உள்ளடக்கத்துக்குச் செல்

மருமக்கள்வழி மான்மியம்/நாகாஸ்திரப்‌ படலம்‌

விக்கிமூலம் இலிருந்து

6. நாகாஸ்திரப் படலம்

இம்முறை யாக இருக்கும் காலம், எம்
கணவரை ஒருநாள் மருமகன் கண்டு
வழக்குப் பேச வந்தான் அம்மா!
வந்தவன்,
அம்மான் என்றோர் அடக்கமில் லாமல், 5
மாமன் என்றோர் வணக்கமில் லாமல்,
கூறின மொழியெலாம் கூறுவேன், அம்மா!
“ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு[1]
ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ?
விளையை[2] நிலமாய் வெட்டித் திருத்த 10
பனையை விற்ற பணம் போதாதோ?
கண்ணி யம்மை கலியா ணத்தில்
கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ?
மருமகள் என்றொரு மஞ்சா டிப்பொன்[3]

குச்சா கிலும்நீர்[4] கொடுத்ததும் உண்டோ? 15
ஆண்டு தோறும் ஆதா யத்தில்
ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே!
ஏழாண்டாக இந்த மிச்சம்
எங்கே போச்சுது? என்னடா, அப்பா!
கேட்பாரில்லையோ, கேள்வியு மில்லையோ! 20
நெட்டர மாவும் நெடுங்கண் வயலும்[5]
யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்?
கடனுக் கென்ன காரணம்? சொல்லும்.
ஊரில் காரிய விசாரம் உமக்கு
வேண்டாம் என்றேன்; 'விடுவனோ' என்றீர். 25
கணக்கன்[6] உமது கழுத்து முறிய
எல்லரச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால்,
அம்மன் வகைக்கீ [7]ராயிரம் ரூபாய்
தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ?
உச்சிக் கொடைக்குப்[8] பிச்சி வெள்ளையும் 30
கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு
வரவில்லை யென்றுநீர் வைரவன் மகனை
எட்டி யடித்த ஏதுவி னாலே,

எத்தனை ரூபாய் வாரி யிறைத்தீர்?
இதுநாள் வரையிலும் எங்கட் காக 35
எதைநீர் செய்தீர்? எதைநீர் தந்தீர்?
மக்கட் கெல்லாம் வாரிக் கொடுத்தீர்.
ஒருபூ[9] வாகிலும் உழக்கு நெல்லு
பொலியள விந்தா கொண்டு போஎனத்
தந்ததும் உண்டோ? சரி, சரி, இன்னும் 40
உள்ள நிலங்களை ஒவ்வொன் றாக
ஒற்றி கொடுத்திடும்; மலரணை[10] ஓலைகள்
எத்தனை வேண்டுமோ எழுதியும் வைத்திடும்;
பேர்க்கூ லிப்பிர மாணம்[11] செய்யும்;
இட்ட தானம் எழுதிக் கொடுத்திடும்; 45
வேண்டு மானால் விலையும் கொடுத்திடும்;
மனைவி பேர்க்கும் மக்கள் பேர்க்கும்
உகந்துடை மைப்பிர மாணம்[12] ஒன்றுநீர்
இருக்கும் போதே எழுதியும் வைத்திடும்;
மக்களை வீட்டில் வாழ வைத்திடும்; 50
எங்களைத் தெருவில் இறக்கி விட்டிடும்.
ஆசை அங்கே, அன்பும் அங்கே;
பூசை இங்கே! போசனம் இங்கே!

ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா! 55
பட்டப் பெயரும் 'பஞ்ச கல்யாணிப்
பிள்ளை'[13] யென்றுநீர் பெற்றுவிட் டீரே!
அன்னியர் பொருளை அபகரிப் பதிலும்!
ஊரார் பொருளை உண்டுவாழ் வதிலும்,
கைதேர்ந் தவர்கள் காரண வர்களே! 60
கள்ளர் மறவர் கணக்கரும்[14] இவருக்கு
எள்ளள வேனும் இணையா வாரோ!
கன்னக் கோலும் கையில் எபாமல்.
எழுது கோலும் இறகும் எடாமல்
இரவும் பகலும் இஷ்டம் போலத் 65
திருடும் திறம் இச் சீமையில் எவருக்கு
உண்டு? இதனை உணர்பவ ருண்டோ?
கள்ளன் கஜானாக் காவலன் ஆனால்,
கொள்ளை யடிப்பில் குறைவைப் பானோ?
செல்வ மெல்லாம் சிதையக் காரணம், 70
சிறுவர் சோம்பித் திரியக் காரணம்,
மங்கையர் கண்ணீர் வடிக்கக் காரணம்,
வழக்குகள் மேன்மேல் வளரக் காரணம்,
குடும்ப நிலைமை குலையக் காரணம்,
நாஞ்சில் நாட்டுக்கோர் நாச காரணம் 75
எல்லாம் நீங்கள் என்றறிந் தல்லவோ

