உள்ளடக்கத்துக்குச் செல்

இன்னொரு உரிமை/காமதேனு

விக்கிமூலம் இலிருந்து

காமதேனு


லையில் ஒரு 'அம்பாரம்' புல்கட்டோடும், அதன் மேல் கவிழ்த்து வைக்கப்பட்ட மண் வெட்டி 'காம்பை' ஒரு கையில் பிடித்தபடியும் இன்னொரு 'கக்கத்திற்குள்' அகத்திக்கீரைக் கட்டை விலாவோடு சேர்த்தபடியும், முத்து லிங்கம் அந்த ஓலை வீட்டிற்குள் ஆவேசமாக வந்தான், மண்வெட்டியை அவன் தூக்கிப்போட்ட வேகத்தில் அது முற்றத்தில் பள்ளம் பறித்தது. வெள்ளை வெளேரென்று பனை நாரால் இருபுறமும் இறுக்கிக் கட்டப்பட்டதால், நடுவில் துருத்திக்கொண்டிருந்த பச்சை பசேலென்ற புல்கட்டு. மேளம் போலவே தோன்றியது. இதனால் தானோ என்னவோ கம்மாகரையில் உலா போட்ட புது பணக்காரப் பயல்கள் "என்னடா முத்துலிங்கம் தலையிலே மேளத்தைச் சுமந்துகிட்டு போறே, அதை வயித்துலல்லா தொங்கப் போடணும்" என்று கிண்டலும் கேலியுமாய் கேட்டிருக் கிறார்கள்.

புல்கட்டைட இறக்க முத்துலிங்கம் கைகளை அதன்மேல் 'போட்டபோது அந்தப் பயல்களின் கிண்டல் அவன் காதில் பலமடங்காய் இப்போது ஒலித்தது. நளினமாய் இறக்கப்போன புல்லை, இரண்டு கரங்களாலும் தூக்கிப் பிடித்து, பொத்தென்று போட்டான். போதாக்குறைக்கு மேளம் அடிப்பதற்கு முன்பாக அந்த மேளத்தைத் தடவிப் பார்ப்பார்களே-அந்த மாதிரியான தடவல் ஓசையோடு புல்கட்டு சத்தம் போட்டு கீழே விழுந்தது. அந்தச் சத்த அதிர்ச்சியில் 'செருவைப்' பக்கம் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்த கோழி 'கள்ளப்பிறாந்து' வந்துவிட்ட தாய் நினைத்து குஞ்சுகளுக்கு அபயக்குரல் கொடுத்து, அவற்றைத் தம் இறக்கைகளுக்குள் உள்வாங்கிக் கொண்டது. தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த கன்றுக்குட்டி, 'ம்மா...' என்றது. குங்குமச்சிவப்பான அதன் உடம்பில் ஆங்காங்கே தோன்றிய வெள்ளைப் புள்ளிக் கோலங்களும் அதன் மதர்ப்பான பார்வையும், கன்றுக்குட்டியை மான் குட்டி போலக் காட்டியது. முத்துலிங்கம் அதன் அருகே வழக்கம் போல் சென்று, அதன் முகத்தை நிமிர்த்தி மோவாயில் தடவி விடாமல் 'உஷ்' என்று தன்பாட்டிற்கு ஓர் உதட்டுப் பிதுக்கல் ஓசையை எழுப்பியபடி தொழுவத்தை ஒட்டிக் கட்டப்பட்ட திண்ணை மேட்டில் கேழ்வரகு, சோளம், தினை போன்ற தானிய வகைகளைத் திரித்து மாவாக்கும் 'திருவல்' மேல் போய் உட்கார்ந்தான்.

கீழே உள்ள அகன்ற வட்டக்கல்லின் மத்தியில் நேராக இருந்த இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்ட சின்ன வட்டக் கல்லின் மேல் ஒரு காலைத் தூக்கி வைத்தபடி தலையில் 'சிம்மாடு' போல் பாம்புப் பெட்டிமாதிரி வட்ட வட்டமாய் மடித்து வைத்திருர்த துண்டை எடுத்து நீளமாக்கி உதறினான். பிறகு அதனால் வேர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டான். தொழுவத்து கன்றுக்குட்டி "எனக்குப் புல் முக்கியமல்ல நீதான்" என்று சொல்லாமல் சொல்வதுபோல் புல்லும் அவனும் தனியாய்ப் பிரிந்தபோது, அது அவனையே பார்த்து, அவன் நடந்த இடம் நோக்கிப் பார்வையை நகர்த்தி இப்போது முகத்தை தெற்குப்புறமாய்த் திருப்பி "ம்மா, ம்மா" என்றது. 'பெரிய' ஓலை வீட்டில் 'பெருச்சாளி' பிடித்த காலை அழுக்கிப் பிடித்தபடி முடங்கிக் கிடந்த திருமலையம்மா, மகனுக்குக் கஞ்சி ஊற்றிக் கொடுக்கக் கும்பாவை எடுத்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள், மகன் புல்லை எடுத்து 'அளியில்' போடாமல் திருவல்மேல் உட்கார்ந்து இருப்பதை அதிசயமாகப் பார்த்தாள். பின்னர் நடுமுற்றத்திற்கு வந்து நின்ற படி, அவனிடம் கேட்டாள்.

