உள்ளடக்கத்துக்குச் செல்

ஈச்சம்பாய்/பாக்கு மரம்

விக்கிமூலம் இலிருந்து

பாக்கு மரம்

“நீங்க சரியான பத்தாம்பசலி மேடம்… இந்தக் கம்மலை கழற்றி எறிஞ்சிட்டுப் பேசாமல் ரிங் போடுங்க. பார்க்கிறதுக்கு அழகாய் இருப்பீங்க, அதாவது இப்போ இருக்கறதை விட…”

அவள் கோபப்பட்டவள் போல, கதவு மேல் போட்ட இடது கரத்தையும், தங்க வளையல் அலங்கரித்த வலது கரத்தையும், இடுப்பில் அம்புக் குறி போல், வைத்தாள். பின்னர் வாசலுக்கு வெளியே நின்றவனின் முகத்தில் அடிக்காத குறையாகக் கதவை மூடுவதற்காக, தனது கரங்களை இடுப்பிலிருந்து விடுவித்தாள். அதற்குள் அவன் முந்திக் கொண்டான்.

“நானும் என் ஸிஸ்டர்கிட்டேயும் இதுக்கு எதிர்ப்பதமாய்ச் சொல்லிச் சொல்லிப் பார்க்கேன். எந்த ஸிஸ்டர், அண்ணனோட பேச்சைக் கேட்டாள்—இவள் கேட்கிறதுக்கு?”

அவள், இப்போது, அவனை லேசான சிரிப்போடு பார்த்தாள். அப்புறம் லேசாய் யோசித்து, முகம் கழித்தாள். அவனோ தன் கருத்துக்கு உரையாசிரியனாய் ஆகி விட்டான்.

“ஒங்க முகம் வட்ட முகம். இந்தக் காதுங்கள்ல ரிங் போட்டால், ஒரு பௌர்ணமி நிலா பக்கத்துல இரண்டு குட்டி நிலாக்கள் வட்டமடிக்கற மாதிரி தெரியும். என்னோட ஸிஸ்டர் முகமோ, நீண்ட முகம். கம்மல் மாட்ட வேண்டிய காதுல, ரிங் போட்டிருக்காள். அதனால வளையத்துக்குள்ளே நுழையற சர்க்கஸ் புலி மாதிரி தெரியறாள். எவ்வளவு பெரிய ரிங் என்கிறீங்க. அதுக்குள்ளே அவள் முகத்தையே திணிச்சுடலாம்.”

அவளுக்கு, கோபமும் சிரிப்பும் ஒன்றாய் வந்தன. கூடவே எச்சரிக்கை உணர்வும் இயல்பாய் வந்தது. சீ... இப்படியா ஒருத்திகிட்டே பேசுறது..?

அவள் மனதுக்குள் கோபமாய்த்தான் “சீச்சீ” சொல்லப் போகிறாள். ஆனால் அந்த வார்த்தையோ செல்லத்தனமான சீயாகவே ஒலித்தது.

“அதோ மிஸ்டர் சுப்பு வராரே- அவர் கிட்டேயே கேட்கேன்.”

அவள் பதறிப்போனாள். ‘இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லக் கூடாதுங்க’ என்று அவனிடம் சொல்லப் போனாள். பிறகு இவனிடம் மட்டும் இதை எப்படிச் சொல்ல முடியும் என்று யோசித்தாள். அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. எதிர்த்திசையில் சுப்பு வந்து கொண்டிருந்தான். உடனே இவன், அவனைப் பிடித்துக் கொண்டான்.

“ஹலோ மிஸ்டர் சுப்பு... என்ன அதிசயம், ஈவினிங் ஏழு மணிக்கு வாரவங்க நாலு மணிக்கே வந்துட்டீங்க.”

சுப்பு, அவனைப் பார்த்து முக்கல் முனங்கலோடு பல்லைக் காட்டினான். அதையே பதில் கேள்வியாய் உருவகப்படுத்தி இவன் பதிலளித்தான்.

