உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


செங்குட்டுவனைப் போன்று பழங்காலப் பாண்டிய அரசன் ஒருவனும் கடலில் வேலிட்டதை (கடற் போரில் வென்றதை) இவ்விடத்தில் நினைவுகூரலாம்[1].

கடல் பிறக்கோட்டிய இந்தச் செயலைக் கடல் கடந்த செயலாக எண்ணிப் போற்றிய நிலையும் உண்டு[2].

தகடூர்ப் போர்

செங்குட்டுவன் தகடூரை முற்றுகையிட்டான்[3]. அப்போது அங்கு அவனது முற்றுகையை எதிர்த்துப் போரிடுவோர் இல்லை. எனவே, இவன் வறிதே தன்னாடு திரும்பினான். அப்போது அங்கு இவனது பெருஞ் சினத்திற்குத் தீனி கிடைத்தது. கடலை முற்றுகையிட்டான். கடலில் தன்னை எதிர்த்த பகைவர்களைக் கடலுக்கப்பால் ஓட்டிவிட்டான். தகடூர்ப் போரானது கடல் பிறக்கோட்டிய நிகழ்ச்சிக்குமுன் நடைபெற்றதாகும்.

இமயத்தில் வில் பொறித்தல்

செங்குட்டுவன் தன் முன்னோர்களைப்போலவே தானும் இமயமலையில் தன் வில் சின்னத்தைப் பொறித்தான்[4].

கடம்பெறிதல்

செங்குட்டுவன் தன் தந்தை நெடுஞ்சேரலாதனைப் போலவே கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத்தாரை வென்றான்[5]. இந்த வெற்றி தன் தந்தை வெற்றியின் கூறுபாடாயிருக்கலாம். அல்லது இவனது ஆட்சிக் காலத்தில் மீண்டும் போர் மூண்டு அடைந்த வெற்றியாக இருக்கலாம்.

இரண்டாம் வடநாட்டுப் போர்

முதலாம் வடநாட்டுப் போர் மேலே கூறப்பட்டுள்ளது. பின்னர்ச் செங்குட்டுவன் தன் தாயாரைக் கங்கையில் நீராட்டுவதற்காக வடநாடு சென்றான். அப்போது ஆரிய மன்னர் ஆயிரவர் இவனை எதிர்த்துத்


  1. சிலப். 11 : 17 - 22
  2. சிலப். 17, பூவைநிலை (உள்வரி வாழ்த்து) 3
  3. அகம். 212 : 14 - 16
  4. சிறுபாண். 48 – 49
  5. சிலப். 17, பூவை நிலை (உள்வரி வாழ்த்து) 3, 25 : 1 - 187, 28 : 135, 29 : ஊசல்வரி, 1 : 35, 2 : 3 - 5, வள்ளைப்பாட்டு, 3