உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மருதகாசி-பாடல்கள்/உழவும் தொழிலும்

விக்கிமூலம் இலிருந்து
திரைக்கவித் திலகம்

கவிஞர் அ. மருதகாசி

பாடல்கள்







உழவும் தொழிலும்

சுந்தரி சவுந்தரி நிரந்தரியே!
சூலி யெனும் உமையே.குமரியே!  (சுந்தரி)
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே!
அமரியெனும் மாயே

                பகவதி நீயே
                அருள்புரிவாயே
                பைரவித் தாயே
                உன் பாதம் சரணமே  (சுந்தரி)

சீலமும் வீரமும் சீரும் செல்வமும்
சேர்ந்த கலை ஞானம்

               தானம் நிதானம்
               மாதரின் மானம்
               காத்திட வேணும்
               கண் காணும் தெய்வமே  (சுந்தரி)


                                                   தூக்கு தூக்கி—1954

இசை : G. ராமநாத அய்யர்
பாடியவர்கள்  : T. M. சௌந்தரராஜன்
P. லீலா குழுவினர்

ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!... ஏ... ஏ...
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!...ஆ...ஆ...
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லை!

பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே-பயிர்
பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே!-நாம்
க்ஷேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே-இந்த
தேச மெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே!....(ஏர்)

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக-அது
நெல் மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக்கட்டாக-அடிச்சு
பதரு நீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! (ஏர்)

வளர்ந்து விட்ட பருவப்பெண் போல் உனக்கு வெட்கமா?-தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா-இது
வளர்த்து விட்ட தாய்க்குத்தரும் ஆசை முத்தமா?என்
மனைக்கு வரக் காத்திருக்கும் நீ என் சொத்தம்மா! (ஏர்).

                        

பிள்ளைக் கனியமுது-1958



இசை:K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. சௌந்தரராஜன்

பொன்னு வெளையிற பூமியடா-வெவசாயத்தே
பொறுப்பா கவனிச்சுச் செய்யிறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு-எல்லாம்
நன்மைகளும் நாடி வந்து கூடுதடா...!

(பாட்டு)



மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுது போடு சின்னக்கண்ணு-பசுந்
தழையெப் போட்டுப் பாடுபடு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சிடிச் சம்பா பாத்து வாங்கி வெதை வெதைச்சு
நாத்தைப் பறிச்சு நட்டுப் போடு சின்னக்கண்ணு- தண்ணியே
ஏத்தம் புடிச்சு எறைச்சுப் போடு செல்லக்கண்ணு ,
கருதெ நெல்லா வெளையவச்சு மருதெ சில்லா ஆளெவெச்சு
அறுத்துப்போடு களத்து மேட்டிலே சின்னக் கண்ணு நல்லா
அடிச்சுத் தூத்தி அளந்து போடு செல்லக்கண்ணு!

பொதியெ ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருதுநகர் வியாபாரிக்கு சின்னக் கண்ணு-நீயும்
வித்துப் போட்டுப் பணத்தை எண்ணு செல்லக்கண்ணு
சேத்த பணத்தைச் சிக்கனமா செலவு பண்ணப் பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு சின்னக்கண்ணு அவுங்க
ஆறை நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு.

                     மக்களைப் பெற்ற மகராசி-1957

இசை :K. V. மகாதேவன்
பாடியவர்:T. M. சௌந்தரராஜன்



தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை)

ஆடியிலே வெத வெதைச்சோம் தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம் (தை)

கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை)

முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம் (தை)

தை பிறந்தால் வழி பிறக்கும்-1958

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: ஜிக்கி & குழுவினர்

விவசாயி! விவசாயி!
கடவுள் என்னும் முதலாளி!
கண்டெடுத்த தொழிலாளி! விவசாயி! (விவசாயி)

முன்னேற்றப் பாதையிலே மனசை வைத்து
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி! (விவசாயி)

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்!
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்!
உயரும் உன்மதிப்பு அயல் நாட்டில்! (விவசாயி)

கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெருகாதோ சாகுபடி? (விவசாயி)

இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி!
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேணும் எங்கும் ஒரே சின்னக்கொடி! -அது
பஞ்சம் இல்லையெனும் அன்னக் கொடி! (விவசாயி)


விவசாயி-1967



இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

கெஜல்

ஒற்றுமையின் சங்கநாதம் முழங்குதே! அது
வெற்றி வெற்றி என்ற சொல்லை வழங்குதே!