“நீங்க மட்டும் எப்படி என்கிறீங்களா? என் பிழைப்புத்தான் தெரியுமே... விக்கிரமாதித்தன் பிழைப்பு- ஆபீஸாறு மாதம்.. டூராறு மாதம். அதனால ஆபீஸ் ஒர்க் முடிச்சுட்டு ரெஸ்ட் எடுத்துக்க வந்துட்டேன். நாளைக்குக் குல்பர்க்கா போறேன். இருபது நாள் டூர். என்ன மிஸ்டர் கப்பு! ஒரு மாதிரி இருக்கிறாப்போல...” சுப்பு, தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மனைவியையும், அவனையும் பொதுப்படையாகப் பார்த்துவிட்டு, பொதுப் படையாகவே பதிலளித்தான்.

லேசாய் பிரஷர். தலை சுத்துச்சு. வந்துட்டேன். ஓ.கே. மிஸ்டர் அப்பாத்துரை.. நான் போய் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்."

"என்ன ஸார் நீங்க. பிரஷரை ஈஸியாய் எடுத்துக்கப்படாது, வாங்கோ- என் ஆபீஸ் கார் இங்கேதான் நிற்குது. டாக்டர்கிட்டே போயிட்டு வரலாம்."

சுப்பு, தர்மசங்கடமாய் நின்றபோது, அவள் கோபத்தோடு பேசினாள்.

"மொதல்ல உங்க பிரஷரைப் பாருங்கோ ஸார். நீங்க கத்துற கத்தலையும் பதறுற பதறலையும் பார்த்தால் உங்களுக்கும் இவரைவிட அதிகமாகவே இருக்கும்... மொதல்ல நீங்கதான் டாக்டர்கிட்ட போகணும்."

அவள் கணவனைக் கண்டிப்புடன் பார்த்தாள். அவன் உள்ளே போனதும், கதவைத் தாழிடப் போனாள். அப்பாத்துரை, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான், அவள் முகம் நேருக்கு நேராய்க் கதவோடு சேர்ந்து நீண்டபோது, விலகிக் கொண்டான்.

உள்ளே வந்தவள், கணவனின் பூட்ஸ்களை எடுத்து ஒரு பக்கமாக வைத்தாள். சாய்வு நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தவனை, லேசாய்ப் பின்னுக்குச் சாய்த்து, அவன் நெற்றியைத் தடவி விட்டாள். பிறகு சமையற் கட்டிற்குள் ஒரு கையில் கண்ணாடி டம்ளருடனும், இன்னொரு கையில் மாத்திரையுடனும் வந்தாள். அவளின் இரு விரல்களும் கண்ணாடிக்குள் பிம்பங்களாய்ப் பிரதிபலித்து, உள்ளே இருந்த பாதித் தண்ணீருக்கு வேலி கட்டியதுபோல் இருந்தன. அவன் தலையை இழுத்துப் பிடித்து, மாத்திரையை வாயில் போட்டுவிட்டு, டம்ளரை நீட்டினாள். அவனையே பார்த்தாள், "நீ அவரை அப்படிப் பேசியிருக்கக் கூடாது" என்று பேசுவார் என்று பார்த்தாள். பேச வேண்டும் என்று நினைத்தவள் போல், அவனையே முகத்தில் குற்ற உணர்வை அழுத்தி வைத்துப் பார்த்தாள். அவனும் பேசினான். அப்பாத்துரையைப் பற்றி அல்ல.

"சந்திரா! என்னை பெட்ரூமுக்குக் கூட்டிட்டுப் போ! தலை கத்துது. உட்கார முடியலை... என்னை லேசாய்த் தூக்குறியா?"

"அட கடவுளே.. என்னங்க பண்ணுது... டாக்டரைக் கூட்டிட்டு வரட்டுமா?"

"வேண்டாம். நீ என் பக்கத்துலேயே இருக்கணும்.."

