உள்ளடக்கத்துக்குச் செல்

ஈச்சம்பாய்/உரைகல்

விக்கிமூலம் இலிருந்து
உரைகல்

தமிழறிஞர் - முனைவர். இரா. இளவரசு

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் பெரும்பாலும் இதழ்சார் இலக்கியமே. இதழியல் நீக்குப் போக்குகளைக் கருத்தில் கொண்டு எழுதப்படும் கதைகள் இதழ்களின் பண்பு நிலைகளுக்கு ஏற்ப அமைவதை உணர முடியும். இதழ் நடத்துவோரின் விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்பு முதலியவை எழுத்தாளனின் படைப்பு உரிமையில் பங்கு கொள்கின்றன. ஓர் எழுத்தாளனே, ஓர் இதழில் எழுதும் கதைக்கும் பிறிதோர் இதழுக்கு எழுதும் கதைக்கும் வேறுபாடு காண முடியும். எழுத்துக்களின் தரத்தை வரையறுப்பதில் இதழ்களும் பங்கு பெறுவதைத் தவிர்க்க முடியாது. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் சிறுகதைகள், இருபதாண்டுகளில் (1978-1998) பல்வேறு இதழ்களில் எழுதப்பெற்றவை. இதழ் நடத்துவோரின் கூட்டல், குறைத்தல், தலைப்பு மாற்றங்களுக்கு இவையும் உள்ளாகி இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகள் நூல் வடிவில் வரும்போது, தன் விருப்பத்திற்கு ஏற்பத் திருத்தியமைக்கும் வாய்ப்பு படைப்பாளிக்குக் கிடைக்கிறது.

பயன்பாட்டு இலக்கியம்

மக்கட் பெருங்கடலுள் இரண்டறக் கலந்து 'மானிட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எழுத்தாளர் சமுத்திரமும் இந்த மனித நேயக்குரலைத் தனது எழுத்துக்களில் இடைவிடாது எழுப்பிக் கொண்டு வருபவர். 'எழுத்து என்பது சுவையுணர்ச்சிக்குச் சொந்தமானது; இன்பம் பயப்பதே அதன் இறுதி நோக்கம்' என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர். நூல் என்பது 'மாந்தரின் மணக்கோணல்களை மாற்றியமைக்க வேண்டும். அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் அதன் பயன்' என்பது நமது நெடிய மரபின் ஆணிவேர்க் குரலாகும். அம்மரபைத் தழுவி வையத்தைப் பாலித்திட எழுதுகோல் ஏந்திப் பயன்பாட்டு இலக்கியங்களைப் படைத்து வருபவர் நண்பர் சமுத்திரம்.

கண்முன்னே நடக்கும் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் துணிச்சல்!

காலில் விழும் பண்பாட்டுச் சீரழிவைக் கான்றுமிழும் நெஞ்சுரம்!

மனிதமனத்தின் மென்மையை மேன்மையை ஈரங்கசியும் இழைகளோடு எடுத்துக்காட்டும் நுட்பம்!

நெஞ்சிலுற்றதைச் செய்கையில் நாட்டும் நேர்மை!

வெள்ளைக்கருப்பு

இப்பண்புகளின் ஒட்டுமொத்தமே சமுத்திரம் என்னும் படைப்பாளி. இவர் 'வெள்ளை வெளேரென்ற கருப்பு மனிதர்'! பூசிமெழுகாமல் ஒளிவுமறைவின்றித் தனக்குச் சரியெனப் பட்டதைப் பலர் நடுவே சாற்றும்போது, இவர் வெள்ளை மனிதர்! ஒடுக்கப்பட்டவர், ஒதுக்கப்பட்டவர்களாகிய 'பாவப்பட்ட மனிதர்கள்' பக்கம் சார்ந்து நின்று குரல் கொடுப்பதால் இவர் கருப்பு மனிதர்!

பல்லாண்டுகள், நடுவண் அரசில் பணியாற்றிய எழுத்தாளர் இவர். தன் கதைகளில் அலுவலகச் சூழலைக் காட்சிபடுத்தும் வகையில் நேர்த்தியாகப் படம் பிடித்து வருகிறார். சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற 'வேரில் பழுத்த பலா'விலிருந்து இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'ஈரத்துணி' உள்ளிட்ட பல கதைகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன.

