உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

59


கொங்கணர்,[1] கலிங்கர்,[2] கருநாடர்,[3] பங்களர்,[4] கங்கர்,[5] கட்டியர்,[6] வடஆரியர்[7] என்போர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர். இவர்கள் எல்லோருமே தமிழைத் தாய் மொழியாக உடையவர்கள் அல்லர்[8]. இவர்களுக்கும் செங்குட்டுவன் தலைமையேற்ற தமிழர் படைக்கும் போர் நடந்தது. போர் வேங்கடமலைப் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போரில் செங்குட்டுவன் வெற்றி பெற்றான்.

கடல் பிறக்கோட்டல்

இவன் நிலப் போர்களில் வெற்றி பெற்றது போன்றே கடற்போரிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றான்[9]. இப்போரைப்பற்றிக் குறிப்பிடும் இடங்கள் பலவற்றில் போர்க்களம் கடலாக உருவகம் செய்யப்பட்ட இடங்கள் பல உண்டு. நிலப் பகுதிகளில் நடந்த போரே உருவக நிலையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றும். உண்மை அஃது அன்று. 'நீர்புக்குக் கடலொடு உழந்தான்'[10] என்னும் தொடரைச் சில இடங்களில் 'கடற்படை' என்றே கொள்ள வேண்டும்.

இவன் பின்னிடச் செய்த கடற்படை எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவன் தந்தை நெடுஞ்சேரலாதன் கடற்போரில் ஈடுபட்டுக் கடப்ப மரத்தைக் காவல் மரமாக உடைய கூட்டத்தாரை வென்றான். அப்போரில் செங்குட்டுவன் துணைநின்று தந்தைக்கு வெற்றி தேடித் தந்திருக்கலாம் அல்லது தந்தையால் அடக்கப்பட்ட கடல் கூட்டத்தார் இவன் காலத்து மீண்டும் குழப்பம் விளைவித்தபோது மீண்டும் போரில் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கலாம்.


  1. கொண்கான தேயத்தவர். சேர நாட்டுக்கு வடக்கிலும், கருநாடகத்திற்கு மேற்கிலும் இருந்தது கொண்கான நாடு.
  2. கலிங்க நாட்டவர்
  3. கருநாடகத்தில் செல்வாக்குப் பெற்றவர்
  4. வங்க நாட்டிலிருந்து வந்தேறி வாழ்ந்தவர்
  5. கங்கக் குடியைச் சேர்ந்தவர்
  6. கட்டிக்குடியைச் சேர்ந்தவர்
  7. வடநாட்டு ஆரியர், தென்னாட்டு ஆரியராகிய தமிழரிடமிருந்து வேறுபட்டவர்
  8. 'வண்டமிழ் மயக்கம்' என்னும் சிலப்பதிகாரத் தொடர் இவர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் அனைவரும் தமிழ்மொழி பேசுபவர் என்று குறிப்பிடுவதால் இவர்களைத் தமிழ்மொழியைத் தாய்மொழியாக உடையவர் அல்லர் எனக் கொள்வது பொருத்தமாய் அமைகிறது.
  9. அகம். 212 : 15 - 16; பதிற். 41:25 - 27, 42:21 - 22, 45 : 20-23, 46:11 - 13, 48: 3-4, 50:12-13, பதிற். பதி. 20-21; சிலப். 28:119, 23: கட்டுரை - 12.
  10. பதிற். 48 : 3 - 4