அவள், அவனைத் தூக்கி நிறுத்தினாள். அவனைத் தோளோடு சாய்த்தபடி, படுக்கை அறைக்குள் கூட்டிப் போனாள். அவன், அவளிடமிருந்து நழுவிக் கட்டிலில் விழுந்தான். பிறகு 'தலையணை தலையணை என்றான். உடனே அவள் தலைமாட்டில் உட்கார்ந்து, அவன் தலையை மெல்லத் தூக்கித் தன் மடியில் போட்டாள். அவன், அவளை அண்ணாந்து பார்த்தான். லேசாய் உணர்ச்சிவசப் பட்டவனாய், கைகளை பின்னுக்குக் கொண்டுபோய் அவள் முதுகில் சங்கிலிப்பிடி போட்டான்.

கால்மணி நேரம் போனது தெரியாமல் போனது.

அவன், அவள் முதுகில் கற்றிய கைகளை எடுக்கப் போனபோது, அவள் அதைத் தடுத்துவிட்டாள். அவனின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டாள். பிறகு கேட்டாள்.

"டாக்டர்கிட்டே போகலாமா"

“வேண்டாம். இப்போ தேவலை." "இனிமேல் பக்கத்து வீட்டுக்காரர்கிட்டே ராத்திரியெல்லாம் அரட்டை அடிங்கோ- அப்புறம் சொல்றேன்... அந்த ஆள்கிட்டே பேசிப் பேசியே ஒங்க எனர்ஜி வேஸ்டாப் போகுது.... என்ன மனிதரோ, யாரும் ஆளில்லாதபோதுகூட அவர் வாய் பேசிக்கிட்டேதான் இருக்குது..."

“மற்றவங்களைப் பற்றி நமக்கென்ன பேச்சு..."

"அதுவும் சரிதான்... ஆமா.-- முடிவெட்டப் போறதில்லையா... என்னை மாதிரியே கொண்டை வச்கக்கப் போறீங்களா?"

அவள், அவன் தலையைச் செல்லமாகக் கோதிவிட்டாள், அவன் தன் தலையை மேலே மேலே உயர்த்திக் கொண்டு போனபோது, அவள் உம் என்று அதட்டினாள். அவன் அவள் முதுகை இறுகப் பிடித்தபடியே சிணுங்கினான். அந்த இறுக்கத்திலும், செல்லக் கிறுக்கிலும் மெய்மறந்து போன அவள், தன் மடியை ஆட்டி, அவனைத் தாலாட்ட, அவன் தொட்டில் குழந்தையாகித் தூங்கிப் போனான்.

மறுநாள் காலையில், அலுவலகம் புறப்பட்ட கணவனிடம், வாசலுக்கு வெளியே வந்து சின்னஞ்சிறு சூட்கேஸைக் கொடுத்தாள். ஆறு வீடுகளை வரிசையாகக் கொண்ட அந்தக் குடியிருப்பு வராந்தாவை அப்பாத்துரை கடந்து கொண்டிருந்தான். அவனுக்கு முன்னால் பெட்டி படுக்கை யோடு டிரைவர் போய்க் கொண்டிருந்தான். அவளுக்கு என்னவோ போலிருந்தது. இப்படி நெடு நாள் டூர் போகும்போது, வீட்டுக்கு வந்து சொல்லிவிட்டுப் போகிறவர். இன்றைக்கு ஏன் சொல்லவில்லை? எப்படிச் சொல்வார்? நான்தான் முகத்தில் அடித்தாற்போல் பேசி விட்டேனே. அவருக்கு மட்டும் சுயமரியாதை இருக்காதா என்ன..?

