ரோமாபுரிப் பாண்டியன்
31
காரிக்கண்ணனாரிடத்தில் கரிகாலன் அதிக அளவு அன்பையும் மரியாதையையும் காட்டுவதைப் பாண்டியன் உணர்ந்து, தன் கழுத்திலே யிருந்த முத்தாரம் ஒன்றினைக் கழற்றிப் புலவருக்கு அணிவித்து மகிழ்ந்தான்.
"புலவரே! அரண்மனை சேர்ந்ததும் ஆள் அனுப்புகிறேன். வந்து எம்மைத் தமிழால் வாழ்த்துவீராக!" என்று கேட்டுக் கொண்டான் சோழநாட்டு வேந்தர் பெருந்தகை!
"வருகிறேன் அரசே! வாழ்க!" எனக் கூறி வணக்கம் தெரிவித்தார் புலவர்.
அப்போது, யானை மீதிருந்த பாண்டியன் பெருவழுதியின் கண்கள், காரிக்கண்ணனார் வீட்டுக்குள்ளே பாய்ந்தன. அதே சமயம், பாண்டியனுக்கு அண்மையில் புரவியில் அமர்ந்திருந்த வாலிப வீரனின் கண்களும் வீட்டுப்புறமாகத் தாவிச் சென்றன. புலவர் வீட்டு வாயிற்கதவின் ஓரமாக ஒளிந்து நின்றவாறு முழுநிலா முகத்தை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தாள் ஒரு வடிவழகி. தன்னைப் பிறர் பார்த்து விட்டனர் என்பதை உணர்ந்ததுதான் தாமதம்! உடனே உள்ளே தன்னையிழுத்துக் கொண்டாள். பாண்டிய மன்னன் பார்வை அந்தக் கதவோரத்தைவிட்டு மீள்வதற்குச் சற்றுத் தயங்கிற்று. கரிகாலனோ மற்றவர்களோ தன்னைப் பார்க்கிறார்களோ என்ற பயத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டான் பெருவழுதி!' "சே! என்னஇது" என்று தன்னைத் தானே இடித்துரைத்துக் கொண்டான். புரவியிலிருந்த வாலிபன், காரிக்கண்ணனாரையும் அவரது வீட்டையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு பவனியிலே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டான்.
எழுந்த நிலவு அறுந்து வீழ்ந்தது போல் மறைந்து விட்டது அந்தச் சுந்தரமுகம்! பவனியின் சிறப்பைக் கண்டு களித்தவாறு அது அந்தத் தெருவை விட்டு அகலும் வரையில் அங்கேயே நின்று கொண்டிருந்து விட்டுக் கடைசியாகத் தன் வீட்டுக்குள் நுழைந்தார், காரிக்கண்ணனார்.
நுழைந்தவர் "முத்துநகை! முத்துநகை!" என்று அன்பைக் குழைத்து பெயரை உச்சரித்து அழைத்தார்.
"அப்பா! என்ன வேண்டும்?" என்றவாறு அவள் ஓடி வந்தாள்.
ஆமாம்!; அவள்தான்! பவனி சென்ற மன்னர்களை ஒளிந்திருந்து நோக்கிய அந்தப் பருவக் கிள்ளைதான்!
அவளைக் கண்டதும் புலவர் "பார்த்தாயா முத்துநகை, உனக்கொரு முத்துநகை!" என்று தன் கழுத்திலே பாண்டியன் அணிவித்த முத்-