உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

3

எதிர்மறையாகப் பார்த்தாற்றான் மெய்த் தொண்டுகளின் ஏற்றங்கள் புலப்படும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என ஓர் அமைப்பு இல்லாதிருந்தால், கழகப் பாடநூல்கள் இல்லாதி ருந்தால், சங்கவிலக்கியங்கட்கும், காப்பியங்கட்கும், தொல்காப்பிய முதலான இலக்கணங்கட்கும் சிற்றிலக்கியங்கட்கும், உரைப் பதிப்புக்களும், மேலுரைப் பதிப்புக்களும், அடக்கப் பதிப்புக் களும், உரைநடைப் பதிப்புக்களும் இல்லாதிருந்தால், மு.வ.வின் தெளிவுரை, திருக்குறள் நாட் குறிப்பு, திருவள்ளுவர் மலர் முதலான மலர்கள், மொழி பெயர்ப்புகள், புலவர் வரலாறுகள், அறிவியற் கொத்துக்கள், வடமொழி தமிழகர வரிசைகள், செந்தமிழ்ச்செல்வி இல்லாதிருந்தால், மலைகளிற் சிறந்த தமிழ்மலையான மறைமலையடிகளின் கடலனைய நூல்நிலையம் இல்லாதிருந்தால், இத்துணைக்கும் வினைமுதல்வரான திருவரங்கனாரின் இளவலான தாமரைச் செல்வரின் தெய்வ வுணர்வும், குறிக்கோள் வீரமும், நீடிய ஆயுளும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டுத் தமிழன்னை ஒரு குழந்தை தூக்கிச் செல்லும் மெல்லுருவமாக இருந்திருப்பபாள். தாமரைப் பிள்ளையும் கழகமும் தோன்றி வளர்ந்து ஆற்றிய உழவுத் தொண்டினால் நம் தமிழன்னை தலைபலவும், கைகால் ப்லவும் பெற்று நாடி நரம்பெல்லாம் நூல்முறுக்கேறிக் குருதி அறிவொளி பெருகி, திசை நான்கும் ஓடி, ஐந்து கோடி மக்களும் பத்துக்கோடித் தோளில் செம்மாந்து தூக்குமளவு உயிர்வளம் தழைத்திருக்கின்றாள். இப்புகழ்ச்சி பெருமிகையன்று.

தொண்டாற்பழுத்த தமிழ்க் கிழவர் வ. சுப்பையாபிள்ளை வரலாற்றினைத் தொய்யா நடையில் முருகுபட எழுதியுள்ளார் புலவர் இளங்குமரனார். பகுதித் தலைப்புகள் இலக்கிய மணங் கமழ்கின்றன. கால முறையாகச் செய்திப் புனைவின்றியும் நடைப்புனைவோடும் இவ் வரலாறு அமைந்துள்ளது. தாமரைச் செல்வரின் வாழ்வு விரிவை அறிந்தார் இந்நூலை ஓர் அடக்கப் பதிப்பாகவே கருதுவார். எனினும் இம் முதற் பதிப்பு புதிய செய்திகள் பல பொதிந்த மூலப்பதிப்பாகும்.

இவ் வரலாற்றைப் படிப்பார், தமிழைப் படிப்பார், தமிழ்த் தொண்டு செய்வார், தொண்டாளர்களை மதிப்பார், தமிழ்ப் பிறப்பை மனங் கொள்வார். தமிழ்த் தொண்டினால் தமக்கும் ஒரு வரலாறு வரும்படி தமிழ்வாழ்வு நடத்துவார். இதுவே தாமரைச் செல்வர் தமிழர்பால் எதிர்பார்க்கும் தன்னலம்.