அவள், சுயக்கட்டுப்பாட்டுடன், கதவைச் சாத்தினாள். ஒரு நிமிடத்திற்கு மேல் அவளால் உள்ளே இருக்க முடியவில்லை. பின்கதவைத் திறந்தபடியே, பால்கனி மாதிரியான பகுதியில் நின்றாள். அதன் கவரில் சாய்ந்தபடியே, வெளியே எக்கிப் பார்த்தாள். அவள் கணவனும், அவனும் ஜோடியாக நடந்து போனார்கள். ஒரு தடவை அவன், "பாருங்க, நம்மோட பெயர்ப் பொருத்தத்தை. நீங்க கப்பு. நான் அப்பு." என்று சொன்னது அவளுக்கு நெஞ்சில் மீண்டும் வேரூன்றிச் செடியாய் வளர்கிறது. வாயில் பூவாய்ப் புன்னகைத்தது. அதே சமயம், நெஞ்சுக்குள் ஒரு சின்ன நெருடல். ஆஜானுபாகுவாய் சதைப் பெருக்கமோ குறையோ இன்றி அவன் கம்பீரமாக நடந்து போகிறான். ஆனால் அருகில் அவரோ குள்ளங் குள்ளமாய் நடக்கிறார். உதிர்ந்து போகப் போவது மாதிரியான பூஞ்சை உடம்பு. இது போதாது என்று இந்த வயதிலேயே பிளட் பிரஷர். கல்யாணத்திற்கு முன்பே இருந்திருக்கு. ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் என் தலையில்.

அவள், தனக்குள்ளேயே ஏய் என்று சொல்லிக் கொண்டாள். பின் கதவை அடைத்துவிட்டு, முன் கதவைத் திறந்தாள். கணவன் மீது, கோபப்பட்டதற்காக, தன் மீது கோபப்பட்டாள். இதற்குக் காரணமான அவன்மீதும் கோபம் வந்தது. ஒரு பெண்ணிடம் அளவோடு பழகத் தெரியாத மனிதர்.

அவள், அவனைப் பின்னோக்கிப் பார்த்தாள்.

அவளுக்கு மேற்கொண்டு சிந்திக்கக்கூட பயமாக இருந்தது. இந்தாண்டுக் கால இல்லறக் குடத்தில், இரண்டு மாதகாலப் பரிச்சய நஞ்சு விழுந்துவிடக் கூடாதே என்று பயப்பட்டவள் போல், தலையில் கைபோட்டாள். சுவரில் தலையைச் சாத்தினாள்.

இந்த அரசாங்கக் குடியிருப்பில் காலியாய் இருந்த முதல் வீட்டிற்கு, அவன் வந்த மறுநாள், இவளோடும், இவள் கணவனோடும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அறிமுகம் நட்பாகியது. இவர்களிடம் மட்டுமல்ல. எல்லோரிடமும் இன்முகமாகவே இருப்பான். குழந்தைகள் "அங்கிள், அங்கிள்” என்று முதுகில் ஏற, அவன் குதிரையாவான். கல்லூரிப் பையன்களின் கிரிக்கெட்டுக்கு அம்பயராவான். கிழவர்களோடு கிழம்போல் நடந்தபடியே வேதாந்தி ஆவான். இதுவரை இந்தச் சந்திராவுக்கு, அவன் பதவி மூலமோ குடும்ப மூலமோ துல்லியமாகத் தெரியாது. அடிக்கடி டூர் போகிற, கார் வைத்திருக்கிற பதவி. சென்னையில் வயதான அம்மாவும்... வயசுக்கு வந்த தங்கையும் இருக்கிறார்களாம். ஒரு தடவை வழக்கம்போல வீட்டுக்கு வந்திருந்தபோது, "வீட்ல எப்போ கூட்டி வருவீங்க" என்று கப்பு கேட்டான். அவன் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு, "கல்யாணம் ஆகலியா?" என்று இவள் கேட்டாள். உடனே அவன் பூசி மழுப்பினான். "ஏதோ ஆச்கது.... எப்படியோ ஆச்சுது, அம்மாவும், தங்கையும்தான் உலகம்" என்றான்.

அவன் அப்போது கண் கலங்கியதை இப்போது நினைத்தபோது சந்திராவுக்கு மீண்டும் கண் கலங்கியது. அவன் மீது தான் கொண்டிருப்பது வெறும் அனுதாபந்தான்" என்று பல தடவை வலிய நினைத்தாள். மனத்துக்குத் தெம்பு வந்தது.

