்த மலர் தங்கச் சிவந்தியா? என்றுதான் கேட்டேன்” என்று கூறினான் அவன்.

அதைக் கேட்டவுடனே அவள், “அத்தான் நீங்கள் ஒரு கல்விக் கிரகம்” என்று கூறினாள்.

“என்ன! நான் கல் விக்கிரகமா?” என்று வியப்புடன் கேட்டான்.

“நீங்கள் கல் விக்கிரகம் அல்ல, கல்விக் கிரகம், அதாவது, கல்விக் கிருப்பிடம்” என்றாள்.

‘கரும்பின் பக்கத்திலே நெற்கதிரும்,
கவரிமான் பக்கத்திலே கலைமானும்,
வளையலின் பக்கத்திலே ஒரு வைர மோதிரமும்,
வல்லினத்தின் பக்கத்திலே மெல்லினமும்’

கவிதையின் பக்கத்திலே ஓர் இலக்கியக் கட்டுரையும் இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி அவர்கள் இருவரும், அப்போது நெருங்கி நின்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வஞ்சியின் முகத்தைப் பார்த்து விட்டு, அந்த வான் நிலவை அவன் பார்த்தான். அவளுடைய அழகான விழிகளைப் பார்த்து விட்டு, ஆற்று மீன்களை அவன் பார்த்தான். அவள் அவனுடைய திரண்ட தோள்களைப் பார்த்து விட்டு, குன்றுகளையும் மலைகளையும் கூர்ந்து பார்த்தாள்.

கொப்புளம் கொண்ட குளிர்ந்த வானத்தில், அப்போது ஊமை நிலா ஊர்ந்து கொண்டிருந்தது. புலால் நாற்றமில்லாத விண்மீன்கள், கருநீல வானத்தில் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவனும், அவளும் தங்கள் கண் வெளிச்சத்தை அந்த விண் வெளிச்சசத்திற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அவள் அவனை நோக்கி “அத்தான்! பகல் நம்மைப் பிரித்து வைக்கிறது. இரவுதான் நம் இருவரையும் இணைத்து வைக்கிறது” என்று கூறினாள்.

“ஆமாம்! அந்தப் பகல், நம்மிருவரையும் ஒரு கண்ணால் பார்க்கிறது. இந்த இரவுதான், ஆயிரம் கண்களால் நம்மை அன்றாடம் பார்க்கிறது” என்றான்.

“ஆம் அத்தான்! இரவுக்கு ஆயிரம் கண்கள். பகலுக்கு ஒன்றே ஒன்றுதான்” என்றாள் அவள்.

“இரவுக்கு மட்டுமா ஆயிரம் கண்கள், இந்திரனுக்கும் ஆயிரம் கண்கள்தான். பகலுக்கு மட்டுமா ஒரு கண், பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்குக்கும் ஒரே ஒரு கண்தான்” என்றான் அவன்.

“அப்படியா! அதோ பாருங்கள், அந்தப் பன்னிரண்டு நட்சத்திரங்களும், ஒரு படகைப் போல் இருக்கிறதல்லவா?” என்று கேட்டாள்.

“ஆமாம் அதைத்தான் ரேவதி நட்சத்திரம் என்று சொல்லுவார்கள்” என்றான் அவன்.

ஆறு நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்துள்ள அசுவினி நட்சத்திரத்தை அவள் உற்றுப் பார்த்தாள். பார்த்து விட்டு, அவனை நோக்கி “கெளதம புத்தரும், பெரியாழ்வாரும் அசுவினி நட்சத்திரத்தன்றுதான் பிறந்ததாகச் சொல்லுகிறார்கள்” என்றாள்.

“பிறந்திருக்கலாம். யார் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலென்ன? ஒருவன், மற்றொருவனுக்கு எரி நட்சத்திரமாக இருக்கக்கூடாது” என்று கூறினான் அவன்.

“அந்த அசுவினி நட்சத்திரம் குதிரையின் தலை போல் இருக்கிறதல்லவா?” என்று கேட்டாள்.

“ஆமாம், அதன் வடிவம் அப்படித்தான் இருக்கிறது. நீ குதிரையை நினைவு படுத்தியவுடன், எனக்கு இப்போது, குதிரை வெறியன் ரஞ்சித்சிங் நினைவு வருகிறது.