'அலுவலகப் பவுர்ணமி நாள்' ஆகிய சம்பள நாளின் பரபரப்பும், கந்துவட்டிக்காரன், இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரி, மாதச் சீட்டுக்காரன், நொறுக்குத் தீனி வியாபாரி எனப் பலரின் படையெடுப்பும், சம்பளத்தில் பலவகையான கடன் பிடிப்பும், பணியாளர்களின் உரையாடலும் அலுவலகச் சூழலைக் கண் முன்னே கொண்டுவந்து விடுகின்றன. (ஈரத்துணி).

'சங்கக்'காலம்

சாதி உணர்வு, மோதல்களாக வெடிக்கும் 'சங்கக்'காலம் இது அண்ணன் தம்பியராய், அக்காள் தங்கையராய்ப் பல சாதி மக்களும் ஒட்டுறவாய் வாழும் ஊர்ப்புறங்களில் அடிக்கடி மோதலும் சாதலும்! வசதி படைத்த சிலர் தலைவர்களாய், அதிகாரிகளாய்ப், பின்னிருந்து, அப்பாவி மக்களை உசுப்பிவிடும் கொடுமை பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோரிடையே நடந்துவரும் இந்தச் சாதி மோதலைக் கதைகளாக்கித் தனது சமூகப் பொறுப்புணர்ச்சியைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருவதில் சமுத்திரத்திற்குத் தலையாய தனி இடமுண்டு. 'ஒரு சத்தியத்தின் அழுகை'யில் இருந்து இதை உணர்ந்து வருகிறேன். இத் தொகுப்பிலும் 'பிணமாலை' 'உயிர் ஊஞ்சல்' கதைகள் சாதிச் சிக்கலைக் கருவாகக் கொண்டவை. மோதிக் கொள்பவர்கள் எந்தச் சாதியினர் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் நம் உய்த்துணர்வுக்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். அதுவும் ஒரு கதையில் தாக்க வருபவர்கள், வெளியூர் எதிராளிகளின் சாதியைத் தெரிந்துகொள்ளப் பலமுறை முயன்றும் முடியாமற் போவதாகவும் இறுதியில் ஒரு நெருக்கடியால் இரு தரப்பினரும் ஒரே வண்டியில் இணைந்து செல்வதாகவும் இயல்பாகக் காட்டிச் செல்கிறார். மோதும் களத்தில் மனித மனத்தின் மேன்மையான பகுதியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு குழந்தையின் செயல்கள் சிறக்கின்றன. கத்தி கம்புகளோடு நிற்கும் எதிரிகள்! எதிரிகள் என்று அறியாத இரண்டு வயதுக் குழந்தை அவர்களைப் பார்த்துச் சிரிப்பதும், ஒருவரைத் 'தாத்தா' என்று அழைப்பதும், துண்டைப் பிடித்து இழுப்பதும் மங்கியிருக்கும் மனிதப் பண்பைத் தூண்டிவிடும் நிகழ்ச்சிகளாக அமைகின்றன.