இருபது நாட்களும் போய், இருபத்தொன்றாவதும் வந்துவிட்டது. இந்த நாட்களில் - சுப்பு - அவள் கணவன் தெளிவாக இருந்தான். பிரஷர் போன இடம் தெரியவில்லை.

அவளிடம், பத்து வயது குறைந்தவன் போல் நடந்து கொண்டான். சிலசமயம் மாத்திரைகளைக்கூட மறுத்து விட்டான். பார்த்தியா.. மாத்திரை சாப்பிடாட்டியும் பிரஷர் ஏறல பாரு" என்று சொல்லிக் கொண்டான்.

அவன் - அப்பாத்துரை, வந்துவிட்டான் போலும்.

அவன் வீட்டில், ரேடியோ சத்தம் கேட்டது. சந்திரா அந்தப் பாட்டுக்கு ஏற்ப முணுமுணுத்தாள். அவன் கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது. அவன், தன் வீட்டுக் கதவைத் தட்டுவான் அல்லது காலிங் பெல்லை அடிப்பான் என்று கதவருகே வந்தாள். எதுவுமே நடக்கவில்லை . உரக்கக் கிளம்பிய அவன் காலடிச் சத்தம், சன்னஞ் சன்னமாயக் குறைந்து கொண்டிருந்தது.

அவள், கதவைத் திறக்கப் போனாள். பிறகு அவளுள்ளும் ஒரு வைராக்கியம். 'ஒங்களை மனம்நோகப் பேசிவிட்டேன். மன்னிச்சிடுங்க..... என்று மட்டும்தான் பேசப் போனால், ரொம்பத்தான் பிகு செய்யுறார். வீட்ல டெலிபோன்காரர்கள் டெலிபோன் 'பிக்ஸ் செய்வதற்காக வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகிறவர்... டூருக்கு முன்னாலும் கொடுக்கல, பின்னாலும் கொடுக்கல. அடியே வெளியே போகாதடி... கம்மாக்கிட, டெலிபோன் வந்துட்டான்னு ஒயரைத்தான் பார்க்கப் போறேன், அவரை அல்ல.'

அவள், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். டெலிபோன் ஒயர் இல்லை. அதாவது அவருக்கு இன்னும் டெலிபோன் வரவில்லை. சாவியை ஏன்.. என்னிடம்...

பூட்டிப்போட்ட அவள் மனம் திறந்தது. அவன் யதார்த்தமாகவும் - ஒரு வேளை விகற்பம் இல்லாமலும் முன்பு சொன்ன கமெண்ட் இப்போது அவளுக்குக் காமனாய்த் தோன்றியது. "மேடம்' முகத்தைப் பார்க்கிறதுக்கு மட்டும் கண்ணாடியைப் பாருங்க. ஒங்க நிறத்தையும் பார்க்கணுமுன்னால். பீர்க்கம்பூவைப் பாருங்க. மஞ்சள் ஷேட்ல சிவப்பு நிறமாய் இருக்கும். அதுதான் உங்க நிறம்."

"மேடம்... காட்டுப் பகுதிக்குப் போயிருக்கீங்களா....? கோணலான தென்னை மரங்கள் பக்கத்துல, முள்ளம் பன்றி மாதிரியான ஈச்சமரங்களின் அருகில் கன்னங்கரேலென்று இருக்கிற பனைமரங்களுக்குச் சமீபத்துல ஒரு மரவகை மட்டும் பளபளப்பாய், ஆகாயத்துக்கும் பூமிக்கும் இடையே நேர்கோடு போட்டது மாதிரி நளினமாய் ஒயிலாய் நிற்கும். அதுதான் பாக்குமரம். இந்தக் குடியிருப்புக் காட்ல வெவ்வேறு பெண் மரங்கள்ல நீங்க ஒரு பாக்குமரம். எஸ் மேடம், யூ ஆர் எ அரக்னட் ட்ரீ. வேணுமுன்னால் மிஸ்டர் கப்புகிட்டே.."