"புல்லை எடுத்து கன்றுக்குட்டிக்குப் போட்டா என்னடா?"

"போட்டா போச்சு! என்ன அவசரம்."

"ஏண்டா ஒருமாதிரி இருக்கே!"

"ஒண்ணுமில்லே!"

"சரி... கஞ்சி குடிக்க வா!"

"கஞ்சியும் வேண்டாம், கிஞ்சியும் வேண்டாம்."

திருமலையம்மா, மகனையே பார்த்தாள். இப்போது 'பாரும்மா! உன் மகன் என்னைப் பார்க்கமாட்டேங் கிறான்' என்பதுமா திரி அவளிடம் முறையீடு செய்வதுபோல் கன்றுக்குட்டி "ம்மா... ம்மா..." என்று கத்தி தாயையும் மகனையும் மாறி மாறிப் பார்த்தது. அதன் வயிறு 'கொலுக்காய்' கிடப்பதைப் பார்த்தாள் திருமலையம்மா. உரக்கக கத்தினாள்.

"ஏய் கமலசுந்தரி எங்களா தொலைஞ்ச?"

அண்ணனை புல்கட்டோடு பார்த்ததும், வீட்டுக்கு வெளியே வேப்பமரத்தடியில் பதுங்கிக் கொண்டிருந்த கமலசுந்தரி, இருக்கவும் முடியாமல் எழுந்திருக்கவும் முடியாமல் தவித்தாள். "சீக்கிரமா தோட்டத்துக்கு வா... இரண்டு பேருமா சேர்ந்து புல் வெட்டினால், கொஞ்சத்தை விக்கலாம்"முன்னு அண்ணன் சொல்லிவிட்டு அதிகாலையிலேயே போய்விட்டான். அவளுக்கு ஏனோ போக மனமில்லை. அதுவும் 'ப்ளஸ் டூ' படித்துவிட்டு தோட்டத்துக்குப் பூய் பறிப்பதற்குப் போவதற்குப் பதிலாகப் புல் பறிக்கப் போக அவளுக்கு மனமில்லை. அண்ணனிடம் சொல்லவும் பயம், பொதுவாய் 'உம்' என்றாள். ஆனால் போகவில்லை.

இப்போது, அவன் முகத்தில் விழித்தால் பார்வையாலேயே எரிப்பான். எள்ளும் கொள்ளுமாய் வெடிப்பான். என்ன செய்யலாம்..."

தில்லையம்மாவின் சத்தம் கூடிக்கொண்டேயிருந்தது. 'கமலசுந்தரி, கமலசுந்தரி' என்று அவள் வேகவேகமாகக் கத்தியது. 'சுந்தரி கமலம் சுந்தரி கமலம்' என்று கூட ஒலித்தது. மகள்காரி எழுந்தாள், இன்னும் போகவில்லையானால் அம்மா அங்கேயே வந்து எட்டு ஊருக்குக் கேட்கும்படி கத்துவாள். கண்டபடி திட்டுவாள். திட்டு என்பது அவளுக்குப் புட்டுமா திரி, வயசுக்கு வந்த மகளாச்சே என்று கூடப் பார்க்கமாட்டாள்.

கமலசுந்தரி நகர்ந்து நகர்ந்து, நடந்து நடந்து, வீட்டிற்குள் காலடி வைத்தாள் அண்ணனைப் பார்க்காமல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு உள்ளே போகப் போனாள். பதுங்கிப் பதுங்கி வந்தவள்-அண்ணனின் பார்வை படாமல் இருப்பதற்காக தலையைச் சாய்த்து, கொண்டையால் முகத்தை மறைத்தபடி வந்தவள் ஆச்சரியப்பட்டாள். அவளை எதேச்சையாகப் பார்த்த முத்துலிங்கம் பேசாமல் இருந்தான். அவளை கோபமாகப் பார்க்காமல், குரோதமாகக் கேட்காமல் முற்றத்தில் வெட்டப்பட்ட மண்ணை விழுங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றிய மண்வெட்டியை அணில் மாதிரி பார்த்தான்! கமலசுந்தரி மகிழ்ச்சி தாங்கமுடியாமல் குதித்து நடந்தபோது அம்மாகாரி அண்ணணின் குறையைத் தீர்த்து வைத்தாள்.

"எங்களா போனே மூதேவி! உடம்பு மட்டும் வயசுக்கு வந்துட்டா போதுமாளா? வெளிலே என்ன பண்ணின? இந்தப் புத்தியால தான் ஒப்பன மூணு வயசிலே துள்ள துடிக்க விழுங்கிட்ட! இவன் கவர்னர் மவன்... என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். நீயாவது அந்த வாயில்லா ஜீவனுக்கு புல்லை எடுத்துப்போடேன்! நாம் மட்டும் சாப்பிட்டா போதுமா!"