இ.ஆ.பா.க்கள்

ஆட்சித்துறையிலும், காவல்துறையிலும் இருப்பவர் சிலர் சாதிச் சங்கத்தினராகச் செயற்படுகின்றனர். தனக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு வேண்டாமென்று உரிய காலத்தில் ஓய்வுபெற்ற நேர்மையான இ.ஆ.ப. அதிகாரி பழனிச்சாமி! இவரைச் சாதிச் சங்கத்திற்குத் தலைவராக்க முடிவு செய்து அறிவிக்க வந்த சாதிக்காரர்கள்! அவர்களில் சாதிவெறி பிடித்த இ.ஆ.ப. இளைய அதிகாரி ஒருவர் - பழனிச்சாமியின் மகளைப் பெண்பார்த்துச் சென்று மருமகனாவார் என்னும் எதிர்பார்ப்பில் இருப்பவர்! சங்கத் தலைவர்க்குப் பல வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்கின்றார். இந்த நிலையில் பழனிச்சாமி 'மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோர் எல்லோரையும் சமமாகக் கருதவேண்டும். சாதி உணர்ச்சி கூடாது' என்று அறிவுரை கூறிச் சங்கப் பெறுப்பை ஏற்க மறுத்துவிடுகிறார். திருமணம் தடைப்பட்டு விடுமோ என வருந்துகின்ற மனைவி, மகள் ஒருபுறம். 'தேறாத கேஸ்' 'கிறுக்கன்' என்னும் சாதிக்காரர்கள் ஒருபுறம். இவர்களிடையே எதை இழந்தாலும் மனிதத் தன்மையை இழக்க விரும்பாத மாவீரராகப் பழனிச்சாமி! அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பணியில் இருப்பவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் உணர்த்தும் பயன்பாட்டு இலக்கியமாய்ச் சிறக்கிறது 'பிணமாலை'.

ஒரு பூ மலர்வதுபோல...

என் நெஞ்சை மிகவும் நெகிழச் செய்த கதை 'கட்டக் கூடாத கடிகாரம்'. ஒரு பூ மலர்வதுபோல இயல்பாக அவிழ்ந்து மணக்கிறது. உணர்வு மயமாகி ஒன்ற வைக்கிறது. வழக்கமாக எதிர்கொள்ளும் கதை மாந்தர்கள் அல்லர் இதில் வருபவர்கள். பணியிடைக்காலத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தானே நடக்க இயலாத பஞ்சாபகேசன்! திறமையான அரசு அதிகாரியான அவரைக் குளிப்பாட்டுவது முதல் அலுவலகத்துக்குக் கொண்டுசெல்வது, அழைத்து வருவது உட்பட அனைத்துப் பணிவிடைகளையும் தோழியாய்த், தாயாய்ச் செய்துவரும் மனைவி லட்சுமி மாமி! குழந்தையில்லாத இவர்களின் நடப்புகளை உணர்வுகளைச் சுற்றிக் கதைப் பின்னல்!

பஞ்சாபகேசன் ஓய்வுபெறும் நாளில் அலுவலகத்தில் வழியனுப்பு விழா! இறுதியில் ஏற்புரை நிகழ்த்திய பஞ்சாபகேசன், மனைவியை விழி ஆடாமல் பார்த்துக் கைகளை உயரே உயரே தூக்கிக் கும்பிடுகிறார். உடனே இலட்சுமி மாமி "ஏன்னா, ஏன்னா" என்று பதறி எழுகிறார். "பஞ்சாபகேசன் கும்பிட்ட கரங்களை இறக்காமல், கொட்டும் விழிகளைத் துடைக்காமல், உடலாட, உயிராட நின்றார். பிறகு கூட்டத்தைப் பார்த்து மீண்டும் திரும்பி, 'எல்லாத்துக்கும் இந்த உத்தமி... இந்த' என்றார். பங்சாபகேசனால் பேச முடியவில்லை. கூட்டத்தினரின் கண்களிலும் ஒட்டுமொத்தமாய் நீர் சுரந்தது." கதையில் நெஞ்சைக் கரையச் செய்துவிடும் பகுதி இது. தியாகத்தின் உருவமான மாமிக்குக் கழுத்தில் புற்று. இன்னும் ஒரு மாதம்தான் உயிர் வாழப் போகிறார் என்று கதை முடியும்போது நெஞ்சம் கனத்துப் போகிறது. இந்தக் கதை என்னைப் பாதித்ததை நண்பர் சமுத்திரத்திடம் பகிர்ந்து கொண்டபோது 'பஞ்சாபகேசனும் லட்சுமியும் வாழ்ந்த மாந்தர்கள், நிகழ்ச்சிகளும் உண்மையானவை' என்றார். இரக்கம் இன்னும் அதிகமானது.

