உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலித்தொகை 2011.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலித்தொகை - பாலைக் கலி

31


துணிபுநீ செலக்கண்ட ஆற்றிடை அம்மரத்து
அணிசெல வாடிய அம்தளிர் தகைப்பன;
எனவாங்கு,
யாம் நிற்கூறவும் எமகொள்ளாய் ஆயினை:
ஆனாது, இவள்போல் அருள்வந் தவை காட்டி 20

மேல்நின்று மெய்கூறும் கேளிர்போல் நீசெல்லும்
கானம் தகைப்ப செலவு."

நீ பிரித்து போகக் கருதியுள்ளாய் என்பதை அறிந்த உன் மனைவி, நீ பிரிந்தவிடத்து அப்பிரிவுத் துயர் தாங்க மாட்டாது வருந்தும் தன்னிடத்து இரக்கம் காட்ட வேண்டும் என்ற அறநெறி மறந்து, தன்னைப் பழி தூற்றும் அண்டை வீட்டு மகளிரின் பழிச்சொல் கேட்க நாணியும், நீ கடந்து செல்ல வேண்டிய நீண்ட காட்டு வழி, மழை பெறாது காய்ந்து போகும் கொடுமையை நினைந்தும், உள்ளத்தில் துயர் மிகுதலால் உடல் தளர, முன்கையில் கிடக்கும் வளைகள் தாமே கழன்று போகவும், கண்ணிமைகளில் நீர் நிறைந்து தேங்கவும், தாங்க இயலாத காம நோயால் நெற்றி தன் பேரழகை இழக்கவும், இவற்றுள் எதையும் எண்ணிப்பாராது கடமையே கருத்தாய்ச் செல்லத் துணிந்து நிற்பவனே! நான் கூறுவதைக் கேள்.

'உன்னையே உயிராக உடைய இவள், நீ போய் விட்டால் உயிர் வாழாள் என்று பலப்பல கூறி, ஏற்ற காலம் அறிந்து வணங்கி வேண்டிக்கொள்ளவும். என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டிலை, ஆனால், உன் உள்ளம் ஊக்கிய அக்காட்டு வழியில் நீர் வற்றிப்போன சுனைகளில் இலைகளோடே காய்ந்து சருகுபட்டு அழகிழந்து கிடக்கும் மலர்கள், 'நீர் நீங்க யாம் வாடியதுபோல், நீ நீங்க, உன் மனைவியும் உயிரிழந்து போவாள்' எனக் கூறாமல் கூறித் தடை செய்துவிடும்!'

'நீ இவளை விரைவில் பிரிந்து விடுவையாயின் அழகிய இவள் உறுப்புக்கள் அழிந்துவிடும் என, நீ ஏற்கும் வகையில் பலப்பல கூறி நான் வேண்டிக்கொள்ளவும், அதை நீ உணர்ந்திலை. ஆனால், நீ செல்லும் நீண்ட அவ்வழியில் தான் ஏறிப்படர்ந்த மரம் வாடி அழிந்து விடுவதால், அதைத் தழுவமாட்டாது தரையில் வீழ்ந்து கிடக்கும் மலர்க்கொடி, 'என் பற்றுக்கோடாய் விளங்கிய மரம் வீழ நான் வாழ்விழந்தது போல், உன்னைப் பிரிந்த உன் காதலியும் வாழ்விழப்பாள்' எனக் கூறாமல் கூறித்தடை செய்துவிடும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலித்தொகை_2011.pdf/32&oldid=1689638" இலிருந்து மீள்விக்கப்பட்டது