கமலசுந்தரி அம்மாவை சட்டை செய்யாமல், புல் கயிற்றை அவிழ்க்கப் போனாள், இதற்குள் திருமலையம்மா சின்ன வீட்டிற்குள் போய், சோளக்கஞ்சியையும் வேகவைத்த அகத்திக்கீரையையும் கும்பாவில் கலந்து நான்கைந்து மிளகாய்களையும் உப்புக் கொத்தையையும் கையால் பிடித்தபடி மகனிடம் வந்தாள்.

"திருவோல விட்டு இறங்குல; இந்தா,"

"எனக்குக் கஞ்சி வேண்டாம்முன்னு ஒன்கிட்டே ஒரு தடவை சொன்னா போதாது?"

"இன்னிக்கு... ஒனக்கு என்னல வந்துட்டு....."

"இனிமே என்ன வரணும், என்ன ஊர், என்ன பயலுக...." நம்மால இனிமே ஒரு நொடிகூட இந்த ஊர்லே இருக்க முடியாது."

"என்னடா விசயம்?"

"சொன்னா நீ மட்டும் என்ன பண்ணிடப் போறே...."

"சொல்லித் தொலையில... ஏழா... கவுகண்ணி ... புல்ல ஏன் அளிக்கு வெளியே போடுறே... ஒழுங்கா போடு மூதேவி... ஏலே...முத்துலிங்கம் சொல்லுடா. அம்மாகிட்டே சொல்லாமல் யாருகிட்டே சொல்லுவ?"

முத்துலிங்கம் கைகள் இரண்டையும் முஷ்டிகளாக்கி அவற்றை ஒன்றோடு ஒன்று குத்த வைத்துக்கொண்டான், உதடுகளைப் பிதுக்கிக்கொண்டான். பிறகு கோபாவேசமாய் ஒப்பித்தான்.

"தோட்டத்துலே இருந்து நான் பாட்டுக்கு சிவனேன்னு இந்தச் சுமையோடு வரேன். மெட்ராசில் இருந்து அம்மன் குடைக்காக ஊருக்கு வந்திருக்கிறான்னுவ பாரு! சிவசைலமும், தங்கமுத்தும்.... இவன்களும படிச்சுட்டு வேலை வெட்டியில்லாம ஊர்ல காலித்தனமா சுத்துற மேலத் தெரு ராமய்யா மவனும்... மொச்சைக் கொட்டை மவன் பிள்ளை யாரும், சும்மா கரையிலே நின்னு, என்னைப் பார்த்து முகத்தை ஆட்டி ஆட்டி காட்டி இளக்காரமா சிரிச்சாங்க, அப்புறம் மெட்ராஸ் பயல் தங்கமுத்து பேண்ட் சட்டை போட்ட திமிர்ல "என்னடா மேளத்தைத் தலையிலே சுமந்துகிட்டுப் போறேன்'னு கேட்கிறான். என் தலைவிதி, இந்தப் பயலுக்கு நான் இளக்காரமா போயிட்டேன்!"

திருமலையம்மா கொதித்துக் கேட்டாள், அவள் போட்ட கூச்சலில் இரு காதுகளிலும் தொங்கிய தடயங்கள்" குதித்துக் குதித்து ஆடின.

"யாரு...ஊர்லே இருந்து ஆட்டுக்குட்டியை தூக்கிட்டுப் போய், சந்தையிலே வித்துட்டு மெட்ராசுக்கு ஓடுனானே... அதாண்டா... தெக்குத் தெரு கடாயை திருட்டுத்தனமா பிடிச்சுட்டு ஓடுன அந்தப் பயலா உன்னைப் பார்த்து இந்த மாதிரிக் கேள்வியை கேட்கிறான்? நீ அதுக்கு என்ன பதில் சொன்ன?"

"என்னத்த சொல்ல... என்னோட நிவமை அவனை அப்படிச் சொல்ல வைக்குது!"

"ஏமுலே பேசாம வந்த? இந்த உடம்ப வச்சுக்கிட்டு சும்மாதான் வந்தியாக்கும்... அந்த வந்தட்டி பய மவனே" நாக்குப் பிடுங்கிறது மாதிரி நாலு வார்த்தை கேட்காமல் பேசாமல் வந்துருக்கான் பாரு!"

"இந்தப் பயலுகளுக்கு சொல்லிக் காட்டப்படாது. செய்து காட்டணும். கடவுளா பார்த்துத்தான் அண்ணனை இந்த மாதிரி லெட்டர் எழுத வச்சுக்கிறார்... இனிைக்கே மெட்ராஸ் போகப் போறேன்... மளிகைக் கடை போட்டு, இல்லேன்னா கோணிக் கடை போட்டு, இந்தப் பயலுக கண்முன்னாலே பேண்டும், சட்டையும் உடுத்தி வரேன பாரு! நம்மளாலே ஒரு நொடிகூட இந்த ஊர்லே இருக்க முடியாது!" திருமலையம்மா அதிர்ந்துபோனாள்; ஆனால், அதை வெளியே காட்டிக்கொள்ளாமலே சுருதி குறைந்து பேசினாள்.

