உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

41


பல்யானைக் குட்டுவன் முதியரைத் தம் பக்கம் தழுவிக்கொண்டான்[1]. அவர்களுக்காகப் போராடி அகப்பாவில் இருந்த பாண்டிய ஆட்சியாளரை அழித்தான்.

உம்பற்காட்டு வெற்றியாலும் அகப்பா வெற்றியாலும் தனக்குக் கிடைத்த பரந்த நாட்டைப் பகுத்துக் கொடுத்தான்[2]. அப்பகுதியில் உம்பற்காட்டு ஆட்சி, அவனது அண்ணன் மகன் செங்குட்டுவனது நேரடிப் பார்வையில் விடப்பட்டது. அகப்பா, முதியர்க்கு விடப்பட்டது.

அகப்பா வெற்றி, பாண்டியரின் வேற்படைக்குப் பேரச்சத்தை உண்டுபண்ணியது. கொங்குநாட்டைத் தன் ஆட்சியில் கொண்டு வந்த படைக்கே இத்தகைய அச்சத்தை உண்டாக்கியது[3].

சோழ பாண்டியரின் தோல்வி

இவனது போர் வலிமையையும் அதனால் பெற்ற புகழையும் அறியாத சோழரும், பாண்டியரும், சில வேளிர் மன்னர்களும் ஒன்று திரண்டு வந்து இவனைத் தாக்கினார்கள். இவனும் எதிர்த்துத் தாக்கினான். போரில் முதன்முதலில் பகைவரைத் தாக்கும் படை தார்ப்படை எனப்படும்[4]. வேந்தர்களின் இந்தத் தார்ப்படை பல்யானைச் செல்-


  1. பதிற். பதி 3 : 4
  2. ஷை 3 : 2 - 3
  3. பதிற். 22 : 15-16 - 'கொங்கர் நாடகப் படுத்த வேல்கெழு தானை வெருவரு தோன்றல்' இதனைக் கொங்கர் நாட்டை அகப்படுத்திய பல்யானைக் குட்டுவன் என்று பிரித்துப் பொருள் கொண்டு கொங்கு நாட்டைத் தன் ஆட்சிக்குக்கீழ்ப் பல்யானைச் செல்கெழு குட்டுவன் கொண்டுவந்தான் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பொருள்கொள்வது சமகால அரசர்களின் வரலாற்றை ஒப்புநோக்குகையில் ஒத்துவரவில்லை. இவனது காலத்துப் பாண்டிய வேந்தன் பசும்பூட்பாண்டியன் என்று வழங்கப் பட்டவனான நெடுஞ் செழியன் ஆவான். இவன் கொங்கர்களை வென்ற செய்தியை அவனது வரலாற்றில் காணலாம். அன்றியும் கொங்கு நாட்டுக் குடிமக்களாகிய மழவர்களுக்கு (பதிற். 21 : 24 'குவியற்கண்ணி மழவர் மெய்ம்மறை') இவன் கவசம் போல் விளங்கினான் என்பதோடு மாறுபாடாய் அமையும். மேலும், பாடலில் கூறப்பட்ட இந்த நிகழ்ச்சி பதிகத்தில் கூறப்படவில்லை. இது பல்யானைக் குட்டுவனின் வெற்றியாயின் பதிகத்தில் விடுபடக் காரணமில்லை.
  4. பதிற். 22 : 16