உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 1.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்

91


பொறாது திரும்பிய குட்டுவன் என்று குறிப்பிடுவது இவனையோ என்று ஐயுறவுக்கும் இட முண்டு. இந்த ஐயுறவு வேண்டியதில்லை. பரணர் குறிப்பிடும் குட்டுவன், குட்டுவன் இரும்பொறை அல்லன். பரணர் குறிப்பிடும் குட்டுவன் தகடூரில் பொருமுரண் பொறாது வென்று கடலை முற்றுகை யிட்டுக் கடல் அலை விலகும்படி நல்ல துறைமுகம் அமைக்கும் பணியில் ஈடுபட்டான். இதனாலோ, கடற்போர் வெற்றியாலோ கடல் பிறக்கோட்டினான் என்று அவன் குறிப்பிடப்பட்டுள்ளான். எனவே, நாம் மேலே கூறியவாறு சேரன் செங்குட்டுவனே அதாவது, கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனே பெருஞ்சேரல் இரும்பொறைக்கு உதவியாக இருந்தான் என்று கொள்ள வேண்டும்.

இவனது போரைக் குறிப்பிடும்போது புலியைக் கொன்று விட்டுப் பின் யானை ஒன்றைக் கொல்லும் அரிமா[1] இவனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. இஃது இவன் இரண்டு அரசர்களைக் கொன்ற செய்தியைக் குறிப்பிடுகிறது எனலாம். எழினி இவனால் கொல்லப்பட்ட செய்தி தெளிவு. இவனால் கொல்லப்பட்ட மற்றோர் அரசன் பெயர் தெரியவில்லை.

பகைவர் நிலை

இவனைத் துன்புறுத்தியவர் தானியச் சேமிப்புக் களஞ்சியத்தை உடைத்த சிறுவர்கள்போலத் துன்புற்றனர் என்றும்[2] இவனது பகைவர்கள் இவனது ஆற்றலைப் புலவர்கள் கூறும் போது உணர்வதில்லை. இவனது சான்றோர் (படைவீரர்) செயல்படும் போது உணர்வார்கள் என்றும்,[3] வேந்தரும், வேளிரும், பிறரும் ஒன்றுசேர்ந்து வந்தாலும் பணிந்து இவன் வழியில் நடக்காவிட்டால் அவர்களது நாடு இவனால் வெள்வரகு விதைக்கப்பட்டுப் பாழாகும் என்றும்[4] புலவர் கூறுவது இவனது பேராற்றலையும் பகைவரின் எளிமையையும் உணர்த்துவனவாக உள்ளன.

பகைவரின் முரசை அறுத்தும், பகைவரின் பட்டத்து யானைக் கொம்புகளை வெட்டியும் அரியணை செய்து அமர்ந்து, குருதிக் கலப்பில்லாத உணவுப் படையலை ஏற்காத இவனது அயிரை மலைக் குலதெய்வம் போலக் கேடில்லாப் புகழுடன் வாழவேண்டும்


  1. பதிற். 75 : 1 - 2
  2. ஷை 71 : 7
  3. பதிற் 72
  4. ஷை 75 : 11