உள்ளடக்கத்துக்குச் செல்

மருமக்கள்வழி மான்மியம்/ஒரு கோட்டை வினாக்கள்‌

விக்கிமூலம் இலிருந்து

பிற்சேர்க்கை


1. நாஞ்சில் நாட்டு வேளாள சகோதரர்களுக்கு
ஒரு கோட்டை வினாக்கள்
[1]

குறிப்பு: ஒவ்வொருவரும் கேள்விகளுக்கு விடை கண்டு மனச் சாக்ஷியைத் திருப்தி செய்துகொண்டால் போதுமானது.

1. ஓர் உத்தமமான மருமக்கள்வழிக் குடும்பத்தின் லக்ஷணங்கள் என்ன? நாஞ்சில் நாட்டில் எக்காலத்திலாவது அவ்வித குடும்பங்கள் ஏற்பட்டிருந்ததுண்டா?

2. குடும்பங்களின் நிலைமை முற்காலத்தில் எப்படி யிருந்தது? தற்காலத்தில் எப்படி யிருக்கிறது? பல குடும்பங்களின் சரித்திரங்களையும் ஆராய்ந்து விடை நிதானிக்க.

3. நாஞ்சில் நாட்டு வேளாளர்-மருமக்கள் வழிக்-குடும்பத்திற்கும் நாயர்-குடும்பத்திற்கும் வித்தியாஸம் உண்டா?

4. நாஞ்சில் நாட்டார் ஆதிகாலந்தொட்டே மருமக்கள் வழியை அனுசரித்து வருகிறார்களா அல்லது இடைக்காலத்தில் அதைக் கைக்

கொண்டிருப்பவர்களா? சரித்திர ஆதாரத்துடன் விடை காண்க.

5. தம் தரவாட்டு க்ஷேமமொன்றையே முக்கிய ஜீவித நோக்கமாகக் கொண்டு உழைத்துவரும் காரணவர்கள் இப்பொழுது நாஞ்சில் நாட்டில் எத்தனை பேர் இருக்கக்கூடும்?

6. பொதுவாக ஒரு காரணவன் இறக்கும்போது குடும்பத்தின் செல்வ நிலை எப்படியிருக்கிறது? அவன் குடும்ப பரணம் கையேற்ற காலத்தில் இருந்ததைவிட விருத்தி யடைந்திருக்கிறதா? அல்லது மோசமாயிருக்கிறதா? காரணம் என்ன?

7. தகப்பனால் முன்வந்திருக்கும் மக்கள் அதிகமா? அல்லது காரணவனால் முன் வந்திருக்கும் மருமக்கள் அதிகமா? ஒவ்வொன்றிலும் நூற்றுக்கு எத்தனை வரும்?

8. நாஞ்சில் நாட்டில் பெரும்பாலாரும் தகப்பனுடைய ஊரில் வீடுங் குடியுமாயிருக்கிறார்களா? அல்லது தங்கள் காரணவன் குடும்ப வீட்டில் இருக்கிறார்களா?

9. குடும்ப முதலைக் கறம்பி மக்களுக்குக் கொடுக்கும் காரணவர்களின் தொகை அதிகமா? அவ்வாறு கொடுக்காதவர்களின் தொகை அதிகமா?

10 வியவகார மில்லாத குடும்பங்கள் நூற்றுக்கு எத்தனை வரும்?

11. காரணவனும் அதந்திரவர்களும் ரம்மியமாக இருக்கிற குடும்பங்கள் ஏதாவது இருக்கிறதா?

12. நாளுக்குநாள் பாகப் பிரமாணங்கள் அதிகப்பட்டுக்கொண்டு வருகிறதா? அல்லது குறைந்து கொண்டு வருகிறதா?

13. நூறு வருஷத்திற்கு இப்புறம் பாகமாகாத குடும்பங்கள் எத்தனை வரும்?

14. ஒருவனுக்கு மனைவி மக்கள்மீது அன்பு அதிகமாயிருக்குமா? அல்லது மருமக்கள்மீது அன்பு அதிகமாயிருக்குமா?

15. குடும்பத்தைப் பொறுத்துள்ள காரணவனது கடமைக்கும் அவனுக்கு இயற்கையாக மக்கள் மீது அமைந்துள்ள அன்பிற்கும் போராட்ட மேற்படுமாயின், ஜெயிப்பது பெரும்பாலும் எதுவாயிருக்கக் கூடும்? அன்பா? கடமையா?

16. காரணவ னொழிந்த மற்றப் பேர்கள் சம்பாதிக்கும் பொருளைக் குடும்பப் பொது முதலோடு சேர்ப்பது உண்டா? சேர்ப்பதில்லையாயின் காரணமென்ன?

17. பொதுவாக நமது முன்னேற்றத்திற்கு மருமக்கள்வழி அனுகூலமாயிருக்கிறதா? பிரதிகூலமாயிருக்கிறதா?

18. 'நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மிய'த்தால் தெளிவாகுந் தோஷங்கள் உண்மையானவைகளா? அல்லவா? அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டுவது அவசியமல்லவா?

19. உள்ளெலலாம் அழுகிக் கொழுகொழுத்த முழுப்பூசணிக்காயா அல்லது அழுகாத நல்ல

காயின் ஒரு துண்டா நமக்குப் பிரயோஜனமாவது?

20. பக்கக் கன்றுகள் தாய்வாழையைச் சுற்றி ஒன்றாக நின்றால் நன்றாய்க் குலைத்துப் பயன் தருமா ? அல்லது அவற்றைத் தனித் தனியா யெடுத்து வைத்துப் பாதுகாத்தால் அவ்வாறு பயன் தருமா? நாறு நடுவதில் முதலைக் குறைத்து வைத்து நடவேண்டும் என்பதன் கருத்து என்ன?

21. ஒரு பழைய வீடு; கூரை பிரிந்து கிடக்கிறது; சுவர் மலந்து நிற்கிறது; தளம் அவையான் அறுத்துப் பொந்தும் புடையுமாக இருக்கிறது: தேள், நட்டுவக்காலி, பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் குடும்பத்தோடு குடியேறியிருக்கின்றன: இந்த வீட்டைப் பழுது பார்த்து முட்டுத் தட்டுகள் கொடுத்து நாம் வாசம் செய்தல் நல்லதா? அல்லது அடியோடே மாற்றிவிட்டு, காலரீதிக்கு ஏற்றபடி வீடு கட்டி வாசம் செய்தல் நல்லதா?




  1. ஒரு கோட்டை என்பது இருபத்தொரு மரக்கால் கொண்ட முகத்தலளவை. இது நாஞ்சில்நாடு, திருநெல்வேலிப் பிரதேசங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இருபத்தொரு கேள்விகள் அடங்கியிருப்பது கருதி இவ்வினாக்களின் தொகுதி 'ஒரு கோட்டை வினாக்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வினாக்கள் தோன்றிய விவரம்பற்றி இந்நூல் முன்னுரையில் (பக்-19) கூறியுள்ளது காண்க.