உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

85


கோட்டையை அழித்த போரில் இவன் உதவினான் என்பது முன்பே குறிப்பிடப்பட்டது. எனவே, இவன் பல்யானைக் குட்டுவன் அரசாண்ட அதே 25 ஆண்டுக்கால எல்லையில் 25 ஆண்டுகள் அரசாண்டான் எனலாம். இவன் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் இறந்து போனான்[1].

முன்னோர்

இவன் 'சேரலர் மருகன்' என்று குறிப்பிடப்படுகிறான்[2]. இதனால் இவன் சேரர் குடியில் தோன்றியவன் என்பது தெளிவாகிறது.

இவனது முன்னோர் தம் கொள்கையில் உறுதிப்பாடு உடையவர். அவர்கள் தம் குடிமக்கள் தளர்ச்சியடையா வண்ணம் நல்லாட்சி புரிந்தனர்; நிலம் நல்ல பயனைத் தரும் வகையில் வேளாண்மைக்கு உதவினர். வெயிலின் கொடுமை நீங்க ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி உதவினர். பருவமழை தவறாது பொழியக் காடுகளைப் பாதுகாத்து வந்தனர். நாற்றிசையும் வென்று இவ்வாறு நல்லாட்சி புரிந்தனர்.

குடிப்பூ

சேர மன்னர்களின் குடிப்பூவாகிய போந்தைக்கண்ணி இவனது போர்ப்படைக் கருவிகளுக்குச் சூட்டப்பட்டது என்று கூறப்படுவதால்[3] அஃது அவனது குடிப்பூ என்பது தெளிவாகிறது.

மனைவி

வேள் ஆவிக்கோமான் பதுமன் என்பவனின் பெண்மக்கள் இருவருள் ஒருத்தியை வாழியாதனும் மற்றொருத்தியை இமய வரம்பனும் மணந்திருந்தனர். வாழியாதன் மணந்தது இளையவளை எனலாம்.

காமர் கடவுளும் (காமனும்) கண்டு தனக்கும் கிடைக்கவில்லையே என்று எண்ணும் வகையில் பேரழகும் கற்பும் உடையவளாக இவள் விளங்கினாள்.[4]. இவள் தன் கணவனிடம் நகைச்சுவையாகப் பேசியபோதும் பொய்மொழி புனைந்த தில்லை[5]. வாழியாதன் பல மகளிரைத் தழுவி மகிழ்வது உண்டு[6]. இதுபற்றிப் பிறர் கூறிய புறஞ்சொற்களை இவள் பொருட்படுத்தியதில்லை[7]. பெண்மை,


  1. புறம். 387 கொளு
  2. பதிற். 63 : 16
  3. பதிற். 70 : 6
  4. ஷை 65 : 9
  5. ஷை 70 : 12
  6. ஷை 66 : 18 - 19
  7. ஷை 70 : 12