உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு -சேரர், சோழர், பாண்டியர்

33


எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்[1].

இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டுப் பாதைகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றிபெற்ற நாடுகளில் உணவுப் பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை[2]. இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது.

நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்,[3] ஓர் ஆண்டுக்குமேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு[4].

போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்,[5] அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்[6]. வளமுடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின[7]. அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் மன்னர்கள் ஒடுங்கினர்[8].

தும்பைப் பகைவரை வெல்லுதல்

வடநாட்டில் இவனை எதிர்த்துத் தாக்கும் மன்னர்கள் இல்லை என்று கூறினோம். தமிழ் நாட்டில் இத்கைய நிலை இல்லை. இவன் போர் தொடுக்காமல் இருந்தபோதே இவனைச் சில அரசர்கள் இவனது நாட்டை அடையக் கருதிப் போர்தொடுத்தனர்[9]. அவர்களை எதிர்த்துப் போரிட்டு நெடுஞ்சேரலாதன் அழித்தான்[10]. இது தற்காப்புப்


  1. பதிற். 17 : 7 - 14
  2. ஷை 19 : 1 - 10
  3. ஷை 16 : 8 - 9
  4. ஷை 15 : 1- 2
  5. ஷை 16 : 4 - 5
  6. ஷை 15 : 2
  7. ஷை 13 : 10 - 13, 15 : 7, 19 : 16 - 17
  8. ஷை 12 : 5 - 8
  9. 'தும்பைப் பகைவர்', (பதிற். 14 : 8)
  10. 'தும்பைப் பகைவரின் போர்ப்பீடு அழித்த' (பதிற். 14 : 8-9) 'மன்மருங்கு அறுத்த' (பதிற். 15 : 5)