கருநாடகக் கதைகள்

இரக்கம் என்பது அனுபவத்தைப் பகிர்ந்தளிப்பதோடு அறிவை, விரிவு செய்வதாகவும், கண்டவற்றைப் புதிய ஒளியில் காட்டுவதோடு காணாதவற்றைப் புலப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். கருநாடக மாநிலத்தில் செய்தி விளம்பரத் துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது அங்குப் பல பகுதிகளுக்கும் சென்று அடித்தட்டு மக்களோடு பழகி அவர்களை மையமாகக் கொண்டு பல கதைகள் எழுதியவர் சமுத்திரம். கருநாடக மக்களைப்பற்றி அதிகமான கதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர் இவர் என்றும் கூறலாம். புதியனவற்றைப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்கதைகளில் மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள், பழங்குடி மக்களிடையே நிலவும் தேவதாசிமுறை முதலியன பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 'ஈச்சம்பாய்' அப்படி அமைந்த கதைதான். குருவி சாதி மலைமக்களின் உடைமுறை, நடைமுறை அடிப்படையில் பின்னப்பட்ட இக்கதையின் தலைவி பெல்லிபாய், ஒரு குழந்தைக்குத் தாயான விதவை. இவள் வேறு குலத்தைச் சார்ந்த ஒருவனைக் காதலிப்பதும் அதற்குத் தடையேற்படுவதும், காதலனா, குழந்தையா என அல்லாடித் தாய்மை மேலோங்குவதும் இயல்பாகச் சித்திரிக்கப்படுகின்றன.

ஆகக் கடன்பட்டு மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி விட்டுக் கடன் அடைபடாத கவலை ஒருபுறமும், மகன், பணம் அனுப்பவில்லையே என்னும் வருத்தத்தையும் மீறி, அங்கு அவன் நன்றாக வாழ்ந்தால் போதும் என்னும் பாசம் ஒருபுறமாக ஊசலாடும் பெற்றோரைப் 'பாசக்கணக்கு' காட்டுகிறது.

விலங்குகள் - பறவைகள்....

மனித உணர்வுகளைத் திறம்பட வரையும் சொல்லோவியரான சமுத்திரம், விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் வாழ்முறைகளையும், சுற்றுச்சூழல் இயற்கை வளங்களையும் கூர்ந்து நோக்குவதில் வல்லவர். 'ஞானப் பரிணாமம்' என்னும் உருவகக் கதையில் குரங்குகளின் இயல்பை நுணிகி நோக்கி விளக்கியுள்ள திறத்தை முன்னரே கண்டு வியந்திருக்கிறேன். இத்தொகுப்பில் "காதல் குருவிகளின் பார்வையிலே...' என்னும் கதையில் பறவைகளின் இயல்புகள், அவை கூடு கட்டும் நுட்பம் முதலியன விரிவாகப் பேசப்படுகின்றன. பறவைகளில் ஓர் இணை தனிமைப்படுத்தப் பட்டுக் கதையினூடே வரும் மானிடக் காதல் இணையொடு தொடர்புப் படுத்தப்படுகிறது. இறுதியில் மானிடக் காதலின் போலித்தன்மை புலப்படுத்தப்படுகிறது. நாய்களின் இயல்பைக் கூர்ந்து நோக்கி "ஒரு நாய் இன்னொரு நாயைத் துரத்தும்போது, துரத்தப்பட்ட நாய், வாலை, காலுக்குள் விட்டாலோ, இல்லன்னா மல்லாக்கப்படுத்து நாலு காலையும் மேலத் தூக்குனாலோ கடிக்க வந்த நாய் கடிக்காது. ஆனால் இந்த மனுசன் மட்டுந்தான், எதிரி கையெடுத்துக் கும்பிட்டாலும் கும்பிட்ட கையையே வெட்டுவான்" என்று மனிதக் கீழ்மை பேசப்படுகிறது.