அப்போது காதுகளில் உதாசீன மாய் வாங்கிய வார்த்தைகளை இப்போது அவள் வாயில் புன்னகையாய் மென்று விழுங்கினாள். கண்களில் ஒளியாய்க் காட்டினாள். நெஞ்சிலே ஒரு சின்னச் சுகம். அதைப் பெரிதாக்குவதுபோல, அதோ அவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பாராததுபோல் உள்ளே போகப் போனான். அவனோ சிரித்தபடியே வந்து அவளை நிற்க வைத்தான். அவள் வார்த்தைகளால் கட்டவிழ்த்தாள். நெகிழ்ச்சிக் குரலில், உள்ளத்தை, தேங்கயாய் உடைத்துக் காட்டினாள்.

“என் பேர் சந்திரா. இந்த வீட்லதான் இருக்கோம். மறந்து போறதுக்கு ஆறாவது ஏழாவது வீடுல்ல."

"ஒங்களை மறக்க முடியுமா மேடம்? காட்டுப் பகுதியில் கார்ல போகும்போது பாக்கு மரத்தைப் பார்க்கேன். அப்போ ஒங்க ஞாபகம் வருது. இதனால ஒங்களை நினைக்காமல் இருக்க முடியல. உங்களை மறக்கிறதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க, மேடம்..."

"அப்படின்னா பாக்கு மரத்தைப் பார்க்காதீங்க..."

"அதெப்படி... தோக்கும் இடமெல்லாம் பாக்கு மரம். பாக்குமரமே... ஹலோ மிஸ்டர் சுப்பு! ஸாரி - நேற்று நைட்ல லேட்டாய் வந்தேன், அதனால ஒங்களைப் பார்க்க முடியல. எப்படி இருக்கீங்க?... காலையிலேயே வந்துட்டீங்க.."

"ஐ ஆம் பிஸி மிஸ்டர் அப்பு. புராஜெக்ட் ரிப்போர்ட்டை எடுக்க மறந்திட்டேன். ஓகே. அப்புறம் பார்க்கலாம்."

சுப்பு மேற்கொண்டு பேசாமல் உள்ளே போனான். தொடர்ந்து வந்த மனைவிக்கு வழிவிட்டு வாசலில் கதவைப் பூட்டினான்.

அரைமணி நேரமாய் அங்குமிங்கும் குடைந்து, இருவரும் புராஜெக்ட் ரிப்போர்ட்டைக் கண்டுபிடித்தார்கள். அதைக் கையில் வைத்து உருட்டியபடியே, பேசாமல் இருந்தவனைப் பார்த்து, அவள் தான் கேட்டாள்.

"ஆபீஸ் போகலையா...?"

"நாம் நம்புறபடி எதுவும் நடக்குதா என்ன...?"

"என்ன சொல்றீங்க..."

"பழையபடியும் தலை சுத்துது, சந்திரா, வா சந்திரா, என்னைப் பிடிச்சுக்கோ... அய்யய்யோ."

சந்திரா, பதறிப் போனாள். அவனைக் கைத்தாங்கலாகக் கட்டிலுக்குக் கூட்டிப் போனாள். அவசர அவசரமாய், மாத்திரையைக் கொடுத்தாள். அவனோ தலையை, பலமாய் ஆட்டினான். அவள் பார்வையைத் தவிர்த்தபடியே, "எம்மா, எப்பா" என்றான்.

"அடக் கடவுளே... பழையபடியும் பிரஷரா-. டாக்டர்கிட்டே போகலாம். ஸ்கூட்டர் கூட்டிட்டிட்டு வாரேன்.."

"வேண்டாம்... சந்திரா... நீ என்னை விட்டு எங்கேயும் போகவேண்டாம். போகப்படாது."

