உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

61


தாக்கினர். செங்குட்டுவன் அவர்களைப் போரிட்டு வென்றான். இஃது இவனது இரண்டாம் வடநாட்டுப் போராகும்[1].

மூன்றாம் வடநாட்டுப் போர்

பாண்டிய நாட்டில் தன் கணவனை இழந்து சேரநாட்டுக்கு வந்து விண்ணுலகடைந்த கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட விரும்பிய தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று செங்குட்டுவன் விரும்பியதால், இம் மூன்றாம் வடநாட்டுப் போர்[2] நடைபெற்றது. கண்ணகிக்குக் சிலை செய்வதற்கு வேண்டிய கல்லை இமயமலையிலிருந்து எடுத்து வருவதென முடிவு செய்தான்[3].

அவனது படைத் தலைவன் வில்லவன் கோதை வீரமுழக்கம் செய்தான்[4].

வடநாடு செல்லும் வழியில் உள்ள மன்னர் எல்லாரும் அவன் வரும் வழியில் தமிழ்நாட்டுச் சின்னங்களாகிய வில், புலி, கயல் கொடிகளைப் பறக்க விடவேண்டுமென்று ஓலை அனுப்பும்படி கூறினான். 'ஓலை அனுப்ப வேண்டா' என்றும் வஞ்சிமாநகரில் உள்ள ஒற்றர்களே செய்தியை அறிவிப்பர் என்றும் அவனது மற்றொரு படைத்தலைவன் அழும்பில்வேள் கூறினான்[5]. வஞ்சியில் வடநாட்டுப் படையெழுச்சி குறித்துப் பறையறையப் பட்டது.

'வடநாட்டு மன்னர் தலையில் கண்ணகிக்குக் கல் ஏற்றிக் கொண்டுவராமல் மீள்வேனே யானால் என்னைக் கொடுங்கோலன் என்று இகழ்க' எனச் செங்குட்டுவன் வஞ்சினம் கூறினான். இவனது ஆசான் இவனைப் புகழ்ந்தான். கணியன் நல்ல நேரம் பார்த்துச் சொன்னான். படைகள் புறப்பட்டன. வஞ்சிப்போர் அவர்களின் நோக்கம். செங்குட்டுவன் சிவனையும் திருமாலையும் வழிபட்டான். வஞ்சியை விட்டு வந்து நீல மலையில் தங்கினான்.

நீலமலைப்[6] பாடி வீட்டில் இருக்கும்போது கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். கொண்கான நாட்டவரும், குடகு நாட்டவரும் இந்தக் கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்வூட்டினர். அப்போது சஞ்சயன் என்னும் தூதன் வந்தான். நூற்றுவர் கன்னராகிய தம் மன்னர்,


  1. சிலப். 25 : 160 - 164
  2. பதிற், பதி. 5 : 4 - 10
  3. சிலப். 25 : 168 - 169
  4. ஷை 25: 151
  5. ஷை 25 : 149 - 177
  6. சிலப். 26 : 85 (Nilgiris)