பாட்டு
பாடுபட்டால் பலனை யாரும்
பார்க்கலாமே கண்ணாலே!
பாலைவனம் உருமாறிடுமே
பசுஞ்சோலை போல தன்னாலே!

காடுமேடெல்லாம் நாடுநகரமாய்
ஆவதும் எதனாலே?
மாட மாளிகை கூட கோபுரம்
வளர்வதும் எதனாலே?
ஒடாகத் தேய்ந்த போதும்
உணவின்றிக் காய்ந்த போதும்
மாடாக உழைப்பவர் தொழிலாலே
இந்த மாநில மேலே! (பா)

நெத்தி வேர்வையை நிலத்தில் சிந்தினால்
நீர்வளம் உண்டாகும்!
முத்து முத்தாக முப்போகம் விளையும்
நெற்பயிர் உருவாகும்!
கொத்தாது பஞ்சமும் நம்மை!
குறையாது வாழ்வினில் செம்மை!
சொத்தாகச் சேர்ந்திடுமே நன்மை!
இது அனுபவ உண்மை. (பா)

வாழவைத்த தெய்வம்-1959


இசை: K. V. மகாதேவன்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்

கொத்துமல்லி பூபூக்க கொடிகொடியாய் காய்காய்க்க!
கொத்துக் கொத்தாய் நெல்விளையும் சீமையிது! நம்ம
குறைதீர்க்கும் பொன்விளையும் பூமியிது!

வாழைமடல் விரிய மண்ணிலே குலை சாய!
வந்தாரை வாழவைக்கும் சீமையிது!-நம்ம
மனசுபோல் பொன் விளையும் பூமியிது!

வாய்க்கால் கரைபுரள வயல்களிலே மீன்புரள!
வற்றாத வளம் கொழிக்கும் சீமையிது!-எதை
நட்டாலும் பொன் விளையும் பூமியிது!

கண்ணிலே கனிவிருக்க கருத்தினிலே துணிவிருக்க!
எண்ணத்தால் உயர்ந்தவங்க சீமையிது! உலகில்
எந்நாளும் பொன்விளையும் பூமியிது!

அநியாயம் செய்பவரை அஞ்சாமல் எதிர்த்து நின்று
தன்மானம் காத்துவரும் சீமையிது! -பெற்ற
தாயாகும் பொன்விளையும் பூமியிது!

பொன்னு விளையும் பூமி-1959


இசை : ரெட்டி
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்

                                                (தொகையறா)
நாம் பொறந்த சீமையிலே
பூமி செழிப்பாச்சி-முப்
போகம் வெளஞ் சாச்சு-இல்லையென்ற பேச்சே
இல்லாமல் போச்சு-இனி எந்நாளும் நமக்கு
                                                திரு நாளுமாச்சு?

இனி
பஞ்சப் பாட்டு பாடாமெ
கஞ்சிக்காக வாடாமெ
நஞ்செ புஞ்செ நல்ல ராசி தந்தது-பலன்
நம்ம வீடு தேடியோடி வந்தது!

காலை முதல் மாலை வரை கஷ்டப்பாடு பட்ட நாங்க
கனவு கண்ட தான்ய லெட்சுமி தாயே-எங்க
கவலை தீர வந்த தேவி நீயே!

பொங்கல் விழா கொண்டாட
செங்கரும்பும் வாழைத் தாரும்
மஞ்ச கொத்தும் இஞ்சி கொத்தும் பூவும்-நாம
சந்தையிலே வாங்கி வரப் போவோம்!