"கொசுவுக்குப் பயந்து கோட்டை கட்டணுமாக்கும்... அந்தப் பயல்... அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்தராத்திரி கொடை. பிடிப்பாங்கிறது மாதிரி அப்படிப் பேசிட்டான். விட்டுத் தள்ளு."

"செருக்கி மவன்" மேளக்காரன்லா சொல்லிட்டான்.!

"மேளம் அடிக்கிறதும் ஒரு தொழில் தானடா... நீ கூலிக்குக் கமலை அடிக்கலியா, உழவு உழ போகலியா, அது மாதிரி அதுவும் ஒரு தொழில்தாண்டா. விட்டுத்தள்ளு. சந்திரனைப் பார்த்து நாய் குலைச்சு என்னவாகும்?"

"என்ன ஆவுமோ! நான் சந்திரன் மாதிரி மின்னிக் காட்டப்போறேன்! என்னை அவங்க பார்த்துட்டு, வேட்டை நாய் மாதிரி குலைக்கப்படாது... சொறி நாய் மாதிரி குன்னிப் போகணும்."

திருமலையம்மா மகனை வாயகல, பல் விலகப் பார்த்தாள். அவன் பேச்சின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டாள். சுருள் சுருளான முடியோடு, மா நிற மேனியோடு, பெரிய மனிதத் தோரணையோடு, எலும்பும் தோலும் வேறு வேறானவை என்று சொல்ல முடியாதபடி, 'அந்த மனுசனைப்போலவே இறுகிப்போயும், எழில்பட்டும் தோன்றிய மகனையே திக்குமுக்காடிப் பார்த்தாள். இப்போ தான் அவனுக்குப் பால் கொடுத்தது மாதிரி இருக்குது. எப்படி வளர்ந்துட்டான். வளரட்டும்... ஆனால் வளர வளர புத்தி ஏன் கட்டையா போவுது? அவளுக்கு நெஞ்சு சுட்டது; உணர உணர வாய் சூடாகியது. மூத்த மகனைத் திட்டினாள் "அந்த நொறுங்குவான் குடும்பத்தைக் காப்பாத்துவான்னு அவனை காலே ஜ்ஜிலே படிக்க வைச்சேன். கடைசியிலே அவன் குடும்பத்தைப் பிரிக்கத்தான் படிச்சிருக்கான்."

இதுவரை பொறுமையாக இருந்த முத்துலிங்கம், இப்போது பூகம்பம்போல் வெடித்தான்.

“எம்மா என்னைப்பத்தி வேணும்னா பேசு! அண்ணனைப்பத்தி பேசினால் கெட்ட கோவம் வரும். பெரிசா படிக்கவச்ச மாதிரி பேசிறியே. கவர்ண்மெண்டு பணத்துலேதான் அவன் படிச்சான். கஷ்டப்பட்டு படிக்கிறவங்க வேலை கிடச்சதும், கஷ்டத்தை நீக்குறதுக்குப் பதிலாகக் கஷ்டப்பட்ட தங்கள் குடும்பத்தையே நீக்குற காலம் இது. பெரிய இடத்திலே பெண்ணை கட்டிக்கிட்டு, அப்பா, அம்மா குடும்பத்துகாரங்களை சின்ன இடமாய் நினைக்கிற காலம் இது. கீழத்தெரு பெருமாள்பாண்டி அப்பன் அவனோட ஆபீசுக்குப் போயிருக்கும்போது, அவரை வேலைக்காரன்னு அடுத்தவங்ககிட்டே சொன்னானாம். அந்த மாதிரியா நம்ம அண்ணன்? மாசா மாசம் இருநூறு ரூபாய் அனுப்பறான். நாலாயிரம் ரூபாய் சேர்த்துவச்சுக்கிட்டு, என்னை மெட்ராசிலே கடை போட கூப்பிடறான்... அவனைப் போயா இந்தக் கேள்வி கேட்கிறே?”

“உனக்கு அவன் உபகாரம் செய்யறதால அண்ணன். ஆனால், எனக்கு அவன் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் பிள்ளை. இதை மறந்திடாதல! ஒரு வருஷமா அவனை பார்க்கமுடியாம நான் படுற பாடு, உனக்கு என்ன தெரியும்? நான் பெத்த பிள்ளை என் கண்ணுக்குள்ளே நிக்கான். இந்தச் சமயத்திலே உன்னையும் விட்டுட்டு நான் எப்படிடா இருக்க முடியும்?”

“உன்னை யாரும்மா இருக்கச் சொல்றது? உன்னையும், தங்கச்சியையும் வரச்சொல்லித்தான் லெட்டர் போட்டான் மெட்ராசிலே ஒரே குடும்பமா இருக்கலால்ல்லா? கேட்கியா? நீதான வரமாட்டேக்க.”

