உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குழந்தைச் செல்வம்



‘வாட்ட மெல்லாம் நீங்கவே
வசந்த காலம் வந்தது;
மீட்டும் நன்மை காணலாம்
விரைந்தெ ழுங்கள்’ என்குது.

19. ஆறு[1]

கல்லும் மலையும் குதித்துவந்தேன் - பெருங்
     காடும் செடியும் கடந்துவந்தேன்;
எல்லை விரிந்த சமவெளி - எங்கும் நான்
     இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். 1

கட்டும் அணையேறிச் சாடிவந்தேன் - அதன்
     கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்;
திட்டுத் திடர்களும் சுற்றிவந்தேன்- மடைச்
     சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். 2

காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன் - அதில்
     கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்;
ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன் - அங்கென்
     ஆசை தீரவிளை யாடிவந்தேன். 3

ஏறாத மேடுகள் ஏறி வந்தேன்- பல
     ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்;
ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்
     ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். 4

ஆயிரம் காலால் நடந்துவந்தேன் - நன்செய்
     அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்;
நேயமுறப் புன்செய்க் காட்டிலும் - அங்கங்கு
     நீரை இறைத்து நெடுகவந்தேன். 5


  1. இது குட்ரிச் (Goodrich) என்பவர் எழுதிய ஆங்கிலப் பாடல்களைத் தழுவிச் செய்யப்பட்டது.