பஞ்சாப் மன்னன் ரஞ்சித்சிங் ஒரு குதிரை வெறியன். ‘லைலி’ என்னும் பெயருடைய குதிரை ஒன்று பிஷாவர் நாட்டு மன்னனிடம் இருப்பதாக, அவன் கேள்விப்பட்டு, அக்குதிரையைத் தனக்குக் கொடுக்கும்படி அம்மன்னனிடம் கேட்டானாம். பலமுறை கேட்டும், அவன் கொடுக்க மறுக்கவே, உடனே அந்நாட்டின் மீது படையெடுத்து அவனைச் சிறையிலடைத்து விட்டு, ரஞ்சித்சிங் அக்குதிரையைக் கொண்டு வந்தானாம். அவன் அக்குதிரைக்கு விலையுயர்ந்த அணிகலன்களைப் பூட்டி, அதன் கால்களில் தங்க வளையம் போட்டு, ஊர்வலமாகத் தன் அரண்மனைக்கு அக்குதிரையைக் கொண்டு வந்தானாம். அவன் அக்குதிரையை அடைவதற்காக, அறுபது லட்ச ரூபாய் செலவழித்தானாம். அந்தப் போரில் பன்னிரண்டாயிரம் மக்கள் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது” என்றான் அவன்.

அதனைக் கேட்டவுடன் அவள், “மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும், அழகான பெண்ணுக்காகவும்தான் மன்னர்கள் போரிடுவார்கள். ஆனால், இவனோ, ஒரு குதிரைக்காக இத்தனை பேரைக் கொன்று குவித்திருக்கிறானே, இந்தக கொடியவன்” என்றாள அவள.

“ஆம்! அவன் கொடியவன்! நீயோ கொடியவள்” என்றான் அவன். .

“என்ன நான் கொடியவளா?” என்று கேட்டாள்.

“ஆம்! கொடியவள்தான்! நீ ஒரு பெண்தானே” என்று அவளைக் கேட்டான்.

“ஆமாம். இதிலென்ன சந்தேகம். நானும் ஒரு பெண்தான்” என்றாள்.

அவன் அவளைப் பார்த்து “பெண் என்பவள் யார்? கொம்பைத் தழுவும் ஒரு கொடி போன்றவள்தானே” என்றான் அவன்.

“நான் ஒரு கொடி என்றால், நீங்கள் ஒரு கொம்புதானே” என்று கேட்டாள்.

“ஆம்! நான் ஒரு கொம்புதான்” என்றான்.

அதனைக் கேட்டவுடன், அவள் உடனே அவனிடமிருந்து விலகிச் சென்றாள்.

அவன் அவளைப் பார்த்து, “நீ என்னை விட்டு ஏன் விலகிச் செல்கிறாய்?” என்று கேட்டான்.

“கொம்புள்ள விலங்கைக் கண்டால் ஐந்து முழமும், குதிரைக்குப் பத்து முழமும் விலகிச் செல்ல வேண்டும்; என்பார்கள். கொம்பின் அருகில் நானிருந்தால், அது என்னைக் குத்தி விடுமே என்று அஞ்சித்தான் விலகிச் செல்கிறேன்” என்று கூறினாள்.

“என்னைத் தொடாமலும், எச்சில் படாமலும் தப்பித்துக் கொள்வதற்காகத்தான் இந்தத் தந்திரமா?” என்று கூறிக் கொண்டே அவளருகில் சென்றான்.

அதிக வெளிச்சமில்லாத இடத்தில் போய், அவள் நின்றாள்.

எமிலி ஜோலா என்ற எழுத்தாளன், எழுதத் தொடங்கினால், அதிக வெளிச்சமில்லாத இடத்தில் அமர்ந்துதான் எழுதுவானாம். இந்த இடம், அவனைப் போன்ற எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற இளங்காதலர்களுக்கும் மிகவும் ஏற்ற இடம்தான்” என்றான் அவன்.

“ஒரே இடத்தில் தங்கியிருப்பதை விடச் சுற்றி வளைந்து செல்லும் பயணம் மிகச் சிறந்தது. ஆற்று நீர் அதைத்தான் செய்கிறது” என்றாள் அவள்.