“எருது நோவு காக்காக்கு என்னடா தெரியப்போகுது? இந்த ஊரையும், வீட்டயும், நிலத்தையும் விட்டுட்டுப் போவ முடியுமா?”

“யாருக்காவது நிலத்தை குத்தகைக்கு விட்டுடலாம். வீடு சும்மா கிடக்கட்டும் பெரிய பங்களா பாரு!”

“அறிவில்லாமப் பேசாதல. நீங்கள்ளாம் எனக்கு பிள்ளைங்கனால், நம்ம வயலும், தோட்டமும் எனக்கு, என்னைப் பெத்த அப்பா—அம்மா மாதிரி. உனக்கு அது வெறும் மண்ணா தெரியலாம்... ஆனால், எனக்கு அது பூமாதேவி... என்னை சின்ன வயசிலே தாங்கிக்கிட்ட முத்துப்பல்லாக்கு. இதே மாதிரிதான், இந்த வீடும். உனக்கு என்னமோ, இது மண் சுவரும் பனை ஓலையுமாய் தெரியலாம். ஆனால், எனக்கு இதுதான் உயிரு. என் மவராசாவும், நானும் கொஞ்சி குலாவுன கோயில் இது! நீங்கல்லாம் பிறந்த இடம் இது! அதோ நிக்குதே வேப்பமரம், அதுதான் ஒங்களோட தொட்டில தாங்கின சீதேவி... இதெல்லாம் விட்டுட்டு மெட்ராசுக்கு வாரதை என்னாலே நினைச்சுகூடப் பார்க்க முடியாது!”

“நீ நினைக்காண்டாம். அப்படி நினைக்கிற என்னையாவது போகவிடேன்!”

“என்ன விட்டுட்டு உன்னாலே இருக்க முடியுமாடா?”

“நீ ஒன் அம்மாவை விட்டுட்டு, இந்த வீட்டுக்குக் கல்யாணமாகி வந்தியே... அப்புறம் அந்த வீட்டைப்பத்தி நெனச்சியா... அதுமாதிரிதான் எல்லாம். ஒரு மாசத்துக்கு மெட்ராசிலே உன்னைப் பார்க்க முடியலியேன்னு கஷ்டமா தான் இருக்கும். அப்புறம் சரியாயிடும். சரி, இன்னிக்கே நான் போகப்போறேன்! அண்ணன் இன்னோர் ஆள் பேருக்கு அம்பது ரூவா அனுப்பி என்கிட்டே கொடுக்கச் சொல்லியிருக்கான். அவர் பணமும் கையுமாய் நிக்கிறார்.”

தில்லையம்மா தள்ளாடினாள்; அவனைத் தளர்வோடு பார்த்தாள்; ஐம்பத்தைந்து வயதில், கறுப்புப் புடவையில், ‘பட்டரைச் சட்டம்’ போல் படர்ந்த உடம்பும், குவிந்த முகமும், விசாலமான மார்பும், நீண்ட கை கால்களுமாய் கம்பீரத்தோடு காட்சியளித்த தன் உடம்பை குறுக்கியபடியே மகனை விடாது பார்த்தாள். அவன் இப்படிப் பேசியபிறகு அவள் எப்படிப் பேசுவது? பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது எவ்வளவு சரியாப்போச்சு? பதினைந்து ஆண்டுக்கு முன்னாலேயே, ‘அந்த மனுசன்’ துள்ளத்துடிக்க ஒருவார காய்ச்சல்ல இருந்த இடம்தெரியாம கட்டமண்ணா போன பிறகும்... நண்டும் சிண்டுமாய் இருந்த இதுகளை எப்படில்லாம் வளர்த்தேன். பெரியவனை எப்படில்லாம் கஷ்டப்பட்டு படிக்க வச்சேன். இதோ, எதுவுமே நடக்காததுமாதிரி கல்லுளி மங்கியா பார்க்கிற இவளையும் படிக்க வைச்சேனே... பூமி பொய்யானபோது, கூலி வேலைக்குக்கூடப் போயிருக்கேனே... ‘அந்த மனுஷனை தான்’ கடைசிவரைக்கும் பார்க்க முடியலே. அவர் தந்த பிள்ளையளையாவது கடைசி காலத்திலே கண்குளிரப் பார்த்துட்டுப் போகலாம்முன்னு இருந்தால் இவன் கண்மண் தெரியாமல் பேசுறானே... தாலி அறுத்தவள் என்கிற இளக்காரத்திலே சொத்தைப் பறிச்சுடலாம்னு , பல பயலுவ வம்பு சண்டைக்கும், வரப்பு சண்டைக்கும் வந்தப்போ இந்தச் சொத்தை எப்படில்லாம் காப்பாத்தினேன். இப்ப அவங்கள்ளாம் மரியாதையாய், என்னைப் பார்க்கிற காலத்துலே, இவன் அவமரியாதையா பார்க்கிறானே... என் மன்னவன் உலாத்தின இந்த வீட்டை எப்படில்லாம் தினமும் கையெடுத்துக் கும்பிடுறேன். வெறும் மண்ணையும் சுவரையுமே நான் இப்படிப் பார்க்கும்போது, நான் இவன்களை எப்படிப் பார்த்து இருப்பேன். என் வயித்துலே மண்ண அள்ளிப் போட்டுட்டுப் போறேன்னு சொல்லுதானே! போவட்டும். பட்டாத்தான் தெரியும். அடியே மாரியம்மா, என்ன வார்த்தை பேச வச்சுட்டே!

