பொழுது விடிந்தது. புலவர் துயிலெழுந்தார். அசதியை உதறிவிட்டுப் படுக்கையிலிருந்து கிளம்பியவர் சுற்றுமுற்றும் பார்த்தார். வழக்கமாக அவரது படுக்கையின் அருகே வெள்ளிச் செம்பில் வைக்கப்பட்டிருக்கும் தெளிந்த நீராகாரத்தைக் காணவில்லை. எழுந்ததும் வாய் கழுவி நீராகாரம் அருந்துவது இளமை முதல், புலவர் பெருமான் பழகிக் கொண்ட ஒன்றாகும். அந்தப் பழக்கத்திற்கு இத்தனை நாளும் தடங்கல் ஏற்பட்டது கிடையாது. அன்று ஏற்பட்ட மாறுதல் அவருக்குத் திகைப்பை உண்டாக்கியது.
முத்துநகை படுத்திருந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அவள் இல்லை. தெருப்பக்கம் திரும்பினார். கதவு திறந்து கிடந்தது. எழுதும்போது மெய்மறந்து எழுத்தாணியைத் தலையிலேயே குத்திக்கொண்டது போன்ற அதிர்ச்சியால் துடித்தார்.
"முத்துநகை! முத்துநகை!" என வீடெங்கும் ஓடினார். தோட்டத்துப் புறம் சென்று சத்தம் போட்டார். அவரது படபடப்பு அடங்கவில்லை. கிணற்றடிக்கு ஓடினார். கிணற்றுக் கட்டையில் மர உருளை மட்டுமே தொங்கிக் கொண்டிருந்தது. கயிற்றுச் சுருளைக் காணவில்லை. "அய்யோ அம்மா!" என அழத் தொடங்கியவரின் கண்ணில் எதிர்த்தாற்போல் கயிறும் தோண்டியும் தோன்றவே ஆறுதல் அடைந்தார்.
மறுபடியும் உள்ளே வந்தார். அவள் படுத்திருந்த இடத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே நின்றார். ஒரு ஓலை. தலையணைக்கருகே தலை நீட்டிக்கொண்டிருந்தது. ஆத்திரமும் ஆவலும் ததும்ப அதை எடுத்துப் பார்த்தார். அவர் நா உதிர்த்த சொற்களை அவர் காதுகள் நம்பவில்லை. அவர் விழியில் பட்ட எழுத்துக்களை அவரது மொழியறிவு ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துணைப் பயங்கரமான வாசகங்களை அந்த ஓலை பேரிடியென முழங்கியது. மாரி மின்னல் போல் தோன்றிடச் செய்தது. கண்களை இறுக மூடிக்கொண்டார். இமை இடுக்குகளின் வழியாக நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன. தன்னையே நம்பாமல் மறுமுறையும் படித்தார்.