சொல்லோவியம்

ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியில் அச்சந்தரும் அடர்ந்த காடு: "இருபக்கமும் பாதைக்கு வேலியான தாவரக் குவியல்கள். ஈச்ச மரங்களும் பனை மரங்களும் இடித்துக் கொள்கின்றன. கோணல் தென்னை மரங்கள் ஒன்றுடன் ஒன்று குஸ்திக்குப் போவதுபோல் முனைப்போடு நிற்கின்றன. கரடிப் பயங்காட்டும் கன்றுப் பனைகள். பழுத்த நரைவிழுந்த கிழவன்போல் புழுத்த ஓலைகளோடு நிற்கும் பனைமரங்கள்... இவற்றில் சில இடிவிழுந்த உச்சிப் பொந்துகள்... முட்பாம்புகளாய் படமெடுக்கும் கருவேல மரங்கள்... அவற்றின் மேல் படரந்து உடம்பைச் சிதைத்துக்கொள்ளும் ஊணான் கொடிகள்... மற்போர் செய்வதுபோல் நெக்கியடித்து நிற்கும் சப்பாத்திக் கள்ளிகள், கற்றாழைகள்... இடைவெளிகளை இட்டு நிரப்பும் சுடுகாட்டு எருக்கஞ்செடிகள்...." நீண்ட வருணனையின் ஒரு பகுதி இது. பலவகை மரஞ்செடி கொடிகளை விளக்கும் இப்பகுதியில் இடம்பெறும் சொல்லாட்சிகள் கதையின் பிற்பகுதியில் நிகழவரும் கொலைவெறித் தாக்குதலைக் குறிப்பாகக் காட்டுகின்றன. இங்கே மொழியைச் சிறந்த கலைநுட்பத்துடன் கையாளும் தேர்ந்த கலைஞராகச் சமுத்திரம் தென்படுகிறார். (உயிர் ஊஞ்சல்).

ஒருவன், இன்னொருவன் மனைவியைப் புகழ்கிறான். "மேடம்... ஃபாரஸ்ட் பகுதிக்குப் போயிருக்கீங்களா... கோணலான தென்னை மரங்கள் பக்கத்துல, முள்ளம்பன்றி மாதிரியான ஈச்சமரங்களின் அருகில், கன்னங்கரேலென்று இருக்கிற பனைமரங்களுக்குச் சமீபத்துல ஒரு மரவகை மட்டும் பளபளப்பாய், ஆகாயத்துக்கும், பூமிக்கும் இடையே நேர்கோடு போட்டதுமாதிரி நளினமாய், ஒயிலாய் நிற்கும். அதுதான் பாக்குமரம். இந்தக் குடியிருப்புக் காட்ல வெவ்வேறு பெண் மரங்கள்ல நீங்க ஒரு பாக்குமரம். எஸ் மேடம் யூ ஆர் எ அரக்னட் ட்ரீ" கேட்பவள் மனத்தில் சலனத்தை ஏற்படுத்திய திட்டமிட்ட வருணனை இது. அந்தச் சலனமே, அவள் கணவன் மனத்திலும் குடிபுகுந்து அல்லற்படுத்துவதே 'பாக்குமரம்' கதையின் மைய இழை.

எகத்தாள நடை

சொல்ல வருவதை நறுக்குத் தெறித்தாற்போல் ஒரு தொடரிலேயே உணர்த்திவிடுவது ஆசிரியர்க்கு ஆகிவந்த ஒன்று.

வாயை, ஆபாச ஊற்றாக்கி நாடறிந்த பேச்சாளராகி விட்டார்.

அப்போதைய நல்லவளான அந்தப் பெண் அமைச்சர்.

'அடப்போடா! என்பதுபோல் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தாள்.'

'அன்று அலுவலகப் பவுர்ணமி நாள்.'

இப்படிப் பல இடங்கள்!

புதுமைப்பித்தன் கதைகளில் இழையோடும் நையாண்டிக் குறும்பைச் சமுத்திரத்தின் பழைய கதைகளில் பரவலாகக் காணலாம். இந்தத் தொகுதியிலும் சில இடங்கள்:

அலுவலக நிர்வாகியான முதியவர் அங்குப் பணியாற்றும் மீனாவைக் கண்களால் அளவெடுக்கிறார். "அவளைப் பார்த்த அவரது கண்கள் மார்பகத்திற்கு வந்ததும், மூடிக்கொண்டன. 'சிவசிவ' என்று வாயைப் பேச வைத்தன. பின்னர் மனதிற்குள் கஷ்டப்பட்டு அவளை ஒரு மகளாகப் பாவித்துக் கொண்டார்."