காரண வர்எனும் காரணப் பெயரைத்
தந்தனர் உமக்கும் அந்தக் காலமே.
காரணத் தீனம்[15] கடிய தீனம்;
கண்டூ ரத்தில்[16] மருந்து கருத்தாய்க் 80
கொடுத்தா லன்றிக் குணமா காது.
போகர் மச்ச முனிபுலிப் பாணியர்[17]
கருணா னந்தர் கருவூர்த் தேவர்[18]
அகத்தியர்[19] முதலிய ரிஷிகள் அனைவரும்
வைத்தியம் மந்திர வாதம் இவற்றைப் 85
பாட்டுக் கணக்காய்ப் பாடி வைத்தனர்!
ஏட்டுக் கணக்காய் எழுதி வைத்தனர்!
இவரும், காரணத் தீனம் இன்னதென்று
அறிந்தொரு குளிகை லேகியம் அல்லது

சூரணம் அதற்குச் சொன்ன தும் உண்டோ? 90
அஷ்டாங் கிருத[20] வைத்தியர், 'ஐயா
எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது,
எங்கள் நாட்டில் இப்பிணி யாலே
வருந்தா திருக்கும் மனிதர் சிலரே;
இதுநாள் வரையும் இப்பிணி தீர, 95
காய மொன்று கண்டறிந் தவரிலை;
வயக்கரை மூசும் வைத்திய ரத்னமும்[21]
எம்மா லாகா தென்றுகை விட்டிடில்
பிணியின் கொடுமை பேசவும் வேண்டுமோ?'
என்று கூறி யிருந்தனர், என்செய்வார்? 100
இங்கிலிஷ் டாக்டரும் இதற்கு மருந்துகள்
இருப்ப தாக இயம்பிடக் காணோம்,
இப்பிணி போல வெப்பை எழுப்பும்
பிணியிவ் வுலகில் பிறிதொன் றில்லை.
ஈக்களும் தேடி யீட்டிய தேன்போல் 105
பலரும் பலநாள் பாடு பட்டுக்
கூட்டி வைத்த குடும்ப முதல்இத்
தீனம்[22] கொண்டவர் தீண்டுவ ரேல்,உடன்
ஆனை தின்ற விளாம்பழ மாம்; அதற்கு
ஐய மில்லை; அறியார் யாரே! 110
பாரும், பாரும், பத்திரமா யிரும்!

குடும்ப தோஷி[23] என்றுமைக் கொண்டு
கோர்ட்டில் கேஸு கொடுப்பேன் பாரும்.
உண்மை யாக உம்மையும் அதனில்
சாக்ஷி போட்டு சமன்ஸை அனுப்பி, 115
வரவில்லை யானால் வாரண்டும் அனுப்பி,
(காலரை செலவாம் காரிய மில்லை)
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்
'கிராஸும்' கேட்டுக் கேவல மாக்கி
விடவிலை யானால், வீர பத்திரன் 120
மகனென் றென்னை மதிக்கவே வேண்டாம்."