திருமலையம்மா மகனை மவுனமாகப் பார்த்தாள். பிறகு தொழுவத்திற்குப் போய், கன்றுக்குட்டியின் அருகே சாய்ந்து கிடந்தாள். முத்துலிங்கம் இன்னும் கஞ்சி குடிக்காமல் இருப்பதைப் பார்த்துவிட்டு “ஏ கமலசுந்தரி அவனை கஞ்சி குடிக்கச் சொல்லுளா” என்று சொல்லவும் அவள் மறக்கவில்லை.

கமலசுந்தரி சொல்லவில்லை; முத்துலிங்கம் சாப்பிடவில்லை. மெல்ல எழுந்தான். ‘பெரிய’ வீட்டிற்குள் போய், கொடியில் கிடந்த கரைபோட்ட நாலு முழ வேட்டியைக் கட்டிக்கொண்டான். அண்ணன் எடுத்துக் கொடுத்த சிலாக்கைப் போட்டுக்கொண்டான். இதர துணிகளை ஒரு கைப்பைக்குள் திணித்தபடியே, வெளியே வந்தான். கமலசுந்தரி அண்ணனின் கைப்பையைப் பிடுங்கப்போனாள். அவன் அவள் கையைப் பிடித்தபடியே பேசினான்:

“கமலசுந்தரி... அம்மாமை ஜாக்கிரதையா பார்த்துக்களா. போன வருஷம் குளம் பெருகல. இந்த வருஷம் பெருகப்போறதா இல்ல. மானம் பார்த்த பூமிலே என்ன பண்ணமுடியும்னு அம்மாவுக்குத் தெரியமாட்டேங்குது. தீனி போடமுடியாமல் உழவு மாட்டையும் வித்து, பசுமாட்டையும் வித்தாச்சு. கட்டாந்தரையா கிடக்கிற நிலத்தை நம்புனால் நாம கட்டாந்தரையாப் போகவேண்டியதுதான். அண்ணன் ஏன் போறேன்னு அம்மாவுக்குப் புரியாட்டாலும், ஒனக்குப் புரியும். ஒன்னையும் ஒரு நல்ல இடத்திலே சேர்க்கணும்னா நான் இந்த இடத்துலே இருக்கப்படாது! ஏமுளா அழுவறே! நான் எனக்காக மட்டுமா போறேன்... ஒனக்காகவும் போறேன். அம்மாவை நல்லா பார்த்துக்க. நானும் கடை போட்டுட்டா, மாசா மாசம் இன்னும் அதிகமாவே பணம் அனுப்புவோம். எம்மா, நான் போறேம்மா ஒன்னைத்தான்... எம்மா ... எம்மா.”

மகன் பேசுவதைக் கேட்க மறுத்து, அவனைப் பார்க்க மறுத்து, சொட்டுச் சொட்டாய் கண்ணீர் கன்றுக்குட்டியின் தலையில் தெறிக்க, கீழே கிடந்த புல் குவியலையே திருமலையம்மா பார்த்துக் கிடந்தாள். மகன் சத்தம் ஒலிப்பது நின்றதும், படபடத்துப் பார்த்தாள். போய்விட்டானோ என்பதுபோல் பரபரப்பாய்ப் பார்த்தாள். அவள், ஏறிட்டுப் பார்த்தபோது முத்துலிங்கம் அம்மாவைப் பார்த்தபடியே நின்றான். தாயால் தாளமுடியவில்லை. மகனுக்கு முன்னால் வந்து மன்றாடினாள்.

“நான் சொல்றதை நல்லா கேளு ராசா! கொளம் பெருகல தான்... ஆனால் குற்றாலத்து சித்தாரைக் கொண்டுவர கால்வாய் வெட்டுறாங்க. அடுத்த வருஷத்துலே இருந்து குளம் பெருகப் போகுது. பூமியிலே பொன்னு விளையப் போகுது. சொல்றத கேளுடா!”

“சரி. இந்த ஒரு வருஷம் வரைக்குமாவது போறேன்!”

திருமலையம்மா மகன் முகத்தைப் பார்த்தாள். ‘அந்த மனுஷன்’ மாதிரியே அது உறுதிப்பட்டுக் கிடந்தது. புரிந்துகொண்டாள். இவனைத் தடுக்க முடியாது; அவள் தனக்குள்ளே வெம்பி, தன்னைமீறி தாவி வந்த வார்த்தைகளை பல்கட்டி சிறையிட்டாள். கண்களை மூடிக்கொண்டாள். முத்துலிங்கம் குரலிட்டான்.

