உள்ளடக்கத்துக்குச் செல்

இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 19

விக்கிமூலம் இலிருந்து
19
ல்ல காரியங்களைத் துவக்குவதற்கு, நாளையோ நட்சத்திரத்தையோ அல்லது ஆளுதவி, பொருளுதவியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. காந்தம் இரும்பை இழுப்பதுபோல், இந்த காரியங்களே தாங்கள் நிலைப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடிக்கும். பேசாமல் பேசி, பேசாமடந்தைகளையும் பேச வைக்கும். ஈயாத லோபிகளையும் வள்ளல்களாக்கும். நலமனைத்தும் வருவதற்கு காலமாகலாம். ஆனால் அவை காலாவதியாகாது. ஏனென்றால் நற்பணிகள் இறைவனின் திருமிகு அவதாரங்கள். அவற்றை வணங்காத முடி இல்லை. வாழ்த்தாத வாயில்லை. ஈயாத கரமில்லை. பூமியின் ஈர்ப்பு சக்தியைக் கடந்துவிட்டால் எந்த ஒரு பொருளும், எப்படி மேலோங்கி மேலோங்கிப் போக முடியுமோ, அப்படி நற்பணிகளை நம் சுயவிருப்பு—வெறுப்பின் ஈர்ப்புக்கு அப்பால் கொண்டு போய்விட்டால் அவை ‘அப்பல்லோ’ வேகத்தில் மேலோங்கும். “மண்ணுள்ளார் பண்ணிடும் புண்ணியக் குறைவுகளை” படம்பிடித்து அல்லவை போக்கி நல்லவை சிறக்க அந்த நல்ல காரியங்களே காரணங்களாகவும் மாறும்.

இந்த அரிய உண்மையை அறிந்துகொண்டவள் போல் மணிமேகலை பம்பரமாகச் சுழல்கிறாள். இப்போது இரண்டு தொழிற்கூடங்கள் இயங்குகின்றன. ஐந்து தையல் மிஷின்கள் இருக்கின்றன. உணவுப் பொருட்கள் வண்டி வண்டியாக வருகின்றன. எல்லோரும் அந்த இளம் பெண்ணைத் தாயாகப் பாவித்து ‘அம்மா’ என்கிறார்கள். வேலைக்காரர்கள் சொல்லும் விதத்தில் அல்ல; பெற்ற பிள்ளைகள் விளிக்குமே அப்படி!

அன்னை மார்க்கரெட் அருளில்லம் என்ற புதிய பெயர்ப் பலகையில் அந்த மாதாவின் படம் மகிழ்ச்சியுடன் சிரிக்கிறது. அரசாங்க அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும், சமூக நிறுவனங்களையும் சந்தித்து இல்லத்தின் நிலையை எடுத்துக் கூறி, அதை இப்போது எல்லோரும் அனிச்சையாகவே பாராட்டும்படி செய்து விட்டாள். தனது நகைகளை விற்று கணவன் வீட்டில் கிடைத்த பணத்துடன் சேர்த்து சகோதரர்களுடன் போராடிக் கிடைத்த கிராமத்துச் சொத்தையும் இதனுடன் கூட்டி எல்லாவற்றையும் இந்த இல்லத்தின் பெயருக்கே அவள் எழுதி வைத்துவிட்டதால் பத்திரிகைகள் அவளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றன.

அவளது முன்னுதாரணம் பல பின்னுதாரணப் பேர்வழிகளையம் ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அரசு மான்யம் கூடியது. சமூக நிறுவனங்கள் தாராளம் காட்டு கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக ஏழை எளியவர்கள் ‘எங்கள் இல்லம்’ என்கிறார்கள். காமாட்சியின் கணவர் மூலம் நடிக நடிகையர்கள் ‘நல்ல’ நன்கொடை கொடுத்தார்கள். சொன்னபடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஊரில்கூட அண்ணனும், தம்பியும் பெருமையோடு பேசிக் கொள்கிறார்களாம். “எங்க மணிமேகல சின்ன வயசிலேயே இப்படித்தான். பிறத்தியார் கஷ்டப்படுறத பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டாள்” என்று அண்ணிக்காரிகட சொல்கிறாளாம். சொல்லட்டும்! அவர்கள் சொன்னதால் அவள் குளிர்ந்துவிடவும் இல்லை. உயிலைக் காட்டிய பிறகும், ஒரு மாதம்வரை முரண்டு பிடித்த அண்ணன் தம்பிகள்மீது, அவர்களின் அன்றைய போக்கை நினைத்து கொதிக்கவும் இல்லை. உறவின் உள்ளர்த்தத்தைப் புரிந்தவளாய் மனித நேயத்தின் பெருஞ்சக்தியை அறிந்தவளாய் சேவைக்கு ஈடு தெய்வம் ஒன்றே என்ற பேரானந்த அனுபவத்தில் தேர்ந்தவளாய்த் திகழ்கிறாள்.