  1. 8. அடியந்திரச் செலவு - கருமாதிச் சடங்குக்குரிய செலவு.
  2. 10-11. விளை-புன்செய் நிலம். புன்செய் நிலத்தில் நின்ற பனைமரங்களை வெட்டின பிறகுதான் அதை நன்செய் நிலமாகத் திருத்த முடியும். வெட்டின பனைகளை விற்றதனால் கிடைத்த பணம் புது நிலம் திருத்துவதற்குப் போதாதோ என்று மருமகன் காரணவரிடம் கேட்கிறான்.
  3. 14. மஞ்சாடி- கழஞ்சில் இருபதிலொரு பாகம் : பொன்னை நிறுக்கும் ஓர் அளவு.
  4. 15. குச்சு - காதிலணியும் ஒரு சிறு ஆபரணம்.
  5. 21. நெட்டரமா, நெடுங்கண் வயல்: வயற்பெயர்கள்.
  6. 28. கணக்கன் - சமுதாய வரவு செலவுகளை எழுதுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த கணக்கப்பிள்ளை.
  7. 28. அம்மன் வகை -ஊருக்குப் பொதுவான தேவி கோவிலைச் சேர்ந்த சொத்து.
  8. 30-32. உச்சிக்கொடை - சிறு தெய்வங்களின் கோவில்களில் உச்சி வேளையில் நடத்தும் விசேஷ் ஆராதனை. இதற்குப்
    பிச்சிப்பூ முதலிய பூக்களை ஊர் வேலைக்காரர் கொண்டு வருவது வழக்கம்.
  9. 38. ஒரு பூ: பூ என்பது இங்கே அறுவடைக் காலம். வருஷத்திற்கு ஒரு முறை விளையும் நிலத்தை ஒரு பூ என்றும். இருபோகம் விளையும் நிலத்தை இரு பூ என்றும் சொல்லுவர். ஒரு பூ - ஒரு போகம்.
  10. 42. மலரணை - பேரிரவல் (பினாமி).
  11. 44. பேர்க்கூலிப் பிரமாணம் - தன் பெயருடைய பேரனுக்குப் பாட்டன் எழுதிக் கொடுக்கும் நன்கொடைப் பிறமரணம்.
  12. 48. உகந்துடைமை - நாஞ்சில் நாட்டு வேளாளரிடையே கணவனுடைய சொத்தில் மனைவி மக்களுக்குரிய பாக உரிமை.
  13. 56. பஞ்சகல்யாணிப் பிள்ளை : ஐந்து கல்யாணம் செய்து கொண்டவராகையால் இந்தப் பெயர் ஊரில் ஏற்பட்டுவிட்டது.
  14. 61. கள்ளர், மறவர், கணக்கர்: இவர்கள் பிறர் பொருள்களை அபகரிப்பர் என்று சாமானிய மக்கள் சொல்வார்கள்.
  15. 79. காரணத் தீனம் - காரணவ ஸ்தானம் என்ற சொற்களை மருமகன் கோபத்தில் இவ்வாறு இழிவாகக் கூறுகிறான்; தீனம் - நோய். கடிய தீனம் - நீக்க முடியாத நோய்.
  16. 80. ஜன்னி அதிகரித்திருக்கும்பொழுது கண்டௌஷதம் கொடுப்பதுண்டு. கண்டூரம் - கண்டௌஷதம்.
  17. 82. போகர்: இவரைப் போகநாதர் என்றும் சொல்வர். பதினெண் சித்தரில் ஒருவர்; மருத்துவ நூல்கள் பலவற்றின் ஆசிரியர்.

    மச்சமுனி: இவரும் பதினெண் சித்தரில் ஒருவரே.
    மருத்துவ நூல் இயற்றியவர்.
    புலிப்பாணியர்: வைத்தியம், ஜாலம் முதலியவைபற்றி நூல்கள் இயற்றிய ஒரு சித்தர்.
  18. 83 கருணானந்தர், கருவூர்த்தேவர்: இவர்கள் வைத்தியம் மந்திரவாதம்பற்றி நூல்கள் இயற்றியவர்களாவர்.
  19. 84 அகத்தியர்: இவர் ஒரு முனிவர். தமிழில் முதல்
    இலக்கண நூல் இவர் செய்தது என்பர். இவர் பெயரால்
    பல வைத்திய நூல்களும் உள்ளன.
  20. 80. அஷ்டாங்கிருத வைத்தியர்: அஷ்டாங்கஹிருதயம் வடமொழியிலுள்ள ஒரு வைத்திய சாஸ்திரம்.
  21. 97. வயக்கரை மூசு, வைத்திய ரத்தினம்: இவர்கள் மலையானத்திலிருந்த பிரபல வைத்தியர்கள்.
  22. 107-108. இத்தீனம் என்பது காரணவ ஸ்தானத்தைக்
    குறிக்கிறது.
  23. 112. குடும்பதோஷி- குடும்ப காரியங்களுக்குத் துரோகம் செய்தவன்.