சம்பள நாளில் அலுவலகத்தில் “இன்ஸ்டால்மென்ட் புடவை வியாபாரியைப் பார்த்த மல்லிகா, கட்டிய புடவை நழுவிப் போனதுபோல் தவித்தாள். மாதச்சீட்டுக்காரனைப் பார்த்த சிங்காரம், தானே ஏலத்தில்போகப் போவதுபோல் தவித்தான்."

"கோதையம்மா நீட்டிய டெலிபோனை, ஒரு பயில்வான் கர்லாக் கட்டையை எடுப்பதுபோல் ராமையா எடுத்தார். ஆத்திரத்தில் டெலிபோன் குமிழை, திருதராஷ்டிரன் வீமன் சிலையைப் பிடித்ததுபோல் பிடித்தபடியே எகத்தாளமான குரலில் கேட்டார்".

ஆம்! சமுத்திரத்தின் எகத்தாள நடைக்கு எடுத்துக்காட்டுகள் இவை.

கதை மாந்தர்களின் மன உணர்ச்சிகளை மிகத் துல்லியமாகக் காட்டும் உரையாடல் பகுதிகள் பல. அவற்றுள் இரண்டு:

எந்தக் குற்றமும் செய்யாத தங்களைக் கொலை செய்ய வரும் கூட்டத்தினரைப் பார்த்து "எங்க முகத்தப்பாருங்கய்யா... நாங்கெல்லாம் ஒங்களுக்கு எதிரியாய்யா? என்ன தப்புயா செய்தோம்? அதையாவது சொல்லிட்டு வெட்டுங்கய்யா" என்று முறையிடும் பகுதி ஒன்று.

மொழி வழக்குகள்

தென்தமிழ் நாட்டைச் சார்ந்த சமுத்திரத்தின் கதைகளில் அந்தப் பகுதிப் பேச்சு வழக்கும், வட தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கும் கைகோர்த்துச் செல்கின்றன. அடித்தட்டு மக்கள் வழக்கோடு, அக்கிரகாரத்து வழக்கையும் அழகாகப் பதிவு செய்துவிடுகிறார். தொலைக்காட்சித் 'தமிங்கிலமும்' அவர் பார்வைக்குத் தப்புவதில்லை.

"ஏளா எருமைமாடு....அப்பா சொல்லுறது காதுல விழலே....ஒன் சோலியப் பாத்துட்டுப் போயேம்ளா....முடிச்சாச்சா"

"முடிச்சாச்சு...இன்னுமாளா நிக்கே..."

- இது தென் வழக்கு (118)

"என் கொயந்த... என் கொயந்த...என் கொயந்தயத் தூக்கிக்கினு போறான். கொயந்தய வாங்குங்க..." - இது வட தமிழ்நாட்டு அடித்தட்டு வழக்கு (142)

"நோக்கு இப்போ இருபத்தெட்டு வயசு இருக்குமோ? கல்யாணம் ஆகி ஆறு வருஷம்தானே இருக்கும்? கடைசி வரைக்கும் ஒன் ஆத்துக்காரர் எப்படி இருக்கார்னு பாருடி. இவரும் நானும் வாழ்ந்த வாழ்க்கையும் இவர் என்னை வச்சுண்டிருந்த நேர்த்தியும் லோகத்துல யாருக்கும் வராதுடி..."

இது எல்லோருக்கும் தெரிந்த வழக்கு.

இன்றைய இளந் தலைமுறை தொலைக்காட்சியின் தாக்கத்தால் சீரழிவுக்கு உள்ளாவதை இயல்பாக விளக்கும் 'பெரியம்மா மகன்' கதையில் தொலைக்காட்சித் தமிழை ஆங்கிலங் கலந்த தமிங்கலத்தை அப்படியே கையாள்கிறார் ஆசிரியர். தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியொன்றுக்கு வந்திருப்பவர்களை நோக்கி அந்நிறுவனத்தின் சார்பில் சிம்பா என்னும் பெண்மணி பேசுகிறார்.

