உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


வேல்களைக் காவற்காடாகவும், வில், அம்பு, எஃகம் ஆகியவற்றை அகழியாகவும் தம் படைக்குக் காவலாய் அமையும் படி முரசு முழங்கக் காற்றுப்போல் படையை நடத்திச் சென்று இவன் போரிடுவதை நினைத்தவுடனே பகைவர்கள் நடுங்குவர்[1]. கூளியரும் பறவைகளும் உண்டு மகிழப் பிணம் குவிப்பான்[2]. பகைவர்களுக்கு இவன் எமன் போன்றவன் ஆவான்[3].

வளம் பெருக்குதல்

இவன் நாட்டில் சில பகுதிகள் வளம் குன்றின. அந்த நிலங்களுக்கு இவன் வளப்பத்தை உண்டாக்கினான்[4]. கால்வாய்கள், ஏரிகள் அமைத்து வளமுறச் செய்தான். இவ்வாறு நிலத்தை வளமுறச் செய்ததன் வாயிலாகச் சோர்வு நீக்கிக் குடிமக்களைக் காப்பாற்றினான். இதனால் குடிமக்கள் போர்க் காலங்களில் இவனுக்குப் பெரிதும் உதவினர். உழவர்களின் உதவியால் இவனுக்குப் போர் வெற்றி எளிதாயிற்று[5].

தோற்றப் பொலிவு

இவன் பெரிய மாலையை அணிந்து இருந்தான். காலிலே பெரிய வீரக்கழல் அணிந்திருந்தான்[6]. இவனது மார்பு அகலமும் உறுதியும் கொண்டது[7]. கொடிகள் பறக்கும் தேரில் ஏறிக்கொண்டு இவன் பீடுடன் செல்வது வழக்கம்[8]. யானைமீது செல்வதும் சில வேளைகளில் வழக்கமாயிருந்தது[9].

இவன் தலையில் 'நார்முடி' அணிந்திருந்தான். அது பட்டு நூல் போர்வையைக் கொண்டு செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளை நிறத்துடன் நாரால் செய்யப்பட்ட முடிபோல் காட்சியளித்தது. அதில் பொன் கம்பிகள் ஊடுருவிய அழகுக் கரைகள் இருநதன. அந்தக் கரைகளுக்கிடையே மணிகளும் முத்துகளும் சேர்த்து அழகு செய்யப்பட்டிருந்தன. மணிகள் கரிய நிறமுடைய களாப்பழம் போலவும், பொன் கம்பிகளில் கோக்கப்பட்ட முத்துகள் களங்காய்கள் போலவும் நிறத்தால் தோற்றம் அளித்தன. மணியும் முத்தும் கோக்கப்-


  1. ஷை 33 : 10 - 12
  2. ஷை 35 : 5 - 10
  3. ஷை 39 : 8
  4. ஷை 38 : 3 - 4
  5. ஷை 31 : 13 - 14, 32 : 3 - 5, 37 : 7 - 10, 38 : 1 - 2; பதிற். பதி. 4 : 6 - 9
  6. பதிற். 37 : 8
  7. ஷை 31 : 14 - 17
  8. ஷை 33 : 1
  9. ஷை 38 : 6