உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/பேசுவதும் நடந்து கொள்வதும்

விக்கிமூலம் இலிருந்து

44
பேசுவதும் நடந்து கொள்வதும்


ஒரு ஊரில் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறந்த ஒருவன், பலருடைய உதவியால், படித்துப் பட்டம் பெற்றான். பிறகு சிபார்சினால், அரசாங்க வேலையில் அமர்ந்து பின்னர் அதிகாரி ஆனான்.

அவன் அதிகாரியான பின், எப்பொழுதும் சமத்துவம், சகோதரத்துவம் (அனைவரும் சமம், அனைவரும் சகோதரர்கள்) என்று எப்பொழுதும் கூறிக் கொண்டிருப்பது வழக்கம்.

அந்த அதிகாரி, தன்னுடைய இல்லத்தில் பிரார்த்தனை நடத்துவதற்காக, அருளாளர் ஒருவரை வரும்படியாக சொல்லி இருந்தார். அவரும் வந்தார்.

பிரார்த்தனை தொடங்கும் போது, அதிகாரியின் குடும்பத்தினர் அனைவரும் வந்து அமர்ந்தனர்.

“உங்கள் வீட்டில் வேலைக்கு ஆணோ, பெண்ணோ இருக்கின்றனரா? இருந்தால், அவர்களையும் அழையுங்கள்” என்றார் அருளாளர். அப்போது அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்காரப் பெண்ணை, பிரார்த்தனை அறைக்கு வருமாறு கூறினார்.

பரட்டைத் தலையுடன், அழுக்குப் படிந்த, கிழிந்த பாவாடை தாவணி அணிந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தார் அருளாளர். அந்தப் பெண்ணின் அலங்கோலத்தைப் பார்த்து முகம் சுளித்தார் அருளாளர்.

அந்த அதிகாரியைப் பார்த்து, ‘சமத்துவம் சகோதரத்துவம்’ என்று “எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறீர்களே! உங்களுக்காக, உங்கள் வீட்டில் நாள் முழுதும் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுமியை இப்படியா வைத்திருப்பது? வேலை ஆட்களை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள எண்ணினேன். இப்பொழுது நன்றாகவே அறிந்து கொண்டேன். ‘சமத்துவம் சகோதரத்துவம்’ என்பது இதுதானா?” என்று சற்று கடுமையாகக் கூறினார் அந்த அருளாளர்.

அதிகாரி வெட்கத்தால் தலை குனிந்தார். எதுவும் பேச இயலவில்லை.

பொதுவாக, பெரும்பாலோர் பிறருக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால், தாங்கள் மட்டும் கடைப்பிடிக்க மாட்டார்கள்.