காலம் மாறியதோ என்னவோ அந்த காலத்தின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் போனவர்கள் கூட இப்போது எழுந்து நிற்கிறார்கள். அந்த முன்னாளைய நோயாளிகள் இங்கே சஞ்சலமற்று கழிவிரக்கம் இல்லாமல் வாழ்கிறார்கள்.

மணிமேகலையை வெங்கடேசன் அடிக்கடி வந்து பார்க்கிறான். அவளின் பிரச்னைகளை தீர்த்து வைத்தவன். இப்போது தன் பிரச்னைகளின் தீர்வுக்கு அவளை நாடுகிறான். எல்லோரையும்போல அவனும் அந்த இளம் பெண்ணை ‘அம்மா’ என்கிறான். அவளுக்கு பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் வாங்க வந்த ஜெயராஜ்கூட அவளைக் கையெடுத்து கும்பிட்டுவிட்டுப் போனான். அவள் மாமனார் இங்கே வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டுப் போனார். ஊரில் ரத்தினம் அவளுக்கு ‘வரவேற்பு விழா’ வைக்கப் போனான். அவள்தான் ‘அந்தப் பணத்தை இங்கே அனுப்பு இப்போதே அனுப்புக’ என்று சொல்லிவிட்டாள். நம் கூத்து கோவிந்தன் இந்த இல்லத்தில் இருந்த முன்னைய நோயாளியும் இன்றைய அழகியுமான ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுராந்தகத்தில் குடியிருக்கிறான். ‘அல்லி அரசாணியையும்’ ‘பவளக்கொடியையும்’ ‘மதுரை வீரனையும்’ கூத்தாகப் போட்டுக் கொண்டிருந்தவன், இப்போது மணிமேகலையின் அறிவுரைப்படி நோயாளி என்றால் இளக்காரமா? ‘கிழவனும் ஒரு காலத்தில் வாழ்ந்தவனே’ ‘மனைவி என்ன மண்ணாங்கட்டியா?’ ‘உனக்கும் நோய் வரலாம்’ ‘ஈயாதவன் இருந்தென்ன போயென்ன’ என்ற தலைப்புக்களில் பல கூத்துகளை போடோ போடென்று போடுகிறான். காசுக்குக் காசு! சீர்திருத்தத்திற்கும் சீர்திருத்தம்! என்றாலும் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கை அந்த அருளில்லத்திற்கு கொடுத்து விடுகிறான். சமீபத்தில், ‘இப்போது கண்ணகி முக்கியமல்ல. கற்பழிக்கப்பட்ட பெண்களே’ என்ற தலைப்பில் அவன் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்து வில்லனாகவும் நடித்த நாடகம் ஒன்று சக்கை போடு போடுகிறது. அரசாங்கத்தின் விளம்பர இலாகா அந்த நாடகத்தை வாங்கி அவனுக்கு ‘ராயல்டி கொடுக்கப் போவதாகக்கூட கேள்வி. அதை அவசரப்படுத்துவதற்காக மணிமேகலையிடம் ஒரு போன் போட்டு சொல்லு தங்கச்சி’ என்றான். அவளோ “நல்லதுக்கு சிபாரிசு செய்தால் சிபாரிசு செய்யப்படுகிறது எல்லாம் நல்லதுன்னு ஆயிடும். அதனால வாரது அது பாட்டுக்கு வரட்டும்” என்று சொல்லிவிட்டாள்.

என்றாலும், மணிமேகலை ஒரு பற்றற்ற யோகியாகி விட்டாள் என்றும் சொல்ல முடியாது. ஆயிரம்பேர் அவளை அம்மா என்று சொன்னாலும் தன் ஒன்பது வயது மகனிடம் இருந்து கடந்த இரண்டு வருடமாக இந்த வார்த்தையை கேட்கவில்லையே என்ற ஆதங்கம் அப்பப்போ வருகிறது. கேட்பது கிடக்கட்டும். அவனைப் பார்க்கக்கூட இல்லையே?