பிள்ளைகளின் வாயினிக்க
வெண் பொங்கல் பால் பழம்
பெரியோருக் கெல்லாம் தரவேணும் தாம்பூலம்!

அள்ளி அள்ளி நெல்லை யெல்லாம்
அன்பாக வழங்கு வோம்
ஆடுகளும் மாடுகளும்
பெருக என்று முழங்குவோம்--
பொங்கலோ! பொங்கல்.  (இனி)


குடும்ப கௌரவம்-1958


இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்



பெண்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல
கலைகளிற் சிறந்த தையற் கலை! (கண்)

ஆண்: பெண்ணின் அழகைப் பெருக்கியே காட்டும்
உன்னதமான உருவம் உண்டாக்கும்(கண்)

பெண்: படிக்காதவரை பீ.ஏ., எம் ஏ.
பட்டதாரி போல் மாற்றிவிடும்!-இது
பட்டதாரி போல் மாற்றிவிடும்-புது
சட்டைக் கார தொரை யாக்கிவிடும்(கண்)

ஆண்: பண்ணை வேலை செய்யும் பெண்ணையும்
பாரிஸ் லேடி யாக்கி விடும்-இது
பாரிஸ் லேடி யாக்கி விடும்-
படித்தவள் போலே காட்டிவிடும்!

பெண்: கிழவர்கள் தம்மை குமரர்களாக்கி
கிண்ணாரம் போடச் செய்திடுமே!

ஆண்: கிழவிகள் தமையும் குமரிகளாக்கி
கேலி பேசவும் செய்திடுமே!

பெண்: ஆடும் மாடும் மேய்ப்பவர் கூட
அணியும் மைனர் புஷ் கோட்!

ஆண்: இது-ஆடும் ராணி, இன்னிசை வாணி
போடும் ஹைனெக் ஜாக்கெட்!

பெண்: இது புஷ்கோட்!

ஆண்: இது ஜாக்கெட்!

இருவரும்: கண்ணைக் கவரும் அழகுவலை-பல
கலைகளிற் சிறந்த தையற்கலை!
மின்னும் துணிகள் பல வகையாலே
வித விதமான உடைகள் உண்டாக்கி(கண்)


சுகம் எங்கே-1954


இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண்: தக்தினதீன் தினதீன் தக்தினதீன்!
பெண்:பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: நிலைமாறுமா?
பஞ்சத்தினாலே படும் சஞ்சலம்தானே
பறந்தோடுமா
காலம் ரொம்பக் கெட்டுப்போச்சு ரேஷனுமாச்சு!
ரேஷனுமாச்சு!
கல்லோடு மண்ணை நாம் சாப்பிடலாச்சு!
நாம் சாப்பிடலாச்சு!
காறிப்போன சோளம் வாங்கும் காலமும் ஆச்சு!
காலமும் ஆச்சு
பசி தீருமா?
ஆண்: தக்தினதீன்!
பெண்: ஹா...
பசி தீருமே!
பாடுபட்டா லேபஞ்சப்பேயும் தன்னாலே பறந்
தோடுமே!
ஏர்பிடித்தே சேவை செய்தால் ஏது பஞ்சமே?
ஏதுபஞ்சமே !
எந்தநாடும் உணவுக்காக நம்மைக் கெஞ்சுமே!
நம்மைக் கெஞ்சுமே!
பெண்: கந்தல் ஆடைகட்டி வாழும் காலம் மாறுமா?
காலம் மாறுமா?
கள்ளச்சந்தைக்காரர் செய்யும் தொல்லை தீருமா!
தொல்லை தீருமா?
துயர் தீருமா?

