சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/நன்றி இல்லாதவன்
28
நன்றி இல்லாதவன்
இளவரசன் ஒருவன் காட்டுக்கு வேட்டையாடச் சென்றான்.
ஒரு மானைத் துரத்திக் கொண்டு, வெகு தொலைவு சென்று விட்டான். அவனுக்குத் துணையாக வந்த காவலர்களைப் பிரிய நேர்ந்தது.
இருள் சூழ்ந்தது. அப்போது ஒரு சிங்கம் எதிரே வருவதைக் கண்டு, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறிப் பதுங்கிக் கொண்டான். அதே சமயம், அந்த மரத்தில் கரடி ஒன்று இருப்பதைக் கண்டு பயந்து நடுங்கினான்.
சிங்கத்திடமிருந்து தப்பி, கரடிக்குப் பலியாகப் போகிறோமே என்று கவலையில் ஆழ்ந்தான் இளவரசன். கரடி அவனுக்கு ஆறுதல் அளித்தது.
நள்ளிரவு ஆகியது. மரத்தடியில் இருந்த சிங்கம் நகரவே இல்லை, எப்படியும் இரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தது.
இளவரசன் சோர்வுற்று, தூக்கக் கலக்கத்தில் காணப்பட்டான்.
கரடி அவனைப் பார்த்து, “இளவரசனே இருவரும் விழித்திருக்க வேண்டியதில்லை. முதலில் நீ தூங்கு. நீ கீழே விழுந்து விடாமல், உன்னை நான் பிடித்துக் கொண்டு விழித்திருக்கிறேன். பிறகு, நான் தூங்குகிறேன். நான் விழுந்து விடாமல் நீ பிடித்துக் கொள்; பொழுது விடிந்ததும், சிங்கம் போய் விடும்; நாமும் அவரவர் வழியில் போகலாம்” என்று கூறியது.
அது கூறிய யோசனைப்படி, இளவரசன் தூங்க முற்பட்டான்.
அப்போது சிங்கம் தன்னுடைய நயவஞ்சகத்தைக் காட்ட முனைந்தது.
“அன்புள்ள கரடியே! நாம் இருவரும் ஒரே இனம்! அவனோ நம் விரோதி; அவனை நீ காப்பாற்றலாமா? நான் போன பின், அவன் அம்பெய்து உன்னைக் கொன்று விடுவானே. மனித இனம் நன்றி பாராட்டாதது, எனவே அவனைக் கீழே தள்ளி விடு. என் பசியைத் தீர்த்துக் கொண்டு போகிறேன், உனக்கும் பயம் அகன்று விடும்,” என்று தேனொழுகக் கூறியது சிங்கம்.
“ஏ சிங்க ராஜனே! நன்மையோ, தீமையோ நான் அவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அதனால், அவனுக்குத் தீங்கு செய்ய மாட்டேன்” என்று மறுத்து விட்டது கரடி.
தன் தந்திரம் பலிக்காமல் போகவே, சிங்கம் அமைதியாகி விட்டது.
இளவரசன் கண் விழித்தான். சிங்கத்துக்கும், தனக்கும் நடந்த உரையாடலை அவனிடம் கூறி விட்டு, கரடி கண் அயர்ந்தது.
கரடியிடம் தன் தந்திரம் பலிக்காமல், ஏமாந்து போன சிங்கம் இளவரசனிடம் முயன்றது.
“எனக்குப் பயந்து நீ மரத்தில் ஏறி விட்டாய். ஆனால், கரடியிடம் இருந்து தப்ப முடியாது. நான் போன பின், கரடி உன்னைக் கொன்று விடும். நீ உயிர் பிழைக்க வேண்டுமானால், கரடியைக் கீழே தள்ளி விடு” என்று நயவஞ்சகமாகக் கூறியது சிங்கம்.
அது சொன்னதை நம்பி, தன் உயிரே தனக்குப் பெரிது என்று எண்ணி, கரடியைக் கீழே தள்ள முற்பட்டான் இளவரசன்.
அரைகுறைத் தூக்கத்தில் இருந்த கரடி, மற்றொரு கிளையைப் பிடித்துக் கொண்டு, கீழே விழாமல் தப்பித்துக் கொண்டது.
இளவரசனின் நம்பிக்கைத் துரோகத்தைக் கண்டு கரடி வருந்தியது.
“அடே துரோகி! நட்பு எத்தகையது என்பதை உணராமல், கலக்கமுற்று, துரோகம் செய்ய முற்பட்டு விட்டாய். அதனால், உன் புத்தியும் அடியோடு கலங்கி அலைவாய்” என்று சபித்தது கரடி.
இளவரசனின் மனச் சாட்சி உறுத்தியது. பைத்தியம் பிடித்தவனைப் போல் ஆனான்.