இன்றும் அப்படித்தான்—

கணக்குப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலைக்கு திடீரென்று தன் மகனின் ஞாபகம் வந்துவிட்டது. எவரும் நினைவு படுத்தாமலேயே வந்து விட்டது. தாய்மையின் தாபம் அவளைக் கொல்லாமல் கொன்றது. கணக்குப் புத்தகத்தை மேற்கொண்டு பார்க்க முடியவில்லை. அதை மூடிவிட்டு ‘அம்மாவின்’ படத்தைப் பார்க்கிறாள். பிறகு தற்செயலாக இந்திய அரசாங்கத்தின் தகவல்—ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட மாதக் காலண்டரைப் பார்க்கிறாள். சர்வதேச குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு பல குழந்தைகளின் படங்களை, பலவித கோணங்களில் காட்டும் புதுமையான காலண்டர். மணிமேகலை அந்த மாத இதழின் ‘குழந்தையைப்’ பார்க்கிறாள். எல்லோரும் பந்து விளையாடும்போது தான் மட்டும்—விளையாடுவது கிடக்கட்டும், நிற்கக்கூட முடியலியே என்று ஏங்கும் ஒரு முடச் சிறுமியின் படம் அது. மணிமேகலை குழந்தை மாதிரி ஒவ்வொரு தாளாகப் புரட்டுகிறாள். கஞ்சியில்லாக் குழந்தை. வாடிய குழந்தை இடையிடையே வண்ணச் சிரிப்புதிர்க்கும் குழந்தை. இறுதியில் யாருமே இல்லை என்று கைவிரித்துக் காட்டும் பரிதாபக் குழந்தை!

மணிமேகலைக்கு கண்ணீர் வருகிறது. திடீரென்று ஒரு எண்ணம் வருகிறது.

என் பிள்ளை நன்றாய்த்தான் வளர்கிறான். ஆனால் இங்கே—இந்த காலண்டரில்—காலண்டர் கிடக்கட்டும், இந்த இல்லத்தில் இருக்கின்ற பல இளம்பெண்கள், வீட்டில் விட்டுவிட்டு வந்த தங்கள் குழந்தைகளை நினைத்து தன்னிடம் எத்தனை தடவை அழுதிருக்கிறார்கள். ‘என் பிள்ளையைப் பார்க்க முடியலியே’ என்று புலம்பவில்லை. என் பிள்ளையை அங்கே கவனிக்க ஆளில்லையே’ என்ற இயலாமைப் புலம்பல்கள். எதுவும் செய்ய முடியாத நிர்க்கதியான நெஞ்ச வெடிப்புக்கள்!

திடீரென்று அவள் மனதில் இன்னொரு செயல் திட்டம் வருகிறது.

பூந்தமல்லிக்கு அருகே மதுரவாயல் என்ற சாலையோர கிராமத்தில் திருமதி லில்லி பிரபாகர் என்ற நிஜமான சமூக சேவகி குழந்தைகள், காப்பகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம். நாடெங்கிலுமுள்ள பெரு வியாதிக்காரர்களின் பிள்ளைகளைக் கொண்டுவந்து நாள்தோறும் மும் முறை உணவளித்து, கல்வியளித்து, நற்பணி செய்வதாகக் கேள்வி. நாமும் ஏன் இந்த தாய்மார்களின் வசதியற்ற பிள்ளைகளைக் கொண்டு வந்து இதர அனாதைக் குழந்தைகளையும் கூட்டி வந்து ஒரு காப்பகம் கட்டக் கூடாது?

மணிமேகலை அந்த காம்பவுண்டுக்குள் வெற்றிடம் ஒன்றை நோக்குகிறாள். அவள் மனவெளிக்குள் ஒரு கட்டிடம் எழும்புகிறது. குழந்தைகள் குவிகிறார்கள். கட்டிடம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. மனவெளியில் இவை பரந்து விரிய விரிய அவளது சொந்த தாபம் குறைந்து குறைந்து ஒரு அனுவாக மாறுகிறது.

துரய வெண்துகில் ஆடையில் செவ்வரளிப் பூப்போல, சிவந்திப் பூ நிறம்போல, எளிமை அழகாக, அந்த அழகே கருணையாக பேனா பிடித்த சரஸ்வதி போல, அவள் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிந்தனை, சீக்கிரமாய் காப்பகமாய் உருவாகும் என்பதுபோல் டெலிபோன் மணி அடிக்கிறது.

மணிமேகலை எழுகிறாள்.


கங்கை


மலர் பிரிண்டர்ஸ் 044-8224803