ஆண் : தக்தினதீன்!
பெண்: துயர்தீருமே!
சோம்பலில்லாமே தினம் பாடுபட்டாலே சுகம்
நேருமே!
கட்சி பேசி கலகம் செய்து திரிந்திடாமலே!
திரிந்திடாமலே!
கடமையோடு தொண்டு செய்தால் கஷ்டம்
நீங்குமே! கஷ்டம் நீங்குமே!
ஆட்சியை குறைகூறுவதால் ஏதுலாபமே?
யாவருமே சேர்ந்து நன்றாய் தன்னல மில்லா
சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!
பெண்: எந்நாளுமே!
All : சேவை செய்வோமே! சேவை செய்வோமே!


ராஜாம்பாள்-1951


இசை : ஞானமணி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்
ஜிக்கி குழுவினர்

ஆடுறமாட்டை ஆடிக்கறக்கனும்!
பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்!
அறிவும் திறமையும் வேணும்!-எதுக்கும்
அறிவும் திறமையும் வேணும்!  (ஆ)

காடுமேடாகத் தரிசாகக் கிடந்த மண்ணு! நெற்
களஞ்சியமானது எப்படியென்று எண்ணு!-அது
பாடுபடும் விவசாயிகள் திறமையினாலே!
பலனுண்டு நாமிதை உணர்ந்து நடப்பதனாலே!

மண்ணோடு மண்ணாக மங்கிக்கிடக்கிற பொன்னு!
மங்கையர் அணியும் நகைகளாவதை எண்ணு!-அது
மின்னுவதெல்லாம் தொழிலாளி திறமையினாலே!-புது
மெருகு கிடைப்பது கையாளும் முறைகளினாலே! (ஆ)

மண்ணையும் பொன்னையும் போன்றவளேதான்
பெண்ணும்!-அவள்
மனசையறிந்தாலே வசப்படுத்தலாம் ஆணும்!-இதை
எண்ணிப்பாராமல் பேசுவதால் பலன் இல்லை!
-பெண்ணிடம்
இருக்கும் குறைகளை மாற்றுவது ஆண்களின் வேலை!

அறிவாளி-1963


இசை  : S.V. வெங்கட்ராமன்
பாடியவர் : T. M. சௌந்தரராஜன்


தொகையறா

கிழக்கு வெளுக்கவே இருளென்ற அழுக்கு விலகவே-சூரியன்
கிளம்பி விட்டான் வழக்கம் போலவே
உறக்கம் நீங்கியே எழுந்து உழைக்க வேணுமே
இந்த உலகெலாம் செழிக்கவே!

பாட்டு

பொழைக்கும் வழியைப் பாரு!
ஒழைச்சாதான் சோறு!
பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு!
எடுத்துத் திரியாதே! காசு பணம் சேரு!
ஓ ... ஓ ... ஓ

போடு சீரங்கி கரணம்போடு சீரங்கி-ஹை
ஆடுகின்ற அழகிபோல ஆடுசீரங்கி!...
புருஷனிடம் புதுப்பெண்டாட்டி காதை கடிப்பதெப்படி
பொறுத் திடாத மாமிரெண்டு பூசை கொடுப்பதெப்படி?
காட்டு சீரங்கி-செய்து காட்டு சீரங்கி!
ஓ ... ஓ ... ஓ

தொகையறா

ஏ....கண்ஜாடை காட்டும் கைகார ராஜா!
முன்னே வந்து நல்லாபாரு முள்ளில்லா ரோஜா!



பாட்டு

காசு இல்லாமே நடக்காது-ஐயா
காரியம் எதுவும் பலிக்காது!
பூசை பண்ணாட்டி அம்மன்தான்-இந்த
பூமியிலே வரம் கொடுக்காது!
ஓ ... ஓ ... ஓ

நீ-இருக்கும் இடந்தன்னிலே-லெஷ்மி
என்றும் வாசம் செய்வாள்!
சுரக்கும் சுவைப்பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழிசெய்யும் தாயே!


ஆசை அண்ணா அருமைத் தம்பி-1955


இசை  : K.V. மகாதேவன்
பாடியவர்: S.C. கிருஷ்ணன்