“போறேம்மா..”.

திருமலையம்மா விம்மலோடு வெடித்தாள்; “போறதே போறே... போயிட்டு வாறேன்னாவது சொல்லிட்டுப் போடா... அடியே ஆயிரம் கண்ணுடையாள் மாரியம்மா! ஞாபகம் இருக்காடி ஒனக்கு... இருபது வருஷத்துக்கு முன்னாலே இப்போ துள்ளுற இவன் வயித்துலே அவதிப்படுத்துறான்னு உனக்கு மாவிளக்கு ஏத்துறதா கோயிலுல வந்து நேர்ந்தேன். நீயும் இந்தப் பயல பொறுமையாக்கித்தந்த... அதுக்குப் பிறகு, இவன் நாலு மாசத்துல வயித்துக்கு வெளியே இருந்தாலும் என் வயித்துக்குள்ளே இவன்... ஒரேயடியாய் மீளமுடியாம உதைக்கிறது மாதிரி இருக்குதே! உனக்கு என்ன தாயே குறை வச்சேன்?”

முத்துலிங்கம் அழுதுவிட்டான். இன்னும் அங்கே நின்றால், தலையிலடித்து அழுவோம் என்று பயந்து ஓடிவிட்டான்; வெளியேறிவிட்டான் மெட்ராசைப் பார்த்து...

ஒரு மாதம் ஓடியது.

திருமலையம்மா மலைப்பில் இருந்து விடுபட்டு, பாசப்பிடியில் இருந்து விடுபடமுடியாமல் இருந்த வேளை; வெளியூருக்கு ஏதோ ஒரு ‘துஷ்டி’ கேட்கப் போய்விட்டு, வருகிற வழியில் கன்றுக்குட்டிக்கு புல் வெட்டிக்கொண்டு வீட்டிற்கு சுமையோடு திரும்பிக்கொண்டிருந்தாள். தோட்டத்தில் அவளால் நிற்க முடியவில்லை. சரல் குவியலில் மகனின் தோற்றம்; ‘கமலைக் கிடங்கிலும்’ அவனே. தென்னை மரத்தைப் பார்த்தால், அங்கேயும் அவன் தொத்திக் கிடக்கிறான். திருமலையம்மா புல்லிதழ்களால் கண்ணிரைத் துடைத்தபடி வீட்டுக்குள் வந்து, முன்பு மகன் போட்டது மாதிரியே புல் கட்டை வேகமாகப் போட்டாள்.

ஏதேச்சையாக ‘திருவோலையைப்’ பார்த்தவள் திடுக்கிட்டாள். கமலசுந்தரி அண்ணன் மாதிரியே உட்கார்ந்தபடி இருந்தாள். ஒரு கையில் நோட்டுக் கத்தைகள். இன்னொரு கையில் ஒரு கடிதம். திருமலையம்மா இப்போது மகளை அதிகமாகத் திட்டுவதில்லை. அவளையே மகனாகவும் பாவித்துக் கொண்டிருந்தாள். மகளிடம் அழாக்குறையாகப் புலம்பினாள்.

“எப்பாடி... வரவர என்னாலே அஞ்சு மைல் ஒழுங்கா நடக்கமுடியல. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குது. அண்ணன்மார் என்ன எழுதியிருக்காங்க. மெட்ராஸ்ல எப்படியிருக்காங்களாம்... எவ்வளவு ரூபா அனுப்பியிருக்காங்க?”

கமலசுந்தரி அம்மாவைப் பார்க்காமலே பதிலளித்தாள்.

“சின்ன அண்ணன் கடை போட்டுட்டானாம். தனியா ஒரு வீடு எடுத்து சமைச்சு சாப்பிடறாங்களாம். என் படிப்பு வீணாயிடக்கூடாதாம். மெட்ராசுக்கு நானும் போகணுமாம். டைப்பிங்லே சேரணுமாம். அண்ணன் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்துடுவானாம். டிக்கெட்டுக்கும் சேர்த்து பணம் அனுப்பியிருக்காங்க. நாளைக்கு வடக்கு தெரு சீமையம்மா மகனைப் பார்க்க மெட்ராஸ் போகப் போறாங்களாம். நானும் அவங்களோடு போகணுமாம். முடியும்னா உன்னையும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லி எழுதியிருக்காங்க.”

அம்மாக்காரி கத்தினாள்.

“ஒன்னாலேயும் முடியாது. என்னாலேயும் முடியாது”ன்னு எழுதிடு. என்ன நினைக்காங்க! முட்டாப் பயலுவ! ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க துப்பில்ல. வேலை பார்த்துக் கொடுப்பாங்களாம்... வேலை. அம்மாவுக்குத் தண்ணி கொண்டு வாளா...”

கமலசுந்தரி ஒரு சொம்பு தண்ணீரோடு அம்மாவை நெருங்கினாள். அம்மாவிடம் சாவகாசமாகக் கேட்டாள்:

“அப்படின்னா நீ வரலியாம்மா...”

