உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-1


மடமை, கற்பு ஆகிய பண்புகளில் இவள் தலைமைபூண்டு விளங்கினாள்[1]. செல்வக் கடுங்கோவின் அரண்மனைக்கேற்ற நல்லோளாக இவள் விளங்கினாள்[2].

அரண்மனை

இவனது அரண்மனையில் ஓவியங்களும் சிற்ப வேலைப்பாடுகளும் நிறைந்திருந்தன[3].

மக்கள்

இவனுக்கு இரண்டு ஆண்மக்கள் இருந்தனர். இவர்களைக் கொண்டு வாழியாதன் முதியர் குடியினரைப் பேணிவந்தான். முதியர் குடியினர் சேரர் சார்பாளர். அவர்களைப் பேணுதல் சேரர்களின் கடமையாகத் தொன்றுதொட்டு அமைந்துவந்தது (உதியஞ்சேரல் பேணியது காணலாம்). இவன் தன் மக்களின் வழியே தன் தொல்லோர் கடமையை நிறைவேற்றினான்[4].

இரண்டு மக்களுள் மூத்தவன் எட்டாம் பத்தின் தலைவன். இளையவன் 9ஆம் பத்துத் தலைவனின் தந்தை. (இவர்களைப் பற்றித் தொடர்புள்ள வரலாற்றுப் பகுதிகளில் காணலாம்.)

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை

இவனது தந்தை செல்வக்கடுங்கோ வாழியாதன். தாய் பழனி மலைப் பகுதியை ஆண்ட பதுமன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து செல்வக் கடுங்கோ வாழியாதனை மணந்தவள்[5] இவளது உடன்பிறந்தாள் ஒருத்தி நெடுஞ்சேரலாதனை மணந்தாள் என்பதை நினைவு கூரலாம்.

நாடு

பெருஞ்சேரலிரும்பொறை தொடக்கக் காலத்தில் ஆண்டு கொண்டிருந்த நாடு இன்னதெனத் தெரியவில்லை. எனினும், அந்த நாடு பகன்றைப் பூக்களைக் குடிப்பூவாகச் சூடும் உழவர்கள் வாழ்ந்த நெல் வளம்மிக்க நாடு என்று தெரிகிறது[6].


  1. ஷை 70 : 14 - 15
  2. ஷை 61 : 4
  3. ஷை 61 : 3
  4. பதிற். 70 : 20 - 23
  5. பதிற். பதி. 8 : 1
  6. ஷை 76 : 12