"அப்போ - மிஸ்டர் அப்பாத்துரையை, ஆட்டோ கொண்டுட்டு வர-"

"யார் போனாலும் அந்த அயோக்கியன் போக்க கூடாது. யப்பா ... எப்படி தலை சுற்றுது..."

சந்திரா, அவனைப் பிடித்துக் கொண்டாள். மெல்லத் தூக்கி அவன் முதுகைத் தன் மார்போடு சாய்த்துக் கொண்டு, நகர்த்தி நகர்த்தி படுக்கையறைக்குக் கூட்டி வந்தாள். ஆடைகளைச் சிறிது தளர்த்தி விட்டாள். தலையைத் தூக்கி, தலையணையை வைக்கப் போனாள். அவனோ அவள் மடியில் தலை போட்டான். சந்திரா... சந்திரா... என்று கூவியபடியே அவள் இடுப்பைச் சுற்றிப் பிடித்தான்.

அவள் யோசித்தாள். சத்தம் போட்டே சொன்னாள்.

"இருபது நாட்களாய் வராமல் இருந்துட்டு. அட கடவுளே!"

அவனைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. அவனுக்குக் கொடுக்க வேண்டிய மருந்து புரிந்தது. தப்பு -- தப்பு. தானே உட்கொண்டு... அவனைக் குணப்படுத்த வேண்டிய மருந்து. யாரோ ஒருவனுக்குக் காதலியாக ஆகப்போவதுபோல் பயந்தவன், இப்போது இவனுக்குத் தாயானாள். குழந்தைகளுக்குச் சொல்வதுபோல், குழந்தைத்தனமான செய்தியைச் சொன்னாள். நெஞ்சை நிமிர்த்தி, குரலை நிர்த்தாட்சண்யமாக்கிப் பேசினாள்.

"நீங்க பக்கத்து வீட்டுக்காரரோட சவகாசத்தைக் குறைக்கணும். நீங்க இல்லாத சமயத்துல சும்மாச் கம்மா வந்து பேசறார். மனிதருக்கு ஹார்ட்ல ஒண்ணும் இல்லதான். பட்... எனக்கு சங்கடமா இருக்குது... நீங்க ஆபீஸ் போயிட்டு வாரது வரைக்கும் நான் படும் பாடு, பெரும்பாடு."

அவன் பதிலேதும் பேசவில்லை. தன்னையே பார்த்தவளின் முகத்தை இழுத்துத் தன் மார்பில் போட்டுக் கொண்டான். அவள் முதுகைத் தட்டித் தட்டி விட்டான். பிறகு அப்படியே தூங்கிப் போனான்.

சமையல் வேலையில் கவனமாய் இருந்த சந்திரா, வெளியே இருந்து உள்ளே வந்த கணவனை அதட்டினாள்.

"பிரஷர்தான் விடமாட்டேங்கே. ஏன் வெளில போனீங்க..."

"இப்போ பிரஷர் இல்ல. துப்புரவாய் இல்லை . சந்திரா... சந்திரா- ஒரு விஷயத்தைக் கேளேன்... பக்கத்து வீட்டுக்காரன் கிட்டேதான் போனேன். 'ஏன் ஸார், நான் இல்லாத சமயத்துல என் ஒய்புகிட்டே பேசுனே'ன்னு அதட்டினேன், ஆசாமி பயந்துட்டான். அய்ந்து நிமிஷம் பித்துப் பிடித்தவன் மாதிரி இருந்தான், அப்புறம் அயாம் ஸாரி, தப்பு என் மேலதான், இதுமாதிரி இனிமேல் நடக்காதுன்னான். குவார்ட்டர்ஸக் காலி செய்துவிடுவானாம். ஆசாமி பேச்கலதான் வீரன். ஆனால் பயந்தாங்கொள்ளி. நான் எச்சரித்ததும் படுக்கையில் குப்புற விழுந்தான். சரி.-- நான் ஆபீஸ் போயிட்டு வாரேன்.-- இனிமேல் நான்கூட இவன்கிட்டே பேச மாட்டேன்... எதுவும் ஹார்ட்ல இல்லன்னு நீ சொன்னதைச் சொல்லல. சொன்னால் குளிர் விட்டுடும்."