"ஹாய் பாய்ஸ் அண்டு கேர்ள்ஸ்! உங்கள் 'ஜிப்சி' சிம்பாவோட மார்னிங் வணக்கங்கள்... ஓகே... சப்ஜெக்ட்டுக்கு வருவோமா? 'ஜிப்சி' நிறுவனத்தின் சார்பில் தொலைக்காட்சியில் நான் கொடுத்த இன்விடேஷனுக்கு இணங்கி இங்கே வந்திருக்கிற உங்களுக்கு என்னோட மெனி மெனி தேங்ஸ். இந்த நிகழ்ச்சி புதுமையானது. பொதுவாக நம்மோட மெஜாரிட்டி எங்ஸ்டர்ஸ் காதலில் ஈடுபடுறதில்லங்க. கேக்கிறதுக்கே கஷ்டமாயில்ல? அதுதான் பேக்ட்டுங்க..."

பாத்திர வளர்ப்புக்குப் பயன்படும் இந்த உரையாடல் புதிய 'மணிப் பிரவாளமாக' அமைந்துள்ளது. தொலைக்காட்சித் தமிழ் நிகழ்ச்சிகளில்தான் களையப்படவேண்டிய இத்தகைய கலப்படம்! அளவுக்கதிகமான ஆங்கிலக் கலப்பில் சில படைப்பிலக்கியவாதிகளுக்கு ஆராக்காதல்! நண்பர் சமுத்திரத்தின் எழுத்துகளில் காலவோட்டத்தில் இக்கலப்பு குறைந்து வந்துள்ளது மனங் கொள்ளத்தக்கது.

உய்த்துணர்தல்

சிறந்த இலக்கியம், சில செய்திகளை வெளிப்படையாகச் சொல்லாமல் உய்த்துணர்வுக்கு விட்டுவிடும். மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை என்னும் மையக்கருத்தில் வரையப்பட்ட 'முகமறியா முகம்', மாப்பிள்ளை, 'சாண்பிள்ளை'தானா என்பதை இறுதிவரை விளக்காமல் செல்கிறது. வெளிப்படையாக விளக்காததே இக்கதைக்குரிய சிறப்பாக அமைந்து விடுகிறது. சாதி மோதல்கள் பற்றிய கதைகளில் முன்னர் வெளிப்படையாகச் சாதிகளைக் குறிப்பிட்ட சமுத்திரம், இப்போது 'உங்களுக்குத்தான் தெரியுமே, உய்த்துணர்ந்து கொள்ளுங்கள்' என்று விட்டு விடுகிறார். சில செய்திகள் சொல்லப்படாமல் உணர்த்தப்படுவது வாசகனை மேம்படுத்தும் இலக்கிய மதிப்பாகும்.

விதிவிலக்கு இல்லாத விதிவிலக்கு

பொதுவாகச் சமுத்திரத்தின் கதைத் தொகுதிகள், ஒரு கதையைப் போல் இன்னொரு கதை இல்லை என்னும் முறையில் வகைமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பன. இந்தத் தொகுதியும் அதற்கு விலக்கில்லை. ஓர் உணர்ச்சி, ஒரு நிகழ்ச்சி, ஒரு பண்பு என ஏதேனும் 'ஒன்றை'யே மையமாக வைத்து வரையப்பட்டவையே பல கதைகள். எனினும் 'கட்டக் கூடாத கடிகாரம்' ஒரு புதினத்துக்கான கதை விரிவைக் கருக் கொண்டுள்ளது. இருக்க வேண்டியதை இருப்பதைப்போல் சொல்லும் கலைத்திறனைப் 'பிணமாலை' முதலிய சில கதைகளில் காணலாம்.