“ஆற்று நீர் அதை மட்டுமா செய்கிறது. அது, சில சமயம் அழிவையும் ஏற்படுத்தி விடுகிறது. மூன்றாம் குலோத்துங்கன், ஆட்சிக்கு வந்த 6 ஆம் ஆண்டில் விக்கிரம சோழப் பேராறு, பெரும் பெருக்கெடுத்துப் பற்பல கோவில்களுக்கும், மக்களுக்கும் சொந்தமாயிருந்த நிலங்களை அழித்து விட்டது” என்றான் அவன்.

அப்போது அவள் அவனை நோக்கி, “மக்களுக்குச் சொந்தமான நிலங்களைத்தானே அது அழித்தது? அவ்வூர் மக்களை அது அழிக்கவில்லையே” என்றாள்.

“அளவுக்கு மீறிப் பெருகி வரும் ஆற்று வெள்ளம், ஊரிலுள்ள நிலங்களை அழிக்கும் போது, அவ்வூரில் வாழும் மக்கள் பலரை அழிக்காமல் விட்டிருக்குமா என்ன?”

கருணையும், இரக்கமும் மக்கள் உள்ளத்திற்கு உண்டேயன்றி, ஆற்று வெள்ளத்திற்குக் கிடையாது. அது, ஏழையெனறும், எளியவரென்றும், அரசனென்றும், ஆண்டியென்றும், தொட்டில் குழந்தையென்றும், கட்டில் காதலரென்றும் பார்ப்பதில்லை. அக்பரின் அரண்மனைப் புலவனாக விளங்கிய ஜகந்நாத கவியும், அவன் காதலியாகிய அக்பரின் மகள் லவங்கியும், ஒரு நாள் கங்கை நதியின் 52வது படிக்கட்டில் அமர்ந்து, உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கையில் திடீரென்று கங்கை நதி பெருக்கெடுத்து, அவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு சென்று விட்டதாம்” என்று கூறினான் அவன். அத்துயரச் செய்தியைக் கேட்ட பூங்கோதை, -

“ஐயோ! பாவம். அந்த இளங்காதலர்களின் முடிவு இப்படியா ஆக வேண்டும்? மன்னர்களும், மகாகவிகளும் காலமாவதற்குக் காரணமாக இருக்கும் அக்கங்கை நதிக்கு அந்த மொகலாயச் சக்ரவர்த்தி மரண தண்டனை அல்லவா விதித்திருக்க வேண்டும்?” என்றாள் அவள்.

“மற்றொருவனைக் கொன்றவனுக்கு மரண தண்டனை விதிக்கலாம். மலைக்கும், மடுவுக்கும், ஆற்றுக்கும், காற்றுக்குமா மரண தன்டனை விதிக்க முடியும்” என்றான் அவன்.

“ஏன் விதிக்க முடியாது? அக்காலத்து மன்னன் ஒருவன் ஆற்றுக்கு மரண தண்டனை விதித்திருக்கிறானே!” என்றாள் அவள். -

“அப்படியா?” என்றான் அவன்.

“ஆமாம்! பாரசீக மன்னன் ஒருவன் ஒரு சமயம், தன் குதிரை மீது ஏறி ஆற்றைக் கடந்த போது, அவன் குதிரையை அந்த ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டதாம். அடங்காத கோபங் கொண்ட அம்மன்னன் அவ்வாற்றுக்கு மரண தண்டனை விதித்தானாம்! எப்படித் தெரியுமா? ஏராளமான கால்வாய்களை வெட்டி, ஆற்று நீரை வடித்து விட்டானாம். அந்த ஆறு, நீர் இல்லாமல் செத்து விட்ட தாம்!” என்றாள் அவள். அச்செய்தியைக் கேட்டதும் அவன் அவளைப் பார்த்து,

“விசித்திரமான வேந்தன்.”

“விநோதமான மரண தண்டனை, அவன் கிடக்கிறான் பைத்தியக்காரன்.

“நீ வா! அந்த வாகை மரத்தடிக்குப் போகலாம்” என்றான் அவன்.

அவன் எழுந்து மெல்ல நடந்தான். அவள் அவனைத் தொடர்ந்தாள்.

அவனும் அவளும், உரையாடிக் கொண்டே அவ்விடம் சென்றனர்.

அவன் அவளை நோக்கி, “அன்பே, இப்போது நான்தான் உனக்கு அதியமான். நீதான் எனக்கு இப்போது ஒளவை' என்றான்.

