உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

திருவரங்கர் கழகத்தந்தை; முயற்சி ஏறு; கடமைக்காதலர்; கனிந்துதவும் கருத்தாளர்; சிவநெறி மறவாச் சிந்தையர்; பண்பாட்டின் கொள்கலம்; அவர்தம் இழப்பு அருமைக் கிழத்தியாரை, ஆருயிர்த் தாயாரை, அன்புத் தம்பியாரை, இனிய செல்வங்களை உருகி உருகி ஓயாது அழப்படுத்தியது! தமிழறிந்த நெஞ்சங்களைக் கண்ணீர் விட்டுக் கலங்க வைத்தது! திருவரங்கர் செல்வரல்லர்; ஆனால் செல்வரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்து மெய்ச் செல்வராக விளங்கினார். அவர் பெருங்கல்வி யாளர் அல்லர்; ஆனால் கற்றோர் பலரும் நயக்குமாறு கல்வித் துறையில் கடமை புரிந்தார். அவரினும் முயற்சியாளர் பலர் நாட்டில் உண்டு. ஆனால் நாட்டின் நன்மைக்கு நிலைத்த பணி அவரைப்போல் செய்தால் அரியர்.

"ஒரு சிலர் நூல் எழுதுவர்; ஒரு சிலர் நூல் பதிப்பர்; ஒரு சிலர் உரை எழுதுவர்; ஒரு சிலர் இத்தகைய அறிஞர்க்கு உதவியாக இருப்பர்; ஒரு சிலர் நூல் வெளியிடுவர்; ஒரு சிலர் விற்றுப்பரப்புவர்; ஒரு சிலர் மாநாடு கூட்டுவர்; ஒரு சிலர் அமைப்புகள் நடத்துவர்; ஒருசிலர் கற்றோர்க்கு உதவுவர். ஆனால் அனைத்தையும் ஒருங்கு செய்வித்துக்கொண்டு அனைத்திற்கும் அச்சாணியாக விளங்கினார் திருவரங்கர்'

"பேராசிரியர் பெருந்தகைமையும், பெருநாவலர் சிறப்பும் முதுபெரும்புலமையும் பூண்டுள்ள எங்கள் மறைமலையடி களாரின் மருகராயிற்றே".

"எங்கள் தமிழ்ப்பெருமாட்டி புலவர் போற்றும் தனித்தமிழ் செல்வி நீலாம்பிகையின் கணவராயிற்றே!'

"வீறுற்ற தமிழரை எல்லாம் ஒருங்குதிரட்டி ஒப்புயர்வற்ற கட்டுரை, சொற்பொழிவு, நூல்வெளியீடு இவற்றால் தமிழகம் ஒரு நாளும் திருப்பணி பூண்டொழுகும் பெருந்தமிழ்த் தளபதி திரு.சுப்பையாபிள்ளை தமையனார் ஆயிற்றே" எனப் பலரும் இரங்கி ஆற்றாமல் ஆறுதல் உரைக்கத் திருவரங்கர் வாழ்வு அமைந்தது. ஆனால், அருந்தமிழ்ச் செல்வி திருவரங்க நீலாம்பி கையாரோ உருகி உருகி ஓடாய்த் தேய்ந்தார். நொந்துபோய்க் கிடந்த அந்த உடலுக்கு இந்த இடியைத் தாங்கிக்கொள்ளக் கூடவில்லை; கண்ணீரும் கம்பலையுமாய் நாள்களை எண்ணிக் கழித்தார்.