கதைக் குழந்தைகளின் மேனியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் படிந்திருக்கும் அழுக்குகளையும் சுட்டியாக வேண்டும். பின்னோக்கு உத்தியில் பின்னப்பட்ட 'ஒரு சபதத்தின் மறுபக்கம்', 'பூவம்மாவின் குழந்தை' ஆகிய கதைளில் செய்கைத்தனமும் நாடகமயமாக்கலும் தலைகாட்டித் திரைப்படப் பாணி முகங்காட்டுகிறது. ‘காதல் குருவிகளின் பார்வையிலே' போன்ற கதைகளின் முடிவில் ஆசிரியர் நுழைந்து பேசும் பகுதிகள் தனித்து நிற்கின்றன. இவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

படைப்பாளிகளின் மொழிப்பிழைகள்

தமிழ் மொழியின் எழுத்திலக்கணத்தில் மூன்றில் இரண்டு பகுதி புணர்ச்சி இலக்கணம். அதில் வல்லெழுத்து மிகுந்து வரும் இடங்கள், மிகாது வரும் இடங்கள் பேசப்படுகின்றன. அதனை அறிந்துகொள்ளத் தமிழ்ப்படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. 'நொண்டி சென்றான்' என்பது, ஒரு தொடர். இதில் நொண்டி என்பது நொண்டியாகிய ஆளைக் குறிக்கும் பெயர்ச்சொல். இதனையே 'நொண்டிச் சென்றான்' என்று இடையில் வல்லெழுத்து மிகுந்துச் சொல்லும்போது, நொண்டிக்கொண்டு சென்றான் என்று பொருள் தந்து 'நொண்டி’ என்பது வினையெச்சமாகிவிடுகிறது. புள்ளியெழுத்து வெளிப்படுத்தும் பொருள் மாற்றம் புணர்ச்சி இலக்கணத்தைப் புறக்கணிக்கக்கூடாது என்பதைப் புலப்படுத்தும். செங்கற்களிடையே சுதையைப்போலச் சொற்களைப் பிணைத்துச் செல்பவை இந்தப் புள்ளிகள். இவற்றை அறிந்து கையாள வேண்டும். அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் க்,ச்,த்,ப் ஆகிய வல்லெழுத்துக்களை முதலாக உடைய சொற்கள் வந்தால் முறையே அவ்வெழுத்துக்கள் மிகும் என்பது எளிய விதி. 'இந்த தொலைக்காட்சி' 'அந்த சுருட்டைத்தலையன்' என்று ஒற்றிடாமல் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். நண்பர் சமுத்திரத்தின் எழுத்துக்களிலும் இப்படிச் சில பகுதிகள் இடம் பெற்றுள்ளன. அடிப்படைவிதிகள் சிலவற்றை மனங் கொண்டாலே போதும். பெரும்பாலான மொழிப் பிழைகளைப் படைப்பாளிகள் தவிர்த்து விடலாம்.

நண்பர் சமுத்திரம் முதலிய நாடறிந்த எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் பலவும் இதழ்களில் வெளி வந்தவையே. அதிலும் மிகுமக்களைச் சென்றடையும் வாணிக இதழ்களில் வெளிவந்தவையே அதிகம். அந்த இதழ்கள், மேட்டுக்குடி அல்லாதோர் நடத்துபவையாயிருந்தாலும், வெளிப் படுத்துவதும் தூக்கிப் பிடிப்பதும் மேட்டுக்குடிப் பண்பாடே. அதனால் அந்த இதழ்களில் எழுதும் எழுத்தாளர்களும் மேட்டுக்குடி கலாச்சார பங்களிப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். கருநாடகம், கேரளம் முதலிய அண்டை மாநிலங்களில் இந்தக் கருத்தோட்டம் மேலோங்கிய நிலையைப், படைப்பாளிகளிடையே பார்க்க முடியுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழகத்தின் தனித்த இந்தச் சூழ்நிலையிலும் தனது வர்த்தகக் கலாச்சார எதிர்ப்புக்கண்ணோட்டத்தைச் சிறிதும் இழக்காமல் படைப்பாக்கம் செய்யும் சமுத்திரக் கலைஞனை 'நின் பணி தொடர்வதாக' என வாழ்த்துகிறேன். தமிழ்கூறு நல்லுலகத்திற்கு இந்நூலை மகிழ்வுடன் பரிந்துரைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈச்சம்பாய்/உரைகல்&oldid=1664556" இலிருந்து மீள்விக்கப்பட்டது