“இருக்கலாம்! ஆனால், அவளைப் போல் நான் கள் குடிப்பதில்லையே” என்றாள்.

“அப்படியென்றால், நீ எனக்கு வாய்த்த இரண்டாவது ஒளவை” என்றான்.

“தேசத்தைப் பற்றிப் பாடுவேனேயன்றி, அவளைப் போல் நான் தெய்வத்தைப் பற்றிப் பாட மாட்டேனே” என்றாள்.

அவன், அவளுடைய பகுத்தறிவுக் கொள்கையைப் பாராட்டினான்.

“அத்தான்! கரிகால் பெருவளத்தான் காலத்தில், சாரமா முனிவன் என்பவன் நாகருலகம் சென்று, செவ்வந்தி மலர் கொண்டு வந்தானாம். சூரவாதித்தன் என்பவன், நாகருலகம் சென்று, வெற்றிலைக் கொடியைக் கொண்டு வந்தானாம். சீன அரசாங்கத்தின் தூதுவனாகிய சாங்சங் என்பவன், ஒக்கஸ் நதிக்கரையில் வாழ்ந்த சிதியர் என்னும் இனத்தாரிடமிருந்து திராட்சைப் பழங்களையும், மாதுளம் பழங்களையும் சீன நாட்டுக்குக் கொண்டு வந்தானும். நீங்கள் பொன் விளைந்த களத்துாருக்குப் போய் வந்தீர்களே, அங்கே எனக்கென்ன வாங்கி வந்தீர்கள்,” என்று கேட்டாள்.

“நான் பொன் விளையும் களத்தூருக்குப் போயிருந்தால், உனக்குப் பொன் வளையல் வாங்கி வந்திருப்பேன். எப்போதோ ஒருகாலத்தில் பொன்விளைந்த களத்துாருக் கல்லவா நான் போயிருந்தேன். இப்போதங்கே பொன்னும் விளையவில்லை. உனக்குப் பொன் வளையலும் வாங்கி வரவில்லை! வெற்றிலே வாங்கிக் கொண்டு வரலாமா என்று நினைத்தேன். அதை நான் வாங்கிக் கொண்டு வந்தால் இந்த இலை ‘வெற்று இலை’தானே என்று நீ சொல்லி விடுவாய் என்பதனுல், அதை நான் வாங்க விரும்பவில்லை. என்றான்”

“எனக்கு வேறு, என்னதான் வாங்கி வந்தீர்கள்?” என்று கேட்டாள்.

“உள்ளே சொருவுறது வாங்கி வந்திருக்கிறேன்” என்றான் அவன்.

“உள்ளே சொருவுறதா? அது என்ன” என்று கேட்டாள்.

“அது தான் கொண்டை ஊசி” என்று கூறி, அதனை அவளிடம் கொடுத்தான். அவள் அதனே வாங்கித் தன் கொண்டையில் செருகிக் கொண்டிருக் கையில், அவன் அவளைப் பார்த்து,

“பாரசீக மக்கள் மாதுளம் பூவையும்;
பிரெஞ்சுக் காரர்கள் ரோஜாப் பூவையும்;
ஆங்கிலேயர்கள் செர்ரி மலரையும்;

கிரேக்கர்கள் ஒலிவ மலரையும்;
உரோமானியர்கள் முந்திரி மலரையும்
மிகவும் விரும்புவார்களாம்” என்றான் அவன்.

“ஆனால், நானே, கவர்ச்சிமிக்க கனகாம்பரத்தை விடக் காயாம் பூவைத்தான் மிகவும் விரும்புவேன்” என்றாள் அவள்.

“ஓகோ! விரைவில் நீ ஒரு தாயாக விரும்புவதால் தான், காயாகும் பூவாகிய அந்தக் காயாம்பூவை விரும்புகிறாய் போலிருக்கிறது” என்றான் அவன்.

அவள் புன்னகை புரிந்தாள்!

இலைகள் உண்டாக்கிய இருட்டில், அவர்கள் இருவரும் நெருங்கி நின்று, தங்கள் கரங்களைச் சேர்ததனர். ஒருவரை ஒருவர் போர்த்தனர். சிறிது நேரத்தில் இருவரும் வேர்த்தனர்.


______