“நீ சொல்றத பார்த்தால்...”

“நானும் மெட்ராஸ் போறதுன்னு தீர்மானிச்சுட்டேன்! ஒனக்காகத்தான் காலையில இருந்து காத்திருக்கேன்! சீமையம்மாவ பார்க்கணும்.”

“நீயே ஒரு முடிவுக்கு வந்தபிறகு எனக்கு எதுக்காவ காத்திருக்கணும்!”

“என்னம்மா நீ! உன்ன மாதிரியே நானும் இந்த மண்ணுல புரண்டு, வயலுல விழுந்து உருப்படாமப் போவணுமா? படிச்சதுக்கு அர்த்தமில்லாமல் கிடக்கணுமா? யோசித்துப் பாரு. எனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைக்க வேண்டாமா. மெட்ராஸ்லே டைப் கத்துக்கிட்டா நல்ல வேலையாவது கிடைக்கும். இந்த வீட்டையும் மாட்டையும் எத்தனை நாளைக்குச் சுத்தறது?”

“இந்த ரெண்டோடு என்னையும் சேர்த்துக்கடி. என்னை ஏன் விட்டுட்டே... சொல்லுரதை நல்லா கேளுடி. என் தலை கீழே விழுந்தாலும், நான் வரமாட்டேன். சிங்கத்துக்கு வாலாய் இருக்கிறதைவிட, நாய்க்குத் தலையாய் இருக்கிறதே மேல். இதத்தான் நான் விரும்புறேன்!”

“எதை வேணுமின்னாலும் விரும்பு. நான் போகக் கூடாதுன்னு மட்டும் விரும்பாத. சரி, சீமையம்மா வீட்டுக்குப் போயிட்டு வரேன்! எனக்குச் சேர்த்து டிக்கட்டு எடுக்கும்படி பணம் கொடுத்துட்டு வரணும்.”

திருமலையம்மா திகைத்தாள். கடைசி பெண் என்பதால் மூன்று வயது வரைக்கும் தன்னிடம் பால் குடித்த மகள் காட்டிய முதுகையே பார்த்தாள். அவளை மாதிரியே உடல்வாகு. பவுன் நிறம். அச்சடித்தது போன்ற உடம்பு. மகள்காரி, தன்னைத் திரும்பிப் பார்க்காமலே வாசலைத் தாண்டி குதித்து, எம்பி நடப்பதைப் பார்த்தாள். திருமலையம்மாவுக்கு எல்லாமே பொய்யாய், பழங்கதையாய் மாயையாய் தோன்றின. வீடு மட்டும் அல்ல. தானும் வெறுமையாகத் தெரிந்தது. தனிமையில் தவித்தாள். மனதில் இனம் தெரியாத பயம் கவ்விக்கொண்டது. மகள் அப்போதே போய் விட்டதுபோல், அவள் உள்ளம் சூனியப்பட்டது; தலையில் கை வைத்தாள். எவ்வளவு நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தாளோ... திடீரென்று ஒரு குரல் அவளை ஆட்டுவித்தது.

“ம்மா... ம்மா... ம்மா...”

திருமலையம்மா, கன்றுக்குட்டியைப் பார்க்கிறாள். முட்டுகளில் கை ஊன்றியபடியே எழுந்து, முற்றத்திற்கு வந்து, கொஞ்சம் புல்லை உருவி தொழுவத்திற்குப் போகிறாள். கன்றுக்குட்டியின் வாயில் அதைத் திணிக்கிறாள். அந்த பேசத் தெரியாத உயிரோ புல்லைத் தின்னாமல், அவளையே பார்க்கிறது. அவள் கையை முகர்கிறது. முகத்தை நகர்த்துகிறது. அவள் முகத்தை நாக்கால் தடவுகிறது. “ஒருநாள் முழுவதும் நீ எங்கே போனே” என்பதுபோல் அவளை மாறி மாறி செல்லமாகப் பொய் முட்டு முட்டுகிறது.

திருமலையம்மாவுக்கு அந்தக் கணத்தில், எல்லாமே மறக்கின்றன. சூனிய மனதிற்குள் சுக்கிலபாசம் பாய்கிறது. அவள் தாய்மையைத் தூண்டுகிறது. மறுபிறவி எடுக்காமலே, அவளைக் காமதேனுவாக்குகிறது. இதுவும் நான் பெறாமல் பெத்த பிள்ளை—என்னைவிட்டுப் போக நினைக்காத பிள்ளை. போக மறுக்கும் பிள்ளை.

திருமலையம்மா அந்தக் கன்றுக்குட்டியின் கழுத்தை தன் முகத்தோடு சேர்த்துக்கொள்கிறாள். கண்ணீரால் அதன் முகத்தைக் குளிப்பாட்டுகிறாள். அதன் நெற்றியிலும், கழுத்திலும் மாறி மாறி முத்தமிட்டுக்கொண்டு இருக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=இன்னொரு_உரிமை/காமதேனு&oldid=1664395" இலிருந்து மீள்விக்கப்பட்டது