கப்பு, போய்விட்டான்.

சந்திரா, கைகளைப் பிசைந்தாள். வியர்த்துக் கொட்டிய முகத்தைத் துடைக்கும் சுரணை கூட இல்லாமல் வெளியே வந்தாள். அப்போது கதவை மூடிவிட்டு, வெளியே வந்தவள் அப்பாத்துரையைப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் ஓடோடி வந்தாள். அவன் தனது வாசலைக் கடக்கும்போது கதவைப் படாரென்று ஒப்பாரி வைப்பதுபோல் சாத்தினாள். அவன் "இதுக்கு மேல யாரும் என்னை அவமானப்படுத்த வேண்டாம். குடித்தனத்துக்கு மட்டுமில்ல குடியிருப்பு பகுதியில் வாழக்கூட ராசியில்லாதவன் நான். வேற வீடு பார்க்கத்தான் புறப்படுறேன்" என்று நின்று நிதானித்துச் சொல்வது கேட்டது.

சந்திரா, கதவைத் திறக்கப் போனாள். 'ஒங்க முகத்தில் விழிக்க எனக்குத் தகுதியில்லன்னுதான் கதவை மூடினேன்' என்று தனக்குத் தானே அரற்றினாள். ஆனாலும் -

திருமதி சந்திரா சுப்பு, கதவைத் திறக்கவில்லை. வாயில் அரற்றியபடி வாசலுக்கு வந்து சொல்லவில்லை. எப்படிச் சொல்ல முடியும்?

அப்படிச் சொன்னால், குளிர்விட்டு விடாதா? - அதாவது அவளுக்கு....

—கல்கி, விடுமுறை மலர் . 1987

ஏகலைவன் பதிப்பகத்தின் வெளியீடுகள்


1. ஒரு மாமரமும் மரம் கொத்திப் பறவைகளும்
சிறுகதைத் தொகுப்பு - 1996 விலை ரூ. 40

2. எனது கதைகளின் கதைகள்
கட்டுரைத் தொகுப்பு - 1996 விலை ரூ. 45

3. மூட்டம்
நாவல் - 1996 விலை ரூ. 30

4. பாலைப்புறா
நாவல் - 1998 விலை ரூ. 75

5. கோரைப்புற்கள்
சிறுகதைத் தொகுப்பு - 1998 விலை ரூ. 35

6. ஈச்சம்பாய்
சிறுகதைத் தொகுப்பு - 1998 விலை - ரூ. 35

முதல் மூன்று படைப்புகள், 26-7-97 அன்று, முதல்வர் கலைஞர் அவர்களால் சென்னையில் வெளியிடப்பட்டன.

மத நல்லிணக்கத்தை வற்புறுத்தும் மூட்டம் நாவல் 16-9-98 அன்று சென்னைக் காமராஜர் அரங்கில் நடைபெற்ற அகில இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்த விடியல் கலைக் குழுவால் நாடகமாக அரங்கேறியது. இந்த நாவல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியிலும், திருச்சியில் புனித சேவியர் கல்லூரியிலும், பாலக்காடு பல்கலைக் கழகத்திலும் பாடநூல்.

பாலைப்புறா - சென்னை வானொலி நிலையத்தின் மூலம் நாவல் வாசிப்பாக ஒலிபரப்பானது. மாநில சுகாதார அமைச்சர் திரு. ஆர்க்காடு வீராசாமி அவர்களால் வெளியிடப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு நாவல்.

விலைக்குரிய பணம் அனுப்பினால், நூலை அனுப்புவதற்கான தபால் செலவையோ, அல்லது கூரியர் செலவையோ பதிப்பகம் ஏற்றுக் கொள்ளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=ஈச்சம்பாய்/பாக்கு_மரம்&oldid=1664570" இலிருந்து மீள்விக்கப்பட்டது